மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி-பதில்

கேள்வி-பதில்

கேள்வி-பதில்
கேள்வி-பதில்

அனுஷ்டானம் நிறைவடையும்போது ஜபம் செய்கிறோம். அதில் மூல மந்திரம் 108 முறை சொல்கிறோம். அப்போது, ஜப மாலையை மூடிக்கொள்வது ஏன்?

- சி.குருநாதன், புனே

கேள்வி-பதில்

மந்திரம் உச்சரிக்கும்போது உதடு அசையலாம். ஒலி வெளியே வரக் கூடாது. பிறர் காதில் விழும் அளவுக்கு மந்திரம் ஒலிக்கக் கூடாது. ரஹஸ்யமாக செயல்பட வேண்டும்; பரஸ்யமாக இருக்கக்கூடாது.

குழந்தையின் காதில் நட்சத்திரத்தின் பெயரை ஓதுவான் தகப்பன். காயத்ரீ உபதேசத்தின்போது, பட்டு வஸ்திரத்தைப் போட்டு மறைத்து உபதேசம் நிகழும். கர்ண மந்திரம் காதில் ஓதப்படும். மாலையை உருட்டும் வேளையில் பிறர் பார்க்காதவாறு துணியால் மூடிக்கொள்ள வேண்டும். காயத்ரீ ஜபம் செய்யும் போதும் துணியால் மறைத்துக்கொண்டு எண்ணிக்கையை நடைமுறைப்படுத்துவோம். உட்கருத்து உடைய மந்திரங்களை எல்லோர் செவியிலும் எட்டும்படி சொல்லுவது இல்லை. துணியால் மூடிக்கொண்டு செயல்படுவோம்.

கிருஷ்ண பக்தர்களும் ராம பக்தர்களும் கையில் துணியால் உறை அணிந்து மறைத்துக்கொண்டு ஜபிப்பது உண்டு. முனிவர்கள் வகுத்த பண்பு அது. அவர்களுக்கு பலன் கிடைத்ததால், நாமும் பலன் பெற ஜபத்தின் சட்டதிட்டங்களை வகுத்தார்கள். முழு பலன் வேண்டுமானால் ஜப மாலையை மூடிக் கொண்டு ஜபிக்க வேண்டும்.

கேள்வி-பதில்

கோயில்களில் ஸ்வாமி விக்கிரகங்களுக்கான அபிஷேகத்தில்... ஸ்நானப் பொருட்களான சந்தனம், எண்ணெய், தீர்த்தம் முதலானவை பொருத்தமானவையே. ஆனால், உணவுப் பொருட்களான தயிர், நெய், வெண்ணெய், பழங்கள், தேன் மற்றும் அன்னம் முதலானவற்றை அபிஷேகத்தில் உபயோகிப்பதன் தாத்பரியம் என்ன?

- பி.வி.சுப்பிரமணியன், பெங்களூரு-82

கேள்வி-பதில்

திரவ பதார்த்தங்கள் அபிஷேகத்துக்குப் பொருத்தமாக இருக்கும். நல்லெண்ணெய், பஞ்ச கவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச் சாறு, எலுமிச்சம்பழச்சாறு, இளநீர், சந்தனம், கும்ப ஜலம்- என்று அபிஷேகப் பொருட்களைச் சொல்கிறது சாஸ்திரம் (ப்ரதமம் கந்த தைலம்ச த்விதீயம் பஞ்ச கவ்யகம். பஞ்சாமிருதம் த்ருதீயம்ச சதுர்த்தம் கிருதமேவச. பஞ்மம் பயஸாஸ்னானம் ததிஸ்னானம் துஷஷ்டகம். ஸ்ப்தமம் மதுனா ஸ்னானம் அஷ்டம் சேக்ஷ§கண்டஜம். நவமம் நிம்ப தோயம்ச தசமம் நாளி கேரகம் ஏகாதசம் கந்த தோயம் அதகும்பாபிஷேசனம்).

மஞ்சள் கலந்த ஜலம், புஷ்பகந்தம் சேர்ந்த ஜலம், தர்ப்பை ஜலம், நெல்லிமுள்ளி சேர்ந்த ஜலம் போன்றவை யும் அபிஷேகத்தில் உண்டு. விசேஷ அபிஷேகமாக ஈசனுக்கு அன்னாபிஷேகம் உண்டு. அன்னப்படி சார்த்தி, அதில் விளங்குபவனை தரிசித்து பயன்பெறுவோம். அது சாதாரண அபிஷேகம் போன்றது அல்ல. அது அலங்காரமாக நெடுநேரம் தர்சனார்த்திகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும். நெய், வெண்ணெய் ஆகியன சாப்பிடும் பொருளாக இருந்தாலும், அபிஷேகத்துக்கு உகந்த முறையில் அவற்றைப் பயன்படுத்துவதை தர்ம சாஸ்திரம் ஏற்கும். திட பதார்த்தத்தை அபிஷேகம் பண்ணும் பழக்கம் ஸம்பிரதாயத்தில் தோன்றியது; சாஸ்திர ஸம்மதமல்ல. புஷ்பத்தைச் சொரிவது, தங்கத்தைச் சொரிவது என்பனவும் நடைமுறையில் உண்டு. பூச்சொரிதல், கொள்ளுப்பேரன் பிறந்தவுடன் கனகாபிஷேகம் செய்வது போன்றவை நடைமுறையில் உண்டு.

திரவ பதார்த்தத்துக்கு உகந்த அபிஷேகம் என்ற பதத்தை... திட பதார்த்த அபிஷேகத்தில் சொரிதல் என்று பயன்படுத்துகிறோம். புதுப்புது பொருள்களை அபிஷேகத்தில் சேர்க்கும் நடைமுறை தோன்றியிருக்கிறது. அத்தனையும் பக்தர்களின் விருப்பமே தவிர, தர்ம சாஸ்திரத்துக்கு உடன்பாடில்லை.

கேள்வி-பதில்

பஞ்சாங்கங்களில் நல்ல நேரம், திதி, நட்சத்திரம் முதலானவை இந்தியன் ஸ்டாண்டர்ட் டைம் படி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சாஸ்திரப்படி இந்த காலங்கள் அந்தந்த இடத்தின் சூரிய உதய காலத்தைப் பொருத்து, நாழிகைகளின் அடிப்படையில் இருக்கவேண்டாமா?

நமது தேசம் கிழக்கு-மேற்காக மிகவும் பரந்த தேசம். மேற்கு கடைசியில் இருக்கும் இடத்துக்கும், கிழக்கு எல்லையில் இருக்கும் இடத்துக்கும் லோக்கல் டைம் சுமார் 75 நிமிடங்கள் வித்தியாசம் இருக்கும். அப்படியிருக்க, பஞ்சாங்கத்தை எப்படி பின்பற்றுவது? பஞ்சாங் கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் காலம் எந்த இடத்துக்கான நேரத்துடன் பொருந்தும்?

- என்.வேம்பு, சென்னை-42

பஞ்சாங்கங்கள் அனைத்துக்கும் ஸ்டாண்டர்ட் டைமுக்கும் சம்பந்தம் இல்லை. மணி, நிமிடம், செகண்ட் ஆகியன நம்மில் திணிக்கப்படுவதற்கு எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்கு முன்பே ஜோதிட கணனம் தோன்றிவிட்டது. பாஸ்கரர், ஆர்யபட்டர், வாக்ய கரணம், வரருசி வாக்கியம் போன்ற நூல்கள் இருந்த காலத்தில், ஸ்டாண்டர்ட் டைம் இல்லை. பழைய கணித முறையைப் பின்பற்றி திருக்கணிதமும், வாக்ய கணிதமும் நடைமுறையில் உண்டு.

தற்காலத்தில் லாகரி, சைத்ரபக்ஷ ஆயனாம்சம், ராமன் அயனாம்சம், கிருஷ்ணமூர்த்தி பத்திதி போன்றவையும் ஸ்டாண்டர்ட் டைமை எதிர்பார்க்கவில்லை. தேசம், காலம் ஆகியவற்றின் இணைப்பு பஞ்சாங்கத்தில் உண்டு (தேசகாலௌ ஸங்கீர்த்ய) என்று நமது கடமைகளை நிறைவேற்றும் வேளையில் சொல்வதுண்டு. எல்லா வ்யவஹாரங்களுடைய கால நிர்ணயத்துக்கு, சூர்யோதயம் ஆரம்பமாகும். 'வ்யாவஹா ரிகே ப்ரபவாதி’ என்று சாஸ்திரம் சொல்லும்.

தமிழகத்தில் தஞ்சாவூர், வேலூர், ஸ்ரீரங்கம், சென்னை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களை (தேசத்தை) மையமாக வைத்து, அவற்றின் சூரியோதயத்தை ஒட்டி காலநிர்ணயம் செய்யப்பட்ட பஞ்சாங்கங்கள் உண்டு. லோகவ்யவஹாரமே சூரியோதயத்தை வைத்து ஆரம்பமாகும்.

நமக்கு இன்று ஞாயிறு பகலாக இருந்தால், யு.எஸ்-ல் முதல் நாளின்... அதாவது சனிக் கிழமையின் இரவாக இருக்கும். இரண்டு தேசங்களும் தங்களின் தேச காலத்தை ஒட்டி செயல்படும். கொல்கத்தாவில் காலை 5 மணிக்கு சூரியோதயம் இருக்கும். கேரளத்தில் 6 மணிக்கு இருக்கும் இந்த இரண்டு தேசங்களிலும் அவரவர் சூரியோதயத்தை ஏற்பார்கள். 75 நிமிடங்கள்தான் வித்யாஸம் என்று யார் நிர்ணயம் செய்தார்கள்? 80 நிமிடம் 100 நிமிடம் கூட இருக்கலாம். டில்லிக்கும் சென்னைக்கும் சூரியோதயம் மாறுபடும்.

காஞ்சிபுரத்துக்கும் சென்னைக்கும் சூரியோதயம் மாறுபடும். அதை எல்லாம் ஆராய்ந்து தெரிந்து கொண்டு, அந்தந்த தேசத்து காலதேச வர்த்த மானங்களுடன் பஞ்சாங்கங்கள் சரியாகத்தான் கணித்துத் தரப்படுகின்றன.

தாங்கள், ஜோதிடத்தில் கணிதத்தை திரும்பவும் ஒருமுறை புரட்டிப் பாருங்கள். செய்யவேண்டிய கடமைகளின் காலத்தை நிர்ணயம் செய்த தர்மசாஸ்திர நூல்களையும் தயவுசெய்து புரட்டிப் பாருங்கள். அப்போது சந்தேகம் விலகும். பஞ்ச போதம், வர்ஷாதி நூல் ஆகியவற்றையும் ஒருமுறை அலசுங்கள். சமீபத்தில் அமெரிக்க அன்பர்களுக்குத் தோதாக 'நியூயார்க்கை’ மையமாக வைத்து பஞ்சாங்கம் கணித்து வெளி வந்திருக்கிறது. இவர்கள் யாரும் இந்தியன் ஸ்டாண்டர்ட் டைம் பற்றிக் கவலைப்படவில்லை.

மணி, நிமிடம் ஆகியன அறிமுகமாவதற்கு முன்பே 'சங்குச்சாயை’ 'நிழல் அடி அளத்தல்’ போன்றவற் றால் கால நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.நாம்தான் மணியை ஏற்றுக்கொண்டு அதை நாழிகையாக மாற்றும் விபரீத எண்ணத்தை வளர்த்துக் கொண் டிருக்கிறோம். சூரியோதயத்தைக் கவனிக்காமல் வருஷம் பூராவும் ராகு காலத்தை மணி அளவில் செயல்படுத்தி தினமும் ஒரேமாதிரியான ராகு காலத்தை ஏற்கிறோம். பிறரை திருப்திப்படுத்த ஸ்டாண்டர்ட் டைமை வலுக் கட்டாயமாக ஏற்றுக்கொள்கிறோம். குறை கூறி பெருமையை வளர்த்துக் கொள்ளக்கூடாது. விஷயத்தை முழுமையாக வாங்கிக் கொள்ளாமல் விமர்சனத்தில் இறங்குவோர், தற்போது எண்ணிக்கையில் அதிகமாகத் தென்படுகிறார்கள்.

கலிதின ஸம்க்யயை வைத்து பஞ்சாங்க கணனத்தில் இறங்கியவர்களுக்கு, ஸ்டாண்டர்ட் டைம் ஒரு பொருட்டல்ல. பழைய கணித நூல்களையும், காலத்துக்கு ஏற்றவாறு மாற்ற வேண்டிய நடைமுறைகளையும் தெரிந்துகொண்டு செயல்பட்டால், எல்லோருக்கும் பயன்படும் பஞ்சாங்கம் கிடைத்துவிடும். ஆக, தவறான தகவல்களைப் புறந்தள்ளி பஞ்சாங்கம் கணிப்பவர்களுக்கு உதவுங்கள். அது, நம் நாட்டில் பிறந்தவர்களின் பண்பு ஆகும்.

கேள்வி-பதில்

கோயிலில் பலிபீடத்தைச் சுற்றி விளக்கேற்றி வழிபடுகிறார்கள் பக்தர்கள். விளக்கேற்ற விரும்பும் பக்தர்கள் கோயிலில் எங்கு வேண்டுமானாலும் விளக்கேற்றி வைக்கலாமா?

அல்லது, கொடி மரத்தின் அருகே மட்டும்தான் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும் என்பது போன்று, கோயிலில் விளக்கேற்றுவது குறித்தும் சாஸ்திர நியதிகள் ஏதேனும் உண்டா? தங்களின் அறிவுரை தேவை.

- ஜி.பத்மநாபன், சங்கரன்கோவில்

பலி பீடத்தைச் சுற்றி விளக்கேற்றி வழி படுவது பக்தர்கள் ஏற்படுத்திய நடைமுறை. ஆகம விதிகள் பிறரது பணிவிடைகளை நேரடியாக ஏற்காது. நமது அர்ச்சனை, தீபாராதனை, அலங்காரம் போன்றவற்றை அர்ச்சகர் வாயிலாக நிறைவேற்றலாம். நேரடியாக நிறைவேற்ற இயலாது. உலக நன்மைக்காக ஏற்பட்ட கோயில் களில், பொதுமக்களுக்கு நேரடியாக பூஜை செய்ய இடமிருக்காது. அர்ச்சகர் வழியாக செயல் பட்டால் முழுப் பலன் கிடைத்துவிடும்.

பொதுமக்களுக்காகவே அர்ச்சகர் செயல்படு கிறார். நமக்காகவே வக்கீல் வாதாடுகிறார். நமக்காகவே புரோஹிதர் வேள்வியில் ஈடுபடு கிறார். அது சாஸ்திரத்தின் கோட்பாடு. நாம் நமது வீட்டில் தனியாக செயல்படலாம். பொது விஷயங்களில், பொறுப்பான ஒருவர் இருப்பது செயல்பாட்டின் நிறைவை எட்ட உதவும்.

நமது விருப்பத்துக்கு இணங்க எங்கு வேண்டுமானாலும் தீபத்தை ஏற்றி வழிபடுவது பொருந்தாது. கொடி மரத்தின் அருகே மட்டும்தான் ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும் என்கிற விதி இல்லை. அப்படியிருப்பின், கொடி மரம் இல்லாத கோயில்களில் ஸாஷ்டாங்க நமஸ்காரம் இல்லாமல் போய்விடும். கொடிமரம் கோயிலின் அங்கம். ஸாஷ்டாங்க நமஸ்காரம் நமது கடமை. ஆகவே, கொடிமரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஸாஷ்டாங்க நமஸ்காரத்தை நடைமுறைப்படுத்தலாம். மக்கள் நெரிசல் அதிகமான சந்நிதியில் ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்வது கடினம். கொடிமரத்தின் அருகில் மக்கள் நெரிசல் இருக்காது. கருவறை தெய்வத்தைக் கச்சிதமாகப் பார்க்க இயலும். ஆகையால் வழிபாட்டில் மனநிறைவு இருக்கும். 'லக்ஷதீபம்’ போன்ற விழாக்களை ஆகமமே பரிந்துரைக்கும் போது, மக்கள் தீபம் ஏற்றி வழிபட வேண்டிய கட்டாயம் இல்லை. கருவறையில் தீப ஒளியை தரிசித்தால் போதுமானது. கோயிலுக்கும் ஆகமத்துக்கும் இடையூறு விளைவிக்காத இடத்தில், பொதுமக்களை திருப்திப்படுத்த ஓர் இடத்தை ஏற்படுத்தி விளக்கேற்றி வழிபடலாம்.

கேள்வி-பதில்

பக்தர்கள் புழங்கும் கொடிமரத்தின் அருகில் விளக்கேற்றி புது நெரிசலை ஏற்படுத்தக் கூடாது. கோயில் என்பது மக்களின் உயர்வுக்காக ஏற்பட்டது. தாங்கள் அங்கு போனாலும் போகவில்லை என்றாலும் பலன் கிடைத்துவிடும். தர்சனார்த்திகள் இல்லாத கோயில்கள் ஏராளம். அங்கு குறித்த காலங்கள் பூஜைகள் நடைபெறும். அதுவும் மக்கள் நன்மைக்கே. தரிசனம் செய்தாலே பலன் கிடைக்கும்போது, நாமே பூஜை செய்யவேண்டும் என்கிற ஆர்வத்தை ஏன் வளர்த்துக் கொள்ள வேண்டும். நாம் கோயில் செல்லும் நாட்களில் மட்டுமே விளக்கேற்றுவோம். மற்ற நாட்களில் யார் ஏற்றுவது? ஆக, இல்லாத கடமையை ஏற்று ஏனோதானோ என்று செயல்படுவதைத் தவிர்த்து, கருவறை ஜோதியை வணங்குவது சிறப்பு.

ஆலயம் சென்றால் அடிபணிய வேண்டும். கொடி மரத்தை அளவுகோலாக வைத்து தண்டனிட்டு வணங்குவதை நிர்ணயிக்கக் கூடாது. நமது பக்தியை வெளிப்படுத்த, நமது அடக்கத்தை உணர்த்த, எந்தக் கோயிலிலும் தண்டனிட்டு வணங்கலாம்.

- பதில்கள் தொடரும்...