மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

தெரிந்த புராணம்... தெரியாத கதை!
தெரிந்த புராணம்... தெரியாத கதை!
தெரிந்த புராணம்... தெரியாத கதை!

தேவர்களுக்கெல்லாம் அரசன் இந்திரன். அஷ்டதிக் பாலகர்களில் கிழக்கு திசைக் காவலன். கஸ்யப முனிவருக்கு அதிதியிடம் தோன்றிய தேவகுமாரன் அவன்.

அமராவதியைத் தலைநகராகக் கொண்டு தேவலோகத்தை ஆட்சி செய்த காரணத்தால் 'தேவேந்திரன்’ என்று அழைக்கப்படுபவன். அவன் மனைவி இந்திராணிதேவி.

இந்திரனின் ஆயுதம் தெய்விக சக்திவாய்ந்த வஜ்ராயுதம். ஐராவதம் என்ற வெள்ளை யானையும், உச்சைஸ்ரவஸ் என்னும் தெய்விகக் குதிரையும், காமதேனுவும், கற்பக விருட்சமும், புஷ்பக விமானமும் அவன் பெற்றிருந்த செல்வங்கள். மேகங்களை வாகனமாகக் கொண்டமையால் 'மேக வாகனன்’ என வருணிக்கப்பட்டவன். மழை தரும் கடவுளாக மக்களால் பூஜிக்கப்படுபவன்.

-இப்படி, தேவேந்திரனுக்குப் பல சிறப்புகளும் பெருமைகளும் உண்டு.

எந்தப் புராண, இதிகாசங்களைப் படித்தாலும், அசுரர்களின் ஆதிக்கத்தால் முதலில் பாதிக்கப்படுபவன் இந்த தேவேந்திரனாகத்தான் இருக்கும். ஹிரண்யாட்சசன், ஹிரண்யகசிபு முதல் ராவணன், இந்திரஜித் வரை அத்தனை அசுரர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு, சிறைப்பட்டு, பல்வேறு அல்லல்களுக்கு ஆளாகி, பிரம்மா, விஷ்ணு, சிவனின் அனுக்கிரகத்தால் மீண்டும் அவன் தேவலோகத்தைப் பெற்றதாகப் பல புராணக் கதைகள் சொல்லும்.

தீரமும், தீவிர வைராக்கியமும், தபோபலமும் கொண்டவன் இந்திரன். ஆனால், இந்திரன் என்றதுமே, அகல்யை மீது ஆசைப்பட்டு, உடலெல்லாம் கண்களாகும்படி சாபம் பெற்ற சம்பவம்தான் சட்டென்று நம் நினைவுக்கு வரும்.  

ஒருமுறை, இதே தேவேந்திரனால் பஞ்சபூதங்களுமே ஒரு பாவத்தில் பங்கேற்றன. அந்த வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

அன்று, இந்திரலோகத்தில் இந்திர விழா கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் பங்கேற்க வந்த பிரகஸ்பதி முனிவரை எதிர்கொண்டு அழைக்கத் தவறிவிட்டான் இந்திரன். கோபம் கொண்டார் முனிவர். முனிவர்கள் கோபம் கொண்டால், உடனடியாக அவர்கள் வாயில் இருந்து பிறப்பது சாபம்தானே? அதன்படி, தேவேந்திரனுக்குச் சாபமிட்டுவிட்டு வெளியேறினார் அவர். 'இந்திரனின் செல்வமெல்லாம் தேய்ந்து அழியட்டும்’ என்பதுதான் அந்தச் சாபம்.

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

பிரகஸ்பதி முனிவரின் கோபத்துக்குத் தான் ஆளானதை எண்ணி வருந்தினான் தேவேந்திரன். அதோடு, தேவர்களின் புகழையும், செல்வத்தையும் காக்க நினைத்தவன், பிரகஸ்பதி முனிவரைத் தேடிச் சென்று சரணடைய நினைத்தான். ஆனால், பிரகஸ்பதி முனிவர் அவன் கண்களில் தென்படவில்லை.

தன் தவற்றுக்குப் பிராயச்சித்தமாக, பிரம்மதேவனை நோக்கித் தவம் இருந்தான் இந்திரன். தேவர்களின் புகழையும் செல்வத்தையும் காப்பதற்குரிய யாகம் ஒன்றைச் செய்யும்படி இந்திரனிடம் கூறினார் பிரம்மதேவன். அசுரர்களுக்குக் குருவாக இருந்த விச்சிரவசு ஒருவருக்கே அந்த யாக நெறிகள் தெரியும் என்பதால், அவரையே குருவாகக் கொண்டு யாகத்தை நடத்தும்படி பிரம்மன் கட்டளையிட்டார்.

விச்சிரவசு என்பவர் துவஷ்டா என்ற முனிவரின் மகன். அசுரர்களுக்கு எல்லாம் குரு. கோரத் தவத்தினால் பிரம்மா, விஷ்ணு, சிவன் முதலான தேவர்களை நினைத்த மாத்திரத்தில் அழைத்து யாகத்தில் அவிர்பாகம் கொடுக்கும் சர்வசக்தி பெற்றிருந்தார் அவர்.

அசுர குரு எனத் தெரிந்தும், அவர் மீது பயபக்தி கொண்டு, அவரது திருவடிகளை வணங்கினான் தேவேந்திரன். தேவர்களின் செல்வமும், சிறப்பும் அழியாவண்ணம் காக்கும் யாகம் ஒன்றை நடத்தித் தரும்படிக் கேட்டான். விச்சிரவசுவும் அதற்குச் சம்மதித்தார். தேவர்கள் யாகத்துக்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.

விச்சிரவசுவுக்குக் குரு பீடம் தந்து வணங்கி, யாகத்தைத் தொடங்கினான் இந்திரன். யாகம் தொடங்கிய சிறிது நேரத்தில் பூமி அதிர ஆரம்பித்தது. கடல் கொந்தளித்தது. விருட்சங்கள் வேரற்று வீழ்ந்தன. மக்கள் ஆடைகள் குலைந்து அலங்கோல நிலையை அடையலாயினர். இவையெல்லாம் தனது தவத்தால் நடப்பதை ஊகித்துக் கொண்டான் தேவேந்திரன்.

தேவர்களின் நல்வாழ்வுக்காகத் தொடங்கிய யாகத்தில் அசுரர்கள் வாழவும், தேவர்கள் அழியவும் வழிவகை செய்ய விச்சிரவசு வஞ்சகமாக, மாறுபட்ட மந்திரங்களால் யாகத்தில் ஆகுதி கொடுத்துக் கொண்டிருப்பதை உணர்ந்தான் இந்திரன்.

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

அடுத்து ஒரு கணமும் தாமதிக்காமல், தீமையைத் தடுக்கும் உத்தேசத்தில், தனக்குக் கிடைக்கப்போகும் பாவ பலனுக்கும் அஞ்சாமல், வஜ்ராயுதத்தால் விச்சிரவசுவின் தலையைக் கொய்து யாகத்தில் ஆஹுதியாக்கிவிட்டான் இந்திரன்.

இதன் விளைவாக பிரம்மஹத்தி தோஷம் அவனைப் பிடித்தது. 'அரக்க குணம் கொண்ட அசுரர்கள் பலரை ஸ்ரீமந் நாராயணன் சம்ஹாரம் செய்யவில்லையா? அப்போதெல்லாம் அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏன் ஏற்படவில்லை?’ என்று கேட்டு ஈஸ்வரனிடம் முறையிட்டான் இந்திரன்.

''கொடியவர்களைப் போரில் வீழ்த்தும் போது அது சம்ஹாரம்.

தவக் கோலத்தில் யாகம் புரிந்து கொண்டிருந்த விச்சிரவசுவைக் கொன்றது கொலை பாதகம். அதுவும் குருவாக ஏற்றுக்கொண்டவரைக் கொன்றதால்தான் இந்த பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டுள்ளது. இந்திரனாக இருந்தாலும், நீ இந்தப் பாவத்தை ஏற்றே ஆகவேண்டும்!'' என்றார் ஈஸ்வரன்.

யாருடைய நல்வாழ்வுக்காக இந்திரன் விச்சிரவசுவை அழித்தானோ, அவர்களே அங்கே தோன்றி ஈஸ்வரன் திருவடிகளை வணங்கி நின்றனர்.

நீர், நிலம், விருட்சம், நிர்க்கதியான மாதர் அனைவரும் ஈஸ்வரனைத் தொழுது, இந்த பிரம்மஹத்தி தோஷம் இந்திரனைப் பாதிக்காமல், அதனைத் தங்களுக்கே பகிர்ந்து தரும்படி வேண்டினர்.

அதன்படி, மரத்தில் பிசினாகவும், நிலத்தில் உவராகவும், நீரில் நுரையாகவும், மாதரில் மாதவிலக்காகவும் இந்தத் தோஷம் பீடிக்க ஈஸ்வரன் அருள்புரிந்தார்.

தன் பாபத்தைப் பெற்றுக்கொண்ட இந்த நால்வருக்கும் பாப விமோசனமாகத் தன் தவப்பயன் அனைத்தையும் தந்து ஆசி வழங்கினான் இந்திரன். மரங்கள் வெட்டுப்பட வெட்டுப்பட மீண்டும் அவை தளிர்க்கவும், பள்ளமான நிலம் தானே நிரம்பவும், இறைக்கும் நீர் ஊறவும், கருவுற்ற காலத்தில் பெண்களுக்கு மாதவிலக்கின்றி தேகம் சுத்தமாக இருக்கவும் வரம் அளித்து, சாபத்துக்கு விமோசனம் தேடித் தந்தான்.

தொடர்ந்து, தேவர்களின் ஆசியுடன் யாகத்தை முடித்து, தேவலோகச் செல்வங்களைக் காத்தான் இந்திரன்.

இந்திரனின் பாபத்தை ஏற்றுக்கொண்ட தியாகத்துக்குப் பரிசாக, இன்றைக்கும் எந்த யாகத்திலும் நீரும், நிலமும், விருட்சமும், பெண்டிரும் முக்கியத்துவம் பெறுகின்றனர்.

யாகசாலைத் தளமாக நிலமும், பூஜா மண்டப சுத்திக்கு நீரும், யாகாக்னி வைக்க மகளிரும், யாகத்தில் சமித்தாக விருட்சமும் முக்கிய ஸ்தானம் வகிக்கின்றன.

- இன்னும் சொல்வேன்