மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஞானப் பொக்கிஷம்! - 12 - பெரிய புராணம்!

ஞானப் பொக்கிஷம்! - 12 - பெரிய புராணம்!

ஞானப் பொக்கிஷம்! - 12 - பெரிய புராணம்!
ஞானப் பொக்கிஷம்! - 12 - பெரிய புராணம்!
##~##
மைச்சர்கள் படுத்தும் பாடு இருக்கிறதே..! அப்பப்பா... சொல்லி முடியாது. மேலிடத்துக்கு எந்தத் தகவலையும் சொல்ல மாட்டார்கள். ஒருவேளை, எப்படியாவது மேலிடத்துக்குத் தகவல் எட்டிவிட்டால்... பதறிப்போய்விடுவார்கள்! சம்பவத்தை அப்படியே மாற்றி, தலைகீழாகச் சொல்லி ஜிலேபியாக்கி, மேலிடத்தைப் போட்டுக் குழப்பிவிடுவார்கள். அமைச்சர்களின் திறமை அந்த அளவுக்குப் புகுந்து விளையாடும்.

அப்படிப்பட்ட அமைச்சர்களைப் பற்றியும், அவர்களின் குணாதிசயங்களைப் பற்றியும் ஒரு முதலமைச்சரே சொல்கிறார். ஆம்... சொன்னவர் முதலமைச்சராக இருந்தவர்தான். அவர் யார் என்பதை அப்புறமாகப் பார்க்கலாம். முதலில் அவர் என்ன சொன்னார் என்பதைப் பார்ப்போம்...

மனுநீதிசோழன் மகன் வீதிவிடங்கன், ஒரு பசுங்கன்றின் மேல் தேரை ஏற்றி, அதைக் கொன்றுவிட்டான். கன்றை இழந்த தாய்ப்பசு அரண்மனையில் இருந்த ஆராய்ச்சிமணியை அடித்து முறையிட்டது.

அரசர், மந்திரிகளை அழைத்து, ''என்ன காரணம்?'' என்று விசாரித்தார்.

அப்போது மந்திரிகள் பதில் சொல்கிறார்கள். தவறு செய்தது மேலிடத்து வாரிசல்லவா? அதனால் எவ்வளவு அழகாக வழக்கை நடத்திக் கொண்டு போகிறார்கள் பாருங்கள்!

''மன்னா! ஒரு பசுங்கன்று இறந்து போய்விட்டது. அந்தத் துயரம் தாங்காமல், அதன் தாய்ப்பசு வந்து நமது அரண்மனை ஆராய்ச்சிமணியை அடிக்கிறது'' என்றார்கள் மந்திரிகள்.

வழக்கு இவ்வளவுதான். அதை வார்த்தைகளால் எவ்வளவு அழகாக மந்திரிகள்,  திசைமாற்றுகிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.

''மன்னா! அந்தக் கன்று தேர்ச் சக்கரத்தில் புகுந்து இறந்துவிட்டது. முன்னால் வந்தால், பார்த்து நிறுத்தி இருக்கலாம். பக்கவாட்டில் எதிர்பாராதவிதமாக வந்துவிட்டது. அதனால்தான்....  (இளைய ஆன் கன்று தேர்க்கால் இடைப் புகுந்து இறந்ததாக)!'' என்கிறார்கள்.

அடுத்த கேள்வியாக என்ன வரும் என்பது அந்த அமைச்சர்களுக்குத் தெரியும். அதனால் அவர்கள்...

''அதுமட்டுமல்ல மன்னா! தேரோடிய அந்தத் தெரு, பொதுப்பாதை அல்ல! அரசர்கள் மட்டும் உலாப்போகும் தெரு (றிஸிளிபிமிஙிமிஜிணிஞி கிஸிணிகி). அந்தப் பாதையில், அந்தப் பசுங்கன்று வந்ததே தவறு! அதனால்தான்... (அரசுலாந் தெருவில் போங்கால்)!'' என்கிறார்கள்.

அடுத்த சப்பைக்கட்டு தொடர்கிறது. ''மன்னா! அரசருக்கு மட்டும் உரிய அந்தத் தெருவில், தனியாகப் போயிருந்தால் கூடப் பரவாயில்லை. அளவிலாத படைகள் சூழ, தேர் ஓடிக்கொண்டிருந்தது. திடீரென்று கன்று வந்ததை அறிய முடியாத நிலை. அதனால்தான்...(அளவில் தேர்த்தானை சூழ)!'' என்கிறார்கள்.

சப்பைக்கட்டு சற்று இடம்பெயர்கிறது. 'மன்னா! அந்தத் தேரில், பல மணிகள் கட்டப்பட்டிருந்தன. அவை எழுப்பிய ஓசை பலமாக இருந்தது. கன்று கத்தி இருந்தாலும், காதில் விழுந்திருக்காது. தேரோ, நீள- நெடுகப் பெரியதாக இருக்கும் தேர்! திடீரென்று வரும் கன்றை எப்படி பார்க்க முடியும்? அதனால்தான்...(மணி நெடுந்தேர் மேல் ஏறி!)' என்கிறார்கள்.

ஞானப் பொக்கிஷம்! - 12 - பெரிய புராணம்!

இவ்வளவு நேரம் சொன்னதுகூட பரவாயில்லை. அடுத்து வருவதுதான் விசேஷம்.

''மன்னா! எல்லாவற்றுக்கும் மேலாக, தேரில் ஏறிப்போனது - உங்கள் புதல்வன். உங்களுக்குப் பிறகு இந்த நாட்டை ஆள வேண்டியவர். அப்படியிருக்கும் போது...(நின் புதல்வன்)!' என்கிறார்கள் அமைச்சர்கள்.

இத்தனைக்கும் மேலாக, தங்கக் குடத்துக்குப் பொட்டு வைப்பதைப் போல, ஒரே ஒரு வார்த்தை சொல்லி வழக்கையே முடிக்கப் பார்க்கிறார்கள் அமைச்சர்கள் ''மன்னா! நம் நாட்டில் வளங்களுக்குப் பஞ்சமா என்ன? நீங்கள் வளமையாக ஆட்சி செலுத்தும் நம் நாட்டில், ஒரு கன்றுக்குட்டி இறந்துபோய் விட்டதென்று, அதன் தாய் வந்து இப்படி ஆராய்ச்சிமணியை அடிக்கிறது. அவ்வளவுதான்...!(வளவ)' என்று முடித்தார்கள்.

அதாவது;

''குற்றம் செய்தவன் மேலிடத்தைச் சேர்ந்தவன்; அவன் சென்றது - பார்வையை மறைக்கும் அளவு கொண்ட பெரிய தேரில்; ஏராளமான சேனைகள் சூழ்ந்து போனதால் போக்குவரத்து அதிகம்; இடமோ தடை செய்யப்பட்ட பகுதி, அதாவது... அரசர்கள் மட்டுமே உலாப் போகும் இடம். உயிரிழந்ததோ ஒரு சின்னஞ்சிறிய கன்றுக்குட்டி. இந்த விவரமே தெரியாமல் கன்றுக்குட்டியின் தாய் இங்கே வந்து ஆராய்ச்சிமணியை அடிக்கிறது'' என்று மிகவும் ஆராய்ச்சித் திறமையோடு வழக்கைத் தாக்கல் செய்து தீர்ப்பையும் சூசகமாக உணர்த்திவிட்டார்கள் அமைச்சர்கள்.

மேலிடம் என்ன பதில் சொல்லப் போகிறது? அமைச்சர்கள் எதிர்பார்த்தபடி வழக்கையே மூடிவிடப் போகிறதா? அல்லது நீதியும் நேர்மையும்தான் முக்கியம்; தவறு செய்தது என் மகனாக இருந்தாலும் தண்டனை உண்டு என்று சொல்லப் போகிறதா?

யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த மேலிடம், ''கன்றை இழந்து அந்தத் தாய்ப்பசு அடைந்த துயரத்தை நானும் அனுபவிப்பேன்'' என்று தீர்ப்பு வழங்கியது. அதன்பிறகு நடந்தது தான் உங்களுக்கே தெரியுமே!

இந்தத் தகவலை, ஆச்சரியப்படும் விதமாக எழுதியவர் சேக்கிழார் சுவாமிகள். தான் எழுதிய பெரியபுராணத்தில் அமைச்சர்களின் பேச்சாற்றலை இவ்வாறு விவரித்த சேக்கிழார், அப்பூதி அடிகளின் பணியாளராக இருந்தவரின் பேச்சாற்றலையும் விவரித்து இருக்கிறார்.

அத்துடன், விஞ்ஞான ரீதியிலான பல தகவல்களை விவரித்திருக்கும் சேக்கிழார், அரசர்கள் முதலானோரின் காலக் கணக்கையும் தெளிவாகவே பதிவு செய்திருக்கிறார். அதனால்தான், ஆராய்ச்சியாளர்கள், ''சேக்கிழாரின் பெரிய புராணம் இல்லையென்றால், தமிழகத்துக்கு வரலாறே இருந்திருக்காது'' என்கிறார்கள்.

பண்பாடு, பழக்க வழக்கங்கள், உண்மையான பக்தி, அதேநேரம் வஞ்சகர்களின் செயல்கள்... எனப் பலவிதமான தகவல்களையும் தரும் ஒரு மாபெரும் ஞானப் பொக்கிஷம் இந்தப் பெரிய புராணம்.

வளவ! நின் புதல்வன் ஆங்கோர்
மணி நெடுந்தேர் மேல் ஏறி
அளவில் தேர்த்தானை சூழ
அரசுலாந் தெருவில் போங்கால்
இளைய ஆன்கன்று தேர்க்கால்
இடைப் புகுந்து இறந்ததாக
தளர்வுனும் இத்தாய் வந்து
விளைத்தது இத்தன்மை என்றார்

- பெரியபுராணம்

(இன்னும் அள்ளுவோம்...)