Published:Updated:

கேரள திவ்ய தேசங்கள்! - 02

கேரள திவ்ய தேசங்கள்!
News
கேரள திவ்ய தேசங்கள்! ( கேரள திவ்ய தேசங்கள்! )

நீங்களும் பாவங்கள் போக்கும் இமையவரப்பர் பெருமாளை தரிசிக்க புறப்பட்டு விட்டீர்களா?

கேரள திவ்ய தேசங்கள்!
கேரள திவ்ய தேசங்கள்!
கேரள திவ்ய தேசங்கள்!
கேரள திவ்ய தேசங்கள்!

திருச் செங்குன் றூரில் திருச்சிற்றா றதனுள்
கண்டவத் திருவடி யென்றும்
திருச் செய்ய கமலக் கண்ணும்செவ் வாயும்
செவ்வடி யும்செய்ய கையும்,
திருச் செய்ய கமல வுந்தியும் செய்ய
கமலமார் பும்செய்ய வுடையும்,
திருச்செய்ய முடியும் ஆரமும் படையும்
திகழவென் சிந்தையு ளானே.

             -நம்மாழ்வார் (திருவாய்மொழி)

##~##
கே
ரள திவ்ய தேச தரிசனத்துக்காக இந்த இதழில் நாம் பயணிக்கப் போகும் திருத்தலம்... திருச்செங்குன்றூர். புகழ் மிகுந்த மூவாயிரம் அந்தணர்கள் ஒன்றுபட்டு வாழும் திருத்தலம் இது. குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருச்செங்குன்றூரின் அழகை ரசிப்பதற்கு இரண்டு கண்கள் போதாது. அப்படியென்றால், இங்கே கோயில் கொண்டிருக்கும் பெருமாளை தரிசிக்க நாம் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும்?!

திருச்செங்குன்றூரில் நாம் தரிசிக்கப்போகும் பெருமாளின் திருநாமம் ஸ்ரீஇமையவரப்பர் பெருமாள். இவர் ஆச்சரியமான மாயச் செயல்களுக்குப் பெயர் பெற்ற பெருமாள். அவரே இங்கு மூன்று கண்களைப் பெற்ற சிவனுக்கும், நான்முகனாகிய பிரம்மனுக்கும் அந்தர்யாமியாக இருந்து, அவர்களின் வடிவங்களாகவும் தோன்றுகிறார்.

பன்னிரு ஆழ்வார்களால் திருமாலின் உயர் குணங்களைப் பற்றிப் பாடப்பெற்ற நாலாயிரம் பாடல்களின் தொகுப்பு, 'நாலாயிர திவ்ய பிரபந்தம்’ என்று குறிப்பிடப்படுகிறது. ஏதேனும் ஓர் ஆழ்வாரால், எந்தவொரு திருக்கோயிலின் பெருமாளாவது பாடப்பட்டிருப்பின் (மங்களாசாசனம்) அந்தத் தலத்தைத் 'திவ்ய தேசம்’ என்று கூறுவர். 'திவ்யம்’ என்ற சொல்லுக்கு தெய்வத் தன்மை பெற்றது என்று பொருள். ஆழ்வார்களால் பாடப்பெற்ற திருத்தலங்களில் எம்பெருமான் நித்தியவாசம் செய்வதாக ஐதீகம்!

கேரளாவில் அமைந்துள்ள 13 திவ்ய தேசங்களுள் ஒன்றான திருச்செங்குன்றூர் என்று குறிப்பிடப்படும் திருச்சிற்றாறு ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள செங்கண்ணூரில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

கேரள திவ்ய தேசங்கள்!
கேரள திவ்ய தேசங்கள்!
கேரள திவ்ய தேசங்கள்!
கேரள திவ்ய தேசங்கள்!

அழகான பச்சைப் பசேல் சூழல். வரவேற்பு வளைவு. அதைத் தாண்டி உள்ளே நுழைந்ததும், வலது பக்கம் பெரிய பரப்பில் ஒரு தீர்த்தக் குளம். இது 'சங்கு தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. கேரளத்தில் அம்பலம் அல்லது க்ஷேத்திரம் என்றுதான் ஆலயத்தைக் குறிப்பிடுகிறார்கள். இந்த அம்பலத்தை உருவாக்கி, ஸ்ரீஇமையவரப்பர் பெருமாள் என்ற பெயரையுடைய மூலவரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டவர், பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான தர்மர்.

பாரதப் போரின்போது, மூவுலகையே கொடுத்தாலும் தர்மர் பொய் சொல்லமாட்டார் என்று நம்பிய துரோணர், 'என் மகன் அஸ்வத்தாமா போரில் கொல்லப்பட்டானா?'' என்று தர்மரைப் பார்த்துக் கேட்டார்.

'தருமம் பிறழ்ந்து பொய் சொல்லியாவது துரோணரின் கையில் இருக்கும் ஆயுதங்களைக் கீழே போட வைக்காவிட்டால், நம் மொத்த சேனையும் நிர்மூலமாகப் போகும்!'' என்று ஸ்ரீகிருஷ்ணர் பாண்டவர்களுக்குச் சொல்லியிருந்தார். அதனால் தர்மர், 'அஸ்வத்தாமா ஹத: குஞ்சர:'' என்று துரோணரின் கேள்விக்குப் பதில் சொன்னார். அதாவது, 'அஸ்வத்தாமா கொல்லப்பட்டான்'' என்பதைச் சத்தமாகச் சொல்லிவிட்டு, 'யானை (குஞ்சரம்)!'' என்பதை குரல் தாழ்த்தி சொன்னார். கொல்லப்பட்டது 'அஸ்வத்தாமா என்ற பெயருடைய யானை’ என்று தர்மர் முணுமுணுத்தது துரோணரின் காதுகளில் விழவில்லை.

தர்மர் பொய் சொல்லமாட்டார் என்று நம்பிய துரோணர், தன் மகன் இறந்துவிட்டான் என்று உறுதியாக எண்ணினார். புத்திர சோகம் அவரை நடுங்க வைத்தது; ஆயுதங்களைக் கீழே போட்டார். ஸ்ரீகிருஷ்ணர் எதிர்பார்த்தது நடந்தது. பாண்டவர்கள், துரோணாச்சார்யரை மாய்த்தனர். துரோணரைக் கொன்ற பாவத்துக்கு தானே காரணம் என எண்ணிப் புழுங்கினார் தர்மர். தன் பாவத்துக்குப் பிராயச்சித்தம் தேடும் வகையில், ஸ்ரீவிஷ்ணுவுக்கு திருச்சிற்றாற்றில் ஓர் ஆலயம் அமைத்து வழிபட்டார்.

கேரள திவ்ய தேசங்கள்!
கேரள திவ்ய தேசங்கள்!

வலது கரத்தில் சக்கரம், இடது கரத்தில் சங்கு, இன்னொரு வலது கரத்தில் செந்தாமரை ஏந்தி, இன்னொரு இடது கரத்தினால் தரையில் ஊன்றிய கதாயுதத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும் நின்ற திருக்கோலம் கொண்டவர் ஸ்ரீஇமையவரப்பன். கிழக்கு நோக்கிய திருமுகம். தாயாரின் திருநாமம் செங்கமலவல்லித் தாயார். இந்தத் தலத்தில் கடும் தவம் இருந்த இமையவர்களுக்கு (தேவர்களுக்கு) அருள்பாலித்தவர் ஆதலால், 'இமையவர் அப்பன்’ என்று பெருமாளுக்குத் திருநாமம் வந்ததாகச் சொல்கிறார்கள்.

ஆலய நுழைவாயிலைத் தாண்டிச் சென்றால், தாமிரத் தகடுகள் பதித்த தேக்கு மரத்தால் ஆன கொடி மரத்தைக் காணலாம். அடுத்து, ஒரு சிறிய பலிபீடம். அதைத் தாண்டி 'நாலம்பலம்’ எனப்படும் கோயிலின் உட்பிராகாரம். கருவறைக்கு முன்னால் நமஸ்கார மண்டபம். இதனுள்ளே மரத்தால் செதுக்கப்பட்டுள்ள தேவதைகளின் திருவுருவங்கள் காட்சியளிக்கின்றன.

கேரள மாநிலத்தில், கோயில் கருவறை 'ஸ்ரீகோயில்’ என்று அழைக்கப்படுகிறது. கேரளாவின் ஏனைய கோயில்களைப்போல இல்லாமல், இந்தக் கருவறையின் கூரை கருங்கற்களால் மூடப்பட்டு, வட்ட வடிவமாக அமைந்துள்ளது. தென்புறம் நாகம் மற்றும் சில மிருகங்களின் சிற்பங்கள் காணப்படுகின்றன. கருவறைக்கு மேல் உள்ள கோபுரம், ஜகஜ்ஜோதி விமான வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. வெளிப் பிராகாரத்தில் ஸ்ரீகோசால கிருஷ்ணன், ஸ்ரீஐயப்பன் ஆகியோர் தனிச் சந்நிதிகளில் உபதேவதைகளாக வீற்றிருக்கிறார்கள். தல விருட்சம்- ஆலமரம்.

கேரள திவ்ய தேசங்கள்!
கேரள திவ்ய தேசங்கள்!

ஆலய மேல்சாந்தியான மோகன்ராவ் போத்தியைச் சந்தித்தோம். 'நம்மாழ்வார் 11 பாசுரங்களால் இந்தப் பெருமாளை மங்களாசாசனம் செய்திருக்கிறார். திருவாங்கூர் தேவஸ்வம் போர்டின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலின் நடை காலை 5.30 மணிக்குத் திறக்கப்படுகிறது. 10 மணிக்கு சார்த்தி, மீண்டும் மாலை 5 மணிக்குத் திறக்கிறோம். இரவு 7.30 மணிக்கு நடை சார்த்துகிறோம். பங்குனி மாதம் 10 நாட்கள் பிரம்மோத்ஸவம். ஆவணி மாதம் தசாவதாரம். ஜனவரி 7-ஆம் தேதி தொடங்கி 13-ஆம் தேதி வரை பாகவத உபன்யாசம் நடைபெறும். ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த ஜன்மாஷ்டமி இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீஇமையவரப்பரைச் சேவித்தால், தர்மருக்குப் பாவ நிவர்த்தி கிடைத்தது போல, பக்தர்களுக்கும் பாவ நிவர்த்தியும் மோட்சப் பிராப்தியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நம்மாழ்வார் தன் பாசுரத்தில் குறிப்பிட்டபடி, இந்தப் பெருமாளை மனமுருகிச் சேவிக்கும் எவருக்கும், அவரவர் வேண்டியதை அள்ளித் தரும் அருள் உள்ளம் கொண்டவர் இந்த பெருமாள்!'' என்றார் மோகன் ராவ் போத்தி.

என்ன... நீங்களும் பாவங்கள் போக்கும் இமையவரப்பர் பெருமாளை தரிசிக்க புறப்பட்டு விட்டீர்களா?

- தரிசனம் தொடரும்...
படங்கள்: ரா.ராம்குமார்