Published:Updated:

சித்தம்... சிவம்... சாகசம்! -2

சித்தம்... சிவம்... சாகசம்! -2

சித்தம்... சிவம்... சாகசம்! -2

சித்தம்... சிவம்... சாகசம்! -2

Published:Updated:
சித்தம்... சிவம்... சாகசம்! -2
சித்தம்... சிவம்... சாகசம்! -2

'சிவாயவசி என்னவும் செபிக்க இச்சகம் எலாம்
சிவாயவசி என்னவும் செபிக்கயாவும் சித்தியாம்
சிவாயவசி என்னவும் செபிக்கவானம் ஆளலாம்
சிவாயவசி என்பதே இருதலைத்தீ ஆகுமே!’

- சிவவாக்கியர்

சித்தம்... சிவம்... சாகசம்! -2

நூற்றுக்குத் தொண்ணூற்று ஒன்பது சித்தர்களின் இஷ்ட தெய்வம்- பரமனாகிய சிவபிரான்தான். இப்பெருமானை நாம் லிங்க வடிவமாகத்தான் இந்த பூமி எங்கும் காண்கிறோம்.

ரூபமாக என்றால், நடராஜ தோற்றமே புலனாகிறது. இந்தத் தோற்றம் குறித்து ஆணித்தரமாக ஒரு கருத்தும் சான்றோர்களிடம் நிலவுகிறது. நடராஜ தோற்றம், உலகின் இயக்க கதியை உணர்த்துகிறதாம். அதன் ஒவ்வொரு நெளிவுசுளிவுக்குப் பின்னாலும் ஒரு பெரும் பொருள் இருக்கிறதாம்.

ஈசனின் புருவம் வளைந்தால், அது கடலின் மேல் விளையும் புயல்; பார்வை பதியும் இடம், விளையும் வயல்; விரல்களின் வளைவில் காற்றின் வீச்சு... மொத்தத்தில் நடராஜ நாட்டியத்தின் முத்திரை ஒவ்வொன்றுமே பூவுலகின் பலவித மாற்றங்களைக் குறிக்கிறது. இந்த மாற்றங்களுள், நாம் பொருள் கொள்ளும் வளர்ச்சியும் உண்டு; நாம் அச்சப்படும் வீழ்ச்சியும் உண்டு.

நடராஜரின் தோற்றமே ஒரு கருத்துப் புதையல். இந்த வடிவம் எங்கே உள்ளதோ, அங்கே இயக்க கதி சுறுசுறுப்பாக இருக்குமாம். சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் இல்லாத மிக மந்த கதியிலான ஒரு வீட்டுக்குள் நடராஜ சிலாரூபம் நுழைந்து அமர்ந்த மாத்திரத்தில், அந்த இல்லத்துக்குள் ஒரு விசைப்பாடு பலவிதமான வினைகளாக செயலாற்றத் தொடங்குகிறது.

ஓர் ஆச்சரியமான தகவல் என்னவென்றால், உலகில் அதிகம் செய்யப்பட்ட சிலாரூபம் ஸ்ரீநடராஜ ரூபம்தான்; அதிகம் கடத்தப் பட்டதும் நடராஜ ரூபமே! அதிகம் ரசிக்கப்பட்டுக் கொண்டிருப்பதும் நடராஜ ரூபம்தான். புரிந்தும் புரியாமல் தொடர்ந்துகொண்டே இருப்பதும் நடராஜ ரூபம்தான்!

ஆனால் பூஜிக்கவும், அபிஷேக ஆராதனைக்கு மாகவும் லிங்க ரூபமே உள்ளது. இதைத்தான் சித்த புருஷர்களும் இறுகப் பற்றிக் கொண்டனர். அதற்கான காரணத்தைப் பார்த்தால், ஒரு பிரமிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

வேதங்களே நமக்கு ஆதாரமானவை. அதில், ரிக் வேதமே முதல் வேதம். இது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை மேல்நாட்டு அறிஞர்களான வில்சன், மேக்ஸ்முல்லர் ஆகியோர் தங்களது ஆய்வில் உறுதிப்படுத்தியுள்ளனர். அதாவது, இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு எண்ணூறில் இருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது ரிக் வேதம் என்பது அவர்களின் ஆய்வுத் தீர்மானம்.

இந்த ரிக்வேதம் லிங்க வழிபாட்டை வலியுறுத்துவதுடன், அதுவே உன்னதமானது, உத்தமமானது என்றும் கூறுகிறது. ஆனால், நம் சான்றோர் கூற்றுப்படி லிங்கத் தோற்றமும், வழிபாடும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நிகழ்ந்து வருகின்றன. மூவாயிரம் என்பது ஒரு சுலபமான கணக்கு!

அதாவது... நால்வகை யுகங்களை இந்தப் பூவுலகம் காண வேண்டும். அதன்படி, கிருத யுகமும், திரேதா யுகமும், துவாபர யுகமும் முடிந்து, இப்போது கலி நடக்கிறது. அதிலும் 5,113 வருடங்களைக் கழித்துவிட்டோம். நான்கு யுகங்களுக்கான மொத்த காலம் என்பதோ 43,20,000 வருடங்கள். இதில் மூன்று யுகங்களின் கணக்கோடு, நடப்பு கலியுக கணக்கையும் சேர்த்தால், தோராயமாக முப்பது லட்சம் ஆண்டுகளை இந்த பூமி பார்த்துவிட்டது.

இந்த பூமி தோன்றும்போதே வேதங்களும் தோன்றிவிட்டன என்றால், வேதங்களுக்கான காலமும் முப்பது லட்சம் ஆண்டுகளைக் கடந்தாகிவிட்டது. இந்தக் காலங்கள்தோறும் லிங்க வழிபாடு நிகழ்ந்தே வந்திருக்கிறது.

எதற்காக இந்த லிங்க வடிவம் எனும் கேள்விக்கு கோயிற் புராணத்தின் ஒரு பாட்டில் பதில் ஒளிந்திருக்கிறது.

'வாக்கொடு மனமிறந்த மன்னவனெங்கு மாகி
நீக்கற நிறைந்தானேனு நிகழ்தரா ததனான்
முத்தி போக்கெளிதல்ல வென்றப் புனிதனே
புந்தி செய்தேம் பாக்கிய வகையா வெண்ணில்
பதிமிகு பாரில் வைத்தான்’

எனும் அந்தப் பாடலின் பொருள், உருவ வழிபாட்டுக்கே இலக்கணம் சொல்கிறது.

சிவபெருமான் எங்கும் நிறைந்திருக்கிறான். அவன் இல்லாத இடம் இல்லை. விறகுக்குள்ளே தீயாக, பசுவின் பாலுக்குள் நெய்யாக, எள்ளுக்குள் எண்ணெயாக இருப்பது எல்லாமும் அவன்தான். ஆனால், இந்த உண்மையை ஞானத்தாலேயே உணர முடியும். மாயை மிகுந்த உலகில், அறிவதாகிய அறிவே முன் தோன்றி செயலாற்றும். அதனால், அறிவதற்கே இங்கே முதலிடம். உணர்வது என்பது இரண்டாம் பட்சமே!

சித்தம்... சிவம்... சாகசம்! -2

இதுவே உலக இயற்கை என்றால், உயிர்கள் முக்தியடைவது இயலாதே? பாவ- புண்ணிய சுழற்சிக்குள் இருந்து விடுபடாமல், பிறந்தும் இறந்தும், இறந்தும் பிறந்துமாய் அல்லவா இருப்பர்? உயிர்களை மீட்டெடுக்க வழிபட வேண்டுமே?

அதற்காகவே, பூவுலகில் சிவபெருமான் எண்ணற்ற ஸ்தலங்களை உருவாக்கி அருளினானாம். ஸ்தலங்களில் அவனது ரூபம் லிங்க வடிவம் ஆகும். விக்கிரக ஆராதனையைவிட, லிங்க வடிவத்தை ஆராதிப்பதே மோட்ச கதிக்கு மிக உசிதமானது என்கிறது ரிக்வேதம். இதற்குச் சான்றாக, ஒரு கதை மகாபாரதத்தில் காணக் கிடைக்கிறது.

பாரத யுத்தம் மூண்டு, 18 நாட்கள் நடந்ததை அறிவோம். அதில் ஒருநாள், கௌரவர்கள் சார்பாக பாண்டவர்களோடு யுத்தம் புரிகிறார் அஸ்வத்தாமன். அவரை வெல்வது எளிதல்ல. அவரிடம் உள்ள அஸ்திரங்களில் அக்னி அஸ்திரம் ஒன்று போதும்; மொத்த உலகையே சாம்பலாக்கிவிட முடியும். இது பாண்டவர்களுக்கும் தெரியும். குறிப்பாக, கிருஷ்ண பரமாத்மா நன்கறிவார்.

அன்றைய யுத்தத்தில், அஸ்வத்தாமா அந்த அஸ்திரத்தை இறுதியாகப் பிரயோகித்தார். மொத்த பாண்டவ சைதன்யமும் சாம்பலாகப் போகிறது என்றே எல்லோரும் நினைக்க... கிருஷ்ண பரமாத்மா, பதிலுக்கு பாசுபதாஸ்திரத்தைப் பிரயோகிக்கும்படி அர்ஜுனனைப் பணித்தார். சிவனாரைக் குறித்து தவமிருந்து அர்ஜுனன் பெற்றதே பாசுபதாஸ்திரம். அது, அக்னியாஸ்திரத்தை அடக்கிவிடுகிறது. அஸ்வத்தாமனிடம் திகைப்பு!

அக்னியாஸ்திரத்தை மிஞ்சும் ஓர் அஸ்திரம் இருக்கமுடியுமா என்று, பின்னர் அவன் வியாசரிடம் கேட்க, அவர் பதில் கூறத் தொடங்கினார்: ''அஸ்வத்தாமா! நீயும் அர்ஜுனன் போன்று மிகச் சிறந்த வீரனாக இருந்தபோதிலும், அவன் ஈஸ்வரனின் லிங்க ரூபத்தை தியானித்து தவம் செய்து, பாசுபதாஸ்திரத்தைப் பெற்றான். நீயோ அந்தப் பெருமானை விக்கிரக ஆராதனை புரிந்தாய். லிங்க ரூபத்தில் சக்தியும் பீட கதியில் கிடக்கிறாள். ஸ்தூபம் நாதமாக விளங்குகிறது. எனவே, சிவபெருமான் லிங்க ரூபத்தில் வழிபாடு உடையவர்களை, வரம் பெற்றவர்களை முந்தி ஆட்கொள்கிறான். அதனாலேயே அர்ஜுனனை உனது அஸ்திரத்தால் வெல்ல முடியவில்லை!'' என்றாராம்.

மகாபாரதத்தில் கிடைக்கும் இந்தச் செய்திப்படி லிங்க வடிவமே வழிபாட்டுக்கு உரியது என்பது புலனாகிறது.

சித்தம்... சிவம்... சாகசம்! -2

இதன்படி, லிங்கம் என்பது மணியாகும். மந்திரம் என்பது 'நமசிவாய’ எனும் பஞ்சாட்சரமாகும். விபூதியே மருந்தான ஒளஷதமாகும். இதையே 'மணி மந்திர ஒளஷதம்’ என்பார்கள். சித்த புருஷர்களும் மிக எளிதாக, மணிமந்திர ஒளஷதமாக 'லிங்கத்தை- பஞ்சாட்சரத்தை- விபூதியை’க் கொண்டார்கள்.

இந்த லிங்கமும் ஏழு வகைப்பட்டு, இந்த உலகில் வணங்கப்பட்டு வருகிறது.

'சுயம்பு லிங்கம், தேவி லிங்கம், திவ்ய லிங்கம், ஆர்ஷக லிங்கம், மானுஷ லிங்கம், ராட்சஸ லிங்கம், ஆசுர லிங்கம்’ என்று வகைப்பட்டு கிடக்கும் இந்த லிங்கங்களில், பன்னிரண்டு ஜ்யோதிர் லிங்கங்கள் சுயம்பு லிங்க வகையைச் சேர்ந்தவை. இந்த ஜ்யோதிர் லிங்கங்களை நினைத்த நேரம் மனத்தில் நிறுத்தி தியானிக்கலாம். இதுவல்லாமல், பஞ்ச பூத மகா லிங்கங்கள் ஐந்து உள்ளன. காஞ்சி, திருவானைக்கா, திருக்காளத்தி, திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய தலங்களில் இந்த பஞ்சபூத மகாலிங்கங்கள் உள்ளன.

லிங்க வடிவத்தையே தேவாதி தேவர்களும் வணங்கி, வரங்களைப் பெற்றுள்ளனர். காஞ்சி ஏகாம்பரேஸ்வரரை வணங்கியே அன்ன வாகனத்தைத் தனதாக்கிக் கொண்டான் பிரம்மன். இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகிய அஷ்டதிக் பாலகர்களும் ஸ்ரீசைலம், திருவண்ணாமலை, கேதாரம், கோகர்ணம், திருவானைக்கா, திருக்காளத்தி, சித்த வடம், திருவாரூர் ஆகிய தலங்களில் உள்ள ரூபங்களை வணங்கியே தங்களுக்கான ஆதிபத்தியத்தை அடைந்தனர். சூரியனும் சந்திரனும் தினமும் மகா மேருவையே லிங்கமாகக் கருதி வலம் வந்து வணங்குகின்றனர். மற்ற கோள்களான செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகியோர் திருவிடைமருதூர், மதுரை, ராமேஸ்வரம், திருவெண்காடு, வேதாரண்யம் ஆகிய தலங்களில் சிவபெருமானை வணங்கி, தங்களின் ஆதிபத்தியத்தை அடைந்தனர். சப்தரிஷிகள் சிதம்பரத்தில் வழிபட்டனர். துருவன் காசியில் வழிபட்டான். ஆதிசேஷன் கும்பகோணத்தில் பூஜித்தான்.

இந்த வரிசையில்தான் சித்தர்களும் வருகின்றனர். சிவபெருமானை வழிபடுவோரில் தேவர்கள், அஷ்டதிக் பாலகர்கள், கிரகங்கள், சப்தரிஷிகள், அசுரர்கள், யட்சர்கள், கின்னரர்கள், கிம்புருடர்கள் என்கிற வரிசையில்... இறுதியில் வந்து சேர்ந்தவர்களே நவநாயக சித்தர்கள்.

மற்றவர்கள் தங்களுக்கான தேவைக்கு பூஜித்து வரம் பெற்றதுடன் மகிழ்ந்த நிலையில், சித்த புருஷர்கள் மட்டும் சற்றே விதிவிலக்காக சிவபிரானிடம் வரங்களைக் கோராமல், சக்தி கொடு, முக்தி கொடு, ஆயுதம் கொடு, பட்டம் கொடு, பதவி கொடு என்று கோரிக்கை வைக்காமல், தாங்கள் உணர்ந்ததையும் அறிந்ததையும் கொண்டு மானுடர்களுக்கு வழிகாட்ட எண்ணினர். இதை ஒரு நோக்கமாகக் கொண்டு அவர்கள் செயல்படவில்லை; போகிற போக்கில் செய்தனர்.

சிலர் சொல்லிச் செய்தனர். சிலர் சொல்லாது செய்தனர். இன்னும் சிலரோ 'முடிந்தால் எங்கள் வாழ்வைப் பார்த்துப் புரிந்து கொள்’ என்பது போல, எதுவும் கூறாமல் வாழ்ந்து சென்றனர்.

கூட்டிக்கழித்து, வகுத்துப் பெருக்கி ஆழ்ந்து சிந்தித்தால் தேவரால், முனிவரால், ரிஷிகளால், திக்பாலர்களால், கோள்களால், மற்றுமுள்ள யட்சர்கள், கிம்புருடர்கள், நாகர்கள், ராட்சஸர்கள் என்று சிவபிரானின் லிங்க வடிவை வழிபாடு செய்தவர் களால், லிங்கத்தின் மகாத்மியம் மட்டுமே நமக்குத் தெரியவந்தது; அவர்கள் பக்தியும் பணிவும் தெரிய வந்தன. ஆனால், சித்தர்களால் மட்டுமே உடல், உள்ளம், ஆன்மா முதல் அண்டம், பிண்டம், பேரண்டம் வரை மானுட உலகுக்கு தெரிய வந்தது.

அது மட்டுமா?

'கேளடா மானுடா’ என அவர்கள் பாடிய பாடல்கள், நமது மூச்சுக் காற்றில் பத்து விதம் உள்ளது என்றது. நாடிகளைக்கூடப் பகுத்து... பித்தம், வாதம், சிலேத்துமம் என்று அடையாளப்படுத்தினர்.

தாவரங்களில் வரமானது எது என்று அறிந்து, அதைத் தங்கள் கைகொண்டு பறித்து, அதன் மூலத்தை அறிந்து, அதுவே மூலிகை என்றனர். அதில் காயகற்பம் செய்து உண்டு, தங்கள் உடம்பை கல்ப தேகமாக்கிக் கொண்டு, மனித வாழ்வின் பெரும் சவாலான மூப்பு- பிணி- சாக்காட்டை சாட்டையால் அடித்து விரட்டினர்.

இதெல்லாம் போதாது என்று அஷ்டமா ஸித்தியை அடைந்து காட்டினர். மொத்தத்தில், மானுட சிவங்களாகவே நடமாடினர்; நடமாடிக் கொண்டும் இருக்கின்றனர்.

சிவத்துக்கும் அவர்களுக்குமான தொடர்போடு, அற்பமாக சாகசங்கள் பல செய்தனர். இந்த சாகசத்தை முதன்முதலாய்த் தொடங்கி வைத்தவனே ஈசன்தான். அவன் மண்மிசை திருவிளையாடல் புரிய வந்தபோது எடுத்த முதல் வடிவமும் சித்த வடிவம்தான்!

எண்ணிறந்த வடிவங்கள் பல இருக்க, பூஜைக்கு லிங்கமாகத் தோன்றியவன், பூமியில் முதலில் சித்தனாய், புலவனாய், பின்பு வேடனாய் என்றே வந்தான். அவனே சித்தனாய் வந்து புரிந்த சாகசத்தைப் பார்ப்போமா?

- சிலிர்ப்போம்...