சரணம் கணேசா!

##~## |
திருநாகேஸ்வரம் ஸ்ரீநாகநாதஸ்வாமி கோயிலின் தென்பிராகாரத்தில், சுயம்பு மூர்த்தியான தல விநாயகர் சந்நிதி உள்ளது. இவருக்கு 'சான்று விநாயகர்’ என்று பெயர். சிவபெருமானின் கட்டளைப்படி, ஸ்ரீநாகராஜா முதலில் அவரை வழிபட்டதற்குச் சான்றாக விளங்கியதால் 'சான்று விநாயகர்’ எனப் பெயர் பெற்றார். இவருக்குச் சண்முக விநாயகர், நாகநாத கணபதி என்ற பிற திருநாமங்களும் உண்டு.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ளது கேரளபுரம். இங்குள்ள ஸ்ரீமகாதேவர் கோயிலில் அதிசய விநாயகர் அருள்பாலிக்கிறார். இவர், வருடத்தில் முதல் 6 மாதங்கள் வெண்ணிறமாகவும், அடுத்த 6 மாதங்கள் கறுப்பு நிறமாகவும் காட்சித் தருகிறார். இந்த விநாயகர் சிலை சந்திரகாந்தக் கல்லில் செய்யப்பட்டதால் இவ்விதம் அற்புதம் நிகழ்கிறது என்கிறார்கள்.
நாகர்கோவில் அருகில் அமைந்துள்ள ஊர் 'கோட்டார்’. இங்குள்ள ஸ்ரீதேசிக விநாயகர் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு தினமான சித்திரை முதல் நாளன்று மட்டும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மாம்பழம் பிரசாதமாகத் தரப்படுகிறது. இந்த வழக்கம் வேறு எங்கும் இல்லை.
சங்கரன்கோவிலில் அருள்புரியும் விநாயகர் பாசம், அங்குசங்களுக்குப் பதிலாக இரு கைகளிலும் சர்ப்பங்களை ஏந்தி சர்ப்ப கணபதியாகத் திகழ்கிறார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உடல் முழுக்க வெள்ளை விபூதி பூசிக் காணப்படும் கணபதியின் பெயர் 'விபூதி விநாயகர்’.
திருப்புறம்பியம் திருத்தலத்தில் பிரளயம் காத்த விநாயகர் வீற்றிருக்கிறார். இவருக்கு விநாயகர் சதுர்த்தி அன்று ஒரு குடம் தேன் அபிஷேகம் செய்கிறார்கள். மற்ற நாட்களில் இவருக்கு அபிஷேகம் கிடையாது.
சுசீந்திரம் கோயிலில் இரட்டை எலிகளை வாகனமாகக் கொண்டு அருள்பாலிக்கிறார் 'நீலகண்ட விநாயகர்’.
தொகுப்பு : ஜி.ஜெயலெட்சுமி, சிட்லபாக்கம்
ஜி.கே.எஸ்.மூர்த்தி, கோபிசெட்டிப்பாளையம்
அ.பேச்சியப்பன், ராஜபாளையம்