நவராத்திரி ஸ்பெஷல்!
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்
கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்
##~##
வி
நாயகர் சதுர்த்தி அன்று ஆதிமுதல்வன் கற்பக விநாயகரைத் தரிசிக்க பிள்ளையார்பட்டிக்குச் சென்றிருந்தோம். 'இங்கே உள்ள விநாயகர் புடைப்புச் சிற்பமாக இருக்கிறார் என்கிறார்களே... அது என்ன புடைப்புச் சிற்பம்?' என்று, வழக்கம்போல் சந்தேகம் கிளப்பினார் பரமசாமி.

'மலையைக் குடைந்து குகைக்கோயிலை ஏற்படுத்தும்போதே உள்ளே செதுக்கப்படுகின்ற திருமேனிகள் புடைப்புச் சிற்பங்கள் என்ற வகையில் அடங்கும். தமிழகத்தில் இந்தக் கோயில் தவிர, திருப்பரங்குன்றம் முருகன் கோயில், யானைமலை நரசிங்கப் பெருமாள் கோயில் போன்ற கோயில்களின் கருவறையில் உள்ள மூலவர்களின் சிலைகள் புடைப்புச் சிற்பங்களாகக் காணப்படுகின்றன. அதனால் அபிஷேகங்கள் எல்லாம் உத்ஸவ மூர்த்திக்குத்தான்' என்றேன் நான்.

கோயில் தெப்பக்குளத்தைத் தாண்டி உள்ளே நுழைந்தபோது, ஆனைமுகனின் கம்பீர உருவம் எங்களை மயக்கியது. 'இந்த விநாயகருடைய பாதம் மனிதப் பாதமாக இருக்காது. யானையின்

பாதமாகவே அமைந்திருக்கும். ஏனென்றால் இது ஆதி சிற்பம்' என்று நான் பரமசாமியிடம் சொன்னதை அங்கிருந்த அர்ச்சகர்களும் ஆமோதித்தார்கள்.

'ஆச்சரியமாக இருக்கிறதே! இதுவரை நான் கேள்விப்படாத விஷயம் இது' என்று சொன்ன பரமு, 'ஆதி காலத்துல இருந்து விநாயகர் இங்கேதான் இருக்காரா?' என்று கேட்க, 'ஆமாம். கி.பி.7-ஆம் நூற்றாண்டில் நரசிம்ம பல்லவன், வாதாபி மன்னனாகிய இரண்டாம் புலிகேசி மீது படையெடுத்து, அந்த நகரை எரிக்க முற்பட்டான். அப்போது, அவருடைய தளபதியாகிய பரஞ்சோதியார் அந்த நகரத்தில் இருந்த கணபதி பெருமானை

வணங்கி, 'எம்பெருமானே! இந்தப் போரில் எங்களுக்கு வெற்றி கிடைத்தால், உங்களைத் தமிழகத்துக்குக் கொண்டுசெல்வேன். பட்டிதொட்டியெல்லாம் உங்களுக்குக் கோயில் ஏற்படுத்துவேன்’ என வேண்டிக்கொண்டாராம். வெற்றி கிடைத்தது. விநாயகர் தமிழகத்துக்கு வருகை தந்தார்' என்றேன் நான்.

'ஆஹா! அதனால்தான் சங்கீத வித்வான்கள் எல்லாம் பாடத் தொடங்குறப்போ 'வாதாபி கணபதி...’ எனப் பாடத் தொடங்குறாங்களா?' என்று ஒரு குழந்தையின் குதூகலத்தோடு கேட்டார் பரமு. 'சரியாச் சொன்னீங்க. பல்லவர்கள் காலத்துல வாழ்ந்த திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தங்களுடைய தேவாரப் பாடல்களில் விநாயகரைப் பாடி வழிபட்டு இருக்கிறார்கள். 'பிடியதன் உரு உமை கொள மிகு கரியது’ என்கிறது தேவாரம்'' எனச் சொல்லி விட்டு, கோயிலின் வெளியே சிறிய குன்றைச் சுற்றி நடக்கத் தொடங்கினேன். அப்போது, 'இந்தக் குன்றுக்குள்தான் கோயில் அமைந்திருக்கிறது' என்று நான் சொல்ல, பரமு பிரமிப்போடு அந்த மலையைத் தொட்டு வணங்கினார்.

மலையை ஒரு சுற்று சுற்றிவிட்டு, கோயில் முன்பாக வந்து சேர்ந்தோம். 'எனக்குப் பிள்ளையார்கிட்ட பிடிச்சது, இருந்த இடத்திலேயே அம்மையப்பனைச் சுற்றி வந்து மாங்கனியை வாங்கின டெக்னிக்தான்!' என்று பரமு சொல்ல... 'இன்றைக்கும்கூட நாம் இருந்த இடத்திலேயே உலகத்தைச் சுற்றிப்பார்க்க, கணினி நமக்கு விநாயகரைப் போல் உதவுகிறது. இந்தக் கணினி யில் விநாயகரோட மௌஸும் (எலி) இருக்கு, பாருங்க' என்றேன் நான்.

'அப்ப மாங்கனி?' என்று, விடாமல் கேட்டார் பரமு.

'மாங்கனிக்குப் பதிலா இங்கே ஆப்பிள்! அதாவது, ஸ்டீவ்ஜாப்ஸோட ஆப்பிள் க(ம்பெ)னி!'

என்று நான் சொல்ல, விழுந்து விழுந்து சிரித்தார் பரமு.