விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்
தொடர்கள்
Published:Updated:

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

பூரட்டாதி நட்சத்திரத்தை 'பூர்வப்ரோஷ்டபதா’ என்கிறது வேதம். இதன் தேவதை 'அஜஏகபாத்’. அக்னியின் இயல்பும் ஆதித்யனின் உருவமும் இந்த தேவதையிடம் இணைந்திருக்கும். கிழக்கில் தோன்றி அத்தனை உயிரினங்களையும் தனித் தனியாக மகிழவைக்கும் தகுதி படைத்தவன். அவன், அழிவற்ற கர்ம பலத்துக்கு பாதுகாவலனாக வும் விளங்குகிறான் என்கிறது வேதம் (அஜஏகபாத்..). ஒளியாக மிளிரும் அந்த தேவதை, மற்றவர்களையும் ஒளிமயமாக்கி விளங்கச் செய்பவன். பூரட்டாதி நட்சத்திரமும் அதனுடன் இணைந்து பிரகாசிக்கிறது என்றும் வேதம் அதன் பெருமையை விளக்கும்.

கும்ப ராசியில் முதல் மூன்று பாதமும், கடைசி பாதம் மீன ராசியிலும் பரவி இருக்கும் நட்சத்திரம்; அம்சகத்தில் செவ்வாய், சுக்கிரன், புதன், சந்திரன் ஆகியோரின் இணைப்பு.

ராசிநாதன் சனி, குரு இருவரும் தன்னிச்சையாக பலன் அளிக்காமல், இணைப்பில் இருக்கும் நால்வரின் தகுதி கலந்த பலனை நடைமுறைப்படுத்துவர். கூட்டுபலன்தான் ராசிக்கு உண்டு என்பதை நட்சத்திரங்களின் நான்கு பாதங்கள் உறுதிப்படுத்தும் (பலம் அம்சகர்ஷயோ:). இன்ப துன்பங்கள் ஊடும் பாவும் போல் இணைந்து வாழ்க்கை முழுதும் பரவியிருக்கும். இன்பம் மிகுந்த காலத்தை மகிழ்வான வேளையாகக் கருதுவோம்; துன்பம் நிறைந்த காலத்தை, துயரத்தில் ஆழ்ந்திருப்பதாக சித்திரிப்போம்.

##~##
நவாம்சகத்தில் ஒளி கிரகங்களும், தாரா கிரகங்களும் பங்கு பெறுவதால் ராசிக்கோ, ராசிநாதனுக்கோ இவர்களுடன் இணைந்த பலன்தான் சொல்ல முடியும்; தன்னிச்சையான தனி பலன் இருக்காது. அம்சகத்தின் இணைப்பில் பலன் மாறுபட்டுவிடும். அந்த அம்சகப் பகுதியில் நட்சத்திர பாதங்கள் ஒட்டி இருப்பதால், நட்சத்திரத்தின் தன்மையும் பலனில் இணைந்துவிடும். இரண்டேகால் நட்சத்திரமும், அம்சகத்திலும் ராசியிலும் இணைந்த

அத்தனை கிரகங்களும்தான் ராசியின் உருவம். அது அல்லாது, ராசி என்கிற தனி உருவம் பலனில் பளிச்சிடாது. ராசி என்றால் கூட்டம், கூட்டு என்று பொருள். ராசி பலன் என்றாலே கூட்டு பலனையே குறிக்கும். ஒவ்வொரு நட்சத்திர பாதங்களிலும் அம்சகாதிபதி மாறுபட்டு இருப்பதால், ஒரு நாளிலேயே இரண்டு பலன்களைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டு விடும். ஒவ்வொரு நட்சத்திர பாதம் தாண்டும் வேளையிலும், மாறுபட்ட பலனைச் சந்திக்க வாய்ப்பு இருப்பதால், ராசிபலன் பொருள்படைத்ததாக அமைந்துவிடுகிறது. குறைந்த அளவு துன்பம் கலந்த இன்பத்தை, 'இன்பம்’ எனக் குறிப்பிடு

வோம். குறைந்த அளவு இன்பம் கலந்த துன்பத்தை, 'துன்பம்’ என்று உணருவோம். துயரம் தொடாத இன்பம், வாழ்க்கை இயலில் இருக்கவே முடியாது. லோகாயத வாழ்வில் இருந்து முற்றிலும் விடுபட்ட ஆன்மாவின் உணர்வில் ஆனந்தம் பளிச்சிடும். இன்ப- துன்பங்களில் கலவைதான் வாழ்க்கை என்பதற்கு ஜோதிடம் அத்தாட்சி.

கும்பத்துக்கு சனியும் மீனத்துக்கு குருவும் அதிபதிகள். சனி உழைப்பை உறுதி செய்வான். குரு உயர்ந்த சிந்தனையை அளிப்பான். வாழ்க்கையில் முன்னேற தேவையான இந்த இரு பகுதிகளை அளித்தாலும், அதன் அளவை வரையறுக்க செவ்வாய், சுக்கிரன், புதன், சந்திரன் ஆகிய நால்வரின் உதவி தேவை. மாறுபட்ட நால்வர், மாறுபட்ட அளவில் உழைப்பையும் உயர்ந்த சிந்தனையையும் வெளியிடுவதால், அதன் இழப்பில் ஏற்பட்ட அளவு இன்ப- துன்பங்களை பாங்காக அளித்துவிடும்.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

உச்சம், மூலத்ரிகோணம், ஸ்வஷேத்திரம், லக்னாதிபதி, பாவாதிபதி போன்ற நிலைகளில் பாப கிரகங்களும் நன்மையைச் செய்பவர் களாக மாறுவது உண்டு. நீசம், கேந்திராதிபத்யம், பாபயோகம் ஆகிய நிலைகளில் சுப கிரகங்களும் கெடுதலைச் சந்திக்க வைப்பது உண்டு. சனியை அழிவுக்கு சூசகமாகவும், குருவை ஆக்கத்தின் அறிகுறியாகவும் சித்திரிப்பவர்கள் உண்டு. ஆனால் உச்சம் போன்ற நல்ல நிலையில் இருக்கும் சனி ஆக்கத்தை அளிப்பது உண்டு. நீசம், கேந்திராதிபத்யம் பெற்ற குருவானவர், மனைவியின் அழிவையும், தெய்வானுகூலத்தின் இழப்பையும் சந்திக்க வைப்பான். சந்திர சாரப்படி பலன் சொல்லும் வேளையில், இந்த விஷயங்கள் எதையும் கணக்கில் எடுக்காமல் பலன் சொல்லும்போது, பொய்த்து விடுவது உண்டு.

கன்னி லக்னத்துக்கு மீனத்தில் இருக்கும் குருவும், மிதுன லக்னத் துக்கு தனுசில் இருக்கும் குருவும் கேந்த்ராதிபத்ய தோஷத்தைத் தழுவி, துயரத்தில் ஆழ்த்துவார். குருவின் சேர்க்கையில் பாப கிரகங்களின் தோஷம் பல வீனமானாலும், ராகுவுடன் இணைந்த குரு தனது பலத்தை இழந்துவிடுகிறார். நீசம் பெற்ற குருவும் தனது திறமையை வெளிப்படுத்த இயலாதவராகிறார். இந்த நிலையில் குரு பார்த்தால் கோடி தோஷநிவர்த்தி என்கிற வாதங்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்பது புலனாகும்.

இருவரது சேர்க்கையில்... அதாவது சுப-அசுப கிரகங்களின் சேர்க்கையில், இருவரிடமும் இயல்பு இடம் மாறும். சுபச் சேர்க்கையில் அசுபன் சுபனானால், அசுப சேர்க்கையில் சுபன் அசுபனாகவும் மாறலாம். சுபனான குருவின் சேர்க்கையில்... ராகு, 'குரு சண்டாள யோக’த்தை ஏற்படுத்தி குருவை அசுபன் ஆக்குகிறார். ராகுவின் அசுபம் பலவீனம் அடை கிறது. சுபனான சுக்கிரனுடன் சூரியனின் இணைப்பு, சுக்கிரனை அசுபனாக்கும். குருவின் இணைப்பு சூரியனைச் சுபனாக்கும். இரண்டும் ஏற்பட வாய்ப்பு இருந்தாலும் குருவின் சேர்க்கையில் அசுபனின் தாக்கம் இருக்காது என்று  ஜோதிடம் விளக்கும். மண்ணிலிருந்து முளைத்த செடியில், புஷ்பம் நறுமணத்தோடு விளங்கும்; மண்ணையும் மணக்கச் செய்யும். ஆனால் எந்தப் புஷ்பத்திலும் மண் வாசனை தென்படாது. இந்த நிலை குருவுக்கு இருப்பது உண்டு. சந்திரன் தேய்பிறையில் அசுபனாகிறார். சுக்கிரன், புதன் ஆகியோர் அசுப சேர்க்கையில் அசுபனாகிறார்கள். குரு, அசுப சேர்க்கையில் அசுபனை சுபனாக்குகிறார். 'நிஸர்க சுபன் குரு ஒருவரே’ என்ற ஜோதிடத்தின் கணிப்பு, 'குரு பார்வை கோடி தோஷத்தை விலக்கும்’ என்ற சொல்வழக்குக்கு வழி வகுத்தது எனலாம்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முதலில் குரு தசையைச் சந்திப்பார்கள். இது புனர்பூசத்துக்கும் விசாகத்துக்கும் பொருந்தும். அதன் பிறகு சனி தசையை ஏற்பர். பிறந்ததும் தொடரும் இந்த இரண்டு தசைகளும் பால்யம் மற்றும் இளமை காலத்தை வளமாக்க உதவும்; வாழ்க்கையின் அடித்தளம் ஆட்டம் காணாமல் இருக்க உதவும். உழைப்பும் உயர்ந்த சிந்தனையும் இளமையில் தோன்றினால் மட்டுமே தேவைகள் அனைத்தையும் பெற்றுத் தேற இயலும். பூரட்டாதியில் பிறந்த வர்களது வாழ்க்கையின் முதற் பகுதி 2-ஆம் பகுதியைவிட செழிப்புற்று விளங்கும். இளமையில் ஈட்டிய உயர்ந்த சிந்தனையின் விளைவு முதுமையைக் காப்பாற்றிவிடும்.

அஷ்டமத்தில் இருக்கும் சனி ஆயுளைப் பெருக்குவான். அஷ்டமத்தில் இருக்கும் குரு ஆயுளைக் குறைப்பான் என்கிறது ஜோதிடம் (விபரீதம் சனே; ஸ்ம்ருதம்.). 6, 8, 12 போன்ற தப்பான இடங்களில் குரு அமைந்தால், குருவின் ஒத்துழைப்பு குன்றிவிடும். 3, 6, 11 போன்ற இடங்களில் சனி அமைந்தால் அவரது ஒத்துழைப்பு ஆக்கமும் ஊக்கமும் தரும் என்கிறது ஜோதிடம். கிரகங்களைவிட அவை அமர்ந்த இடத்தின் தகுதி, பலனை வரையறுக்க உதவுகிறது. ஏனெனில், கிரகம் ஜாதகனின் பலனை இறுதி செய்ய அமர்ந்திருக்கின்றனவே தவிர, தனது இயல்பை வெளிப்படுத்த வரவில்லை. ஆக, ஷட் பலங்களுக்குப் பெருமையே தவிர, கிரகங்களுக் குத் தனிப்பெருமையைச் சொல்ல வில்லை.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

ஜாதகன் சந்திக்க வேண்டிய இன்ப-துன்பங் களை கிரகங்களின் பலாபலன்கள் வரையறுக் கும். பிறக்கும் வேளையில், அவன் வாழ்நாளில் சந்திக்கப்போகும் பலனை ஒட்டி, அதற்கு உகந்தவாறு கிரகங்கள் அமர்ந்திருக்கும். அவனது கிரக நிலை, அவன் அனுபவிக்க வேண்டிய இன்ப-துன்பங்களின் வரைபடம். கர்ம வினையின் தரத்தை அறிந்து, அது அனுபவத்துக்கு வரும் விதத்தில், பிறக்கும்போது கிரகநிலை தோன்றி விடும். அதாவது, கர்ம வினைக்கு உகந்த கிரகநிலை உருவாகும் வேளையில் அவன் பிறக்கிறான் என்று சொல்லலாம். சிந்தனை வளம் பெற்றவர்களுக்கு ஜோதிடம், வாழ்க்கையின் வழிகாட்டி.

பூரட்டாதியில் பிறந்தவன், பெண்ணினத்தை வசப்படுத்தி மகிழ்வான். செல்வச்சீமானாகத் திகழ்வான், அறிஞனாகவும் கருமியாகவும் இருப்பான். அடிக்கடி துயரத்தைச் சந்தித்த மனம் துவண்டிருக்கும். நிம்மதியற்ற நிலையும் இருக்கும் என்று பிருஹத்ஸம்ஹிதையில் வராஹமிஹிரர் கூறுவார். கீழ்த்தரமான செயல்பாடு, குரோதம், இரவில் பயணம், வீரன், தீரன், பெண் ஆசை, சண்டை- சச்சரவை வலிய ஏற்பவன் என்கிறார் பராசரர். பூரட்டாதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிறந்தவன் சூரனாகவும், 2-வதில் பிறர் சொத்தைப் பறிப்பவனாகவும், 3-வதில் கெட்டிக்காரனாகவும், 4-வதில் உலகவியல் இன்பத்தைச் சுவைப்பவனாகவும் இருப்பான் என்கிறது பிருஹத்ஸம்ஹிதை. பேச்சுத் திறன், சடுதியில் முடிவெடுக்கும் துணிவு, காரியத்தை ஒட்டி பணிந்து போகும் பாங்கு ஆகியன தென்படும் என்கிறது ஜாதகபாரிஜாதம்.

இரண்டு தாரைகளை உள்ளடக்கியது இந்த நட்சத்திரம். உக்கிரமான நட்சத்திரம் இது. எதிரிகளை விரட்டுவது, பிறரை அழிப்பது, பிடிவாதத்துடன் காரியம் சாதிப்பது, நெருப்பு வைத்து பொருளை அழித்தல், கட்டிப்போட்டு  துன்புறுத்துதல், கொலை- கொள்ளை போன்ற வற்றில் இதன் இணைப்பு வெற்றியைத் தரும் என்கிறார் வராஹமிகிரர். முற்றுகை, போர்த் தளவாடங்கள், தூது, ஸமயோசித புத்தியால் எதிரியை வசமாக்குதல், அழித்தல், சுயநலத்தைப் பேணிக்காக்க பொதுநலத்தைப் பயன் படுத்துதல் போன்றவற்றுக்கு இதன் இணைப்பு ஒத்துழைக்கும் என்கிறார் பராசரர்.

முதல் பாதத்தில் பிறந்தவனது முகம் விஸ்தார மாக இருக்கும். நெருக்கம் இல்லாத இடத்திலும் நெருக்கத்தை உண்டு பண்ணி காரியம் சாதிப்பவன். போரில் ஈடுபாடு இருக்கும். 2-வதில் செயலில் திறமையை வெளிப்படுத்துவான், பிறந்த வீட்டையும் ஊரையும் இழப்பான், வாழ்க்கையில் இன்பத்தைச் சுவைப்பான். நீண்ட ஆயுளும் இருக்கும். 3-வதில் அறிஞனாகவும் போகியாகவும் இருப்பான். கடமைகளைத் தவற விடமாட்டான். பித்தப்ரக்ருதியாக இருப் பான். தவறான செயலால் துயரத்தைச் சந்திப்பான். 4-வதில் உண்மை பேசுவான், செல்வச் சீமானாக விளங்குவான், அழகும் குணமும் பொருந்தியிருக்கும், இன்பத்தைச் சுவைப்பான், உலகம் போற்றும் விதத்தில் அவனது நடைமுறை இருக்கும் என்கிறது பலசாரசமுச்சயம்.

காலபுருஷனின் கணுக்காலும் பாதமும் இந்த நட்சத்திரம் இருக்கும் இடம். கும்பம் கணுக்கால்; மீனம் பாதம் இரண்டையும் சுட்டிக் காட்டும். அந்த அங்கத்தின் தரத்தை வரையறுக்கும் இந்த நட்சத்திரம். 'அம் அஜாயை ஏகபதெநம:’ என்று சொல்லி 16 உபசாரங்களால் வழிபட வேண்டும். 'அஜ ஏகபாத் உதகாத்...’ என்கிற மந்திரத்தைச் சொல்லி வழிபடலாம். அல்லது 'அஜாயைகபதெ ஸ்வாஹா ப்ரோஷ்டபதேப்ய ஸ்வாஹா’ எனச் சொல்லியும் வழிபடலாம்.

இரண்டு கரங்களால் புஷ்பத்தை அள்ளியெடுத்து, 'ப்ரோஷ்டபதா நஷத்திர தேவதாயை நம:’ என்று கூறி அதன் உருவத்தில் பூச்சொரிந்து வழிபடலாம். அல்லது 'அஜயை கபதெ நம:’ என்று நூறு தடவை மனதில் அசை போட்டு தண்டனிட்டு வணங்கலாம். 'ரூபம் தேஹி ஜயம் தேஹி யசோதேஹி த்விஷோஜஹி அஜாயைகபதெதுப்யம் நமோஸ்து கருணாகர’ என்ற செய்யுளைச் சொல்லி வணங்கலாம்.

காலையில் எழுந்து நீராடி, நெற்றித் திலகம் இட்டு, சப்பணம் போட்டு நிமிர்ந்து உட்கார்ந்து மனதில் அசை போட வேண்டும். பத்மாசனத்தில் அமர்ந்து ஜபிப்பது சிறப்பு என்று யோக சாஸ்திரம் சொல் லும். உட்கார்ந்தால் அசையாமலும் மனதுக்கு சுகமாகவும் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தும் பாதஞ்ஜலயோகம் (ஸ்திரசுகமாசனம்). கலங்கிய நீரை தெளியவைக்க தேத்தாம் கொட்டை பயன்படும். கலக்கமுற்ற, அதாவது கொந்தளிப்பை சந்தித்த மனதை ஒருநிலைப்படுத்த உபாசனை மருந்தாக செயல்படும்.

பயிற்சி, பற்றற்ற நிலை ஆகியவற்றால் மனதைக் கட்டுப்படுத்தலாம் என்று கண்ணன் சொல்வான் (அப்யாஸேசை கௌந்தேய வைராக்யேணச க்ருஹ்யதெ). சுணக்கமில்லாமல் வழிபாட்டில் ஈடுபட்டால், சிரமம் இல்லாமல் அத்தனை இன்பங்களையும் சுவைத்து பிறவிப்பயனை எட்டிவிடலாம்.

- வழிபடுவோம்...