

பாலனாம் விருத்தனாம் பசுபதிதானாம்
பண்டு வெங்கூற்று உதைத்து அடியவர்க்கருளும்
காலனாம் எனதுரை தனதுரையாகக்
கனல் எரி அங்கையில் ஏந்திய கடவுள்
நீலமா மலர்ச்சுனை வண்டு பண்செய்ய
நீல மலர்க்குவளைகள் தாது விண்டோங்கும்
ஏல நாறும் பொழில் இலம்பையங்கோட்டூர்
இருக்கையாப் பேணி என் எழில் கொள்வதியல்பே

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
- என திருஞானசம்பந்தப் பெருமான் பாடுகிறார்.
##~## |
அந்தப்பசு முன்னே செல்ல, அவர்கள் அனைவரும் பின்தொடர, கோயிலுக்கு அருகில் வந்த பசு, சட்டென மறைந்தது. அந்தத் தலத்தை அடையாளம் காட்டவே சிறுவனாக, முதியவராக, பசுவாக சிவனார் வந்து வழிமறித்தார் என அனைவரும் அறிந்தனர்; வியந்தனர்! இதைத்தான், 'பாலனாம் விருத்தனாம் பசுபதிதானாம்’ எனச் சுட்டிக்காட்டுகிறார் சம்பந்தர் பெருமான்.
அப்பேர்ப்பட்ட திருத்தலம், சென்னைக்கு அருகில், தொண்டை மண்டலத் தலங்களின் ஒன்றெனத் திகழும் எலுமியங்கோட்டூர்.
கூவம் என திருவிற்கோலம் தலத்துக்கு அருகில், சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது இலம்பையங்கோட்டூர்; கூவம் ஏரிக்கரையில் அமைந்துள்ளது கூவம் தலம்; ஏரியின் எதிர்க்கரையில் இருக்கிறது இலம்பையங்கோட்டூர்.


சென்னை அல்லது காஞ்சிபுரத்தில் இருந்து செல்பவர்கள், செல்லம்பட்டிடை எனும் ஊரை அடைந்து, அங்கிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ள இந்தத் தலத்தை அடையலாம்! சென்னை- பெங்களூரு நெடுஞ்சாலையில் வழியே, செம்பர்மபாக்கம் அருகில் செல்லம்பட்டிடை செல்லும் சாலையில் திரும்பினால், கோயிலை அடையலாம். சின்னஞ்சிறிய ஊர்; வசதிகள் ஏதுமில்லை.
கோனேரின்மைகொண்டான் பாண்டியன் ஜடாவர்ம சுந்தரபாண்டியனின் ஆட்சியில், 'மணவிற்கோட்டத்துக் கான்றூர் நாட்டின் பையங்கோட்டூர்’ மற்றும் சதுர்வேதிமங்கலம் இலம்பையங்கோட்டூர் என்கின்றன கல்வெட்டுகள்! எனவே, இங்கே வேதபண்டிதர்கள் பலரும் வாழ்ந்திருந்தனர் எனத் தெரிகிறது.
தங்கம், வெள்ளி, இரும்பு ஆகிய மூன்று உலோகங்களால், முறையே ஆளுக்கொரு கோட்டை கட்டிக்கொண்டு, அட்டகாசம் செய்தனர் அரக்கர்கள் மூவர். அவர்களை அடக்குவதற்குத் திருவுளம் கொண்ட சிவனார், போரிட வசதியாக உலகத்தையே தேராக்கினார்; பிரம்மாவைத் தேர்ச் சாரதியாக்கினார்; சூரியனையும் சந்திரனையும் தேர்ச் சக்கரங்களாக்கினார்.
அரக்கர்களை அழிக்க, ஆயுதம் வேண்டுமே! பிரமாண்டமான ஆயுதத்துக்கு எங்கே போவது? சட்டென்று யோசித்தவர், மேரு மலையையே வில்லாக்கினார்; அதற்கேற்ற அம்பாக, தாமே வருவதாக மகாவிஷ்ணு வந்து விளங்க, மலையை வளைத்துக்கொண்டு புறப்பட்டார் சிவனார்.
விநோதத் திருக்கோலம்; விநோதமான ரதம்; வித்தியாசமான ஆயுதங்கள் என சிவனார் கிளம்புவதை அறிந்த தேவர்கள், அவரைத் தரிசிக்க திருக்கயிலாயத்துக்கு வந்தனர். ஆனால், அதற்கு முன்பாகவே அரனாரின் தேர் நகர்ந்துவிட்டது. அவரைத் தரிசிக்கும் ஆவலில், அவரது தேரின் தடத்தைக் கண்டு, அதன் பின்னேயே தேவர்கள் சென்றனர். அவர்கள் வருவது சிவனாருக்குத் தெரியாதா என்ன?!


க்ஷீரா நதியைக் கடந்ததும், ஒன்றும் தெரியாதவர்போல, அங்கேயே தேரை நிறுத்தித் திரும்பிப் பார்த்தார். மேருவை வில்லாக வளைத்துக் திருக்கோலம் காட்டிய இடம், திருவிற்கோலம் ஆனது. அதற்குள்ளாக, க்ஷீரா நதியின் எதிர்க்கரையைத் தொட்டிருந்த தேவர்கள் நின்று தரிசித்த இடம், இலம்பையன்கோட்டூர் ஆனது.
க்ஷீரா நதி? அதுதான் பழம்பாலாறு (க்ஷீரம்- பால்) எனப்படும் கூவம் நதி! இங்கு வந்தபோது, சிவனாரின் கொன்றை மாலை கீழே விழுந்து, சுயம்பு லிங்கமென உருவானதாகச் சொல்கிறது ஸ்தல புராணம். தேவர்கள் வழிபட்ட நிலை என்பதால், ஸ்வாமியின் திருநாமம்- ஸ்ரீதெய்வநாயகேஸ்வரர்; ரம்பை, திலோத்தமை, ஊர்வசி என அரம்பையர் வழிபட்டதால், ஸ்ரீஅரம்பேஸ்வரர் எனும் திருநாமம் உண்டானது.
இதுகுறித்து, ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய 'திருக்கூவபுராணம்’ எனும் நூலில் அறியமுடிகிறது. ஆகவே, அரம்பையங்கோட்டூர் என்பதே இலம்பையங்கோட்டூர் என்றானதாகவும் கொள்ளலாம்.
கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை ராஜகோபுரம் இல்லை. ராஜகோபுரம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர். கிழக்குப் பார்த்த ஆலயம்; கிழக்கு வாசல் கூவத்தின் கரையில் உள்ளது. ஊருக்குள்ளிருந்து வந்தால், மேற்கு நுழைவாயில் வழியாகவே வரலாம். அப்படியே நுழைந்து, கிழக்கு வாயில் வழியையும் தொட்டுவிடலாம்.

அழகிய பிராகாரம். திருச்சுற்றின் தென்கிழக்குப் பகுதியில், 16 பட்டைகளுடன் கூடிய அரம்பாபுரிநாதர்; இவர்தான், ரம்பை முதலான அரம்பையர் ஸ்தாபித்து வழிபட்ட ஒளிபொருந்திய அரம்பேஸ்வரர். தென்மேற்கில் குருந்த கணபதி; வடமேற்கில் ஸ்ரீவள்ளி- தெய்வானை சமேத ஸ்ரீமுருகரின் சந்நிதிகள். வடகிழக்குப் பகுதியில், ஸ்ரீபைரவர் மற்றும் ஸ்ரீசூரியன் சந்நிதிகள்.
வலத்தை நிறைவு செய்து, மூலவர் சந்நிதிக்குச் செல்ல யத்தனிக்கிறோம். 1984-ஆம் வருடம், இந்தக் கோயிலை இடி தாக்கியது; அப்போது ஸ்ரீநடராஜர் சபை, ஸ்ரீஅம்பாள் சந்நிதி, மகாமண்டபம் முதலான கோயிலின் பல இடங்கள் சிதைந்ததாம். மூலவர் சந்நிதி நோக்கி நகர்கிறோம். ஸ்வாமி, ஸ்ரீதெய்வநாயகேஸ்வரர் என்கிற ஸ்ரீஅரம்பேஸ்வரர் என்கிற ஸ்ரீசந்திரசேகரர்.
ஆம், தட்சனால் தனக்குக் கிடைத்த சாபத்தைப் போக்கிக் கொள்ள, இங்கே இந்தத் தலத்தில் மல்லிகை மலர்களால் சிவனாரை வழிபட்டான் சந்திரன்; அதில் மகிழ்ந்த சிவனார், அவனைத் தனது சிரசிலேயே சூடிக்கொண்டார்; ஆகவே, பிறைசூடி என்றும் சந்திரசேகரர் என்றும் சிவனாருக்குத் திருநாமம் உண்டானது,
மூலவர், கிழக்கு நோக்கியவர்; வெளிர் சிவப்பு நிறத்தில் காட்சி தருகிறார்; ஆவுடையார் மிகப் பெரியது; ஆவுடையாரின் அடிப்பாகம், தாமரை போன்ற தோற்றத்தில் அமைந்துள்ளது. மனத்துக்குச் சந்திரனே பொறுப்பாளி; ஆகவே, சோம வாரங்களில் (திங்கட்கிழமைகளில்) ஸ்ரீதெய்வநாயகேஸ்வரரை வழிபடுவது, மனத்துக்கு அமைதியைத் தரும்!

இந்தத் திருத்தலத்திற்கு ஞானசம்பந்தர் மாத்திரமே பதிகம் பாடியிருக்கிறார்; இந்தப் பதிகம் மிகவும் சிறப்பானது.
அதாவது, பரமேஸ்வரரையும் பரமேஸ்வரியையும் தம்முடைய தந்தையும் தாயுமாகக் கண்ட ஞானசம்பந்தர், இங்கே நாயகியாக மாறிக்கொள்கிறார். இறைவனை நாயகனாக எண்ணியபடி உருகுகிறார். தனது காதலால் இறைவனார், தனது அழகைக் கொள்ளைகொள்கிறார் என்றே பதிவு செய்கிறார். 'இருக்கையாப் பேணி என் எழில் கொள்வதியல்பே’ என்று மொழிகிறார். அதேபோல், ஒவ்வொரு பாடலிலும், 'எனதுரை தனதுரையாக’ என்கிறார். சம்பந்தரின் வாய்மொழியெல்லாம், இறைவனாரின் மொழிகளே என்பது இதனால் உறுதிப்படுகிறது.
ஸ்வாமியை வழிபட்டுத் திரும்பினால், தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி; ஸ்ரீகனக குஜாம்பிகை, கோடேந்து முலையம்மை, கதிர்முலையம்மை, தாயினும்நல்லாள் ஆகிய திருநாமங்களைக் கொண்ட அம்பாள், நின்றகோல நாச்சியார். முகம் கொள்ளாத சிரிப்புடன் காட்சி தரும் அழகே அழகு! ஸ்ரீசக்கரம் இங்கே உள்ளது.
மூலவர் சந்நிதியின் கோஷ்ட மூர்த்தங்களாக ஸ்ரீநிருத்த கணபதி, ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீமகாவிஷ்ணு, ஸ்ரீபிரம்மா மற்றும் ஸ்ரீதுர்கை. இந்த தட்சிணாமுர்த்தியை அவசியம் தரிசிக்கவேண்டும். இவர், ஸ்ரீயோக தட்சிணாமூர்த்தி. சின்முத்திரையை இதயத்தின் அருகில் காட்டுகிறார்; இடது கீழ்க்கரம் தொடைமீது ஊன்றியபடி இருக்க, மேல் கரங்களில் திரிசூலமும் ஜபமாலையும் ஏந்தியுள்ளார். வலது திருப்பாதம், யோக பட்டயத்தில் இருக்க, இடது திருப்பாதம் முயலகன் மீது ஊன்றப்பட்டுள்ளது. சனகாதி முனிவர்கள் சூழ்ந்தமர்ந்து கவனித்திருக்க, கல்லால மரத்தடியில் ஆனந்தத் திருக்கோலம் காட்டுகிறார். அற்புதத் தரிசனத்தைக் காணக் கண்கோடி வேண்டும்!
இங்கே, சந்திர தீர்த்தம், ரம்பா தீர்த்தம், மல்லிகை தீர்த்தம், தாமரை தீர்த்தம், பூதகண தீர்த்தம் என நிறைய தீர்த்தங்கள் இருந்ததாம்! தெற்கில் உள்ள தாமரை தீர்த்தமும், வடகிழக்கில் புதிதாக ஒரு தீர்த்தமும் திருப்பணிகளில் செப்பனிடப்பட்டுள்ளன. தல மரம் (மர) மல்லிகை.
ஸ்ரீநடராஜர், ஸ்ரீசிவகாமி, ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசந்திரசேகரர், ஸ்ரீசுந்தரமூர்த்தி சுவாமிகள் போன்ற உற்ஸவ விக்கிரகங்கள் கொள்ளை அழகு!
இங்கு வந்து வணங்கினால், இம்மையிலேயே வீடுபேறு அடையலாம்; முற்பிறவிப் பாவங்கள் நீங்கும் என ஞானசம்பந்தர் தனது பாடல்களில் தெரிவிக்கிறார். அதன்படியே, ஸ்ரீகதிர்முலையம்மை சமேத ஸ்ரீதெய்வநாயகேஸ்வரரை தரிசிப்போம்; தெளிவு பெறுவோம்.
(இன்னும் வரும்)
- படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்