நவராத்திரி ஸ்பெஷல்!
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

பிள்ளை வரம் தரும் பால் பாயச நைவேத்தியம்!

புரட்டாசியில் புண்ணிய தரிசனம்!

பிள்ளை வரம் தரும் பால் பாயச நைவேத்தியம்!
##~##
காபாரதம் அருளிய வியாசமுனிவரின் முதன்மைச் சீடரான பைலர், தினமும் பொருநை நதியான தாமிரபரணியில் நீராடி, மனத்துக்குள் பரந்தாமனை ஆயிரம் கோடி மலர்கள் கொண்டு பூஜிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஏழாம் நாள்... அவர் அதுவரை பெருமாளை அர்ச்சித்த மலர்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து, பிரகாசமான ஒளியைத் தந்தன. அந்த இடம் முழுவதும் பூக்களின் நறுமணம் சூழ்ந்தது. அந்தப் பிரகாசமான ஒளியில் இருந்து ஸ்ரீதிருமால் அழகுறத் தோன்றி, பைலருக்குத் திருக்காட்சி தந்து அருளினார். 'கோவிந்தா, தங்களைத் தரிசித்து, பிறவிப் பயனைப் பெற்றேன். என்னைப் போலவே, இந்தப் புண்ணிய நதியின் தீரத்தில் வசிக்கின்ற உன் அடியார்களுக்கும் தரிசனம் தாருங்கள், ஸ்வாமி! திருமலையில் வேங்கடவனாகக் காட்சி தருவதுபோல், இங்கேயுள்ள பக்தர்களுக்கும் காட்சி தந்து அருளுங்கள்!’ என வேண்டினார். 'அப்படியே ஆகட்டும்’ என அருளினார் திருமால்.

பிள்ளை வரம் தரும் பால் பாயச நைவேத்தியம்!

அதன்படி, தாமிரபரணிக் கரையில் இன்றைக்கும் தன் அடியவர்களுக்குத் தரிசனம் தந்துகொண்டிருக்கிறார் வேங்கடவன்.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது திருவேங்கடநாதபுரம். இங்கே, தாமிரபரணி நதிக் கரையோரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீவேங்கடநாதன் திருக்கோயில்.

ஏழு மலைகளைக் கடந்து ஏழுமலையானைத் தரிசிக்க வேண்டும். இங்கே, மேடான ஏழு நிலைகளைக் கடந்து, கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீவேங்கடவனைத் தரிசிக்க வேண்டும். இதனால், இந்தத் தலத்தை தென் திருப்பதி என்றும், திருநாங்கோயில் என்றும், மேலத்திருவேங்கடநாதபுரம் என்றும் போற்றுகின்றனர் பக்தர்கள்.

பிள்ளை வரம் தரும் பால் பாயச நைவேத்தியம்!

ஒருகாலத்தில், வெங்கடப்ப நாயக்கர் எனும் மன்னர் ஆட்சி செய்து வந்தார். செல்வ வளமும் பூமி வளமுமாகக் குறைவற ஆட்சி செய்து வந்த மன்னருக்கு ஒரேயரு குறை... அள்ளியெடுத்துக் கொஞ்சி விளையாட அவருக்குக் குழந்தை இல்லை! ஒவ்வொரு தலமாகச் சென்று இறைவனை மனமுருகிப் பிரார்த்தித்துக்கொண்டே வந்தார்.

அப்படியே, தாமிரபரணி ஆற்றங்கரைக்கும் வந்தவர், நதியில் குளிப்பதற்காக இறங்கினார். அப்போது, 'இந்த இடத்தில் ஆயிரம் குழந்தைகளை அழைத்து, அவர்களின் பசியைப் போக்கினால், விரைவில் உனக்கு சந்தான பாக்கியம் கிடைக்கும்’ என்று அசரீரி கேட்டது. உடனே மன்னர், தன் அமைச்சர் பெருமக்களை அழைத்து, ஆயிரம் குழந்தைகளைத் திரட்டி வரக் கட்டளையிட்டார். அதையடுத்து அந்த நதிக்கரையில், ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு அன்னதானம் நடந்தேறியது. அடுத்த பத்தாவது மாதம்... மகாராணி, அழகிய ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். தன் மகனுக்கு ஸ்ரீநிவாசன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த மன்னர், நதிக்கரையில் பெருமாளுக்கு கோயில் அமைத்து, அந்தப் பகுதிக்கு திருவேங்கடநாதபுரம் என்று பெயர் சூட்டியதாகச் சொல்கிறது ஸ்தல வரலாறு.

பிள்ளை வரம் தரும் பால் பாயச நைவேத்தியம்!

அற்புதமான ஆலயத்தில், கிழக்கு நோக்கியபடி ஸ்ரீதேவி- பூதேவி சமேதராக சேவை சாதிக்கிறார் ஸ்ரீதிருவேங்கடநாத பெருமாள். வலது உள்ளங்கையை கீழ்நோக்கித் தாழ்த்தி, வேண்டிய வரங்களைத் தரும் வரப்பிரசாதியாகவும், இடது கையை தொடையில் பதித்தவாறும், புறங்கைகளில் சங்கு- சக்கரத்துடனும் காட்சியளிக்கிற பெருமாளைத் தரிசித்துக்கொண்டே இருக்கலாம்.

இந்தத் தலத்தில் 12 படிகளைக் கடந்து செல்லவேண்டும். அதாவது, தங்கள் மார்பில் திருவடியை வைத்து, திருமால் கருவறைக்குள் செல்ல வேண்டும் என்பதற்காக பன்னிரு ஆழ்வார்களும் படிகளாகப் படுத்திருப்பதாக ஐதீகம்.  

பிள்ளை வரம் தரும் பால் பாயச நைவேத்தியம்!

புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து பிரார்த்தித்தால், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெறலாம் என்பது நம்பிக்கை. திருவோண நட்சத்திர நாளில், பால் பாயச நைவேத்தியம் செய்து ஸ்ரீவேங்கடநாதனைத் தரிசித்து வேண்டிக்கொண்டு, பிரசாதத்தை குழந்தைகளுக்குக் கொடுத்தால், விரைவில் பிள்ளை வரம் கிடைக்கும் எனப் பூரிப்புடன் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.  

கொடிமரத்தின் கீழே கம்பத்துக்கடியான் எனும் பரிவார தேவதை உள்ளது. இந்தத் தேவதைக்கு 21 வகையான அபிஷேகம் செய்து, பூச்சட்டை அணிவித்து (பூக்களைக் கொண்டு சட்டை தயாரிப்பது) பிரார்த்தனை செய்தால், சகல நோய்களும் நீங்கும்; சங்கடங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்!

    - ச.காளிராஜ்
படங்கள்: எல்.ராஜேந்திரன்