Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

Published:Updated:
ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ணவனும் மனைவியும் பரஸ்பரம் புரிந்துகொண்டு, விட்டுக்கொடுத்து வாழ்ந்தாலும், குடும்பத்தில் நடக்கிற சின்னப் பிரச்னையை ஒரு சில உற்றார் உறவினர்கள் ஊதிப் பெரிதாக்கி, பிரளயத்துக்கு நிகரான அழிவுக்குக் கொண்டு போய்விடுவதை நாம் பார்த்திருக்கிறோம். கிராமங்களில், சில குடும்ப உறவுகள் வெட்டு-குத்து வரை போகிற கொடூரத்தையும் செய்தித்தாள்களில் படிக்கிறோம்.

இந்தக் காலத்தில் மட்டுமா, இப்படி? இல்லை; புராண காலத்திலும் மாப்பிள்ளையுடன் மல்லுக்கட்டிய மாமனார் இருந்திருக்கிறார். அவரது பெயர்... தட்சன்.

'அட... நம்ம சிவபெருமானோட மாமனார். யாகத்துக்கு மாப்பிள்ளையை அழைக்காமல் அவமானப்படுத்தி, அழையா விருந்தாளியாகப் போன சொந்த மகள் பார்வதியையும் திட்டித் துரத்திய புண்ணியவான்தானே?! இந்தக் கதையைத்தான் நாடறியுமே!’ என்கிறீர்களா?

மாமனார் அவர்தான்; ஆனால், இந்தக் கதையில் மாப்பிள்ளை, சிவனார் அல்ல; சந்திரன்.

தட்சன், தன்னுடைய 27 மகள்களையும் சந்திர பகவானுக்குத் திருமணம் செய்து கொடுத்தான். அந்த 27 பெண்கள்தான், 27 நட்சத்திரங்கள்! இந்த நட்சத்திரப் பெண்களில், ரோஹிணி மீது கொஞ்சம் கூடுதல் பாசமாக இருந்து விட்டார் சந்திர பகவான்.

என்னதான் சகோதரிகளாக இருந்தாலும், 'நம்மை விட அவள் மீது அதிக பாசம் கொண்டிருக்கிறாரே, கணவர்’ என்கிற வருத்தம் வருவது இயல்புதானே? மகள்களின் வாட்டத்தைக் கண்டு அதிர்ந்த தட்சன், காரணத்தைக் கேட்க, பாசத்துக்கு ஏங்கிய மகள்கள், விஷயத்தைச் சொல்லிப் பொலபொலவென  அழுது தீர்த்தனர்.

ஆலயம் தேடுவோம்!

அவ்வளவுதான்... மாப்பிள்ளை சந்திரனின் மீது கடும் கோபம் கொண்டான் தட்சன். ஆவேசத்துடன் கத்தினான். 'என் மகள் களை அழவைத்துவிட்டு, நீ மட்டும் நிம்மதியாக இருக்கிறாயா! உன் நிம்மதியை அழிக்கிறேன்’ எனக் கூச்சலிட்டான். 'உன்னிலிருந்து கிளம்புகிற வெளிச்சம்தானே உனக்கு அழகு! அந்த அழகு இன்றோடு அழியட்டும்; உனது ஒளி மொத்தமும் மங்கி, இருள் கவியட்டும்’ எனச் சாபமிட்டான். இந்தச் சாபத்தால் சந்திர பகவான் தனது ஒளியை இழந்தார்.

'மாப்பிள்ளைக்குச் சாபம் கொடுத்தால், மகள்களின் பாடுதானே திண்டாட்டம்!’ என்பதைக்கூட அறியாமல், ஆவேசம் கண்களை மறைக்க, சந்திரனுக்குச் சாபம் கொடுத்தான் தட்சன். ஆனால், கணவனுக்கு ஒரு தண்டனை என்றதும், கதிகலங்கிப் போனார்கள், சந்திரனின் மனைவியர். 'என்ன இருந்தாலும், ரோஹிணி நமது சகோதரி அல்லவா?! அவளிடம் கணவர் சற்றுக் கூடுதல் பிரியத்துடன் இருந்தால்தான் என்ன கெட்டுப்போயிற்று! அவள் சந்தோஷமாக இருந்தால், நமக்கும் அது சந்தோஷம்தானே!’ என உணர்ந்து, அவளை அரவணைத்தனர்.

'சிவனாரைச் சரணடைந்தால், தங்கள் கணவரின் சாபம் கட்டாயம் நீங்கும்’ என யோசித்த 27 நட்சத்திரப் பெண்களும் ஒன்று சேர்ந்து, கணவரின் சாபம் நீங்குவதற்காகச் சிவபெருமானை எண்ணிக் கடும் தவம் புரிந்தனர்.

அவர்களது தவத்தால் மகிழ்ந்த தென்னாடுடைய கடவுள்,  நட்சத்திரப் பெண்களுக்கும் சந்திரனுக்கும் திருக் காட்சி தந்தார்.

'ஒளி பொருந்திய உன் பேரழகு மீண்டும் உலகெங்கும் பரவி, வெளிச்சம் தரட்டும். ஆனால், மாறிக்கொண்டே இருப்பதுதான் வாழ்க்கை. பிறப்பது எல்லாம் அழிவதற்காகவே; அழிவது எல்லாம் பிறப்பதற்காகவே என்பதை மானுடர்கள் அறிந்து, உணர்ந்து, வாழவேண்டும். அதற்கு நீ ஒரு உதாரணமாக விளங்க வேண்டும். ஆகவே, நீ கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ஒளிர்வாய்; பின்பு மீண்டும் சிறிது சிறிதாகத் தேய்ந்து மறைவாய். இப்படி வளர்ந்தும் தேய்ந்தும், மாறி மாறி உலகத்தாருக்குக் காட்சி தருவாய்!’ எனச் சந்திரனுக்கு அருளினார்.

அந்த நிமிடமே, சந்திரனில் இருந்து கிளம்பிய ஒளி, பேரொளியாக மாறி, உலகெங்கும் பரவி நின்றது. குளிர்ந்த நிலவில் இருந்து புறப்பட்ட ஒளியானது, இருளைப் போக்கி, மனித மனங்களை ஆனந்தம் கொள்ள வைத்தது.

ஆலயம் தேடுவோம்!

'மதி’யாகிய சந்திரன், சாபத்தில் இருந்து விடுபட்டுத் தனது பேரொளியை திரும்பப் பெற்ற திருத்தலம், ஒளிமதி என்றே அழைக்கப் படுகிறது. 27 நட்சத்திரப் பெண்களும்  தவமிருந்து, சிவனாரின் பேரருளால் கணவரின் சாபத்தைப் போக்கிய அற்புதமான திருத்தலம், இந்த ஒளிமதி கிராமம்!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது ஒளிமதி. தஞ்சாவூரில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில், தஞ்சையில் இருந்து சுமார் 36 கி.மீ. தொலைவில் உள்ளது நீடாமங்கலம். இங்கிருந்து திருவாரூர் செல்லும் வழியில், சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஒளிமதி.

இந்த ஊரில்தான், சந்திரனின் சாபம் நீக்கி அருளிய ஸ்ரீவஜ்ரபுரீஸ்வரர் கோயில் கொண்டிருக்கிறார். 'உலகுக்கே ஒளி தரும் சந்திரனின் சாபத்தை நீக்கியருளுங்கள்’ என உமையவள், சிவனாரிடம் பரிந்துரைத்தாளாம். இங்கே, அம்பிகையின் திருநாமம் - ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி!

இந்தப் புராணத் தகவல்களை அறிந்த எத்தனையோ முனிவர் பெருமக்கள், நள மகாராஜா போன்றோரெல்லாம் இங்கு வந்து, சிவனாரை வணங்கிச் சென்றனர். இத்தனைப் பெருமைகளைக்கொண்ட தலத்தில், எந்தப் புண்ணியவானோ கோயில் அமைத்து, ஒளிமதி என்றே ஊருக்குப் பெயரும் வைத்து, வழிபட்டிருக்கிறான்; கோயிலுக்கு நிவந்தங்களையும், நிலங்களையும் வழங்கியுள்ளான்.

இன்றைக்கு அந்த நிலங்கள் என்ன ஆயிற்று, நிவந்தங்களின் நிலை என்ன என்றெல்லாம் கேட்கத் தோன்றுகிறதுதானே? நிலங்களும் நிவந்தங்களும் இருக்கட்டும்... தற்போது அந்த ஆலயமே இல்லை என்பது தெரிந்தால், இளகிய மனம் கொண்ட அன்பர்கள் என்ன செய்வீர்கள்?

கருங்கல்லாலும் செங்கல்லாலும் திருப்பணி செய்யப்பட்ட ஆலயம், உலகத்து இருளை அகற்றும் வகையில் சந்திரனின் சாபத்தைப் போக்கிய ஈசன் குடி கொண்டிருக்கும் ஆலயம் இன்றைக்கு ஒரு கூரையின் கீழ் சுருங்கிக் கிடப்பது, என்னவொரு கொடுமை!

''எங்க தாத்தா காலத்துலேர்ந்தே குடிசைலதான் இருக்கார் ஸ்ரீவஜ்ரபுரீஸ்வரர். அப்பெல்லாம் சின்னச் சின்னதா, அங்கேயும் இங்கேயுமா தெரிஞ்ச ஒண்ணு ரெண்டு கோயில் சுவடுகள் கூட, இன்னிக்கி மொத்தமும் காணாமப் போயிடுச்சு. திருவாரூர் கோயில்ல கால்வாசி அளவுக்கு இந்தக் கோயில் இருந்திருக்கும்னு தோணுது.

ஆலயம் தேடுவோம்!

கோயிலைச் சுத்தியும் தேரோட்டம் போற அளவுக்கான அகண்ட தெருக்கள் இருந்திருக்கு. இப்ப தேரும் இல்லை; தேர் முட்டியையும் காணோம்! சக்தி வாய்ந்தவராம் இந்த ஈசன். இவரையும் அகிலாண்டேஸ்வரியையும் தரிசனம் பண்ணி, வழிபட்டா... எந்த நட்சத்திரக்காரங்களா இருந்தாலும், அவங்களோட கிரக தோஷம் மொத்தமும் விலகிடுமாம்! அதேபோல, பிரிஞ்சிருக்கிற கணவனும் மனைவியும் ஒண்ணு சேர்ந்துடுவாங்களாம்.

அப்பேர்ப்பட்ட சாமிக்குக் கோயில் கட்டணும்; கும்பாபிஷேகம் நடத்திடணும்னு ஊர்க்காரங்க எல்லாரும் சேர்ந்து திருப்பணிகளை ஆரம்பிச்சிருக்கோம்'' என்று ஒளிமதி கிராமத்தைச் சேர்ந்தவரும், நம் சக்தி விகடனின் வாசகருமான பாஸ்கரன், வருத்தமும் நம்பிக்கையும் ஒன்றுசேரச் சொல்கிறார்.

குடிசைகளெல்லாம் வீடுகளாக, கட்டடங்களாக வளர்ச்சி பெற்று வருகிற காலம் இது. கோபுரமும் மதிலும், பிராகாரங்களும் சந்நிதிகளும், மண்டபங்களும் விமானங்

களும், பரிவார தெய்வங்களும் படாடோப விழாக்களுமாக இருந்த ஒளிமதியில் உறைந்திருக்கிற ஸ்ரீவஜ்ரபுரீஸ்வரர் மட்டும் குடிசைக்குள், இருளில் இருக்கலாமா? ஒரு வில்வத்தைச் சூட்டினாலே மனம் குளிர்ந்து அருள்பாலிப்ப வராயிற்றே சிவனார்?! ஸ்ரீவஜ்ரபுரீஸ்வரர் வில்வம் சூடிக் கொள்ளவேண்டாமா? புதிய வஸ்திரமும் நைவேத்தியமுமாக காட்சி தரவேண்டாமா?

சந்திரனின் சாபத்தை நீக்கிய ஈஸ்வரனின் ஆலயத் திருப்பணியில் நம்முடைய சிறு பங்கையும் செலுத்தி, இணைத்துக் கொண்டால், நமக்கே தெரியாத நம்முடைய பாவங்கள் அனைத்தையும் போக்கிவிடமாட்டாரா சிவபெருமான்?!

27 நட்சத்திரப் பெண்களின் கண்ணீரைத் துடைத்த ஈசனுக்குக் கம்பீரமான ஒரு கோயில் அமைவதற்குக் கல்லாக, மண்ணாக, சிமென்ட்டாக, காசு-பணமாக, கல் விக்கிரகங்களாக, கதவுகளாக, சந்நிதி களாக, மதிலும் மண்டபங்களுமாக, 27 நட்சத்திரங்களைச் சேர்ந்த அன்பர்களும், தங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்தால், சந்திரனைப் போலவே தங்களின் வாழ்வில் ஜொலிப்பார்கள் என்பது உறுதி!

ஒரு தீக்குச்சி, லட்சக்கணக்கான தீபங்களை ஏற்றவல்லது அல்லவா!

  படங்கள்: ந.வசந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism