Published:Updated:

கேள்வி-பதில்

கேள்வி-பதில்

கேள்வி-பதில்

கேள்வி-பதில்

Published:Updated:
கேள்வி-பதில்
கேள்வி-பதில்

திருக்கோயில் ஒன்றில் அர்ச்சகராகப் பணிபுரிகிறேன். கோயிலுக்கு வரும் பக்தர்களில் என்னைவிட வயதில் மூத்த அன்பர்கள், என் கையால் அவர்களின் நெற்றியில் திருநீறு பூசிவிடச் சொல்கிறார்கள். அவ்வாறு செய்யலாமா? தங்களின் அறிவுரையை வேண்டுகிறேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகர்

##~##
அருட்பிரசாதத்தை அளிப்பது அர்ச்சகரின் பொறுப்பு. அதை நெற்றியில் இட்டுவிடுவது அவரது வேலை அல்ல. இறையுருவங்களின் வாய் பேசாது; கை அசையாது. அங்கு அர்ச்சகர் செயல்படுவது பொருந்தும்.

கையும் வாயும் பேசும் இடத்தில், அதை அவரவரே பராமரிப்பது சிறப்பு. பூத உடலுக்குக் கையும் வாயும் பேசாது. அந்த இடத்தில் மற்றவர்கள் செயல்பட வேண்டிய கட்டாயம். கைகள் இருப்பவர்கள் பக்தி சிரத்தையுடன் பிரசாதத்தைப் பெற்று நெற்றியில் வைத்துக்கொண்டு, அதை கௌரவிக்க வேண்டும். தெய்வ பிரசாதத்துக்கு நாம் அளிக்க வேண்டிய கௌரவத்தைப் பிறரிடம் ஒப்படைக்கக் கூடாது.

தூய்மையைப் பராமரிக்கவேண்டிய அர்ச்சகர்கள், அன்பர்கள் பலரது நெற்றியைத் தொட்டுச் செயல்பட்டு,  தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளாமல், மீண்டும் இறை வழிபாட்டில் இணைவது சிறப்பல்ல. டாக்டர்கள் ஒவ்வொரு நோயாளியையும் தொட்ட பிறகு தனது கையைத் தூய்மைப்படுத்திக் கொள்வார். தர்சனார்த்திகளில் சிலருக்குத் தொற்றிக் கொள்ளும் பிணி இருக்கலாம். பக்தர்கள் சேவைக்கும் எல்லை வேண்டும். மதத் தலைவர்களும் பெரியோர்களும் அருட்பிரசாதத்தைக் கையில் திணித்து அளிப்பதில்லை. புதுச் சிந்தனையாளர்களில், நெருக்கத்தைக் காட்டுவதற்காக அருட்பிரசாதத்தை வாயில் திணிப்பவர்களும் இருப்பார்கள்.

பண்டைய நாட்களில், பேருந்தின் நடத்துநர் பயணிகளின் இருக்கைக்கே சென்று பயணச் சீட்டு வழங்குவார். தற்போது, நடத்துநரின் இருக்கைக்குச் சென்று பயணச் சீட்டை பெறவேண்டிய கட்டாயம்! முதியவர்களும் முண்டியடித்துக்கொண்டு நடத்துநரிடம் ஓடி வருகிறார்கள். சேவை செய்ய வேண்டியவர்கள், அதை மறந்துவிட்டார்கள். வண்டியிலும் காரிலும் பயணம் செய்ய வரும் பயணிகளுக்கு, அதன் டிரைவர் உதவுவது வழக்கம். பெட்டி- படுக்கைகளை ஏற்றி இறக்குவதிலும் உதவி செய்வார்கள். தற்போது பெரும்பாலான ஓட்டுநர்கள் இருக்கையைவிட்டு இறங்காமல், எத்தனை தாமதமானலும் பொறுத்துக்கொண்டு இருக்கிறார்களே தவிர, உதவியில் இறங்குவதில்லை. உதவி செய்வது தங்களது பொறுப்பல்ல என்று நினைக்கிறார்கள்.

ஆக, ஒரு பக்கம் சேவை மனப்பாங்கு அற்றுப் போகிறது. மற்றொரு பக்கம் சேவை மனப்பாங்கு கடமையாக மாறுகிறது. விபரீதமாக உதவுவதை அர்ச்சகர் பொறுப்பாக மாற்றுகிறோம். பொதுச் சேவையில் ஈடுபடுபவர்கள் சட்ட திட்டத்தை மதிக்க ஆரம்பித்தால், சேவையின் தரம் சிறப்பாக இருக்கும்.

கேள்வி-பதில்

கர்ப்பிணிகள் கோயில் கருவறையை வலம் வந்து வணங்கலாமா?

- வேணி, ஓசூர்

திடீர் அதிர்ச்சியும், ஆச்சரியமும் கர்ப்பிணியின் மனத்தை பாதிக்கும். மனமானது குழந்தையிடமும் தன்னைக் குறித்தும் மாறி மாறிச் செயல்படும் தருணத்தில், குழந்தையின் மனத்திலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.

தேரோட்டத்தைப் பார்க்கக்கூடாது என்பார்கள். அசைந்து ஆடி வரும் தேரைப் பார்க்கும்போது... 'விழுந்துவிடுமோ? சாயுமோ?’ என்பன போன்ற எண்ணங்கள் மனத்தில் தோன்றினால், பயம் மனத்தைப் பற்றிக்கொள்ளும். அல்லது, ஆச்சரியமான காட்சியில் அளவுக்கு அதிகமாக மனம் விரிவடையும்போது, விரும்பத்தகாத பாதிப்புக்கு இடமளித்துவிடும். அளவுக்கு மீறிய துயரத்தையும் அவள் மனம் சந்திக்கக்கூடாது. இந்தக் கண்ணோட்டத்திலேயே 8 மாதம் தாண்டிய கர்ப்பிணிகள் வெளி வட்டாரங்களில் நிகழும் உத்ஸவங்களைத் தவிர்ப்பது உண்டு.

ஆறு மாதம் தாண்டிய கர்ப்பிணிகள் கோயிலுக்கு வந்து வலம் வருவதைத் தவிர்க்கலாம். அவளது சுகாதாரம், குழந்தையின் சுகாதாரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தவிர்க்க வேண்டும். நல்ல மன உறுதியும், அதிர்ச்சி, ஆச்சரியம், துயரம் ஆகியவற்றின் தாக்கத்தால் மாறுபடாத மனம் இருந்தாலும்கூட, வயிற்றில் இருக்கும் குழந்தையை மனத்தில் கொண்டு தவிர்க்கவேண்டும். ஆரம்பத்திலேயே குழந்தையை பாதிக்கும் விளைவுகளுக்கு மருத்துவம் பயனளிக்காது.

எங்கள் வீட்டில் முன்னோர் திதி நாளின்போது புது வேஷ்டி, சேலை வைத்து வழிபடுவோம். இந்தத் துணிகளை மற்றவர்களுக்குத் தானமாக தரலாமா?

- ரங்கசாமி, திருவெறும்பூர்

தானமாக வழங்கலாம். நம் முன்னோரை நினைத்து அளிக்கும்போது, அவர்களும் திருப்தி அடைவார்கள். முன்னோர் மறைந்த நாளில் அன்னதானம் பண்ணச் சொல்கிறது சாஸ்திரம். அத்துடன், வேஷ்டியை அளித்துப் பெருமைப்படுத்துவதையும் சாஸ்திரம் ஏற்கும்.

குளிரிலிருந்தும் குளிர் காற்றிலிருந்தும் உடலைப் பாதுகாக்கும் வேஷ்டி, நம் மானம் காக்கவும் உதவும்; உடலழகை அதிகப்படுத்தும் என்கிறது சாஸ்திரம். ஆண்- பெண் இரு சாராருக்கும் தேவைப்படும் ஒன்று உடை. உடுக்க உடை, குடிக்கக் கஞ்சி, இருக்க இடம் ஆகிய அத்தியாவசியமான மூன்றில் முதன்மையானதும் ஆடையே! அப்படி தானம் வழங்கும்போது, அதைப் பங்காளிகளுக்கு அளிக்காமல், வெளி நபர்களுக்கு அளிப்பது சிறப்பு.

உடை, உடல், சொல், அறிவு, அடக்கம் - இந்த ஐந்தும் நன்றாக இருந்தால், சுய கௌரவம் நிலைநிறுத்தப்படும் என்கிறது சாஸ்திரம் (வஸ்த்ரேண வபுஷா வாசா வித்யயா வினயேனச... நா: ஆயாதி கௌரவம்). ஆக, அன்று வேஷ்டி அளித்து அவர்களது கௌரவத்தைப் பாதுகாக்க நாம் உதவுவது பண்பு.

கேள்வி-பதில்

விநாயகரை துளசியால் அர்ச்சிக்கக்கூடாது என்கிறார் பெரியவர் ஒருவர். ஏன் அப்படி? துளசி நனைத்த நீர் கங்கைக்குச் சமானம் என்கின்றன புராணங்கள். எனில், புனிதமான துளசியை விநாயகர் பூஜையில் தவிர்ப்பது ஏன்?

- காவியா பாலநாதன், கள்ளிடைக்குறிச்சி

பிள்ளையார் சதுர்த்தியில் 21 இலைகளால் பூஜை செய்வோம். அதில் 'துளஸீ பத்ரம் ஸமர்ப்பயாமி’ என்று சொல்லிப் பிள்ளையாரை அர்ச்சிப்பது உண்டு. எனவே, அந்தப் பெரியவர் சொல்லும் தகவல் ஏற்கத்தக்கது அல்ல.

புராணங்கள், சில சந்தர்ப்பங்களில் சிலவற்றை விலக்கியும் சேர்த்தும் விளக்கம் அளிக்கும். அப்போது அவற்றின் சிறப்பு- இழுக்கு பற்றித்தான் சொல்லப்படுமே தவிர, அவற்றை அறவே அகற்றவேண்டும் என்றில்லை.

ஈசனுக்குத் தாழம்பூ சேர்க்கக்கூடாது என்று புராணம் விளக்கம் அளிக்கும். அதேநேரம், ஈசனுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் உமையவளுக்குத் தாழம்பூ அலங்காரம் இருக்கும். ஈசனுக்கு ஆகாததை உமையவளும் தவிர்க்கவேண்டும் அல்லவா?! நம்மைப் போன்ற பாமரர்களது சிந்தனையில் அந்த மாதிரி எண்ணம்தான் உதிக்கும்!

தான் படைத்த பொருளை தானே ஏற்கக்கூடாது என்று எப்படிச் சொல்ல இயலும்? மாம்பழம் கிடைக்காததால் கோபம் அடைந்த முருகன், கோவணாண்டியாக பழநியில் ஒதுங்கினார். பிறகு, இரண்டு மனைவிமாருடன் விளங்கினார். பழம் தராத தகப்பனுக்கு ஓம்காரத்தின் பொருளை விளக்கிக் கொடுத்தார். நமது நடைமுறைகளை எல்லாம் தெய்வங்களிடத்திலும் புகுத்தி, அவர் களையும் நம்முடன் இணைக்கக் கூடாது.

குறிப்பிட்ட விஷயங்களில் சில பொருட்களின் பெருமை- சிறுமைகளை விளக்க புராண நிகழ்வுகள் பயன்படுமே தவிர, அவற்றின் தரத்தை நிரந்தரமாகப் புறம் தள்ளாது. புராணக் கதைகளுக்கு தனி அணுகுமுறை உண்டு. அந்த வழியில் நமது சிந்தனை திரும்ப வேண்டும்.

துளசி நனைந்த தீர்த்தம் கங்கைக்குச் சமானம் என்கிறீர்கள். அந்த தீர்த்தத்தில் நீராடினால் கங்கா ஸ்நானம் ஆகுமா? துளசியின் தொடர்பு நீரையும் உயர்த்துகிறது என்று பொருள். படைக்கும் பிரம்மனுக்குக் கோயில் இல்லை என்று புராணம் சொல்லும். ஆனால், நம் நாட்டில் பிரம்மனுக்குக் கோயில் உண்டு. முருகனின் தங்கத் தேரை ஓட்டுபவர் பிரம்மன்தான்.

கண்ணனின் சிரசில் மயில் தோகை அலங்காரமாக வீற்றிருக்கும். தன் மீது அமர்ந்த முருகனுக்குத் தோகையை விரித்தபடி, அந்த அழகனுக்கே அழகூட்டி மகிழும் மயில். உடனே, சைவத்தைச் சேர்ந்த மயில்தோகை வைஷ்ணவத்தில் தாவலாமா என்று கேட்கமுடியுமா? பார்வதியை ஈசனுக்குக் கன்யகா தானம் செய்துவைத்தான் கண்ணன். பிருந்தாவைத் (துளசியை) திருமணம் செய்துகொண்டார் மஹா விஷ்ணு. அந்த துளசி விஷ்ணு பத்னி. அவளை எப்படி சைவத்தைச் சார்ந்த கணபதிக்கு அர்ச்சனையில் சேர்க்கலாம் என்ற நோக்கில், நாம் ஏற்றுக்கொள்ளும் விருப்பு- வெறுப்புகளைக் கடவுள் அவதாரங்களில் திணிக்கக்கூடாது. இப்படிப்பட்ட விபரீத சிந்தனைகள் புராணக்கதைகளின் உட்கருத்தை மூடி மறைத்து, தேவையில்லாத, பொருந்தாத தகவல்களை வெளியிடும்.

பிற்பாடு முளைத்த மதக் கோட்பாட்டுக்கு இணங்க புராணத் தகவல்களை எடைபோடக் கூடாது. ஆறறிவு பெற்றவர்கள் ஆராய்ந்து செயல்பட வேண்டும். மதச்சாயல் புராணத்தில் தென்பட்டாலும், அதை ஒதுக்கி உண்மையை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். தனக்குப் பிடித்த மதத் தகவல்களை உயர்வாகச் சொல்வது இயல்பு. நாம்தான் அடையாளம் கண்டு விலக்கிக்கொள்ள வேண்டும். புராணத் தகவல்களை ஸனாதனத்தில் உரைத்துப் பார்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இயற்கை வளங்களைப் படைத்து, உயிரினங்களையும் படைத்தான். அந்த உயிரினங்களுக்கு இயற்கை வளங்கள் அத்தனையும் ஏற்க உரிமையுண்டு. அவன் படைத்த பொருளை எடுத்து அவனுக்குப் பூஜை செய்ய எந்தத் தடையும் இருக்காது.

- பதில்கள் தொடரும்...
படங்கள்: இ.ராஜவிபீஷிகா

கேள்வி-பதில்