Published:Updated:

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

Published:Updated:
தசாவதாரம் திருத்தலங்கள்!
தசாவதாரம் திருத்தலங்கள்!
##~##
ஸ்ரீ
ராம ஜயம்... ஸ்ரீராம ஜயம்... ஸ்ரீராம ஜயம்.

அனுதினமும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் கண்களை மூடி, மனத்துக்குள் ஸ்ரீகோதண்டராமனைத் தியானித்து, உள்ளம் உருக தாரக மந்திரமாம் ஸ்ரீராம நாமத்தை ஜபித்து வாருங்கள். அப்போது உங்கள் உள்ளத்தில்... சீதா, லட்சுமணன் சமேதராக, தம் சிறிய திருவடியாம் ஆஞ்சநேயருடனும் அரியாசனம் போட்டு அமர்ந்து கொள்வான் ஜானகிமணாளன்.

அயோத்தி சிம்மாசனத்தையே துறந்த அந்தத் தூயவனுக்கு, நம் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்க அவ்வளவு இஷ்டம்! ஒருமுறை நாம் அழைத்தால் போதும்; ஓடிவந்து உட்கார்ந்துவிடுவான். அப்புறம் என்ன கவலை? நம் விஷயங்கள் யாவும் அவனுடையதாகிவிடாதா? நமக்கான பிரச்னைகளை எல்லாம் தனக்கானதாக ஏற்று, அவற்றைத் தவிடுபொடி ஆக்கிவிடமாட்டானா?!

உங்களுக்கு ஒன்று தெரியுமா? சாட்சாத் பரமேஸ்வரனே விரும்பி ஏற்ற தாரக மந்திரம் ஸ்ரீராம நாமம்!

ஆதியில், வால்மீகியால் நூறு கோடி ஸ்லோகங்களால் செய்யப்பட்டதாம் ராமாயணம். தேவர்களும், தைத்யர்களும், நாகர்களும் அதைத் தங்கள் உலகுக்குக் கொண்டு செல்ல முயன்றார்கள். இந்தப் பிரச்னையை சுமுகமாக்க விரும்பிய பகவான், ராமாயணத்தை மூன்று பங்காக்கினார். ஒவ்வொருவருக்கும் 33 கோடியே 33 லட்சத்து, 33 ஆயிரத்து 333 ஸ்லோகங்களும் 10 அட்சரங்களுமாகப் பிரித்துக் கொடுத்தார். ஒவ்வொரு பாகத்திலும் உள்ள 10 அட்சரங்கள் அடங்கிய மூன்று மந்திரங்களை லட்சுமி, ஆதிசேஷன், கருடன் ஆகியோருக்கு உபதேசித்தார். அவை முறையே தேவர்களுக்கும், நாகர்களுக்கும், பூலோகவாசிகளுக்கும் உபதேசிக்கப்பட்டன. முடிவில் 2 அட்சரங்கள் மிகுந்தன. அவற்றைப் பரமேஸ்வரன் எடுத்துக்கொண்டார். அதுவே 'ராம’ என்னும் தாரக மந்திரம்!

அதுவே, இந்தக் கலியுகத்தில் நம்மைக் காக்கும் ரக்ஷ£ மந்திரம். அந்த உன்னத மந்திரத்தை மனத்தில் ஏற்றிக்கொண்டு, இந்த அத்தியாயத்தை தொடர்வோம்!

பஞ்சவடி எனும் அழகான அந்த ஆரண்யம் அன்று இருள் சூழ்ந்து கிடந்தது. அவ்வப்போது பூகம்பம் நிகழ்வது போன்ற அதிர்வொலியைத் தவிர, ஆழ்ந்த நிசப்தம் அங்கே! மிருகங்களும் புள்ளினங்களும் மௌனம் காக்க, விருட்சங்களும் அசைவற்று நின்றன. பெருகியோடும் கோதாவரியிடத்தும் ஆர்ப்பரிப்பு இல்லை. இவை அனைத்தும் துர்நிமித்தங்கள் அல்லவா?

ஆமாம்! 'சீதா... லட்சுமணா...’ என்று ஸ்ரீராமனின் குரலில் ஓர் அபய ஒலி கேட்டதே? அதன்பிறகுதான் இப்படியரு சகுனச் சூழல்!

எத்தனைத் தவறுகள் இழைத்துவிட்டாள் சீதாதேவி? மாய மானைக் கண்டு ஏமாந்தது முதல் தவறு; அதைப் பிடித்து வரும்படி பிடிவாதத்துடன் அண்ணலை அனுப்பிவைத்தது அடுத்த தவறு; எல்லாவற்றுக்கும் மேலாக... அந்த அபயக் குரலைக் கேட்டதும், காவலாய் இருந்த இளவலையும் அல்லவா அனுப்பிவிட்டாள்!

''பதற்றம் வேண்டாம். எக்காலமும் என் அண்ணனுக்கு ஆபத்து நேராது; இது ஏதோ மாயம்...'' என்றெல்லாம் அவர் எவ்வளவோ எடுத்துச் சொன்னாரே! ஆனாலும், கேட்டாளா சீதாதேவி?!

அங்கே மாய மானாகி வந்த மாரீசனை ஸ்ரீராமபாணம் துளைத்தது என்றால், இங்கே நம் அன்னையின் சொல் அம்புகளின் கூர்முனைகள் இளவலின் நெஞ்சைக் கூறு கூறாக்கிவிட்டன!

விதியின் விளையாட்டை என்னவென்பது? கயவன் ஒருவன் சந்நியாசி உருவில் காத்திருப்பது தெரியாமல், அண்ணியின் கட்டளையை ஏற்று, அவளைக் காலத்தின் கையில் ஒப்படைத்து விட்டு, அண்ணனைக் காணச் சென்றார் லட்சுமணன்.

பழுத்த கிழம் ஆனாலும், வஞ்சனையில் பக்குவம்! வாயில் ஒப்புக்கு வேத கீதம், உள்ளத்திலோ அலைபுரளும் காமம்... வெண்ணீறும் காவியும் அந்தக் கபட சந்நியாசிக்கு மிகப் பொருத்தமாக இருந்தன. தளர் நடையும் தள்ளாட்டமுமாய் குடிசையின் வாயிலை நெருங்கியவன், பி¬க்ஷ கேட்டுக் குரல் கொடுத்தான். அண்ணலுக்கு ஆபத்தென்று எண்ணிக் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்த சீதாபிராட்டி கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, வெளியே வந்து பார்த்தாள். சந்நியாசி நிற்பதைக் கண்டு, வணங்கி வரவேற்றாள்.

அவள் திருமுகம் கண்ட ராவண சந்நியாசி, மெய்ம்மறந்தான். 'மூவுலகமும் இவர் முறையின் ஆள, யான் ஏவல் செய்(து) உய்குவேன்’ என்று உள்ளுக்குள் உருகினான். ''வனத்தில் சஞ்சரிக்கும் முனிவன் நான். நீ யாரென்று தெரிந்துகொள்ளலாமா?'' என்று கேட்டான்.

சீதாபிராட்டி கணவனின் பெயரைச் சொல்லவில்லை. இளவலுடன் நாடு துறந்து காடு ஏகிய அவரின் தியாகத்தைச் சொன்னாள். முனிவர் களுக்கெல்லாம் பரிச்சயமான அந்த வரலாற்றைச் சொன்னால், இவரும் தெரிந்துகொள்வார் என்று நம்பினாள். ஆனால், ராவண முனியோ, ''கேள்விப்பட்டிருக்கிறேன்; ஆனால், அவர்களைப் பார்த்தது இல்லை. நீ யார் மகள்?'' என்று அவளைக் குறித்து மீண்டும் விசாரித்தான்.

தான் ஜனகரின் மகள் என்பதைத் தெரிவித்த சீதாதேவி, ''தாங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?'' என்று கேட்டாள். இது போதாதா கபட சந்நியாசிக்கு? தனது பெயரைக் கூறாமல் மிகத் தந்திரமாக, பிறரது கூற்று போன்று இலங்கையின் மாண்பையும், அதன் அரசனான தனது பிரதாபங்களையும் விவரித் தான். தொடர்ந்து, அத்தகைய ராவணேஸ்வரனின் அரண்மனையில் இருந்து வருவதாகக் கூறினான். அப்படியாவது ராவணனாகிய தன்னைப் பற்றி அவள் விசாரிக்க மாட்டாளா என்ற நப்பாசை அவனுக்கு! ஆனால், சீதாதேவியின் பதில்கேள்வி நேர்மாறாக இருந்தது.

தசாவதாரம் திருத்தலங்கள்!

''இலங்கையில் இருந்தா வருகிறீர் கள்? அடடா! கொடும் ராட்சஸர்கள் வாழும் நாட்டில் உங்களைப் போன்ற சந்நியாசி ஏன் போய்த் தங்கினீர்கள்?'' எனக் கேட்டாள்.

இதை ராவண சந்நியாசி எதிர்பார்க்கவில்லை. ''தேவர்களைக் காட்டிலும் அசுரர்கள் ஒன்றும் கொடியவர்கள் அல்ல. தேவர்களின் வஞ்சகம் இவர்களுக்குக் கிடையாது!'' என்றான். எனினும், அவள் தன்னைச் சந்தேகித்துவிடக் கூடாதே என்று, ''எது எப்படியோ... பராக்கிரமங்கள் மிகுந்த ராவணனையும் அவன் கூட்டத்தாரையும் மற்றவர்கள் அனுசரித்துதானே செல்ல வேண்டும்?'' என்றும் கூறினான்.

இதைக் கேட்ட சீதாதேவி அவன் மேல் பரிதாபம் கொண்டாள். அப்பாவி அவள்... ராட்சஸர்கள் நினைத்த மாத்திரத்தில் நினைத்த உருவத்துக்கு மாறும் வல்லமை படைத்தவர்கள் என்பது அவளுக்குத் தெரியாது. அந்த முனிவர் ராட்சஸர்களுக்கு பயந்து போயிருக்கிறார் என்று எண்ணிக்கொண்டாள். எனவே, ''கவலை வேண்டாம்! என் கணவர் துஷ்ட நிக்கிரகம் செய்து எல்லோருக்கும் அபயம் அளிப்பார்'' என்றாள்.

அவ்வளவுதான்... ராவண சந்நியாசிக்கு அவனுக்கே உரிய அரக்க குணம் தலை தூக்கியது. ஸ்ரீராமனின் பெருமையை அவனால் காது கொடுத்துக் கேட்க முடியவில்லை. 'ராவணனின் பலம் வாய்ந்த இருபது தோள்களுக்கு முன்னால் மனிதர்கள் எம்மாத்திரம்?’ என்று ஏளனம் செய்தான்.

சீதை துணுக்குற்றாள். ''தோள்கள் அதிகம் எனில் பலமும் அதிகமா என்ன? இருபது தோள்கள் கொண்ட ராவண னைச் சிறைப்படுத்தினான் ஆயிரம் தோள்கள் கொண்ட கார்த்த வீரியன். அவனது ஆயிரம் தோள்களையும் அறுத்தெறிந்தாரே ஒருவர்... அவருக்கு இரண்டு தோள்கள்தான்'' என்றாள்.

ஆமாம்! ராவணனைச் சிறைப் பிடித்தவன் கார்த்தவீரியன். அவனுக்கு ஆயிரம் தோள்கள்; கரங்கள்! அனைத்தை யும் துண்டித்து அவனை வீழ்த்தியவர் ஸ்ரீபரசுராமன். அப்பேர்ப்பட்ட அவதார புருஷனையும் கர்வபங்கம் செய்தவர், தன் நாயகனான ஸ்ரீராமன் என்பதைச் சொல்லாமல் சொன்னாள் சீதாபிராட்டி.

அவ்வளவுதான்... அதற்கு மேலும் தன்னை வெளிக்காட்டாமல் இருக்க இயலவில்லை ராவணனால்! சுயரூபம் கொண்டான். கோபமாகவும் பணிவாகவும் பலவாறு பேசி, தனது விருப்பத்தை வெளியிட்டான். சீதாதேவியோ எரிமலையாய் சீறினாள். ராவணனின் கோபம் அதிகமானது. அவளைத் தரையோடு பெயர்த்தெடுத்து, தன் தேரில் ஏற்றிக்கொண்டு, ஆகாய மார்க்கமாகப் புறப்பட்டான் (இந்த இடத்தில் வால்மீகி முனிவர், சீதையை ராவணன் கைகளால் தொட்டுத் தூக்கிக் கொண்டு தேர் ஏறினான் என்கிறார்).

சீதாதேவி அலறினாள். அபயக் குரல் எழுப்பினாள். கணவனும் இளவலும் தென்பட மாட்டார்களா என்று தேரில் இருந்தபடி கானகம் முழுக்கத் தேடினாள். கொங்கு மரங்களை, மால்யவான் எனும் மலையை, கோதாவரி நதியை உதவிக்கு அழைத்தாள். ராவணன் தன்னை இழுத்துச் செல்லும் தகவலை ரகுவீரனிடம் தெரிவிக்க வேண்டினாள். அவளின் அபயக்குரலும் வேண்டுதலும், வழியில் தங்கியிருந்த கழுகரசர் ஜடாயுவின் காதிலும் விழுந்தது. சிறகடித்து விண்ணில் எழுந்தார்; தீரத்துடன் ராவணனைத் தடுத்தார். ஆனால், ஆயுதபாணியும் மாயாவியுமான அந்த அசுரனுக்கு முன்னால் பட்சி ராஜனின் போராட்டம் எடுபடவில்லை. வாளால் அவரின் இறக்கைகளை வெட்டி வீழ்த்தினான் ராவணன்.

எத்தகைய தியாகம்?!

''வன்றாட் சிலையேந்தி வாளிக் கடல் சுமந்து
நின்றேனும் நின்றேன் நெடுமரம் போல் நின்றேனே...''

என்று ஸ்ரீராமனே மருகினார் என்றால், ஜடாயுவின் உயிர்த் தியாகம் எவ்வளவு உசத்தியானது? அதனால் தானே, ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியே இறுதிக்கடன் செய்யும் பெரும்பேறு கிடைத்தது அவருக்கு!

அதுசரி... ஜடாயுவுக்கு ஸ்ரீராமன் இறுதிக்கடன் செய்த புண்ணியத் தலம் எது தெரியுமா? இது குறித்து நிறைய தகவல்கள் உண்டு!

- அவதாரம் தொடரும்...