மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சித்தம்... சிவம்... சாகசம்! - 1

சித்தம்... சிவம்... சாகசம்! - 1

சித்தம்... சிவம்... சாகசம்! - 1
சித்தம்... சிவம்... சாகசம்! - 1

'பொன் வெள்ளி செய்கிறவன் பெரியோன் அல்ல
புகழான அஷ்டசித்தி பெரியோன் அல்ல
முன்னின்ற வைத்தியனும் பெரியோன் அல்ல
மூச்சடக்கி எழுப்பியவன் பெரியோன் அல்ல
சின்னமுள்ள குழியிருப்போன் பெரியோன் அல்ல
திறமுடனே கெவனமிட்டோன் பெரியோன் அல்ல
தன்னிலையை அறிந்தவனே பெரியோனாவான்
கந்தவேள் உரைத்ததெனக் கண்டுகொள்ளே!’

(சுப்ரமணியர் சிவயோகப்பாடல்)

##~##
து சித்தம்?

கேள்வியுடனேயே தொடங்குவோமே...!

இப்படி நான் கேட்க, நீங்களும் வாசித்திட... நமக்கிடையே பல எண்ணங்கள் ஏற்படுகின்றதே.... அதுதானா?

எண்ணக் கூட்டம்தான் சித்தம் என்றால், இந்த உலகில் வாழும் அவ்வளவு மனிதர்களுக்குமே சித்தம் இருப்பதால், சித்தர்கள் என்றாகிறார்கள்.

எல்லோரும் சித்தர்கள்தான் என்பது பொதுமைக்குப் பொருந்துகிறது. ஆனால், வலிமைக்குத் துளிக்கூட பொருந்த மறுக்கிறதே?!

அப்படியானால், வலிமைமிக்க எண்ணம் கொண்டோரை சித்தர் எனலாமா?

எனலாம்தான்! ஆனாலும், அப்போதும் அதில் ஒரு பரிபூரணம் இல்லாததுபோல் தோன்றுகிறது. வலிமையான சிந்தனை உடையவர்களை சிந்தனையாளர்கள் என்கிறது உலகு! அப்படியானால் சித்தர்கள்..?

சித் எனில் அறிவு; அறிவதையே வாழ்வாகக் கொண்டவர்கள்; அறிந்ததைக் கொண்டு தங்க ளையும் அறிந்தவர்கள்; அப்படி அறிந்ததாலே தங்களை அடக்கி ஆண்டவர்கள் என்று சித்தர்கள் பற்றி எண்ணும்போது, அது விரிந்துகொண்டே போகிறது.

குறிப்பாக, சித்தமாகிய எண்ணத்தை - எண்ணக் கூட்டங்களின் தொகுப்பாகிய மனத்தைக் குழப்பம் இல்லாமலும், ஒளியோடும், தெளிவோடும் வைத்திருப்பவர்களே சித்தர்கள் என்று ஒரு விளக்கமும் இவர்கள் வரையில் தரலாம். கூடவே, உடம்பையும் கல்ப மூலிகை களாலே முதிரா வண்ணம் பார்த்துக் கொண்டார் கள்; அதை ஆட்டிவைத்தார்கள்.

மனத்துக்குப் பஞ்ச பூத சிறை கிடையாது. உடம்புக்கு அது உண்டு. ஓர் அறைக்குள் வைத்து ஒருவரைப் பூட்டிவிட்டால், அறைக் கதவு திறக்கப்படும்வரை அந்த உடம்பு அந்த அறைக்குள் ஒரு சிறைக் கைதி போல அடைந்து கிடந்தே தீர வேண்டும்.ஆனால், மனத்தை இப்படி அடைக்க முடியாது. மனத்தால் இந்த உலகை மட்டுமல்ல, அதற்கு அப்பாலும் சுற்றிவர முடியும்.

எனக்குத் தெரிந்து சித்தர் ஒருவர் நான்கு பேருடன் பேசிக் கொண்டிருந்தபோது, 'இதோ, ஒரு நிமிடத்தில் வந்துவிடுகிறேன்’ என்று சொல்லிவிட்டு வெளியேறி னார். இயற்கை உபாதைக்காக விலகிச் செல்கிறார் என்று கருதினோம். ஆனால், அந்த நொடிகளில் அவர் இமயமலைச் சாரல் பகுதியில் இருக்கும் அமர்நாத் எனும் ஸ்தலத்துக்கு போய், அங்கு அமர்நாத லிங்க தரிசனம் செய்பவர்களுடன் கூடி நின்று தரி சித்துவிட்டு, அவர்களிடமும் 'இதோ வருகி றேன்’ என்று கூறிவிட்டுத் திரும்ப எங்களிடம் வந்துவிட்டார்.

அப்படி வந்தவர், 'அமர்நாத்தில் இன்று அவ்வளவு பனிப்பொழிவு இல்லை; தரிசனமும் நன்றாகக் கிடைத்தது’ என்று பேச்சுவாக்கில் கூறப் போய்த்தான் எங்களுக்கு அவருடைய அந்த சாகச சஞ்சாரம் தெரிய வந்தது.

இதைக் கேட்பதற்கு ஒரு மாயாஜாலக் கதை போல இருக்கும். ஆனால், இந்த மாதிரி அற்புதங்கள் அல்லது ஜாலங்கள் சித்தர் வரையில் அற்பங்கள்!

நாமறிந்த சத்ய சாயிபாபா வாழ்வில் இந்த மாதிரி விஷயங்கள் சர்வ சாதாரணம்! புட்ட பர்த்தியில் எல்லோருக்கும் தரிசனம் தந்தபடி இருக்கும் அவர், அமெரிக்காவில் ஆபரேஷ னுக்காக 'அட்மிட்’ ஆகி இருக்கும் அவரது பக்தருக்கும் காட்சி புரிந்திருக்கிறார்.

இதற்கு என்ன சாட்சி? இதை எதன் அடிப் படையில் நம்புவது?

சித்தம்... சிவம்... சாகசம்! - 1

இப்படி நம்முள், இந்த மாதிரியான அமா னுஷ்யங்களைக் கேள்விப்படுகையில் கேள்வி எழும். விஞ்ஞான அடிப்படையில் இந்த அமா னுஷ்யங்களைக் கேள்வி கேட்க மட்டுமே முடிகிறது. நம்ப முடியவில்லை. அதற்குக் காரணமும் இருக்கிறது. எப்போதும் அற்புதங்கள் ஒரு கூட்டத்திடமோ, பலர் முன்னாலோ நடந்ததே இல்லை. அது, ஒரு தனி மனித அனுபவமாகவே இருப்பதுதான் காரணம்!

இந்த அனுபவம், நாம் தாயின் வயிற்றில் அந்தத் தாயே முதலில் அறிந்திடாத நிலையில் கருக் கொள்வதுபோல் நிகழ்ந்துவிடு வதே காரணம்.

கடவுளைப் பற்றிச் சொல்லும் போது ஒரு கருத்தைச் சொல் வார்கள்... 'அது இருக்கிறது; இல்லாமலும் இருக்கிறது’ என்பார் கள். இது என்ன பதம்? இருக்கும் ஒன்று எப்படி இல்லாமல் இருக்க முடியும் என்று நாமும் மண்டையைப் பிய்த்துக் கொள்வோம். நாமேகூட கனவுகள் இல்லாத தூக்கத்தில், இருந்தும் இல்லாதுதானே போகிறோம்?

அமானுஷ்யம் பற்றிச் சிந்திக்காமல் போனாலே இப்படித்தான் கேள்விகள் முளைக் கின்றன. பளிச்சென்று ஓர் அமானுஷ்யத்தைக்கூட விளங்கிக்கொள்ளவோ, நம்பவோ முடியவில்லை.

நம்புவதற்கு நிறைய திராணி தேவைப்படுகி றது. விசாலமான பார்வை, சலியாத மனது, துளியும் அவநம்பிக்கை கலப்பில்லாத முழுமை யான நம்பிக்கை உணர்வு எனப் பல சமாசாரங் கள் தேவைப்படுகின்றன. அப்படி இருந்தாலேஇதை ஓரளவுக்காவது புரிந்துகொள்ள முடிகிறது.

புலன்களுக்குப் புலனாவதை மட்டும்தான் நம்ப முடியும் என்றால், கண்ணுக்குத் தெரியாத மின் சாரம், காற்று ஆகியவற்றையும் நம்ப முடியாது. இங்கே சற்று வளைந்து கொடுத்து, கண்ணுக்கு நேராகப் புலனாகாவிட்டால் என்ன, மறைமுகமாகப் புலனானால்கூட நம்பலாம் என முன் வந்து, இவற்றை நாம் உணர்வு ரீதியில் ஏற்றுக்கொண்டு இருக்கிறோம். ஆக, பார்ப்பது அல்லது ஐம்புலன் களில் ஒன்றால் உணர்வது என்பதுதான் இன்று நம் நம்பிக்கையின் அளவு.

சித்தம் இந்த நம்பிக்கை அளவுக்குள் சில நேரம் அகப்படுகிறது; பல நேரம் விலகி விடுகிறது. நன்றாகவே கண்ணாமூச்சி விளையாடுகிறது.

இதுவே இப்படி என்றால், இந்த சித்தத்தின் மூலமான சிவம், 'அன்பெனும் பிடிக்குள் மட்டுமே நான் அகப்படுவேன்; மற்றபடி என்னை அறிவதும் புரிவதும் பெரும்பாடு’ என்கிறது.

ஒரு புராணக் கதையின்படி, இந்தச் சிவமானது அந்தத் திருமாலுக்கும், அயனுக்குமேகூட வசப்பட வில்லை. சிவத்தின் அடி தேடிச் சென்றாராம் திருமால்; முடி தேடிச் சென்றாராம் அயனாகிய பிரம்மா.

முடியில் இருந்து உதிர்ந்து விழுந்த ஒரு தாழம்பூவை பொய் சாட்சியாகக் கொண்டு வந்து நிறுத்தி, சிவபிரானை அவர் ஏமாற்ற முனைய, அது கண்டு வெகுண்ட சிவ பிரான், அயனுக்கு வணக்கத்துக்குரிய கோயிலே இல்லாது போகக்கடவது என்று சபித்துவிட்ட கதை நாமறிந்ததுதான்! இப்படிப்பட்ட சிவத்தைதான் 'ஆதி சித்தன்’ என்கிறது சித்தர்கள் உலகம்.

'சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி’

என்று, ஒளவையும் தன் பாடல் ஒன்றில் வழிமொழிகிறாள்.

திருமூலரும் தன் திருமந்திரப் பாடல் ஒன்றில்,

'நாபிக்கும் கீழே பன்னிரண்டங்குலம்
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிகிலீர்
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிந்தபின்
ஈசன் கூவிக்கொண்டு அமர்ந்திருந்தானே’ என்கிறார்.

'செகமெலாஞ் சிவமென்றே யறிந்தோன் சித்தன். சிந்தை தெளிந்திருப்பான் அவனே சித்தன்’ என்னும் வான்மீகர் ஞானப் பாடல் ஒன்று, இந்த உலகையே சிவமாகப் பார்ப்பவர்கள் சித்தர்கள் என்கிறது.

நம்மில் ஆறு வழிமுறைகள் உள்ளன. ஆதிசங்கரர்தான் இந்த ஆறு வழிமுறைகளையும் வகுத்துத் தந்தவர். 'சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்யம், சௌரம்’ என்கிற இந்த ஆறில், ஏதாவது ஒரு வழியில் நாம் நமது ஆத்மாவைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.

சைவமென்றால்  சிவன்,
வைணவமென்றால் விஷ்ணு,
சாக்தம் என்றால் பராசக்தி,
கௌமாரம் என்றால் முருகன்,
காணாபத்யம் என்றால் கணபதி,
சௌரம் என்றால் சூரியன்.

- இந்த ஆறு வழிகளிலுமே பல சித்த புருஷர்களுக்கு ஈடுபாடில்லை. அதே நேரம், சிவத்தை இவர்கள் மறுத்து விடவுமில்லை. பராசக்தி, கணபதி, முருகனையும் மறுக்கவில்லை.

'இந்த வழிமுறைகள் என்பது பக்தி செய்வோர்க்கு! எங்களுக்கு அது தேவையில்லை. அது புறத்தே தேடுவது போன்றது. நாங்கள் எங்கள் அகத்துக்குள்ளேயே அவனைத் தேடிக் கண்டுகொண்டவர்கள்’ என்பதுபோல் இருக்கிறது சித்தர்களின் போக்கு. இதனால், சித்த மார்க்கம் என்றே ஒரு வழிமுறை உருவாகிவிட்டதுதான் விந்தை. ஆனால், இந்த வழிமுறை அத்தனை எளியதோ, சுலபமாகப் பின்பற்ற முடிந்ததோ அல்ல.

ஆதிசங்கரர் காலத்துக்குப் பின்னரே அநேக சித்த புருஷர்கள் தோன்றி, வரலாற்றிலும் பதிவாயினர். இவர் களை என்ன காரணத்தாலோ 18 என்னும் ஒரு கணக்குக் குள் நம் சான்றோர்கள் அடக்கிவிட்டனர். எவ்வளவோ எண்கள் இருக்க, 18-க்குள் சித்தர்களை அடக்கியது குறித்து ஆய்வு ஒருபுறம் நடந்தபடி உள்ளது.

'அரனைப் பாடி உயர்ந்திட்டார் அறுபத்து மூவர்
அருளைப் பாடி மிகுந்திட்டார்  அருட்பெருஞ்சோதி
அரியைப் பாடி சிறந்திட்டார் ஆறிரண்டாழ்வார்
அதனைப் பாடி நிறைந்திட்டார் அறுமூன்று சித்தர்...’

என்கிற ஒரு பாடலும் சித்தர்களைப் 18-க்குள் அடக்கவே பார்க்கிறது. ஆனால், எண்ணிறந்த சித்தர்கள் வாழ்ந்துவிட்டுச் சென்றுள்ளனர். இவர்களில் பாலவர்க்கம், மூல வர்க்கம், கைலாயவர்க்கம் எனப் பிரிவுகள் உண்டு.

முருகனை குருவாகக் கொண்டவர்கள் பால வர்க்கம், திருமூலரை குருவாகக் கொண்டவர்கள் மூல வர்க்கம், அந்த ஆதிசிவனையே குருவாகக் கொண்டவர்கள் கயி லாய வர்க்கம். இதுபோக, யோக, காய, ரசவாத சித்தர் கள் என்று ஒரு கூட்டமும் உண்டு.

எதனாலோ ஒரு சித்தன்கூட காக் கும் கடவுள் திருமாலைப் பின்பற்ற வில்லை. இடைக்காடரையும், திரு மழிசையாரையும் இம்மட்டில் திருமாலடியாராகச் சிலர் சொல்வதன் பின்னே நிறையவே கேள்விகள் உள்ளன. அறுதியிட்ட ஆதாரங்கள் இல்லை. அவ்வளவு ஏன்... பதி னெட்டு சித்தர்கள் எனப்படும் சித்தர் களிலேயே பலருக்கு அவர்களின் பிறப்புக்குப் பின்னால் உள்ள விஷயங்கள் பெரும் மௌட் டீகமாகவே உள்ளன.

ஆனால், இவர்கள் சொல்லிச் சென்ற விஷயங்கள், பாடிச் சென்ற பாடல்கள், இவர்கள் புரிந்த சாகசங் கள் எல்லாமே, மானுடராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் அறிய வேண்டி யவை.

உட்கார்ந்த இடத்தில் உடம்பை அளந்து, ஒரு நாளைக்கு ஒரு மனிதனானவன் 21,600 முறை சுவாசிக்கிறான் என்பதில் இருந்து... அண்டத்தில் சுற்றும் கோள்களில் புகுந்து, எப்போது மழை பெய்யும், எப்போது பயிர் செழிக்கும் என்பது வரை அவர்கள் சொன்னதும்.... அதன்படியே நடப்பதும் ஆச்சரிய மான விஷயங்கள்!

இதனினும் மேலான ஆச்சரியங் களை அள்ளித் தருபவர்கள் அவர்கள். இறந்தவரை உயிர்ப்பிப்பர், கூடுவிட்டுக் கூடு பாய்பவர், செம்பைப் பொன்னாக்குபவர், நீர் மேல் நடப்பவர், ஆகாய வீதியில் பறப்பவர், ஆறடி உயர தூலத்தை அணு போல் சிறிதாக்குபவர், அணு போன்றதை மலை போலப் பெரி தாக்குபவர்... இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

இவற்றுக்குள் புகுந்து வியப்ப தோடு, இவர்களை விளங்கிக்கொள்ள முற்படவே.... இந்த சித்தம் சிவம் சாகசம்!

- சிலிர்ப்போம்...