மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சித்தம்... சிவம்... சாகசம்! - 3

சித்தம்... சிவம்... சாகசம்! - 3

சித்தம்... சிவம்... சாகசம்! - 3
சித்தம்... சிவம்... சாகசம்! - 3

கந்துக மதக்கரியை வசமாய் நடத்தலாம்
கரடி வெம்புலி வாயையும்
கட்டலாம்; ஒரு சிங்கம் முதுகின் மேற்கொள்ளலாம்
கட்செவி எடுத்தாட்டலாம்
வெந்தழலின் இரதம் வைத்து ஐந்து உலோகத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம்
வேறொருவர் காணாது உலகத்து உலவலாம்
விண்ணவரை ஏவல் கொள்ளலாம்
சந்ததமும் இளமையோடு இருக்கலாம்
மற்றொரு சரீரத்தினுள் புகுதலாம்
சலமேல் நடக்கலாம்; கனல்மேல் கிடக்கலாம்
தன்னிகரில்லா சித்தி பெறலாம்
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற
திறமரிது! சத்தாகி என்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
தேஜோ மயானந்தமே!’

- தாயுமானவர்

சித்தனாய் வந்த சிவபெருமானின் முதல் சாகசம் மதுரையம்பதியில்தான் நடந்தது. இதனை வரலாறும் திருவிளையாடற் புராண நூலில் அழகாய் பதிவு செய்துள்ளது. முன்னதாக, சில சிந்தனைப் பகிர்வும் இவ்வேளையில் அவசியமாகிறது.

மதுரை திருவிளையாடலுக்குப் பேர் பெற்ற நகரம். ஒன்றல்ல இரண்டல்ல... 64 திருவிளையாடல்களை இந்த மண்ணில் நிகழ்த்தினார் சிவபெருமான்.

மனித வாழ்வில் வெற்றி- தோல்வி அறிமுகமாவது விளையாட்டுகளில்தான். கூர்ந்து கவனித்தால்... அதனுள் ஒரு நுட்பமான உண்மை ஒளிந்திருக்கும். விளையாட்டில் நாம் அடையும் வெற்றியோ தோல்வியோ நிலையானதல்ல. அது மாறிமாறி வரும். எனவே, வெற்றி பெற்றவரின் சந்தோஷமும் சரி, தோல்வியுற்றவரின் துன்பமும் சரி... தற்காலிகமான ஒன்றே!

இதனால் கர்வப்படுவது என்பதோ, சோர்ந்துவிடுவது என்பதோ ஏற்படுவது இல்லை. விளையாட்டில் ஏற்படும் இந்த அனுபவமே, வாழ்வில் ஏற்படும் இன்ப- துன்பங்களையும் 'இதுவும் நிலையானது அல்ல; மாறிவிடும்’ என்று எடுத்துக்கொண்டு நிதானமாய் மனிதர்களை நடக்கவைக் கிறது. மனித வாழ்வின் சாதாரண விளை யாட்டுக்கே, இப்படி மனித மனங்களை ஆற்றுப்படுத்தும் ஆற்றல் இருக்கும்போது, மொத்த மனித உயிர்களையும் ஆற்றுப் படுத்த எண்ணும் இறைவனின் விளையாட லில் எத்தனை மேன்மை இருக்கும்? அத னாலேயே அவனது விளையாட்டை 'திரு விளையாடல்’ என்கிறோம். அதில் ஒரு விளையாட்டை அவன் சித்தனாக வந்து செய்ததில்தான், நாம் சிந்திக்க நிறையவே உள்ளது.

சிவபெருமான் சித்தனாக வரும்முன் மதுரையில் எவ்வளவோ அருட்செயல்கள் நடந்துள்ளன. அருளாளர்களும் முனிவர் களும் ரிஷிகளும் அந்த நகரில் வலம் வந்துள்ளனர். உலகிலேயே மானுடர்களின் மொழிக்கென்று இலக்கணம் வகுக்கப்பட்டு, சங்கம் அமைக்கப்பட்டதெல்லாமும் மதுரையில்தான். இப்படிப்பட்ட மதுரையில் எவ்வளவோ சாகசங்களும் நடந்துள் ளன. அவற்றை அருள்மாயம் என்றும், இறை மாயம் என்றும்தான் கூறினர்.

ஆனால், ஆய கலைகள் அறுபத்துநான்கில் சித்துக்கு விளக்கமோ உதாரணமோ இல் லாதிருந்தது. அதற்கு உதாரணமாகவும் விளக்கமாகவும் இருக்க விரும்பியே முதல் சித்தனாக வந்தார் சிவபெருமான்.

அப்போது, அபிஷேக பாண்டியனின் ஆட்சி மதுரையில் நடைபெற்றுக்கொண்டு இருந்தது. எல்லாச் செல்வங்களும் இருந்தும், அபிஷேக பாண்டியனுக்குப் பிள்ளைச் செல்வம் மட்டும் இல்லை. அதைக் கோரி, திருச்சந்நிதியில் அவன் உருகாத நாளுமில்லை. அதற்கு அருள் புரியவே சிவபெருமானும் சித்த உருக்கொண்டு வந்தார். இதை இப்படியும் கூறலாம்... 'இனி வரும் நாட்களில் முனிவர்கள் ரிஷிகள் நடமாடிடும் சாத்தியம் குறைவு. அருளாளர் என்போர் சித்த வடிவம் கொண்டே வருவர். உலகம் உய்ய தங்கள் வாக்காலும் வாழ்வாலுமே பதில் தருவர்’ என்பதுதான் சிவபெருமான் சித்தனாய் வந்ததன் அடிப்படை நோக்கம்.

அப்படி வந்த நிலையில், சித்த சாகசங்கள் எப்படி இருக்கும் என்று உலகத்தவர் தெரிந்துகொள்ள வேண்டாமா? சாகசம் ஆரம்பமாயிற்று. சாகசம் புரியும் முன், தோற்றத்திலும் ஒரு மாற்றம்!

அதாவது, பார்த்ததும் பரவசப்படுத்தும் எழில் தோற்றம். நெற்றியில் மட்டும் வெகு திருத்தமாய் இட்டுக்கொண்ட விபூதியும், நடுவில் தீச்சுடர் போல் குங்குமமும் பளிச்சிட்டன. தெருவில் நடந்து செல்கையில் ஜவ்வாது வாசம் அலை அலையாய்ப் பரவிற்று. பார்த்தவர் பார்த்தபடியே இருக்க... பலர் தங்களை மறந்து அவர் பின்னால் சென்றனர். மெய்ம்மறப்பது என்பதை, அவர் ஒரு வலம் வந்து ஊராருக்கு நிகழ்த்திக் காட்டிவிட்டு, அவ்வாறு மெய்ம்மறந்தோரைப் பார்த்துச் சிரித்தபோது... கொடியில் பூத்திருந்த மலர்கள் எல்லாமும்கூட உதிர்ந்து சிலிர்த்துப் போயின.

மிகுந்த பிரயாசைக்குப் பின், சிலர் அந்த சிவச் சித்தனை நெருங்கி, 'யார் நீ?' என்று கேட்டனர். 'பார்த்தால் தெரியவில்லையா... உங்களைப் போல் ஒரு மனிதன்.'

'இல்லை. நீ ஒரு மாயன்!'

'இதுவும் என் பெயரில் ஒன்றுதான்.'

'உனது ஊர்?'

'அது மிக உயரமான இடத்தில் உள்ளது.'

'ஊருக்குப் பெயர் எதுவும் கிடையாதா?'

'கயிலாயம் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.'

'நம்பமுடியவில்லை.'

''என்ன செய்தால் நம்புவீர்கள்?'

''எங்கே... விண்ணில் பறந்து காட்டு!'

உடனேயே பறந்தும் மிதந்தும் காட்டிவிட்டுச் சிரித்தார் சிவச்சித்தன்.

'இது ஏதோ மாயம்...' என்றனர் அவர்கள்.

'இது மாயமில்லை; சித்தம் தெளிந்தால் நீங்களும் வானேறலாம்; பொதிபோல் மிதக்கலாம். அவ்வளவு ஏன்... நீர் மேல் நடக்கலாம்; நெருப்பிலும் கிடக்கலாம்...'

'சித்தம் தெளிந்தால் என்றால்?'

'போகப் போக அறிவீர்கள்...'

'உம்மால் இன்னும் என்னவெல்லாம் மாயம் செய்ய ஏலும்?'

'அதோ தெரிகிறதே குன்று... அதை அந்தப் பக்கத்தில் இருந்து இந்தப் பக்கமாய் தள்ளி வைக்கமுடியும். அதோ மிதக்கின்றனவே மேகங்கள்... அவற்றை அருகில் அழைத்து மழை பெய்விக்க முடியும்...'

'நிஜமாகவா?'

'ஐயம் எதற்கு... இப்போதே பாருங்கள்...'

சித்தம்... சிவம்... சாகசம்! - 3

சிவச்சித்தனின் சாகசம் தொடர்ந்தது. மலை இடம் மாறியது; மேகங்கள் அருகே வந்து நீரைப் பொழிந்தன. மொத்த மதுரையம்பதியே உறைந்து போனது. அந்தச் செய்தி மன்னன் அபிஷேக பாண்டியனையும் அடைந்தது. 'யார் அந்தச் சிவச் சித்தன்..? இதுவரை கேள்விப்பட் டிராத இனத்தவன். அவனை உடனே அழைத்து வாருங்கள்!' என்று ஆணையிட்டான். ஆனால், அழைக்கச் சென்றவர்கள் பாவம், பாடாய்ப்பட்டுத் திரும்பி வந்தனர்.

'அரசே! ஒன்றை அறிய ஒருவர் விரும்புகிறார் என்றால், அவர் மாணாக்கர். அறிவுறுத்த வேண்டிய வர் குருநாதர். குருவைத் தேடி மாணாக்கன்தான் வரவேண்டும்; குருவல்ல!' என்று சிவச் சித்தன் கூறிவிட்டதாகச் சொல்லினர்.

அபிஷேக பாண்டியன், தன் கட்டளைக்குக் கீழ்ப்படியாத ஒருவரைத் தனது வாழ்வில் முதல்முறையாகக் காண்கிறான். அது மட்டுமா? அவனது ராஜ கர்வமும் புழுக்கத்துக்கு உள்ளானது. அன்று ஆலயத்தினுள் தரிசனம் செய்தபோதும் அதன் நிரடல்!

'இறைவா... மன்னவன் என்னையே ஒரு மாயாவி வருத்தம்கொள்ளச் செய்துவிட்டான். எனக்கு இது இழிவா, இல்லை விடிவா என்று தெரியவில்லை' என்று புலம்பிவிட்டு, கோயில் பிராகாரத்தை வலம் வரத் தொடங்கினான்.

என்ன ஆச்சரியம்... எதிரிலேயே அந்த சிவச் சித்தன். மன்னனின் உடனிருந்தோர், 'அரசே... இவனேதான் தங்களுக்குப் பணிய மறுத்த சித்தன்' என்றனர்.

அபிஷேக பாண்டியனும் மாறாப் புழுக்கத் துடன் சித்தரை ஏறிட்டான். ஆனால், அவரைப் பார்த்த மாத்திரத்தில், மனத்தில் ஒரு பரவசம். சிவச்சித்தனிடமும் ஒரு புன்னகை. மன்னன் சார்பாக மந்திரிப்பிரதானியர் பேசினர்.

'நீர்தான் மதுரையம்பதியையே மயக்கித் திரியும் சித்தனோ?'

'நான் சித்தன் மட்டுமல்ல... பித்தன், எத்தன், முத்தன் என்று எனக்குப் பல பெயர்கள்...''

''அடக்கத்தோடு பேசு! உன் எதிரில் இருப்ப வர் இந்த நாட்டு மன்னர்...''

''அதனாலென்ன... மூப்பும் திரையும் வரும் போது முடிந்து போகப்போகிறவர்தானே?’

''நீ மட்டும் என்ன... வாழ்வாங்கு வாழ முடிந் தவனோ?''

''அதிலென்ன சந்தேகம்? சித்தன் என்றாலே வாழ்வாங்கு வாழ முடிந்தவன் என்றும் பொருள்

உண்டே..!''

''சித்தன்... பெரிய சித்தன்... எங்கே உன் ஆற்றலை அரசர் முன் காட்டு, பார்ப்போம்...''

''அதனால் எனக்கு ஆவது ஒன்றுமில்லை. அடுத்து, எதைச் செய்தும் உங்களை நான் அடக்கத் தேவையும் இல்லை.''

''இது, அதிகப் பிரசங்கம். இப் போதே கைது செய்து சிறையில் அடைக்கவா?''

''முடிந்தால் செய்யுங்கள்...''

அந்தப் பதிலைத் தொடர்ந்து, வீரர்கள் அந்தச் சித்தரைக் கைது செய்ய முயன்றனர். ஆனால் சிவச்சித்தன், 'நில்லுங்கள்’ என்று சொன்ன மாத்திரத்தில் கல்லாய்ச் சமைந்து நின்று விட்டனர். அருகிலேயே ஆலய கோபுரத்தைத் தாங்கி நிற்கும் இந்திரன் தோட்டத்து யானைகளில் ஒன்றாய் ஒரு கல் யானை. அதைச் சிவச்சித்தன் பார்க்கவும், அதற்கு உயிர் வந்தது. தும்பிக்கையை விசைத்து அசைத்த அதற்கு, அந்தரத்தில் இருந்து கரும்பை வரவழைத்து நீட்டினார் சிவச்சித்தன். அதையும் அது உண்டது.

நடந்ததை எல்லாம் பார்த்து, மன்னன் அபிஷேக பாண்டியன் விக்கித்துப் போனான். இருந்தும், தனக்கு எதிரில் தெரிவது நிஜமான யானையா அல்லது பொய்த் தோற்றமா என்று அறிய விரும்பி, அதன் முன் சென்று பார்த்தபோது... அந்த யானை மன்னனின் கழுத்து முத்துமாலையைப் பறித்து அதையும் கரும்புபோல் கருதி விழுங்கிவிட்டது.

அபிஷேக பாண்டியனும் அரச கர்வத்தை விலக்கி, 'அன்பரே... யார் நீவிர்? எதை உணர்த்த இந்தச் சாகசங்கள்?’ என்று கேட்ட நொடியில், அந்தச் சிவச்சித்தனும் சொக்கலிங்கநாதர் சந்நிதியில் புகுந்து மறைந்து, 'வந்தது நானே...’ என்பதை உணர்த்தினார். அப்படியே பாண்டிய மன்னனுக்குப் பிள்ளை வரமும் அளித்தார்.

முதல் சித்தராய் வந்து சாகசம் புரிந்த ஈசன் அபிஷேக பாண்டியனுக்கு உணர்த்திய செய்தி என்ன? 'தன் கருணையானது சித்த வடிவிலும் இனி வெளிப்படும். அதே வேளையில், சித்தத்தை வென்றுவிட்டாலோ, நான் புரிந்ததைப் போன்ற சாகசங்களை எல்லோராலும் புரிய முடியும்’ என்பதுதான் அந்தச் செய்தி.

இது போதாதென்று, மதுரைக்கு அருகே உள்ள திருப்பூவனத்திலும் சிவபெருமான் சித்து வேலை புரிய முன்வந்தார். மதுரைக்குத் தென்கிழக்கில் இருக்கிறது இந்தத் திருப்பூவனம். வைகை பாயும் திருத்தலம். வைகைக்கு இங்கே காசிக்கு உண்டான குணம்! அதே நேரம், உயிர் நீத்தவர்களுக்கான இறுதிச் சடங்கு இங்கே நடப்பதும், இந்த ஆலயத்தில் மோட்ச விளக்கு ஏற்றுவதும் ஐதீகம்.

இந்த ஆலயத்தில் ஒரு தேவதாசி இருந்தாள். 'பொன்னாச்சி’ என்பது அவள் பெயர். இறைவனுக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களே தேவதாசிகள். ஆடல்- பாடல் எனும் கலை மூலமாக இறைவனைத் தொழுவார்கள். வேத மந்திரங்களாலான வழிபாட்டு முறை போலவே ஆடல்- பாடல் கொண்ட வழிபாட்டு முறையும் அன்று வழக்கில் இருந்தது. கர்ப்பக்கிரகத்தினுள் சிலா ரூபத்தைத் தொட்டு பூஜிக்கும் உரிமையும் அவர்களுக்கு இருந்தது. அதனால் ஊரே அவர்களை பயபக்தியுடனும் மரியாதையுடனும் பார்த்து, அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடந்தது.

ஒரு நீதிபதியைப் போலவும் இவர்கள் திகழ்ந் தனர். பொன்னாச்சியும் திருப்பூவனநாதர் சந்நிதி தேவதாசியாய்- திருப்பூவனத்து நீதி தேவதையாய்த் திகழ்ந்தாள். இவளுக்குள் ஒரு மேலான ஆசையும் இருந்தது. திருப்பூவனம் கோயில் திருச்சந்நிதிக்குள் கல் வடிவத்தில் உள்ள உத்ஸவ மூர்த்தியை அசல் பொன்னில் செய்து ஆலயத்தில் வைத்து பூஜிக்க வேண்டும் என்பதே அவளது விருப்பம்!

அவள் எங்கே விரும்பினாள்? அவனல்லவா அவளுக்குள் புகுந்து அப்படி விரும்பச் செய்தான்! அப்படி அவள் விரும்பினால்தானே, ஒரு சித்தன் மனது வைத்தால் செப்பைக் கூடப் பொன்னாக்க முடியும் என்பதை இந்த உலகத்துக்கும் உணர்த்த முடியும்?

அந்த ரசவாத சாகசம் அடுத்த இதழில்...

- சிலிர்ப்போம்...