விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்
தொடர்கள்
Published:Updated:

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்
கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்
##~##
'கு
ற்றாலம் ஃபால்ஸ்ல தண்ணி வரலையாமே! நியூஸ் படிச்சேன்' என்று ஒரு இளைஞர் கேட்க, 'அது ஃபால்ஸ் நியூஸ்' என்று மற்றொரு இளைஞர் சொல்ல... சுற்றுலாப் பேருந்தில் இருந்த அனைவரும் சிரித்தோம்.

எங்கள் பேருந்து குற்றாலத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. என் அருகில் இருந்த பரமசாமி, 'ஃபால்ஸ்ன்னா தமிழ்ல நீர்வீழ்ச்சிதானே?' என்று மெதுவாகக் கேட்டார். 'இல்லைங்க பரமு, 'அருவி’ என்று இதற்கு அழகான தமிழ்ச்சொல் உண்டு. 'வாட்டர் ஃபால்ஸ்’ன்னு வெள்ளக்காரன் மாத்த, அதை நம்மாளுக திரும்ப மொழிபெயர்த்து 'நீர்வீழ்ச்சி’ன்னு ஆக்கிட்டாங்க!' என்றேன் நான்.

குற்றாலம் வந்ததும், எல்லோரும் பேருந்தில் இருந்து கீழே இறங்கினோம்.

'ஐயாமார்களுக்கு வணக்கம். சுக்குமல்லி காபி சூடா இருக்கு, தரட்டுங்களா?' என்று ஒருவர் அன்போடு கேட்க, 'மல்லிப்பூ இட்லி, மணக்கும் சட்னி இருக்கு. வாங்கய்யா சாப்பிடலாம்' என்று மற்றொருவர் அழைக்க... 'வாட் எ சர்ப்ரைஸ்! இங்க எல்லா பீப்பிள்ஸும் பியூட்டிஃபுல்லா தமிழ் பேசுறாங்களே!' என்று எங்களோடு வந்த கணினி இளைஞி ஆச்சரியமாகக் கேட்டார்.

'தமிழ்மொழி பிறந்த இடமே இந்தப் பொதிகை மலைதான்! அகத்திய முனிவர் தன் மாணவர்களுக்குப் பாடம் நடத்தியது இந்த இடத்தில்தான்' என்றேன் நான். தொடர்ந்து, 'ஏழாம் நூற்றாண்டில் இந்தப் பகுதிக்கு வந்த திருஞானசம்பந்தர் இங்கே கோயில் கொண்டிருக்கும் குறும்பலா ஈசனாகிய சிவபெருமானையும், குழல்வாய்மொழி அம்மையாகிய உமாதேவியாரையும் சிறப்பித்து தேவாரப் பாடல்கள் பாடியுள்ளார்' என்றதும், எல்லோரும் குறும்பலா ஈசனைத் தரிசிக்க ஆர்வம் கொண்டார்கள்.

அப்படியே அனைவரும் பேரருவிக்குச் சென்று நீராடிவிட்டு, குறும்பலா ஈசனைத் தரிசிக்கச் சென்றோம். கோயிலை வலம் வந்தபோது, 'இந்தக் கோயில் ஐவகை சபைகளில் ஒன்று என்பது தெரியுமா?' என்று என் அருகில் இருந்த இளைஞர் ஒருவரிடம் கேட்டேன். 'ஐ நோ ஒன்லி ஐ.நா. சபை' என்றார் அவர்.

உடனே நான், 'அப்படிங்களா? நல்லது. உங்களுக்கு தெரிஞ்ச அதே ஐ.நா. சபையில தமிழ்ல எழுதப்பட்ட வாக்கியம் என்னன்னு தெரியுமா?' என்று கேட்டேன். அவர் திகைத்துப்போனார்.

'நான் சொல்லவா? கணியன் பூங்குன்றனார்ங்கிற தமிழ்ப் புலவர் 2000 ஆண்டுகளுக்கு முன்னால், 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்!’னு எழுதின புறநானூற்றுப் பாடல் வரிதான் அங்கே எழுதப்பட்டிருக்கு. சரிதானாய்யா?' என்று பரமசாமி குறுக்கே புகுந்து பதில் சொல்ல, அவரைப் பாராட்டிவிட்டு ஐவகை சபைகள் பற்றிச் சொன்னேன்.

'தமிழ்நாட்டில் சிவபெருமான் ஐந்து திருச்சபைகளில் வீற்றிருக்கிறார். பொன்னம்பலம் (சிதம்பரம்), வெள்ளியம்பலம் (மதுரை), சித்திரசபை (குற்றாலம்), தாமிரசபை (திருநெல்வேலி), ரத்தினசபை (திருவாலங்காடு) ஆகியவைதான் அவை. இதோ பாருங்கள்... சித்திரங்கள் நிறைந்த இந்தச் சபையே சித்திரசபை. இதுவே, இந்தக் கோயிலின் சிறப்பு!' என்று நான் சொல்லி முடித்தபோது,

 'வானரங்கள் கனிகொடுத்து மந்தியடு கொஞ்சும்,
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்’

எனும் பாடல் காற்றில் ஒலிக்க, கோயிலில் இருந்த அரங்கில் திரிகூடராசப்பக் கவிராயரின் குற்றாலக்குறவஞ்சி நாட்டிய நாடகம் கலகலப்பாகத் தொடங்கியது.

நாங்கள் அதை வாய் பிளந்து ரசிக்கத் தொடங்க... அங்கிருந்த வானரங்கள் எங்கள் கையில் இருந்த உணவுப் பொருட்களை வாய் நிறைய ருசிக்கத் தொடங்கின.