Published:Updated:

கேள்வி-பதில்

கேள்வி-பதில்

கேள்வி-பதில்

கேள்வி-பதில்

Published:Updated:
கேள்வி-பதில்
கேள்வி-பதில்
கேள்வி-பதில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்ரீராமனுக்கு அவருடைய குலகுருவான வசிஷ்டரே 'ராமன்’ என்று பெயரிட்டதாக ராமாயணம் சொல்கிறது. பெற்றோர் தவிர, மற்றவர்களும் குழந்தைக்குப் பெயர் சூட்டலாமா?

- அ. திருமலை, முசிறி

தற்காலத்தில், அரசியல் தலைவர்களிடம் குழந்தையை அளித்துப் பெயர் சூட்டச் சொல்லி மகிழ்கிறோம். பெயரியல் நிபுணர்களை அணுகி, குழந்தைக்குப் பெயர் சூட்ட வைக்கிறோம். சிலர், பெற்றோர் வைத்த தங்களது பெயரையே மாற்றி வைத்து மகிழ்ச்சி அடைகிறார்கள். இங்கெல்லாம் பெற்றோரின் உரிமை பறிபோனதைக் கவனிப்பது இல்லை. ஆனால், வசிஷ்டர் பெற் றோர் உரிமையைப் பறித்தது குறித்துப் பறைசாற்றுகிறோம்.

கேள்வி-பதில்

தர்மசாஸ்திரம் நமக்கு இல்லை, வசிஷ்டருக்குத்தான் உண்டு என்ற எண்ணம் சிறுபிள்ளைத்தனம். சட்டத்தை அமல்படுத்த மனம் இல்லை; சட்டத்தை மீறுபவர்களின் குறையை எடுத்துக்காட்டி, தன்னை உயர்ந்தவனாகச் சித்திரிக்கும் எண்ணம் நம்மிலும் தென்படுகிறது. தாய்- தந்தையரில் தகுதி குறைந்து, குருவில் தகுதி மிகுதியாக இருந்தால், குரு வழியாகப் பெயர் சூட்டலாம் என்கிறது சாஸ்திரம். பிறந்த குழந்தையின் தூய்மையை நிலைநாட்டத் தகுதியானவர் மூலம், அதுவும் குரு முகமாகப் பெயர் சூட்டுவது, குழந்தையின் பெருமையைப் பெருக்கும் என்ற நோக்கில் குருவைத் தேர்ந்தெடுத்திருக்கிறது.

துஷ்யந்தன் சகுந்தலையைக் காதலித்து, ஒரு குழந்தைக்கு அவளைத் தாயாக்கிவிட்டு நாடு திரும்பினான். முனிவர் ஒருவரின் சாபத்தால், சகுந்தலை குறித்த ஞாபகம் அவனுக்கு அற்றுப்போய்விட்டது. அங்கே, ஆசிரமத்தில் பிறந்த குழந்தைக்கு காலாகாலத்தில் பெயர்சூட்டு விழாவை கண்வ மகரிஷி செயல்படுத்தினார் என்கிறது பாரதம்.

வேதம் ஓதும் இனத்தில் தோன்றினான் ஒருவன். கல்வி பயின்று முடித்து, உரிய வயது வந்ததும், மிலிட்டரியில் சேர்ந்து பணியாற்றினான். அவன் தோளில் பூணூல் இல்லை; கடமைகளும் மறந்து பல நாட்கள் ஆகிவிட்டன. ஆனாலும், அவன் தன்னுடைய மகனுக்குப் பூணூல் போட விரும்பினான். அவன் பூணூல் அணிவிப்பதைவிட, கடமையை ஆற்றும் பழக்கம் கொண்ட புரோஹிதர் (குரு) அணிவிப்பது சிறப்பு என்கிறது சாஸ்திரம்.

கேள்வி-பதில்

ஒரு குறிக்கோளுடன் அவதரித்த பரம்பொருள், தசரதனுக்குத் தகப்பன் ஸ்தானத்தை அளித்துப் பெருமைப்படுத்தியது என்பதே உண்மை. அங்கு, பரம்பொருளுக்குப் பெயர் சூட்டுவதில் வசிஷ்டர் ஈடுபடுவது சிறப்பாகும். நாமெல்லாம் தகப்பன்வழி மகனாகத் தோன்றினோம். தசரதனோ ராமர்வழி தகப்பன் என்ற பெருமையைப் பெற்றார். பூணூல் கல்யாணத்திலும் குழந்தைக்கு காயத்ரி உபதேசம், குருவழி தகப்பன் உபதேசமாக நிகழும். தகப்பன் தன்னிச்சையாக உபதேசம் செய்வது இல்லை.

வேத விளக்கத்தால் வெளிவந்த பரம்பொருளுக்கு வேதியர் வழி பெயர் சூட்டு விழா நடப்பது சிறப்பு. வசிஷ்டர் தன்னிச்சையாகப் பெயர் சூட்டவில்லை. வேத விதிப்படி பெயரை தேர்ந்தெடுத்தார். அரசர்களுக்கான வேள்வியை நடத்தி வைப்பவர்கள், வேதம் ஓதுவோர். பெயர்சூட்டு விழாவும் அவர்களாலேயே நடத்தப்படுவது பொருந்தும்.

சாஸ்திர விதிகள் அத்தனையும் பண்டைய புராண கதாபாத்திரங்களுக்கு மட்டுமே இருப்பதல்ல; அவற்றை அலசி ஆராய்வது நமது திறமைக்குச் சான்றும் அல்ல. புராணங்களின் உட்கருத்தைப் புரிந்துகொள்வதில் ஆர்வத்தை வளர்க்க வேண்டும். அப்போது, ஆராய்ச்சியில் இறங்கும் எண்ணம் தானாகவே விடுபட்டுவிடும்.

சாப்பிடும்போது வடக்கு திசை நோக்கி உட்காரக் கூடாது என்கிறார்களே... இதுகுறித்து சாஸ்திரத்தின் அறிவுரை என்ன?

- வாசுதேவன், தேனி

பசியைப் போக்க உணவு வேண்டும் என்று விருப்பத்துக்கு இணங்க உணவருந்தும்போது, நான்கு விதமான விருப்பத்தை ஒட்டி நான்கு திக்கை நோக்கியும் அமர்ந்து உணவருந்தலாம் என்று மனு கூறுவார். நீண்ட ஆயுள் வேண்டும் என்று விரும்பினால், கிழக்கு நோக்கி அமர்ந்து அருந்தலாம். புகழை விரும்பினால் தெற்கிலும், செல்வத்தை விரும்புகிறவன் மேற்கு நோக்கியும், உண்மை பேசுவதில் நிறைவு காண வடக்கு நோக்கியும் அமர்ந்து உணவு அருந்தலாம் என்று விளக்குகிறார் அவர் (ஆயுஷ்யம் ப்ராங்முகோ புங்க்தே... ரிதம் புங்க்தேஹ்யுதங்முக:).

பிள்ளை குட்டிகளோடு குடும்ப வாழ்க்கையில் இருக்கும் குடும்பத் தலைவன், தனது வீட்டில் ஒரு நாளும் வடக்கு நோக்கி அமர்ந்து போஜனம் செய்யக் கூடாது என்று சிலர் கூறுகிறார்கள் (புத்ரவான்ஸ்துக்ருஹேநிதயம் நாச்னீயாத் உத்தராமுக:). அதாவது, சில ரிஷிகள் கூறுகிறார்கள் என்று பொருள். தாய்- தந்தை உயிரோடு இருக்கும் நிலையில், அவர்களின் மகனானவன் தெற்கு நோக்கி உணவு அருந்த வேண்டாம் என்று ப்ரயோக பாரிஜாதம் என்ற நூல் வரையறுக்கும் (பிதரௌஜீவமாநௌசேத் நாச்சனீயாத்தஷிணாமுக:).

சிலர் சொல்கிறார்கள் என்றாலே, அது பொது நியமம் ஆகாது. குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே சொல்வதால், அதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகையால் பொதுவிதி என்பது, எந்தத் திக்கை நோக்கியும் உணவருந்தலாம் என்றாகிவிடும். இப்படி, ஒரு சாராருக்குச் சொன்னதைப் பொது விதியாக வெளிப்படுத்தும்போது, பல சந்தேகங்களுக்கு இடமளித்துக் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

இந்த நடைமுறை, ஜோதிடத்திலும் பரவியிருக்கிறது. தர்ம சாஸ்திரத்திலும் பரவியிருக்கிறது; ஸம்பிரதாயத் திலும் உண்டு. முழுமையான சாஸ்திரத்தை எட்டிப் பார்க்காதவர்கள், தங்களுக்குத் தெரிந்ததை, தங்களுக்குக் கிடைத்த சமுதாய அங்கீகாரத்தின் போர்வையில் வெளியிடத் துணிவதால், நல்ல நூல்களின் உயர்ந்த கருத்துக்களில்கூட மாசு படிந்துவிடுகிறது.

நமது கலாசாரத்தை ஆராய்ந்து வெளியிட்ட வெளிநாட்டவர்களும், 'பெரும்பாலானவை இது போன்ற மாசு கலந்த தகவல்களே’ என்பதை உணர ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த மாதிரி மாசு படிந்த தகவல்களை ஆராய்ந்து தெளிந்து செயல்பட வேண்டும். அந்தப் பொறுப்பு இன்றைய சமுதாயத்துக்குச் சுமத்தப்பட்டிருக்கிறது. ஆகை யால், மனுவின் உரைப்படி எந்த திசையிலும் அமர்ந்து உணவருந்தலாம்.

விழாக்களில் தானமாகத் தந்த தேங்காயை கோயிலில் சுவாமிக்கு நைவேத்தியம் செய்யலாம் என்று ஏற்கெனவே ஒரு கேள்விக்கு பதில் அளித்திருந்தீர்கள். இப்போதும் எனது சந்தேகம் ஒன்றை தீர்க்க வேண்டுகிறேன்.

வீட்டில் செய்யப்பட்ட பூஜா, ஹோமம், புண்யாஹவாசனம் போன்ற நிகழ்ச்சிகளில் கலசத்தின் மேல் வைக்கப்பட்ட தேங்காய்களை கோயிலில் ஸ்வாமிக்கு நிவேதனம் செய்யலாமா? பிள்ளையாருக்குச் சிதறு தேங்காய் போடப் பயன்படுத்தலாமா?

கலசத்தின் மீது வைக்கப்பட்ட தேங்காய் ஏற்கெனவே தெய்வத்துக்குப் படைக்கப்பட்டது. அதை இன்னொரு தெய்வத்துக்குச் சமர்ப்பிக்கக் கூடாது என்கிறார்கள் சிலர். வேறு சிலரோ... அந்தத் தேங்காய் நைவேத்தியம் செய்யப்பட்டது அல்ல; கலசத்தின் மீது மங்கலப் பொருளாக மட்டுமே வைக்கப்பட்டது. எனவே, தாராளமாக நைவேத்தியம் செய்யலாம் என்கிறார்கள். தங்களின் அறிவுரை தேவை.

- சி.எஸ்.குமரகுரு, சென்னை-77

கேள்வி-பதில்

தானமாகக் கிடைத்த பொருள் நமக்குச் சொந்தமாகிவிடும். அதை நமது விருப்பப்படி பயன்படுத்தலாம். பூஜை, ஹோமம், புண்யாஹ வாசனம் ஆகியவற்றில் கலசத்தின்மீது வைக்கப்பட்ட தேங்காய்களை நமது விருப்பப்படி செயல்படுத்த இயலாது.

கும்பத்தில் வைத்த தேங்காயை ஆசார்யனுக்கு தானமாக அளிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம் (ப்ரதிமாம் வஸ்த்ர ஸம்யுக்தாம் கும்போபகரணை: யுதாம்...).

கும்பம் என்பது நாம் பணிவிடை செய்ய முனையும் இறையுருவம். நெல், அரிசி, உளுந்து, எள், கும்பம், அதைச் சுற்றிய நூல், மாவிலைக் கொத்து, கும்ப ஜலத்தில் போடப்பட்ட ரத்தினம், கூர்ச்சம், தேங்காய், அதன்மேல் இருக்கும் வெள்ளி அல்லது மஞ்சள் பிரதிமை ஆகிய அத்தனையும் இறையுருவத்தின் உருப்படிகள். பணிவிடை முடிந்தபிறகு, அந்தப் பொருள்களில் தெய்வ சாந்நித்தியம் இருக்கும். ஆதலால், உயர்வை எட்டிய அத்தனைப் பொருளையும் ஆசார்யனுக்கு அளித்துவிட்டு, அவரது அருளைப் பெற வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

தெய்வத்துக்குப் படைக்கப்பட்டது என்றோ, நைவேத்தியம் செய்யப்படவில்லை என்றோ கூறும் வாதங்களை உண்மை விளக்கமாக ஏற்றுக்கொள்ள முடியாது.

அவருக்கு (ஆசார்யனுக்கு) அதை அளிக்காமல் நாமே ஏற்றுக்கொள்வது பொருந்தாது. அவர் அதை வாங்கிக்கொண்டு, பிறகு நம்மிடமே திருப்பித் தந்தாலும், நம் பொருளை அதாவது, கொடை அளித்த பொருளை திரும்பப் பெறக்கூடாது.

இப்படியிருக்க, பயன்படுத்தப்பட்ட தேங்காய் களை தர்ம சாஸ்திரத்தின் அறிவுரைக்கு இணங்கச் செயல்படுத்தினால் இந்தக் கேள்வியே எழாது. உரிமையில்லாத தேங்காய் களை தெய்வத்துக்கு அளிப்பது, கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு அளிப்பதுபோல் ஆகிவிடும்.

என் தந்தை சொல்லிக் கொடுத்தபடி சிவ பஞ்சாயதன பூஜை செய்து வருகிறேன். இந்த பூஜை விளக்கம் குறித்த ஒரு புத்தகமும் என்னிடம் உண்டு. அதில் ஆவாஹனம் குறித்து... முதலில் சூரியன் (தென் கிழக்கு), கணபதி (தென்மேற்கு), லட்சுமி நாராயணர் (வடமேற்கு), தேவி (வடகிழக்கு), ஸ்ரீபரமேஸ்வரர் (நடுவில்) என்று உள்ளது.

ஆனால், தற்போது புதிதாக வாங்கிய புத்தகம் ஒன்றில்... கணபதி (தென்மேற்கு), சூரியன் (தென் கிழக்கு), லட்சுமிநாராயணர் (வட கிழக்கு), தேவி (வடமேற்கு), பரமேஸ்வரர் (நடுவில்) என்று உள்ளது. எது சரியான வரிசை மற்றும் திசை?

- கே.கே.அனந்த நாராயணன், கோபிசெட்டிப்பாளையம்

தந்தை சொல்லிக் கொடுத்தபடி செயல்படுவதே சிறப்பு! புத்தகத்தில் தென்படும் விளக்கங்களில் ஆசிரியரின் அறிவு சார்ந்த எண்ணமும் கலந்திருக்க வாய்ப்பு உண்டு.

தத்துவ விளக்கத்தை குரு வாயிலாகத் தெரிந்துகொள்வது நல்லது. பஞ்சாயதன பூஜையில் ஈசனைப் பிரதானமாக எண்ணினால், அவரை நடுநாயகமாகக் கொண்டும் மற்றவரை ஈசனைச் சுற்றிலும் வைத்து பூஜிக்கலாம்.

பெருமாள் பக்தன் பூஜித்தால் நடுவில் சாளக்கிராமம் இருக்கும். தேவி பக்தனானால் அம்பிகையும், கணபதி பக்தனானால் விக்னேஸ்வரரும், ஸெளரமானால் சூரியனும் நடுநாயகமாக விளங்குவார்கள்.

சூரியன், அம்பிகை, விஷ்ணு, கணநாதன், மஹேஸ்வரன் ஆகியோர் பஞ்சாயதன பூஜையில் இடம்பெறுவர் (ஆதித்யம் அம்பிகாம் விஷ்ணும் கணநாதம் மஹீச்வரம்). ஐவரில் ஒருவர் நடுநாயகமானால், மற்றவர்கள் பரிவார தேவதையாக அவரைச் சுற்றி இருக்கலாம். பரிவார தேவதைகளுக்கு திக் நியமம் கிடையாது. 'திக்கு’ மாறிவிட்டால் அபசாரம் ஏற்படாது.

எந்த ஒரு முறையை நாம் முதலில் தேர்ந்து எடுக்கிறோமோ, அதை மாற்றாமல் இருந்தால் போதுமானது. மஹேஸ்வர பஞ்சாயதனம், விஷ்ணு பஞ்சாயதனம், தேவி பஞ்சாயதனம், ஆதித்ய பஞ்சாயதனம், கணபதி பஞ்சாயதனம்... இப்படிப் பெயர் இருப்பதால், நடுநாயகமான தெய்வத்துக்கு முக்கியத்துவம் அளித்துச் செயல்படும்போது, பரிவார தேவதைகளுக்குத் தனி அந்தஸ்து அளிப்பதில்லை. தந்தை சொல்படி செயல்படுங்கள்.

- பதில்கள் தொடரும்...