Published:Updated:

நினைத்ததை நடத்தி வைப்பாய் கோவிந்தா!

நினைத்ததை நடத்தி வைப்பாய் கோவிந்தா!

நினைத்ததை நடத்தி வைப்பாய் கோவிந்தா!
நினைத்ததை நடத்தி வைப்பாய் கோவிந்தா!
நினைத்ததை நடத்தி வைப்பாய் கோவிந்தா!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ங்கை ஆற்றங்கரையில், கஸ்யப முனிவரின் தலைமையில் பெரிய யக்ஞம் ஒன்று நடந்தது. அங்கு வந்த நாரதர், 'சாத்விக தேவதைக்குத்தான் இந்த யக்ஞத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்’ என்றார். அத்தகைய தேவதையைக் கண்டறியப் புறப்பட்டார் பிருகு மஹரிஷி.

முதலில் சத்யலோகத்துக்கும், பிறகு கயிலாயத்துக்கும் சென்றார். அங்கே இருந்த பிரம்மாவும் சிவனும் பிருகு மஹரிஷி வந்ததைக் கவனிக்காமல் இருந்துவிட்டனர். நிறைவாக, வைகுண்டம் சென்றார் முனிவர். அங்கே, ஸ்ரீமகாலட்சுமியுடன் இருந்த ஸ்ரீநாராயணனும் இவரைக் கவனிக்காமல் இருந்துவிடவே, கோபத்தில் மகாவிஷ்ணுவின் மார்பிலேயே காலால் எட்டி உதைத்தார் பிருகு மஹரிஷி. அவருடைய பாதத்தில் ஒரு கண் இருக்கும்; அதைக் கையால் அமுக்கினார் பரமாத்மா. மஹரிஷியின் கர்வம் அகன்றது. தன்னை எட்டி உதைத்த அந்தத் திருவடிக்கு என்ன நோவு ஏற்பட்டதோ என்று அவருடைய காலை பகவான் பிடித்துக் கொண்டார். பகவானின் திருக்கல்யாண குணத்தைப் பார்த்த பிருகு மஹரிஷி உருகிவிட்டார். அவரே சாத்விக தேவதை என்பதை நிர்ணயித்து, ஸ்ரீவிஷ்ணுவின் பொருட்டு யக்ஞத்தைச் சமர்ப்பித்தார்கள்.

அதே நேரம், தான் உறையும் பகவானின் மார்பில் மஹரிஷி உதைத்துவிட்டாரே என்று மகாலட்சுமிக்கு வருத்தம். வைகுண்டத்தை விட்டே கிளம்பிவிட்டாள். மகாலட்சுமி இல்லாததால், வைகுண்டமே சூன்யமாகிவிட்டது. அவளைத் தேடிக்கொண்டு பூலோகத்துக்கு வந்தார் பகவான். வேங்கடாசலத்தில் இருந்த புஷ்கரணிக்கு அருகில் உள்ள புளிய மரத்தடியில் வந்து இறங்கி சேஷாசலம், கருடாசலம், சிம்ஹாசலம், வ்ருஷபாசலம், நாராயணாசலம், அஞ்சனாசலம் என ஏழு மலைப் பிரதேசங்களிலும் சஞ்சாரம் செய்தார்.

ஏழு மலைகள் அடங்கிய திருமலையின் ஏற்றம் எப்படிப்பட்டது? ஒளி யாகவும், காடாகவும், தீர்த்தமாகவும், மலையாகவும் இருக்கும் பகவான்... திருமலையில் பர்வத ரூபமாகவே உள்ளான். திருமலையே பகவத் ஸ்வரூப மானதால், பூர்வ காலத்தில் திருமலையில் காலால் ஏறமாட்டார்கள்; முழங் காலில் கோணி கட்டிக்கொண்டு முழங்காலால்தான் ஏறுவார்கள். முதலில், திருமலைக்குத்தான் ஏற்றம்; அதன்பின்தான் எம்பெருமானுக்கு ஏற்றம்.

குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான், பரன்
சென்று சேர் திருவேங்கட மாமலை
ஒன்றுமேதொழ நம்வினை ஓயுமே

(திருவாய்மொழி 3.3.8)

என்கிறார் நம்மாழ்வார். கோவர்த்தனகிரி நினைத்ததாம்... 'கிருஷ்ணா வதாரத்தில் சின்னக் குழந்தையான பரமாத்மா நம்மை ஏழு நாட்கள் தூக்கிக்கொண்டானே! இந்தக் குழந்தைக்கு என்ன பிரதியுபகாரம் பண்ணமுடியும்?! அடுத்த ஜென்மத்தில் ஏழு மலைகளாக மாறி, அவனைத் தாங்கவேண்டும்!’ என்று. ஒரு கல்லுக்கு பகவானிடத்தில் எத்தனை விசேஷமான அன்பு! நமக்கு மனம், சரீரம், ஞானம் எல்லாம் கொடுத்திருக் கிறான். இவற்றையெல்லாம் பகவத் அர்ப்பணம் பண்ணவேண்டாமா!

நினைத்ததை நடத்தி வைப்பாய் கோவிந்தா!

அவதார புருஷனைத் தாங்கி நிற்கும் திருவேங்கட மலையின் சிறப்பை 'வேங்கட வெற்பென விளங்கும் வேதவெற்பே’ (அதிகார சங்கிரகம் 43) என்று ஸ்வாமி தேசிகன் புகழ்கிறார். 'வெற்பு’ என்றால் மலை. வேதத்தின் ஏழு காண்டங்களே ஏழு மலைகளாக மாறி, பகவானைத் தாங்குகின்றன. வேதத்தில் போற்றப்படும் எம்பெருமான்தான் இந்த மலைமேல் இருக் கிறான். வேதம் எப்படி பரமாத்மாவை உயர்த்திக் காண்பிக்கிறதோ, அதே மாதிரி இந்த ஏழு மலைகளும் பகவானை மேலே தூக்கிக் காட்டுகின்றன.

'குளிரருவி வேங்கடத்தென் கோவிந்தன் குணம்பாடி’ (நாச்சியார் திருமொழி 8.3) என்கிறாள் ஆண்டாள். தெளிந்த பெரும் தீர்த்தங்கள் செறிந்த வேங்கட மலையில் ஜனங்கள் எல்லோரும் 'கோவிந்தா கோவிந்தா’ என்று பாடிக்கொண்டு போகும் அழகை நினைத்தாலே ஆனந்தம்; திருவேங்கட யாத்திரையை சிந்தனை செய்வதே பரமானந்தத்தைத் தரும்.

'மாண்டு பிறப்பொழிந்து வைகுண்டம் புக்கவரும் மீண்டு தொழ காதலிக் கும் வேங்கடமே’ என்று மோட்சம் போனவர்களும், அங்கிருந்து கீழே பூலோகத்தில் மக்கள் திருவேங்கட யாத்திரை போவதைப் பார்த்து, 'ஒரு முறை மறுபடியும் பூலோகத்தில் வந்து பிறந்து திருவேங்கட யாத்திரை போகவேண்டும்’ என்று நினைக்கிறார்களாம். அவர்களுக்கே இந்த ஆனந்தம் என்றால், சாமான்யர்களான நம் விஷயத்தில் என்ன சொல்வது?

'தோசை கண்டேன்; வடை கண்டேன்; புளியோதரையும் கண்டேன்; கம்பத்தின் மேல் துடைக்கவும் கண்டேன்’ என்று திருப்பதியில் ஏழுமலை யானின் திவ்ய தரிசனத்துக்காக வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள், பிரசாதம் சாப்பிட்டுவிட்டு, கம்பத்தின்மேல் துடைக்கிறார்கள். கம்பத்துக்கு பகவத் சேஷமும், பாகவத சேஷமும் கிடைக்கிறது. திருமலையில் இருக்கும் அசித் பொருளுக்குக்கூட இத்தகைய பாக்கியம் கிடைப்பதால், 'படியாய் கிடப்பேனே, உன் திருமலை மேல் ஏதேனும் ஆவேனே’ (பெருமாள் திருமொழி) என்கிறார் குலசேகர ஆழ்வார். திருமலைமேல் கர்ப்பக் கிரஹத்தில் இருக்கும் படிக்கு குலசேகரன் படி என்றே பெயர்.

நினைத்ததை நடத்தி வைப்பாய் கோவிந்தா!

வேங்கடமலையின் மேல் இருப்பவனே எல்லா அவதாரங்களையும் எடுத்தவன் என்பதை ஆழ்வார்களது அமுத மொழிகளில் காணலாம்.

'வேங்கடமே! மேலொருநாள் மண் கோட்டுக்கொண்டான் மலை’ (மூன்றாம் திருவந்தாதி, 45) - ஸ்வேத வராஹ அவதாரம் எடுத்து, பூமியைத் தன் கோரப்பல்லினால் மேலே கொண்டுவந்த வராஹ மூர்த்தியின் உறைவிடம் வேங்கடமே என்கிறார் பேயாழ்வார்.

அவரே, 'வேங்கடமே! மேலொருநாள் மண்மதியில் கொண்டுகந்தான் வாழ்வு’ (மூன்றான் திருவந்தாதி, 58) - மஹாபலி சக்ரவர்த்தியிடம் இருந்து மூன்றடி மண்ணை யாசித்து, ஓங்கி உலகளந்த உத்தமனான திரிவிக்ரமன் வாழும் மலை வேங்கடம் என்றும் போற்றுகிறார்.

பொய்கையாழ்வார் என்ன சொல்கிறார் தெரியுமா?

'வேங்கடமே! மேலசுரர் கோன் வீழக் கண்டு உகந்தான் குன்று’ (முதல் திருவந்தாதி 40) - அசுரத் தலைவனாகிய ஹிரண்யகசிபுவைக் கொன்று, 'பக்தனாகிய ப்ரஹலாதனின் விரோதி முடிந்தான்’ என்று மகிழ்ந்த நரஸிம்ம மூர்த்தியின் மலை வேங்கடமே என்கிறார்.

அத்துடன், 'வேங்கடமே! மேலொரு நாள் மான்மாய எய்தான் வரை’ (முதல் திருவந்தாதி 82) -  மாரீசன் என்கிற மாய மானைக் கொன்ற கோதண்டராமன் சென்றடைந்த மலை வேங்கடம் என்கிறார். அதுமட்டுமா? 'வேங்கடமே! வெண்சங்கம் ஊதிய வாய் மால் உகந்த ஊர்’ (முதல் திருவந்தாதி 37) - மகாபாரதப் போரில் பாஞ்ஜ சன்யத்தை எடுத்து ஊதிய கீதாசார்யனான பார்த்தசாரதி எழுந்தருளியுள்ள மலை திருவேங்கடம் என்கிறார் பொய்கையாழ்வார்.

நினைத்ததை நடத்தி வைப்பாய் கோவிந்தா!

திருவேங்கடமுடையானை 'கோவிந்தா’ என்று கூப்பிட்டால், அவனுக்குப் பரம சந்தோஷம். இந்த நாமம் பகவானின் எல்லா அவதாரங்களையும் குறிக்கும். கோவிந்த சப்தத்துக்கு பலவிதமாக வ்யாகரண சாஸ்திர ரீதியாகப் பொருள் சொல்லலாம்.

காம் என்றால் சொல். சொற்களால் (வேதத்தால்) ஆராதிக்கப் பட்டவன் பரமாத்மா. மத்ஸ்ய அவதாரம் செய்து வேதத்தை மீட்டான். அதனால், மத்ஸ்ய அவதாரத்துக்கு கோவிந்தா என்று பெயர். கோ என்றால் பர்வதம். பர்வதத்தை கூர்ம அவதாரம் செய்து தாங்கினான். அதனால் கோவிந்தன். கோ என்றால் பூமி. பூமியை வராஹ அவதாரம் செய்து தூக்கினான். எனவே, வராஹ அவதாரத்துக்கு கோவிந்தன் என்று பெயர்.

நினைத்ததை நடத்தி வைப்பாய் கோவிந்தா!

கோ என்றால் நல்ல வாக்கு. நரஸிம்மர், ஹிரண்யகசிபுவை அழித்த பிறகும் கோபமாக இருந்தபோது, தேவதைகள் அவனை

ஸ்தோத்ரம் பண்ணுகிறார்கள். பரமாத்மா அதை லட்சியம் செய்யவில்லை. அவர் அருகில் சென்று கோப சமனம் பண்ணும்படி மகாலட்சுமியைக் கேட்டுக்கொண்டார்கள். 'இவர் என் பர்த்தாவே இல்லை’ என்று சொல்லிவிட்டாள் தேவி. உடனே, பிரஹலாதனை அருகில் அனுப்பினார்கள்.

அப்போது, ''தேவதைகள் எல்லாம் ஸ்தோத்ரம் பண்ணியும் கோபம் தணியாத பரமாத்மாவை சாமான்யனான என்னால் மட்டும் எப்படிக் கோபம் தணிக்கமுடியும்?'' என்றானாம் பிரஹலாதன். 'ஸ்வபோதமிவ கேஸரீ’ என்று பெயர் பரமாத் மாவுக்கு. சிம்ஹம் மற்ற பிராணிகளை தீவிரமாகப் பார்க்கும்; ஆனால், தன் குட்டிகளை வாத்ஸல்யத்துடன் பார்க்கும். அப்படி, பகவான் பிரஹலாதனை காருண்யத்தோடு குளிரக் கடாக்ஷித்தார். ஆக, சமஸ்த தேவதைகளின் ஸ்தோத்திரத்துக்கு இலக்கான நருஸிம்மருக்கும் கோவிந்தன் என்று பெயர்.

கோ என்றால் பூமி; திருவடியால் பூமியை அளந்தான் பர மாத்மா. எனவே, வாமன அவதாரத்துக்கும் கோவிந்தன் என்று பெயர். தன் திருவடியினால் பூமியின் சஞ்சாரம் பண்ணினான் பரசுராமன். அவனுக்கும் கோவிந்தன் என்று பெயர்.

கோ என்றால் அஸ்த்ர சஸ்திரங்கள் என்று பொருள். விசுவா மித்திரர் அஸ்திரங்களையெல்லாம் ராமார்ப்பணம் செய்தார். விசுவாமித்திரரிடம் இருந்து எல்லா அஸ்திர சஸ்திரங்களையும் ராமன் அடைந்ததால், ராமனுக்கும் கோவிந்தன் என்று பெயர். பூமியைக் கலப்பையால் உழுததால், பலராமனுக்கும் கோவிந்தன் என்று பெயர். கோ என்றால் பசு; பசுக்களை மேய்த்தவன் கிருஷ்ணன். எனவே, அவனுக்கும் கோவிந்தன் என்று பெயர். கோ என்றால் வஜ்ராயுதம். இந்திரனுக்கு வஜ்ராயுதத்தைப் பெற்றுத் தந்ததால், பகவானுக்கு கோவிந்தன் என்று திருநாமம்.

நினைத்ததை நடத்தி வைப்பாய் கோவிந்தா!

திவ்ய மங்கள விக்ரஹத்துடன் திருவேங்கடமலையில் ஸ்ரீநிவாஸன் நம்மை ஆகர்ஷிக்கிறான். நாம் அவனை க்ரமமாகச் சென்று சேவிக்க வேண்டும். முதலில் திருச்சானூர் சென்று அலர்மேல் மங்கை தாயாரை சேவிக்கவேண்டும். அங்கே போய் மகாலட்சுமி ஸ்தோத்ரம் சொல்லக்கூடாது. நாராயண னின் ஸ்தோத்ரம் மொத்தமும் சொல்லவேண்டும்.

ஏனெனில், அவள் கேட்க விரும்புவது வல்லபனான பரமாத்மாவின் பெருமையையே. அவள் சந்தோஷப்பட்டு, நாம் மலை ஏறுவதற்குள் அவரைக் கூப்பிட்டு, ''இதோ, வேகமாக வந்துகொண்டிருக்கிறான் உங்கள் பக்தன். அவனுக்கு அநுக்ரஹம் செய்ய ஸித்தமாக இருங்கள்!'' என்று சொல்லிவிடுவாள்.

நாமும் திருமலைக்குச் சென்று புஷ்கரணியில் குளித்து, முதலில் வராஹ மூர்த்தியைத் தரிசித்துவிட்டு, பிறகு ஸ்ரீநிவாஸன் சந்நிதிக்குள் போக வேண்டும். அவர், நாம் வருகிறோமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பார். மகாலட்சுமிதான் ஏற்கெனவே சொல்லி விட்டாள் அல்லவா! ஆகவே, நம்மிடத்தில் காருண்யம் அவருக்கு. அங்கே போய் மகாலட்சுமியைப் பற்றி ஸ்தோத்ரம் பண்ணவேண்டும். அவர் கேட்க விரும்புவது இவள் பெருமையை! இவருடைய பெருமையை அவளிடத்திலும் அவளுடைய பெருமையை இவரிடத்திலும் சொல்வது அதிவிசேஷம். இதனால் என்ன பலன் தெரியுமா?

மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம்
யத் க்ருபா தம் அஹம் வந்தே பரமானந்த மாதவம்
கூன் கொண்டு சென்றவன் கூன் நிமிர்ந்து ஓட
குருடன் கொம்பில் தேன் என்று காட்ட
முடவன் அத்தேனை எடுக்க
அயல் தான் நின்ற அந்தணன் 'என’க்கென கேட்க
தருவன் வான்நின்ற சோலை வடமலை மேல்நின்ற மாதவனே!

பேச முடியாத ஊமை, வார்த்தைகளினால் ஜாலம் பண்ணுவான்; நடக்க முடியாதவன் பெரிய மலையையே ஏறுவான்; குருடன் பார்வை கிடைத்து மகிழ்வான். இவையெல்லாம் திருமலைமேல் நின்றுகொண்டிருக்கும் மாதவனின் கிருபையினால் சாத்தியமாகும்.

தொகுப்பு: மாலா ஸ்ரீநிவாஸன்