நவராத்திரி ஸ்பெஷல்!
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
##~##
ரே
வதி நட்சத்திரத்தின் தேவதை பூஷா. உடல் வலிமையைப்  பேணுதல், கால்நடைகளைப் பராமரித்து உதவுதல், தேவர்களுக்கு சுத்தமான உணவை தந்து உதவுதல் போன்றவற்றை நடைமுறைப்படுத்தி, நம் வாழ்வில் நம்பிக்கையை அளிப்பவர்கள் ரேவதி நட்சத்திரமும் அதனுடன் இணைந்த பூஷா தேவதையும் என்று அதன் பெருமையை வெளிப்படுத்துகிறது வேதம்.

'வேள்வியில் அளிக்கும் உணவை ஏற்று, எங்களுக்கு உணவுப் பற்றாக்குறை இல்லாமல் வாழ்வில் நிறைவை எட்ட அருள வேண்டும்’ என்ற வேண்டுதல் வேதத்தில் உண்டு (பூஷாரேவத்யந்வேதிபந்தாம்...). 'பூஷா எனும் தேவதை பசுக்களைக் காப்பாற்றி, நெல், கோதுமை போன்ற உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் அளித்தருள வேண்டும்’ எனும் வேண்டுகோளும் வேதத்தில் உண்டு (க்‌ஷுத்ரான்பசூன்ரக்ஷது...).

உழுது பயிரிட்டு பயிர் பெருக்கும் பணியில் கால்நடைகளின் பங்கும் உண்டு. இரண்டு கால் பிராணியான உழவனையும், நான்கு கால் பிராணியான பசுக்களையும் இணைத்து வாழ்த்துகிறது வேதம் (சம்னோபவத்விபதெசம்சதுஷ்பதெ).

விஞ்ஞான வளர்ச்சியில் மாற்று வழிகளைக் கையாண்டு வளம் பெற வழி இருந்தாலும்... உழவனின் உழைப்பும் கால்நடைகளின் ஒத்துழைப்புமாக இருவரது வாழ்க்கையிலும் நட்போடு இணைந்த பெருமிதமும், உயிரினங்களுடன் இணைந்து வாழும் பாங்கை இருவரிடமும் ஊட்டும் தனிச்சிறப்பும் அதில் தென்படாது. செயற்கையான நடைமுறைகள் செயலற்று போகும் தருணத்தில் கைகொடுப்பது கால்நடைகள் என்பதில் சந்தேகம் இல்லை. இயற்கை வளங்களைப் பெருக்கும் விஷயத்தில், ரேவதியுடன் இணைந்த பூஷா நமக்கு அருள்வார் என்கிறது வேதம். பிறந்தவன் முதலில் பசியைச் சந்திக்கிறான். அதை அகற்ற உணவை அளிப்பவை கால்நடைகள். அவற்றின் செழிப்பை உறுதி செய்ய பூஷாவின் அருள் வேண்டும்.

மீன ராசியில் பரவியிருக்கும் நட்சத்திரம் இது. அதன் அதிபதி குரு. ஆனாலும் 4 பாதங்களில் குருவோடும் சனியோடும் இணைந்து, நாகரீகத்தையும் உழைப்பையும் தந்து, மனிதனின் அடிப்படை தகுதியை நிறைவு செய்யும் பெருமை இந்த நட்சத்திரத்துக்கு உண்டு. இதில் பிறந்தவர்கள் முதலில் சந்திப்பது புதன் தசை; 17 வருடங்கள் நீண்டு இருக்கும். ஆயில்யம் மற்றும் கேட்டைக்கும் இது பொருந்தும். 'பிறந்த குழந்தையின் உடல் வளர்ச்சியுடன் உள்ளத்தின் வளர்ச்சிக்கும் ஊக்கம் அளிக்கும், பிறந்ததும் தொடரும் புதன் தசை’ என்கிறது ஜோதிடம். உள்ள வளர்ச்சியின்மையால் ஏற்படும் ஊனம் இவர்களில் இருக்காது என்றும் சொல்கிறது. இளமையிலும் முதுமையிலும் நிறைவை எட்ட சிறுமையில் ஏற்பட்ட உள்ளத்தின் வளர்ச்சி உதவும். அதன்பிறகு தென்படும் கேது, சுக்கிரன், சூரியன், சந்திரன் ஆகியோரது தசைகள் படிப்படியாக அறிவு, செல்வத்தில் நிறைவை காணச் செய்து, பிறப்பின் இலக்கை எட்டவைக்கும்.

ரேவதியின் கடைசி பாதமும், அஸ்வினியின் முதல் பாதமும் இணையும் இடைவெளியை, 'கண்டாந்தம்’ என்கிறது ஜோதிடம். அஸ்வினி முதல் ஆயில்யம் வரையிலான 9 நட்சத்திரங்களும் மேஷம் முதல் கடகம் வரையிலான 4 ராசிகளில் அடங்கிவிடும். அதுபோன்று, மகம் முதல் கேட்டை வரையிலான 9 நட்சத்திரங்கள் சிம்மம் முதல் விருச்சிகம் வரையிலான 4 ராசிகளில் அடங்கிவிடும். மூலம் முதல் ரேவதி வரையிலான 9 நட்சத்திரங்கள், தனுசு முதல் மீனம் வரையிலான 4 ராசிகளில் அடங்கி விடும். ஆக, ஒன்பது நட்சத்திரங்கள் இணைந்த நான்கு ராசிகளின் மூன்று துண்டுகள் இணைந்து ராசிச் சக்கரமாக உருவெடுத்தது என்கிறது வேதம் (த்ரிநாபிசக்கரமஜரமனர்வம்). இவற்றில் இரண்டு துண்டுகளின் சந்திப்பு மூன்று உண்டு. ஆயில்யத்தின் கடைசி பாதமும், மகத்தின் முதல் பாதமும் சந்திக்கும் வேளை 'கண்டாந்தம்’. கேட்டையின் கடைசி பாதமும் மூலத்தின் முதல் பாதமும் சந்திக்கும் இடைவெளி 'கண்டாந்தம்’. இந்த மூன்று நட்சத்திர கண்டாந்தத்தில் பிறந்தவர்கள் இன்ப- துன்பத்தை சமமாக சுமப்பர் என்கிறது ஜோதிடம். ராவணன், ரேவதி

- அச்வினி கண்டாந்தத்தில் பிறந்தான் என்கிறது இதிகாசம். உயிருடன் இருக்கும் வரை ஆணவத்துடனும், புகழுடனும், இறுமாப்புட னும், அரசனாகவும், போகியாகவும் உலகத்தை அச்சுறுத்தியும் வாழ்ந்தான். தன்னை மாய்த்துக் கொள்ள தானே வழிவகுத்துக் கொண்டு தாய்-தந்தை குலத்தை அடியோடு அழித்து மடிந்தான். கண்டாந்தத்தில் பிறந்தவன் உயிரோடு இருக்கும் வரை, நான்குவித படைகளுடன் அரசனாக வாழ்வான். ஆயுள் முடியும் தருணத்தில்... அல்பாயுசாக இருந்தால், தன் இரு குலங்களையும் அழித்து, தானும் மடிவான் என்கிறது ஜோதிடம் (கண்டாந்த ஸம்பவோமர்த்ய: பித்ருமாத்ரு குலாந்தக: யதி ஜீவதிபூபால: கஜவாஜிஸமன்வித:).

கண்டாந்தத்தில் குழந்தை பிறந்தால், சாஸ்திரம் சொல்லும் பரிகாரத்தை நடைமுறைப் படுத்தினால் தோஷம் விலகும் என்கிறது சாந்தி ரத்னாகரம். 'கண்டாந்த சாந்தி’ என்ற தலைப்பில் அதன் விளக்கம் தரப்பட்டிருக்கிறது. பரிகாரம் முடிந்தால் தோஷம் தொடராது. பரிகாரத்துக்கு உட்படாத மூலம் முதல் பாதம், ஆயில்யம் 4-ஆம் பாத தோஷத்தை மிகைப்படுத்தி நடுங்க வைக்கும். இல்லாத தோஷங்களை ஏற்றி ஜோதிடத் தகவலின் முகத்தையே மாற்றி அமைத்துள்ளனர், பிற்பாடு வந்த சில ஜோதிடர் கள். அந்த தாக்கத்தில் இருந்து இன்றும் மக்கள் விடுபடவில்லை. ஒருவர் செய்யும் தவறு பலருக்குத் துன்பத்தை அளிக்கும் என்கிறது சாஸ்திரம் (ஏக: பாபாளிகுருதேபலம்புங்க்தேமஹாஜன:). சீதையை ராவணன் தூக்கிச் சென்றான். கொடுமைக்கு ஆளானது கடல். சேது அணை கட்டப்பட்டு அதன் சுதந்திரம் பறிக்கப்பட்டது.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

தினப் பொருத்தத்தில் 27-வது நட்சத்திரம் கூடாது என்று சொல்லும். 27-வது நட்சத்திரம் என்றால் 108-வது பாதம் என்று விளக்கம் அளிக்கும். அதாவது, அஸ்வினி நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவனுக்கு, ரேவதியின் கடைசி பாதம் (கண்டாந்த பாதம்) 108-வது பாதமாக வரும். ஆனால், அஸ்வினி 2-ஆம் பாதத்தில் பிறந்தால், அஸ்வினி முதல் பாதம் 108-வது பாதமாகும். அதை கவனிக்காமல், சகட்டுமேனிக்கு 2-வது நட்சத்திரத்தை ஒதுக்கச் சொல்லும் நடைமுறை வளர்ந்திருக்கிறது. பிற்பாடு வந்த ஜோதிடர்களின் விளையாட்டால் விளைந்த வினை.  மூன்று, ஐந்து, ஏழு ஆகிய நட்சத்திரங்களை தவிர்க்கச் சொல்லும். ஆனால் மூன்றாம் நட்சத்திரத்தில் முதல் பாதம், ஐந்தாம் நட்சத்திரத்தில் 4-ஆம் பாதம், ஏழாம் நட்சத்திரத்தின் 3-ஆம் பாதம் மட்டும் விலக்கினால் போதும். மற்ற பாதங்களில் தோஷம் இல்லை என்று விளக்கம் கூறும் வித்யாமாதவீயத்தின் குரலை காது கொடுத்துக் கேட்காதவர்கள் ஏராளமானோர் (ஆத்யம்சம் விபதித்யாஜ்யம் ப்ரத்யரேச சதுர்த்தகம் நைதனேசத்ருதீயாம்சம் சேஷா: ஸர்வேசுபாவஹா:)!

ஒட்டவைக்கும் பொருத்தம் மாஹேந்திரம், வெட்டி விடும் பொருத்தம் 7-ஆம் நட்சத்திரப் பொருத்தம். அந்த ஏழாவது நட்சத்திரத்துக்கு மாறுபட்ட இரு பொருத்தமும் உண்டு. 4-வது நட்சத்திரம் மாஹேந்திரம். 4-ல் இருந்து 4-வது நட்சத்திரம் 7. அதுவும் மாஹேந்திரம். இப்படி இருக்க கேள்வி எழுந்தது, 7-ல் எந்தப் பொருத்தத்தை தேர்ந்தெடுப்பது என்று. அதற்கு...  3-ஆம் பாதம் வெட்டி விடும்; மற்ற மூன்று பாதங்கள் ஒட்டவைக்கும் என்ற பதில் ஜோதிடத்தில் உண்டு. இதை கவனிக்காமல் தினப்

பொருத்தத்தை மக்களுக்கு சொல்லிவைத்து, அதை நடைமுறைப்படுத்தி சிக்கலில் தவிக்கும் திருமணங்கள் ஏராளம்.

பத்து பொருத்தங்களும் ஆழமாக ஆராயப் பட்டால், பல திருமணங்கள் எளிதில் நிறைவேறி விடும். பார்வை இல்லாத சிலர், யானையைத் தொட்டுப்பார்த்து விளக்கம் சொன்ன கதை உண்டு. காலைத் தொட்டவன், தூண் போல் யானை என்பான். வாலைத் தொட்டவன் கயிறு போல் யானை என்பான். இப்படி பலவிதமான விளக்கங்கள் இருக்கும். நாம் அப்படி செயல்படக் கூடாது. முழுமையான ஜோதிடத்தை எட்டிப்பார்த்து விளக்கம் அளித்தால் சமூகசேவையாக ஜோதிடம் உயர்வை அடையும். கசாப்புக் கடைக்காரன் அழைத்தால் ஆடு ஓடி வரும்; உணவளித்து உடம்பைத் தட்டிக்கொடுப்பவன் அழைத்தால் வராது. அப்படியும் சிலர் உண்டு!

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர் கள், ஊனம் இல்லாதவர்களாகவும், அன்புடன் பழகுபவர்களாகவும், சூரர்களாகவும், தூய்மையை ஏற்பவராகவும், செல்வந்தராகவும் தென்படுவர் என்கிறார் வராஹ மிஹிரர். எல்லா இன்பங்களையும் சுவைத்து மகிழ்வான், வள்ளலாகத் திகழ்வான், பயணத்தில் விருப்பம் இருக்கும், ஒழுக்கத்துடன் மிளிர்வான், மழலைச் செல்வங் களில் திளைப்பான், அறிஞனாகத் திகழ்வான் என்று மாறுபட்ட விளக்கம் அளிப்பார் பராசரர்.

32 தாரைகளை உள்ளடக்கியது ரேவதி நட்சத் திரம்; மென்மையான நட்சத்திரம். அன்றாட கடமைகள், திருமணம் போன்ற விசேஷங்கள், கதாகாலட்சேபம், கேளிக்கை- கலைகள், கல்வி, தொழில் கல்வி, பரோபகாரம், சமூக சேவை, சமூக நலப்பணிகள், உயிரினங்களுக்கு உதவும் செயல்பாடுகள், ஏழ்மையை அகற்றல், செல்வத்தை சீராகப் பகிர்ந்தளித்தல், உதவிகள், பரிந்துரைகள் மனிதாபிமானச் செயல்கள், இயற்கை வளத்தைப் பராமரித்தல் ஆகியவற்றில் ரேவதியின் இணைப்பு செழிப்பூட்டும்.

முதல் பாதத்தில் பிறந்தவன் அறிவாளியாகத் திகழ்வான். 2-வதில் பிறர் பொருளைக் கவர்வான். 3-வதில் ஈடுபட்ட செயலில் வெற்றி பெறுவான். 4-வதில் போரில் ஈடுபட்டு துயரத்தை ஏற்பான். சண்டைச் சச்சரவுகளில் கலந்துகொண்டு நேரத்தை வீணடிப்பான் என்று விளக்குகிறது பிரஹத்ஸம்ஹிதை. உடலில் மரு, முழை - போன்றவை தோன்றும், பெண்ணாசை அடங்காது, அழகும் தோற்றமும் பிறரை ஈர்க்கும், மனைவி- மக்களுடன் மகிழ்ந்திருப்பான் என்கிறது ஜாதகபாரிஜாதம்.

கால புருஷனின் பாதத்தைக் குறிக்கும் மீனராசி. அதன் வலிமை, செயல்பாடு ஆகியவற்றை இந்த நட்சத்திரம் வரையறுக்கும். முதல் பாதத்தில் பிறந்தவன் கெட்டிக்காரனாகவும், சண்டைச் சச்சரவில் இருந்து விலகுபவனாகவும், பண்டிதனாகவும் திகழ்வான். 2-வதில் பிறர் பொருளைக் களவாடுவான், இரக்கம் அற்றவனாக இருப்பான், தான் எதிலும் ஏமாற மாட்டான், பிறரை ஏமாற்றுவான். 3-வதில் கள்ளம்- கபடம் இருக்கும், கொடும் செயலில் விருப்பம் இருக்கும், ஏழ்மையைத் தழுவுவான். 4-வதில் குலத்தை அழிப்பான், எதிரிகளை வீழ்த்துவான், ஆனாலும் உண்மை உரைப்பான், வீரனாகவும் சூரனாகவும் இருப்பான் என்று பலன் சொல்கிறது பலசார சமுச்சயம்.

பும் பூஷ்ணெ நம: என்று சொல்லி 16 உபசாரங்களைச் செய்யலாம். 'பூஷா ரேவத்யன்வேதி’ என்ற மந்திரம் சொல்லி வழிபடலாம். 'பூஷ்ணே ஸ்வாஹா ரேவத்யை ஸ்வாஹா’ - என்று சொல்லி 12 தடவை தண்டனிட்டு வணங்கி வழிபடலாம். தற்காப்பு வேண்டும் என்ற எண்ணமிருந்தால், 'க்ஷ§த்ரான் பஸ¨ந்ரக்ஷது’ என்ற மந்திரத்தை ஓதி புஷ்பாஞ்சலி செய்யலாம். 'ரேவதி நஷத்திர தேவதாயை பூஷ்ணே நம:’ என்று 108 தடவை உச்சரித்து வணங்கலாம். மந்திரம் தெரியாதவர்கள். 'பூஷாரோக்யம்ப்ரயச்சது தாரித்ர்யம் மெவ்யபோஹது. ஆனந்தம் ஆத்மன: துஷ்டிம் ப்ரயச்சது ப்ரஸன்னதீ:’ என்ற செய்யுளைச் சொல்லி வழிபடலாம்.

காலையில் எழுந்து மற்ற அலுவல்களில் இருந்து விலகி மனதில் பூஷாவை இருத்தி ஒரு தடவை செய்யுளைச் சொன்னா லும் போதும். மனம் இணைந்து வழிபட வேண்டும். விருப்பங்கள் நிறைவேறும். அழிவற்ற நட்சத்திரங்கள், நமக்கு அழிவில்லா செல்வத்தையும் மகிழ்ச்சி யையும் அளிக்கும்!

- வழிபடுவோம்