Published:Updated:

சகல பாவங்களும் போக்கும் சப்த சாகர தீர்த்தம்!

மாசிமக நன்னாளில்...

சகல பாவங்களும் போக்கும் சப்த சாகர தீர்த்தம்!

மாசிமக நன்னாளில்...

Published:Updated:
சகல பாவங்களும் போக்கும் சப்த சாகர தீர்த்தம்!
சகல பாவங்களும் போக்கும் சப்த சாகர தீர்த்தம்!

'மகம் பிறந்தது நல்லூரில்; மாமாங்கம் பிறந்தது கும்பகோணத்தில்’ என்பார்கள். வருடந்தோறும் திருநல்லூர் திருத்தலத்தில் விமரிசையாக நடைபெறுகிறது, மாசிமகத் திருவிழா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் உள்ளது திருநல்லூர் எனப்படும் நல்லூர். இங்கே, குடிகொண்டிருக்கும் ஸ்ரீகல்யாணசுந்தரரும், ஸ்ரீகிரிசுந்தரியும்தான் மாசிமகத் திருவிழாவின் நாயகனும் நாயகியும்!

பெற்ற குழந்தையை விட்டுச் செல்பவர்கள் தோஷத்துக்கு ஆளாக நேரிடும். குழந்தை கர்ணனை ஒரு பெட்டியில் இட்டு, ஆற்றில் விட்ட காரணத்தால், குந்திதேவியும் சிசுஹத்தி தோஷத்துக்கு ஆளாகிப் பல துன்பங்களை அடைந்தாள். தோஷம் நீங்க, தலங்கள் பலவற்றுக்கும் சென்று, இறைவனை மனமுருகி வேண்டினாள். 'மாசி மகத்தன்று திருநல்லூர் தலத்துக்குச் சென்று, ஏழு கடல்களில் ஸ்நானம் செய்து, ஈசனை வணங்கினால், தோஷம் நீங்கும்’ என அசரீரி ஒலித்தது. அதன்படி, மாசியில், மகம் நட்சத்திர நாளில் இங்கே வந்தாள் குந்திதேவி. ஆனால், 'ஏழு கடல்களில் நீராடுவது எப்படி? சாத்தியமே இல்லையே! ஏழு கடல்களுக்கு எங்கே செல்வது?’ எனக் கதறியழுதாள். அப்போது, கோயிலுக்கு அருகில் உள்ள திருக்குளத்தில், ஏழு கடல்களில் இருந்தும் தண்ணீரை சங்கமிக்கச் செய்தார் சிவனார். அதையடுத்து, திருக்குளத்தில் நீராடி, தனது சாபம் நீங்கப் பெற்றாள் குந்திதேவி, என்கிறது ஸ்தல புராணம்.

ஏழு கடல்களின் நீரும் சேர்ந்ததால், இந்தக் கோயிலின் தீர்த்தத்துக்கு, 'சப்த சாகர தீர்த்தக்குளம்’ எனும் பெயர் அமைந்தது. மாசிமக நன்னாளில் இங்கே நீராடி, இறைவனை வணங்கினால், நம் பாவங்கள் மொத்தமும் நீங்கும்; தோஷங்கள் மொத்தமும் விலகும் என்கின்றனர், பக்தர்கள். இங்கே திதி கொடுத்து, சிவனாரை வணங்கினால், பித்ருக்களின் ஆசீர்வாதம் கிடைக்கப்பெறலாம் என்பது நம்பிக்கை.

சகல பாவங்களும் போக்கும் சப்த சாகர தீர்த்தம்!
##~##
ஸ்ரீகல்யாணசுந்தரர், சுயம்புமூர்த்தம். ஆறு நாழிகைக்கு ஒருமுறை என, ஒரு நாளில் ஐந்து முறை நிறம் மாறிக் காட்சி தருவதாகச் சொல்வர். அப்பர் பெருமான், அமர்நீதியார், அகத்திய முனி ஆகியோருக்குச் சிவனார் திருக்காட்சி தந்த அற்புதத் திருத்தலம் இது! கருவறையில், சுதை வடிவில் அமர்ந்த திருக்கோலத்தில் சிவ-பார்வதியர் காட்சி தருகின்றனர்; கூடவே, திருமாலும் பிரம்மாவும் அருள் வழங்குகின்றனர்.

ஸ்ரீகல்யாணசுந்தரர், திருமண வரமும் தந்தருள்கிறார் எனப் போற்றுகின்றனர், பெண்கள். திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு வந்து, இறைவனுக்குச் சூட்டிய மாலையை அணிந்தபடி ஐந்து முறை பிராகார வலம் வந்து பிரார்த்தித்தால், விரைவில் திருமணப் பாக்கியம் கைகூடும். இந்தத் தலத்தின் இன்னொரு சிறப்பு... இங்கே வைஷ்ண தலங்களில் உள்ளதுபோல், பக்தர்களுக்கு சடாரி எனப்படும் திருவடி சார்த்தப்படுகிறது.

அதேபோல், அஷ்டகரங்களும் சாந்த முகமும் கொண்டு அருள்பாலிக்கும் மகாகாளியும், வரு வோர்க்கு அருளையும் பொருளையும் அள்ளி வழங்குகிறாள். அம்மன் சந்நிதியின் படிகளை நெய்யால் மெழுகி, விளக்கிட்டு வழிபட்டால், குழந்தை வரம் தந்தருளும் கருணைத் தாய் இவள்.  

மாசிமக நன்னாளில், நல்லூர் சப்த சாகர திருக் குளத்தில் நீராடி, ஸ்ரீகல்யாணசுந்தரரையும் ஸ்ரீகிரி சுந்தரி அம்பிகையையும் வழிபடுங்கள்; வளம் பெறுங்கள்!

- இரா.மங்கையர்க்கரசி
- படங்கள்: ந.வசந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism