Published:Updated:

மைசூர் அன்னதானக் கோயில்

மைசூர் அன்னதானக் கோயில்

மைசூர் அன்னதானக் கோயில்

மைசூர் அன்னதானக் கோயில்

Published:Updated:
மைசூர் அன்னதானக் கோயில்
மைசூர் அன்னதானக் கோயில்
மைசூர் அன்னதானக் கோயில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மைசூர் சென்று, ''லட்சுமி நரசிம்மர் கோயிலுக்குப் போகவேண்டும்!'' என்று எந்த ஆட்டோ அல்லது டாக்ஸிக்காரரிடம் கேட்டாலும், ''சாப்பாடு போடற கோயில்தானே, உக்காருங்க போகலாம்!'' என்று உற்சாகமாகச் சொல்லியபடி, நம்மைக் கோயிலில் இறக்கிவிடுவார்கள்.

'சாப்பாடு போடுகிற கோயிலா?!’ என்று திகைப்பாக இருக்கிறதல்லவா? ஆம், சாப்பாடுதான். அதுவும், சாதாரண சாப்பாடு இல்லை; விருந்துச் சாப்பாடு!

பக்தர்கள் அனைவருக்கும் ஸ்வாமி தரிசனம் முடிந்ததும், காலையில் சுடச்சுட பெரிய தொன்னை நிறைய வெண்பொங்கல் அல்லது புளியோதரை; மதிய வேளை எனில், சுமார் 500 பேருக்குத் தலைவாழை இலை போட்டு புளியோதரை, சாதம், நெய், சாம்பார், ரசம், பாயசம் (கப்பில் தருகின்றனர்), நெய்யில் தயாரித்த ஸ்வீட் மற்றும் கெட்டித் தயிர் என தடபுடல் சாப்பாடு.

ஒருவேளை... சாப்பாடு தீர்ந்துவிட்ட நேரத்தில், பக்தர் கூட்டம் வந்தால், கோயில் பணியாளர்கள் தடதடவென ஓடி வந்து, ''ஒரு பத்து நிமிஷம் பொறுத்துக்கொள்ளுங்கள்; இதோ, உணவு ரெடி பண்ணிடுறோம்'' என்று சொல்லிவிட்டு, வெண் பொங்கலோ புளியோதரையோ தயாரித்து, பரிமாறுகின்றனர்.

##~##
இந்த ஆலயத்தில், ஏழை- பணக்காரர் வித்தியாசமில்லை. அனைவரையும் அமரச் சொல்லி, இன்முகத்துடன் உணவு பரிமாறுகின்றனர்; கேட்டுக் கேட்டுப் பரிமாறுகின்றனர்; போதும் போதும் எனும் அளவுக்குப் பரிமாறுகின்றனர். அன்னதானம் என்பது இத்துடன் முடிந்ததா? இல்லை. மாலையில் பிரசாத உணவுகள், இரவில் நைவேத்தியம் செய்த பழங்கள் (ஃப்ரூட் ஸாலட்) மற்றும் சூடான பால் என பக்தர்களுக்கு வழங்குகின்றனர்.

இன்னொரு சிறப்பு... சீருடையுடன் காலையில் வருகிற மாணவர் கூட்டம், காலையில் பிரசாதத்தையும் பசும்பாலையும் சாப்பிட்டுவிட்டுப் பள்ளிக்குச் செல்கின்றனர். மதிய வேளையில், கோயிலுக்கு அருகில் உள்ள 40-க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாணவர்களுக்கு, மதிய உணவு இங்கிருந்துதான் வழங்கப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தில், மைசூர்- 'வொண்டி கொப்பால் சர்க்கிள்’ அருகில் அமைந்துள்ள அற்புதமான கோயில் இது! புராதனமிக்க ஹொய்சாள சிற்ப அழகில், மூலவர் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் அருளாட்சி செய்கிறார்.

இரண்யகசிபுவைக் கொன்றும்கூட ஸ்ரீநரசிம்மரின் உக்கிரம் தணியவில்லை. அடுத்து, ஸ்ரீமகாலட்சுமியைப் பார்த்ததும், அவரது கோபம் தணிந்து, உக்கிரம் காணாமல் போய், சாந்தம் குடிகொள்கிறது. ஆகவே இங்கே சாந்தமூர்த்தியாக, ஸ்ரீமகாலட்சுமியைத் தனது மடியில் அமர்த்தியபடி அருள்பாலிக்கிறார் ஸ்ரீநரசிம்மர். எனவே இவரின் திருநாமம்- ஸ்ரீலட்சுமி நரசிம்மர்.

மைசூர் அன்னதானக் கோயில்

இங்கு காலடி வைத்தாலே, நம் கவலைகள் யாவும் தவிடுபொடியாகிவிடும் என்கின்றனர் பக்தர்கள். ஆலயத்தின் கருவறையில், ஸ்ரீதேவி- பூதேவி சமேதராக உத்ஸவ மூர்த்தம் அருள்பாலிக்க, ஸ்ரீலட்சுமிதேவியை மடியில் அமர்த்தியபடி மூலவராகக் காட்சி தருகிறார் ஸ்ரீநரசிம்மர்.

கடந்த 50 வருடங்களுக்கு முன்பு, கோயில் கோபுரமும், மற்ற மண்டபப் பகுதிகளும் சிதிலமான நிலையில் இருந்ததாம். 30 வருடங்களுக்கு முன்பு, அன்பர்களின் பெருமுயற்சியால், சிறிய கோயிலாக எழுப்பப்பட்டது. கடந்த ஐந்து வருடங்களாக, ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு, அன்னதானம் குறைவின்றி நடந்துவருகிறது.

இங்கு, வெள்ளைக் கல்லில் வடிக்கப்பட்ட ஸ்ரீராம- லட்சுமணர் விக்கிரகங்கள் மற்றும் நம்மாழ்வார், ஸ்ரீராமானுஜர், மணவாள மாமுனிகள், திருமங்கையாழ்வார், ஸ்ரீஆண்டாள் ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.

ஆலயத்தில், 24 மணி நேரமும் எரிந்துகொண்டே இருக்கும் நெய்விளக்கு பிரசித்தம். இதில், நெய்யூற்றிப் பிரார்த்திக்க... நினைத்தது நிறைவேறும் என்பது கர்நாடக மக்களின் நம்பிக்கை!

மைசூர் அன்னதானக் கோயில்
மைசூர் அன்னதானக் கோயில்

''ஒருகாலத்தில் பிரமாண்டமான ஆலயமாக இருந்தது; தற்போது, சிறிய அளவில் அமைந்திருப்பதைக் கண்டு வேதனைப்படும் அன்பர்களின் முயற்சியால், விரைவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. கோபுரம், மண்டபங்கள், பிராகாரங்கள் என விஸ்தாரமாகக் கட்ட உள்ளோம்'' என்று கோயிலில் அன்னதானம் மற்றும் திருப்பணி நிர்வாகத்தைக் கவனித்து வரும் பெரியவர் கரகம் யோகா நரசிம்மன் தெரிவித்தார். மைசூர்வாழ் மக்கள், இவரை 'யோகா மாமா’ என்றே அன்புடன் அழைக்கின்றனர்.

''மனிதர்கள் 'போதும்’ என நிறைவு கொள்ளும் இடம், உணவுதான்! அதனால்தான், இங்கே வரும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கி வருகிறோம். இந்த ஆலயத்தை விரிவுபடுத்தவேண்டும் என்பது ஆயிரக்கணக்கான பக்தர்களின் விருப்பம்.

ஸ்ரீராமானுஜர் இங்கே பல காலம் தங்கி, ஆராதித்துப் பூஜித்த ஸ்ரீலட்சுமி நரசிம்மர் இவர்! இந்தக் கோயிலை கோபுரங்கள், பிராகாரங்கள், ஸ்ரீஅஹோபில விமானம் ஆகியவை அமைத்து, புனர்நிர்மாணம் செய்ய முடிவு செய்து, செயல்பட்டு வருகிறோம். தூண்கள் மற்றும் கோபுர பொம்மைகள் செய்யும் பணிகள், பல இடங்களில் நடந்து வருகின்றன. இன்னும் இரண்டு மாதத்துக்குள் கும்பாபிஷேகத்தை நடத்துகிற வகையில், திருப்பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.    

மைசூர் அன்னதானக் கோயில்

இந்தக் கோயிலுக்குச் சொத்து, மானியம் என ஏதும் இல்லை. ஸ்ரீலட்சுமி நரசிம்மரின் பேரருளும் அவரது லட்சக்கணக்கான பக்தர்களின் பேருதவியும்தான் சொத்துக்கள்!

இங்கே தடையின்றி அன்னதானம் நடைபெற ஸ்ரீலட்சுமி நரசிம்மரே வழி ஏற்படுத்திக்கொள்கிறார். அதே போல், திருப்பணியையும் கும்பாபிஷேகத்தையும் அவரே செய்து கொள்வார்.

மைசூர் அன்னதானக் கோயில்

சாந்த ரூபனாக, கருணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார் ஸ்ரீலட்சுமி நரசிம்மர். கோயிலுக்கு நீங்கள் ஒரு செங்கல், ஒரு கிலோ சிமென்ட் வாங்கிக் கொடுத்தால்கூடப் போதும், பிரகலாதனுக்குக் காட்டிய அதே கருணையை உங்களுக்கும் காட்டியருள்வார் ஸ்ரீலட்சுமி நரசிம்மர்'' என்று மெய்சிலிர்க்கச் சொல்கிறார் யோகா மாமா.  

ஆலயத்திலேயே அமைந்துள்ளது கோசாலை. துவக்கத்தில் இரண்டு பசுக்கள் மட்டுமே இருந்தன. தற்போது 29 பசுக்கள் உள்ளனவாம்! அன்னதானம் மற்றும் அபிஷேகத்துக்குத் தேவையான பால், தயிர், நெய் ஆகியவை கோசாலையில் உள்ள பசுக்கள் மூலம் கிடைக்கின்றன.

ஆழ்வார்களின் திருநட்சத்திரத் திருநாளில், பிரபந்தம் மற்றும் வேத பாராயணம், சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது.

அதேபோல், மே மாதம் ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி, விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

சுவாதி நட்சத்திர நன்னாளில் ஸ்ரீசுதர்சன ஹோமம்; 108 லிட்டர் பால், 48 லிட்டர் தயிர், 48 இளநீர், 4 கிலோ 800 கிராம் (அதென்ன கணக்கு?!) சந்தனம் மற்றும் நெய், தேன், மஞ்சள், சர்க்கரை ஆகியவை கொண்டு ஸ்வாமிக்கு அபிஷேகம் என அமர்க்களப்படுகிறது, ஆலயத்தில்!

படங்கள்: கே.கார்த்திகேயன்

நெய் விளக்கேற்றி வழிபட்டால்... பிரிந்தவர்கள் சேருவர்!

மைசூர் அன்னதானக் கோயில்

நோய், வறுமை, கடன் பிரச்னை, குடும்பத்தில் குழப்பம் எனத் தற்போது நாம் அனுபவிக்கும் துயரங்கள் எல்லாம், முன் ஜன்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்த பாவங்களின் விளைவே என்பர்!

இந்தத் துயரங்களில் இருந்து விடுபட வேண்டும் எனில், பசு நெய் கொண்டு ஆலயங்களில் விளக்கு ஏற்றுவதும், மகான்களின் பிருந்தாவனங்களில் பசு நெய் கொண்டு விளக்கேற்றி வழிபடுவதும் சிறந்தது; பாவங்களை விலக்கவல்லது என அருளியுள்ளனர் மகான்கள்!.

மைசூர் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்குப் பசு நெய்யால் விளக்கேற்றி வழிபட்டால், முன் ஜன்ம பாவங்கள் தொலையும்; மனதுள் நிம்மதியும் சந்தோஷமும் நிலைக்கும்; பிரிந்த தம்பதி ஒன்று சேருவர் எனப் பெருமிதத்துடன் தெரிவிக்கின்றனர், பக்தர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism