புரட்டாசியில் புண்ணிய தரிசனம்!

##~## |
திருமலை நாயக்கர் மதுரையை ஆட்சி செய்த காலம் அது. திருமலை திருப்பதிக்குச் சென்று ஸ்ரீவேங்கடவனைத் தரிசிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டார் திருமலை நாயக்கர். ஆனால் ஏனோ... அவரின் பயணம் ஒவ்வொரு முறையும் தடைப்பட்டுக் கொண்டே இருந்தது. இதில் வருத்தமுற்றுப் புலம்பினார் மன்னர்.
அப்போது ஒருநாள்... பெரிய திருவோணம் என்று சொல்லக் கூடிய, புரட்டாசி மாத திருவோண நட்சத்திர நாளில், மன்னரின் கனவில் வந்தார் திருப்பதி ஏழுமலையான். 'உனக்காகவும் உன் தேசத்துக்காகவும் உன் ஊரிலேயே இருந்து அருள்கிறேன். எனக்குக் கோயில் எழுப்புவாயாக!’ என அருளிச் சென்றார். மன்னர் சிலிர்த்தார். எனினும், எந்த இடத்தில் கோயில் கட்டுவது எனக் குழப்பமும் எழுந்தது அவருக்கு. பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவராக, 'கனவில் திருமாலுடன் அனுமனும் வந்தார். எனவே, வானரங்கள் சூழ்ந்திருக்கும் பகுதியைத் தேடுங்கள்’ என அமைச்சர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி, வைகைக் கரையின் வடக்குப் பகுதியில், மாதுள வனம் சூழ்ந்த இடத்தில் வானரங்கள் ஏராளமாக இருந்ததைக் கண்டு, மன்னருக்குத் தகவல் தெரிவித்தனர். திருமலை நாயக்கர் உடனே அங்கே விரைந்து வந்தார். அங்கே... ஸ்ரீஅனுமனின் திருவிக்கிரகத்தைக் கண்டார். அந்த இடத்திலேயே கோயிலை எழுப்பி, கனவில் கண்ட திருக்கோலத்திலேயே பெருமாளின் விக்கிரகத்தை அமைத்துப் பிரதிஷ்டை செய்து வழிபடலானார் என்கிறது ஸ்தல வரலாறு.
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள தல்லாகுளத்தில் அமைந்துள்ளது ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி திருக்கோயில். மூலவர் ஸ்ரீதேவி மற்றும் ஸ்ரீபூதேவியுடன் அழகு ததும்பக் காட்சி தருகிறார். இங்கே, தாயாருக்கு சந்நிதி இல்லை. ஸ்ரீஅனுமனும் ஸ்ரீகருடாழ்வாரும் தனிச்சந்நிதியில் அருள்கின்றனர்.

ஒவ்வொரு மாதத்திலும் ஏதேனும் ஒரு விழா, இங்கே விமரிசையாக நடந்தேறும் என்றாலும், புரட்டாசி மாதத்தின் பிரம்மோத்ஸவ விழா பத்து நாட்கள் சீரும் சிறப்புமாக நடைபெறும் என்கின்றனர் பக்தர்கள். கொடியேற்றத்துடன் துவங்குகிற விழாவில் அன்ன வாகனம், பல்லக்குப் புறப்பாடு, சிம்ம வாகனம், ஸ்ரீஅனும வாகனம், ஸ்ரீகருட வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், புஷ்பப் பல்லக்கு, மோகினி அவதாரம் எனப் பத்து நாளும் பத்து விதமான வாகனங்களில், சர்வ அலங்காரங்களுடன் காட்சி தரும் பெருமாளைத் தரிசித்தால்... நம் பாவமெல்லாம் பறந்தோடிவிடும் என்பது ஐதீகம்! திருவோணம் நட்சத்திர நாளில், அதாவது 9-ஆம் நாள் தேரோட்டமும், 11-ஆம் நாள் தெப்போத்ஸவமும் விமரிசையாக நடைபெறும்.
இந்தத் தலத்தில்... மூலவருக்கு புஷ்ப அலங்காரமும் உத்ஸவ பெருமாளுக்கு திருமஞ்சனமும் செய்து பிரார்த்தித் தால், திருமணத் தடைகள் நீங்கும் என்கின்றனர் பக்தர்கள். இங்கு தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) வந்து, தினமும் ஸ்ரீஅனுமனை 108 முறையும், ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதியை 12 முறையும் வலம் வந்து பிரார்த்திக்க, நினைத்த காரியங்கள் யாவும் இனிதே நடந்தேறும்.
ஸ்ரீஅனுமனுக்கு வெண்ணெய்க் காப்பு அலங்காரம் செய்து, வடை மாலை அல்லது வெற்றிலை மாலை சார்த்தி வேண்டிக்கொண்டால், நல்ல வேலையும் பதவி உயர்வும் கிடைக்கப் பெறலாம் என்கின்றனர் பக்தர்கள்.
- ச.பா.முத்துகுமார்
படங்கள்: எஸ்.கேசவசுதன்