Published:Updated:

ஸ்ரீரமண மகரிஷி

மலை ரகசியம்

ஸ்ரீரமண மகரிஷி

மலை ரகசியம்

Published:Updated:
ஸ்ரீரமண மகரிஷி
ஸ்ரீரமண மகரிஷி
ஸ்ரீரமண மகரிஷி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருவண்ணாமலை என்பது ஒரே ஒரு குன்று அல்ல; அது உயர்ந்தும் தாழ்ந்தும் படிப்படியாகப் பல குன்று கள் சூழ்ந்த காட்டுப் பகுதி. இரண்டு மூன்று மலைகள் ஒன்று கூடும் இடத்துக்கு இடையே நேர்க்குத்தான சரிவும், அந்தச் சரிவில் அடர்ந்த வனங்களும் அருவிகளும் சிற்றோடைகளும் இருக்கும். அந்தப் பகுதிகளில் மனித நடமாட்டமே இருக்காது. அந்த மலையில் வசிக்கும்போது, கடவுள் அருளால் பாலசுவாமி பல்வேறு காட்சிகளை உணர்ந்தது உண்டு. ஒருமுறை பாலசுவாமி, தான் கண்ட காட்சியை அன்பர்களுக்கு விளக்கினார்.

''நான் விரூபாக்ஷி குகையில் இருக்கும்போது, இது நிகழ்ந்தது. ஒருநாள் கண்ணை மூடியிருக்கும்போது, மலைக்கு மேல் வடகிழக்கு திசையில், நான் தனியே நடப்பதுபோல் உணர்ந்தேன். மலர்கள் நிரம்பிய தோட்டத்தைக் கண்டேன். அந்தத் தோட்டத்துக்கு நடுவே பெரிய கோயிலும், மதிலும், கல்லில் செதுக்கப்பட்ட நந்தியும் இருந்தன. ஓர் அதிசயமான ஒளி எங்கிருந்தோ வந்தது. அது மிகவும் ரம்மியமாய் இருந்தது. அந்தக் கோயிலில் பூஜைக்கு மணி அடித்தது. மணி அடித்ததும், அந்தக் காட்சி மறைந்துவிட்டது. இன்னொரு முறை, வேறு விதமான காட்சி தோன்றியது. மலையில் நடக்கும் போது, பெரிய குகையைக் காண நேர்ந்தது. அந்த குகைக்குள் நுழைய, அருவிகளையும், கண்ணுக்கினிய பூந்தோட்டங்களையும், பூந்தோட்டங்களின் நடுவில் குளங்களையும், நன்கு பராமரிக்கப்பட்ட பாதை களையும், ஒளி பொருந்திய விளக்குகளையும் பார்த் தேன். நான் பார்த்தவையெல்லாம் மிக ரம்மியமாக இருந்தன. ஒரு பாதையில் செல்லச் செல்ல, சித்தபுருஷர் ஒருவரைக் கண்டேன். தக்ஷிணாமூர்த்தி போல அந்தச் சித்தபுருஷர் ஒரு குளக்கரையில் இருந்த மரத்தடியில் அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றிப் பல முனிவர்கள் அமர்ந்திருந்தனர். அவர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் சொன்னார். அந்த இடம் எனக்கு மிகவும் தெரிந்த இடம் போலிருந்தது. அவ்வளவுதான், கண்விழித்துவிட்டேன்.

சில வருடங்களுக்குப் பிறகு, வடமொழி அருணாசல மஹாத்மியத்தில் இருந்து சில வரிகளைப் படித்தேன். அதில் ஈஸ்வரன் சொல்கிறார்...

'அங்கியுரு வாயுமொழி மங்குகிரியாக
தங்களருளால் உலகம் தாங்குதற்கன்றி
இங்கு இறைவன் சித்தன் என என்றும் எனதுள்ளே
பொங்கி ஒளிரும் குகைபல் போக மொட்டேன் என்று உள்ளே’

(இது பாலசுவாமியின் தமிழ் மொழிபெயர்ப்பு) வடமொழி அருணாசல மஹாத்மியத்தில் சித்தபுருஷரை அந்தக் குகையில் நான் எப்படிக் கண்டேனோ அவ்விதமாகவே வர்ணிக்கப்பட்டிருந்தது.''

ஸ்ரீரமண மகரிஷி

பாலசுவாமி, அண்ணாமலையை தன் சொந்த இடமாகக் கருதியதால், நேரம் கிடைக்கும்போதெல்லாம் மலைச்சாரலில் சுதந்திரமாக நடந்துபோவது வழக்கம். மலையில் அவரது கால்கள் படாத இடங்களே இல்லை. இரவு-பகல் என்று பாராது, நினைத்துக்கொண்டால் தன் இருப்பிடத்தை விட்டுப் புறப்பட்டுவிடுவார். ஒருமுறை, அப்படி மலையில் உலாவும்போது ஒரு குகையைக் கண்டார். அதை அவர் நெருங்கியபோது, அந்தக் குகை பெரிதாகப் போயிற்று. குகைக்குள் சென்றபோது, இன்னும் பெரிதாக வளர்ந்தது. அதன் இருபுறங்களும் சோலைகளும் மரங்களுமாகத் தெரிந்தன. குகையில், தான் சென்ற வழி ஒரு குளத்தை அடைந்தது. அந்தக் குளத்துக்கு நடுவே ஒரு கோயில் இருந்தது.

இவ்வாறு பல காட்சிகளை, பாலசுவாமி தன் அன்பர்களுக்குச் சொல்லியுள்ளார். அப்போது தேவராஜ முதலியார், சுவாமியை நோக்கி, ''இது கனவில்லையா?'' என்று கேட்டார். அதற்கு பாலசுவாமி, ''கனவோ காட்சியோ, எது வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள்'' என்றார்.

##~##
திருவண்ணாமலை ரகசியம் நிறைந்தது. பல சித்தபுருஷர்கள் தங்கியிருக்கின்ற மலை அது. அதன் ரகசியங்கள், ரகசியங்களாகவே வைக்கப்பட்டிருக்கின்றன. அதை அறிய வெகு சிலரே முயற்சி செய்கிறார்கள். முயற்சி செய்த சிலரும், தான் கண்ட காட்சிகளைப் பிறருக்குச் சொல்லாது வாய்மூடி மௌனியாக இருந்துவிடுகிறார்கள்.

ஆனால், பாலசுவாமியோ, தான் கண்ட அதிசயங்களைப் போலப் பல ரகசியங்களைத் தன் அன்பர்களுக்கு அடிக்கடி சொல்லி வந்தார்.  அன்பர்கள் நடுவே மதிப்புக்குரிய முனிவராய் ஸ்ரீபாலசுவாமி இருந்தார். அதேநேரம், எளிய மக்களுக்கு மிக எளிமையான நண்பராய், அன்பு மிகுந்த குருவாய், ஆதரவாளராய் வாழ்ந்தார்.  

போளூருக்கு அருகே மண்டகுளத்தூர் என்ற ஊரில் வசித்தவள் எச்சம்மாள். லட்சுமி என்பது எச்சுமி என்று திரிந்து, எச்சுமி என்பது எச்சம்மாள் என்று ஆயிற்று. அவளுடைய சொந்த வாழ்வு சபிக்கப்பட்டது போலிருந்தது. இருபது வயதுக்குள் தன் கணவனையும், ஒரே மகனையும், அடுத்துப் பிறந்த பெண்ணையும் ஒவ்வொன்றாகப் பறிகொடுத்தாள். ஒரு சாதாரணப் பெண்ணுக்கு இது பேரிடி! வாழ்வின் ஆதாரங்கள் அத்தனையும் பிடுங்கிப் போட்டு விட்ட நிலை. 'இப்படி அனைத்தையும் இழந்து, தனிமரமாய் நிற்க என்ன பாவம் செய்தேன்’ என்று படித்தவர்களே புலம்பக்கூடிய தன்மை. படிப்பறிவில்லாத எச்சம்மாள் ரொம்பவே நிலைகுலைந்து போனாள்.

ஸ்ரீரமண மகரிஷி

வீட்டுக்கு எதிரே இருக்கிற பள்ளிக்கூடம்; அதில் தன் குழந்தைகள் விளையாடிய விளையாட்டு என  ஞாபகம் வரும். எப்பேர்ப்பட்ட சொர்க்கத்தை இழந்திருக்கிறோம் என்ற வேதனை நெஞ்சைத் தாக்கும். எத்தனை அடித்துக்கொண்டு அழுதாலும், ரணம் ஆறாது. மீண்டும் மீண்டும் துக்கம் பொங்கும்.

வடதேசத்துக்குப் போய், அங்கேயுள்ள சாதுக்களுக்கு உதவி செய்தால், தன் மனம் மாறும்; தான் செய்த பாவங்கள் தொலைந்து, அடுத்த ஜென்மமாவது உருப்படியான ஜென்மமாக இருக்கும் என்ற எண்ணத்தில், அங்கே போனாள். ஆனால், அப்போதும் மனம் நிம்மதி அடையவில்லை. அவள் துயரக் கதையைக் கேட்டுச் சாதுக்களும் துன்பப்பட்டனர். அவளின் துன்பத்தை நீக்க வழி தெரியாது தவித்தார்கள்.

ஒருமுறை எச்சம்மாளின் உறவினர்கள், திருவண்ணாமலை பாலசுவாமி பற்றி எடுத்துரைத்தார்கள். அவரைக் கண்டவர் மன அமைதி பெறுகிறார் என்றனர். எச்சம்மாள் என்கிற அந்த லட்சுமி அம்மாளும், பாலசுவாமியைத் தரிசிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டாள். காலம் தாழ்த்தாமல் திருவண்ணாமலை சென்று, அங்கே தன் தோழியின் வீட்டில் தங்கிக்கொண்டு, பாலசுவாமியைப் பார்க்கச் சென்றாள். விரூபாக்ஷி குகையில் பாலசுவாமியைத் தரிசித்தாள். ஆனால், அவரிடம் தனது துக்கத்தைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. பாலசுவாமியும் என்ன விஷயம் என்று கேட்கவில்லை. ஒரு மணி நேரம் அவர் எதிரே நின்றிருந்தாள். பிறகு, மலையை விட்டுக் கீழே இறங்கும்போது, அவளுடைய துக்கமெல்லாம் வடிந்திருந்தது. தோழியிடம் குதூகலமாக அந்தத் தரிசனம் பற்றிச் சொன்னாள். தன் வேதனை அறவே ஒழிந்தது என்று விளக்கினாள். மீண்டும் ஒருமுறை விரூபாக்ஷி குகைக்குச் சென்று பாலசுவாமியைத் தரிசித்தாள். பிறகு, எந்தவொரு மனவேதனையும் இல்லாமல், தன் துயரங்கள் பற்றி அவளால் மற்றவர்களிடம்  பரிமாறிக்கொள்ள முடிந்தது.

எப்படி இது சாத்தியமாயிற்று என்று உறவுகள் கேட்டால், ''நான் பாலசுவாமியை வணங்குகிறேன். அவர் மீது பக்தி செலுத்துகிறேன். அதனால், என் துன்பங்கள் தீர்ந்தன'' என்று பதில் சொன்னாள். அன்றிலிருந்து சுமார் 38 வருடங்கள், பாலசுவாமிக்கும் அவரைச் சுற்றியுள்ள அன்பர்களுக்கும் உணவு தயாரித்துத் தருவது, அவளுடைய வேலை ஆயிற்று. அவர்கள் உண்டதுபோக மீதி இருக்கும் உணவை, தான் உண்பதும் வழக்கமாயிற்று. தந்தை இறந்த பின்பு, அவளுக்குச் சேரவேண்டிய பணத்தை அவளுடைய சகோதரர்கள்  ரொக்கமாக அனுப்பினர். அந்தப் பணம் முழுவதையும் பாலசுவாமியின் அன்பர்களுடைய சேவைகளுக்காகவே செலவழித்தாள் லட்சுமி அம்மாள்.

ஸ்ரீரமண மகரிஷி

நல்லது- கெட்டது எதுவாக இருந்தாலும் பாலசுவாமியிடம் அவள் உடனே அதைப் பகிர்ந்துகொள்வாள். பாலசுவாமியும் அவளிடம் மிகுந்த கருணையுடன் இருந்தார். அவளுக்குக் குழந்தைகள் இல்லாததால், சகோதரன் மகள் செல்லம்மாளைத் தத்தெடுத்துச் சீராட்டி வளர்த்தாள். பருவ வயது வந்ததும், மணமுடித்துக் கொடுத்தாள். ஒருநாள், செல்லம்மாள் இறந்துபோனதாக அவள் வாழ்க்கைப்பட்ட கிராமத்திலிருந்து தந்தி வந்தது. செல்லம்மாள் நோயுற்றிருந்தாள் என்று இதற்கு முன் எந்தத் தகவலும் வந்திருக்கவில்லை. திடுமென, இறந்துபோனாள் என்ற செய்தியே வந்தது. அதை பகவானிடம் தெரிவித்துக் கண்ணீர் விட்டாள், லட்சுமி அம்மாள். அவள் நிலைக்கு இரங்கி, பாலசுவாமியும் கண்ணீர் விட்டு அழுதார். பாலசுவாமியின் கண்ணீர், அந்தப் பெண்மணிக்கு ஆறுதல் தந்தது. 'வாழ்க்கையென்றால் இப்படித்தான் இருக்கும்’ என்ற சமாதானம் ஏற்பட்டது.

பாலசுவாமி அவளுடைய துன்பத்தைத் தான் தாங்கி, அவளைப்போலவே கண்ணீர் விட்டு, அவளுக்கு ஆறுதலைச் சொல்லாமல் சொன்னார். இதுவே கருணையைக் கொண்டு கருணையை ஊறவைத்தல். தான் நேசிக்கின்ற, தெய்வாம்சம் பொருந்திய ஒருவர், தனக்காக அழுவதைப் பார்க்கும்போது, யாரால் அந்த அழுகையைத் தொடர முடியும்!

'எனக்காகவா அழுகிறீர்கள்? இல்லை, நான் சமாதானமாகிவிட்டேன். இதோ பாருங்கள், நீங்கள் கண்ணீர் சிந்தாதீர்கள். முற்றிலும் இந்த விஷயத்தை மறந்துவிட்டு, இனி தினசரி காரியங்களில் ஈடுபடுவேன்’ என்று மன உறுதியைச் சொல்லாமல் சொல்லி வெளிப்படுத்துகிறபோது, அங்கே கம்பீரம் வந்துவிடுகிறது. தன் துக்கத்துக்காக, தன்னை நோக்கிக் குருவின் அன்பு, வெள்ளமென வரும்போது, உள்ளுக்குள் துக்கம் மறைந்து, உற்சாகம் வந்துவிடுகிறது.

எச்சம்மாள் பாலசுவாமியைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டாள். அவரே குரு என்று ஒவ்வொரு அசை விலும் வெளிப்படுத்தினாள். வெறுமே சமையல் மாமியாக இல்லாமல், யோக சாதனையும் செய்து வந்தாள். ஒரு வட இந்தியத் துறவி சொல்லிக் கொடுத்தது போல, புருவமத்தியில் தன் கவனத்தை வைத்து, ஆழ்ந்த மௌனத்தில் இருப் பாள். இதனால் அவள் பல நாட்கள், தன் நெற்றியினுள் ஓர் அதிசய ஒளியைத் தரிசித்து வந்தாள். உடம்பு பற்றிய பிரக்ஞையைவிட்டுப் பல மணி நேரம் அசையாது கிடப்பாள். நீண்ட நேரம் தியானத்தில் உட்கார்ந் திருப்பாள்.

பகவானின் அன்பர்கள் பலர், அவளது நிலையைப் பகவானுக்குச் சொன்னபோது அவர் எதுவும் எதிரொலிக்கவில்லை. ஒருமுறை, எச்சம்மாளே தன் உள் காட்சிகளைச் சொன்னபோது, ''இந்த உள்காட்சிகள் தேவையில்லை. நீ உன்னை அறியவேண்டும். அதுவே முக்கியம்'' என்று சொன்னார்.

ஸ்ரீரமண மகரிஷி

சேஷாத்ரி சுவாமிகள் படத்துக்கும், பாலசுவாமியின் படத்துக்கும் ஒரு லட்சம் வில்வ இலைகளால் பூஜை செய்வதாக எச்சம்மாள் சங்கல்பம் செய்துகொண்டாள். அதைப் பாலசுவாமி யிடமும் தெரிவித்தாள். பாலசுவாமி அதற்கு மறுப்பு ஏதும் சொல்லவில்லை. தினமும் பூஜை நடந்தது. ஒருநாள், வில்வ இலை கிடைக்கவில்லை. பாலசுவாமியிடம் இதுகுறித்து எச்சம்மாள், ''இன்று பூஜையில் கிள்ளிப்போட ஒரு வில்வ இலைகூடக் கிடைக்க வில்லை'' என்று குறைப்பட்டுக்கொள்ள, ''உன்னையே கிள்ளி பூஜை செய்யவேண்டியதுதானே?'' என்று கேட்டார் சுவாமி.

''என்னையே கிள்ளிக்கொள்வதா! வலிக்குமே?'' என்று குழந்தை போல் எச்சம்மாள் சொல்ல, ''உனக்கு வலிப்பது போல, மரத்துக்கும் வலிக்குமில்லையா? ஏன் இலைகளைக் கிள்ளுகிறாய்?'' என்று கேட்டார் பாலசுவாமி.

''இதை ஏன் என்னிடம் முன்பே சொல்ல வில்லை? இதை நான் செய்யாதிருந்திருப் பேனே!'' என்று எச்சம்மாள் பதற, ''உன்னைக் கிள்ளினால் வலிக்கும்; இலைகளைக் கிள்ளினால் வலிக்காது என்று நினைக்கிறாயா? இதைச் சொல்வதற்கு உனக்கு ஆள் வேறு வேண்டுமா?'' என்று பாலசுவாமி சிரிக்க, எச்சம்மாள் அன்றோடு பூஜையைக் கைவிட் டாள். பூஜை என்பது இலைகளைக் கிள்ளியும், பூக்களைப் போட்டும், மாலைகள் அணிவித்தும், நைவேத்தியம் செய்தும் படைப்பதல்ல; உள்ளுக்குள்ளே தன்னை உற்றுக் கவனித்து, தன் எண்ணங்கள் எங்கு தோன்றுகின்றன, யார் உள்ளே இருப்பது என்று கவனிக்காதவரை இந்தச் செயல்கள் எல்லாம் வீண் என்பது பாலசுவாமியின் தெளிவான சித்தாந்தம்.

இதை அவர் பறையறிவித்துச் சொல்லவில்லை; கட்டளை யாகப் பிறப்பிக்கவில்லை. தானே அவ்விதம் வாழ்ந்தார். தனக்கு அருகேயிருந்து தன்னைப் புரிந்துகொண்டு, தன்னைப் போலவே தன்னை இடையறாது அவதானித்தல்தான் உத்தமமான விஷயம் என்பதைச் சொல்லாமல் சொன்னார். நீண்ட நெடிய பிரசங்கங் களைவிட, பாலசுவாமியின் இந்த வாழ்க்கை, சொல்லாமல் சொன்ன இந்த மௌனம், பல பேர் நெஞ்சைத் தொட்டது. மலர்வித்தது.

'உபதேசம் செய்கிறேன்’ என்று கிளம்பிய பலர் காணாது போனார்கள். ஆனால், தன்னிலிருந்து கதிரொளியாக உபதேசத்தை அனுப்பிய பாலசுவாமி, 'ஸ்ரீரமண மகரிஷி’ என்கிற அற்புதமான பெயருடன், இன்னும் தன் அன்பர்களைத் தொட்டுக்கொண்டிருக்கிறார். அவர் சொல்லாமல் சொன்ன விஷயங்கள், பல பேரைக் குளிர்வித்து நல்ல வழிக்குத் திருப்பி இருக்கின்றன.

- தரிசிப்போம்...
படம்: கே.ராஜசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism