விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்
தொடர்கள்
Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!
##~##
ண்டைய தமிழ் இலக்கியங்கள் இன்றைக்கும் போற்றிக் கொண்டாடப்படுகின்றன. தமிழக, இந்திய அறிஞர்களால் மட்டுமின்றி மேனாட்டு அறிஞர்களாலும் வார்த்தைக்கு வார்த்தை சொல்லிச் சொல்லிப் பாராட்டப்படுகின்றன. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இவை ஏடுகளாகவும் ஓலைச்சுவடிகளாகவும் கிடைக்காது போயிருந்தால், பண்டைய தமிழ் இலக்கியங்களின் சுவையை நாம் அனுபவித்தே இருக்கமுடியாது. இவற்றையெல்லாம் தேடித்தேடிக் கண்டறிந்து, சேகரித்து, அவற்றைப் புத்தகங்களாகவும் வெளிக்கொண்டு வந்த பெருமைக்கு உரியவர் யாரென்று உங்களுக்கே தெரியும்.

அவர்... தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர். 1855-ஆம் வருடம் பிறந்து 1942-ஆம் வருடம் வரை வாழ்ந்து, தாம் வாழ்ந்த காலத்துக்குள் பண்டைய தமிழ் இலக்கியங்களைச் சேகரித்து அச்சிட்டு, தமிழுக்கு மிகப் பெரிய தொண்டு செய்த அந்த மாமனிதரை மறக்க முடியுமா என்ன?

உ.வே.சா. என்றால், உத்தமதானபுரம் வேங்கடசுப்பய்யர் மகன் சாமிநாதன் என்று அர்த்தம்!

தஞ்சாவூருக்கும் கும்பகோணத்துக்கும் நடுவே உள்ளது பாபநாசம். இந்த ஊரில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது உத்தமதானபுரம்.

முதலில், உத்தமதானபுரம் என இந்தக் கிராமத்துக்குப் பெயர் அமைந்த கதையைப் பார்ப்போமா?

ஆலயம் தேடுவோம்!

பல நூறு வருடங்களுக்கு முன்பு, தஞ்சை தேசத்தை சரபோஜிகள் ஆட்சி செய்து வந்தனர். அப்போது அரியணையில் இருந்த சரபோஜி ராஜா, மக்களின் மீதும் தேசத்தின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தேசம் நன்றாக இருந்தால்தான் மக்கள் செழிப்பாக இருப்பார்கள், மக்கள் சந்தோஷமாக இருந்தால்தான் அரசன் நிம்மதியாக இருக்க முடியும் என்பதில் உறுதியாக இருந்தார் மன்னர்.

இதற்காக நித்தியப்படி பூஜைகள் மேற்கொண்டார். கடும் விரதங்களை அனுஷ்டித்தார். ஒருமுறை ஏகாதசி விரதம் இருந்த நாளில், ஞாபகம் இல்லாமல் விரதத்தை நிறைவு செய்து, உணவை உண்டு முடித்ததும், தாம்பூலம் தரித்துவிட்டார் மன்னர். 'அடடா... என்ன காரியம் செய்துவிட்டீர்கள் மன்னா! விரத நாளில் தாம்பூலம் எடுத்துக்கொண்டால், அது நல்லது அல்லவே!’ என்றார்கள் பண்டிதர்கள்.

அதைக் கேட்டுப் பதறிப் போனார் சரபோஜி மகாராஜா. ''இது எனக்குக் கெடுதலா? எனக்குக் கெடுதல் வந்தால், அது இந்த தேசத்தையும் மக்களையும் சேர்த்துப் பாதிக்குமே! இதற்கு ஏதேனும் பரிகாரம் உண்டா?'' எனப் பரிதவிப்புடன் கேட்டார் ராஜா.

ஆலயம் தேடுவோம்!

''உத்தமமான 48 அந்தணர்களுக்கு 48 வீடுகளையும், 48 ஏக்கர் நிலங்களையும் தானமாகத் தாருங்கள். அவர்கள் தினமும் அங்கே அமர்ந்து, வேதபாராயணங்களைச் சொல்லச் சொல்ல... அந்த வேத கோஷங்களின் அதிர்வால், இந்தப் பாவம் அகலும். அத்துடன் இந்த தேசம் இன்னும் செழிப்புறும்'' என அறிவுரை தந்தார்கள் பண்டிதர்கள்.

அதன்படி, தஞ்சைக்கு அருகில் உள்ள ஓரிடத்தைத் தேர்வு செய்தார் மன்னர். 48 அந்தணக் குடும்பங்களை அழைத்து, அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தார். 48 ஏக்கர் நிலங்களை வழங்கினார். அங்கே உள்ள சிவாலயத்தில் இடைவிடாது எந்நேரமும் வேதகோஷங்கள் முழங்கின. அந்தணர்கள் வேதங்களைச் சொல்லச் சொல்ல, பாராயணம் செய்யச் செய்ய... அந்த தேசம் இன்னும் இன்னும் செழித்தது.

மகாராஜா உத்தமமான அந்த அந்தணர்களுக்கு வீடுகளையும் நிலங்களையும் தானமாகத் தந்த ஊர், பின்னாளில் உத்தமதானபுரம் என அழைக்கப்பட்டது. இவை அனைத்துக்கும் சாட்சியாக, ஸ்ரீஆனந்தவல்லி சமேதராக இன்றைக்கும் காட்சி தருகிறார் ஸ்ரீகயிலாசநாதர்.

ஆலயம் தேடுவோம்!

ஆலயத்துக்கு அருகில் லட்சுமி தடாகம் உள்ளது. அதில் நீராடிவிட்டுத்தான் அந்தணர்கள் தினமும் வேதபாராயணம் செய்தார்களாம்; அதனால், தேசத்திலும் மக்களிடமும் சுபிட்சம் நிலவியது என்பார்கள். எனவே, இந்தத் தடாகத்தில் குளித்தாலோ அல்லது தண்ணீரை எடுத்துத் தலையில் தெளித்துக்கொண்டாலோ மிகப் பெரிய புண்ணியம் என்கிறார்கள் ஊர்ப் பெரியவர்கள்.

கோயில் கருவறையில் குடிகொண்டு அருள்பாலிப்பது ஸ்ரீகயிலாசநாதர்தான் என்றாலும், இங்கே முக்கியமானவரும் விசேஷமானவரும் யார் தெரியுமா? ஸ்ரீவிநாயகப் பெருமான்தான்.

ஆமாம்... இங்கே மூன்று விநாயகப்பெருமானின் திருமேனிகளைத் தரிசிக்கலாம். இதனால் இவருக்கு மும்மூர்த்தி விநாயகர் என்று திருநாமம். இந்த மும்மூர்த்தி விநாயகர் விசேஷமானவர். வரப்பிரசாதி!

ஆலயம் தேடுவோம்!

எல்லா ஆலயங்களையும் போலவே, இங்கேயும் சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படும் என்றாலும், எந்தத் தலத்திலும் இல்லாத ஒன்றாக 'நிறை பணி’ வழிபாடு என்பது இங்கே பிரசித்தம்! அதாவது, 'பையனுக்கு நினைத்த மாதிரி வேலை கிடைக்க வேண்டும்’, 'மகளின் திருமணம் நினைத்தது போலவே நடக்கவேண்டும்’, 'இந்த வருடம் அமோகமாக விளைச்சல் இருக்கவேண்டும்’, 'எதிர்பார்த்த பதவி உயர்வு விரைவில் கிடைக்கவேண்டும்’ என்றெல்லாம் நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு பிரத்யேக பிரார்த்தனை உண்டல்லவா? இப்படி மனதில் நினைத்ததைப் பிரார்த்தனையாக வைத்து, அபிஷேகங்கள் செய்து, ஆழாக்கு அரிசியில் கொழுக்கட்டை செய்து, குறிப்பாக ஒரு தேங்காய் அளவுக்கு கொழுக்கட்டை செய்து படைத்து, மனதார வேண்டிக் கொண்டால், நினைத்ததை விரைவில் நிறைவேற்றி அருள்வாராம் மும்மூர்த்தி விநாயகர்.

ஆனால் என்ன... நாம் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றி அருள்கிற மும்மூர்த்தி விநாயகர் குடிகொண்டிருக்கும் இந்தக் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து பல வருடங்களாகிவிட்டன என்பதுதான் மிகக் கொடுமை! 'நிறை பணி’ எனும் சிறப்பு வழிபாடு கொண்ட இந்தக் கோயிலின் திருப்பணிகள் இன்னும் துவங்கப்படாமலேயே இருப்பது வருத்தத்துக்கு உரியது!

சரி... இந்தக் கோயிலுக்கு 1968-ஆம் வருடத்தில் கும்பாபிஷேகத்தை சீரும் சிறப்புமாக நடத்தி வைத்தவர் யார் தெரியுமா? கடந்த நூற்றாண்டில், நடமாடும் தெய்வம் என எல்லோராலும் போற்றி வணங்கப்பட்ட காஞ்சி மகா பெரியவாதான்! கோயிலின் கும்பாபிஷேகத்தை நடத்தியதோடு, கோயில் திருப்பணிகளையும் செவ்வனே நடத்தியிருக்கிறார் அவர்.

ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!

68-ஆம் வருடம், கும்பகோணம் அருகில் உள்ள திருவலஞ்சுழி (அதுவும் விநாயகர் திருத்தலம்தான்) தலத்தில் முகாமிட்டிருந்தார் மகா பெரியவா. உத்தமதானபுரத்தையும் அங்கே நிகழ்ந்த வேத பாராயணத்தையும் நன்கு அறிந்திருந்த அவர் ஸ்ரீகயிலாசநாதர் கோயிலுக்கு வந்து, ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டு, திருப்பணிகளைச் செய்வதற்கு நிதி அளித்ததுடன், கும்பாபிஷேக வைபத்திலும் கலந்துகொண்டார் என்று ஊர்க்காரர்கள் பெருமைப் பொங்கத் தெரிவித்தனர்.

இத்தனை பெருமைகள் கொண்ட ஸ்ரீகயிலாசநாதர் கோயில், களையிழந்து கிடக்கலாமா? நினைத்ததை நிறைவேற்றி அருளும் மும்மூர்த்தி விநாயகர் குடிகொண்டிருக்கிற கோயில் செம்மையுடன் திகழ வேண்டாமா? ஆழாக்கு அரிசியில் கொழுக்கட்டை செய்து படைக்கும் அன்பர்கள் அதிகரித்தால்தானே, ஸ்ரீவிநாயகர் சந்தோஷம் கொள்வார்?! இதோ... வருகிற 19.9.12 அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. அந்த நாளில், விநாயகருக்கு அபிஷேகங்களும் ஆராதனைகளும் அருகம்புல் மாலையும் கொழுக்கட்டையும் என விமரிசையாகக் கொண்டாடுவார்கள், நாடு முழுவதும் உள்ள பக்தர்கள்.

இங்கே... 'நிறை பணி’ செய்து, மும்மூர்த்தி விநாயகரை வணங்கி வழிபடுங்கள். நீங்கள் நினைத்த காரியங்கள் யாவற்றையும் ஜெயமாக்கித் தருவார்.

அப்படியே 'நிறை பணி’ மும்மூர்த்தி விநாயகர் கோயில் திருப்பணிகளையும் நிறைவேற்றி வையுங்கள். உங்கள் வாழ்க்கை இனிதே நிறைவுறும்!

ஓம் கணபதியே சரணம்!

படங்கள்: இ.ராஜவிபீஷிகா