பனிமுடி தரிசனம்


##~## |
காலைக் கதிரொளியில் பொன்னார்மேனியனாக, பிறகு வெள்ளிப்பனித் தலையனாக, மாலைச் சந்தியா காலத்திலோ செம்பவளச் சுந்தரனாக... இன்னும் இன்னும் பல கோணங்களில் இயற்கையே இறைமுகம் காட்டும் கயிலை தரிசனம் என்பது எத்தகைய பெரும்பேறு தெரியுமா?
அந்தப் பேறு எல்லோருக்கும் எளிதில் கிட்டிவிடுமா?!
நீண்டநெடும்பயணம், பனிப்பொழிவு, நிலச்சரிவு, கிடுகிடு பள்ளத்தாக்குகள், மலைக்கவைக்கும் மலையேற்றங்கள்... எல்லாவற்றுக்கும் மேலாக இவை அத்தனையையும் தாக்குப்பிடிக்கும் உடல் தகுதி... அப்பப்பா... கயிலைவாழ் கடவுளைத் தரிசிப்பதில் இவ்வளவு சிரமங்களா?
இல்லையில்லை... 'அவனருளால் அவன் தாள் வணங்கி’ என்று பெரியோர்கள் பாடி வைத்தது போன்று, எல்லா பாரத்தையும் அவன்மேல் சுமத்தி, உள்ளத்தில் ஐந்தெழுத்தை நிறுத்தி, மனத்தில்
அவனையே தியானித்து சரணடைந்தால் போதும், மேற்கண்ட பிரச்னைகள் எல்லாம் ஒன்றுமே இல்லாமல் போகும்!
அப்படி... அரன் தாள் பணிந்து அவனருளைப் பெறவும், அந்த சிவனருளால் அற்புதமான கயிலை பயணத்தை எளிதாக்கவும், வாசகர்களுக்கு வழிகாட்டவுமான எங்களின் எளிய முயற்சியே... இந்தப் புகைப்படத் தொடர்!
பனிமுடி தரிசனம் மட்டுமல்ல... நேபாளம்- காட்மண்டு துவங்கி திருக்கயிலை வரை, வழிநெடுகிலுமுள்ள இன்னும்பல இடங்களும் தகவல்களும் நமக்காக காத்திருக்கின்றன!

பசுபதிநாதர் ஆலயம்
திருக்கயிலை யாத்திரையின் மையப்புள்ளி நேபாள தலைநகர் காத்மண்டு. சென்னையிலிருந்து ரயிலில் செல்வோர், உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூரை அடைந்து, அங்கிருந்து காத்மண்டுக்கு பயணிக்கலாம். விமானம் மூலம் செல்பவர்கள் டெல்லி வழியாக காத்மண்டு செல்ல வேண்டும். காத்மண்டுவில் உள்ள ஸ்ரீபசுபதி நாதர் ஆலயம் 1,500 வருடங்கள் பழைமையானது. அருகிலேயே கண்டகி நதியின் கிளையான பாக்மதி ஓடுகிறது.
இந்த நதிக்கரையில் முன்னோர் வழிபாடு செய்வது விசேஷம். இந்தப் பகுதியில் உள்ள மக்கள் நோய்வாய்ப்பட்டு மரணத்தை எதிர்நோக்கி உள்ள உறவினரை இந்தக் கோயிலுக்கு அருகில் தங்க வைத்து, மீண்டும் பிறவாமை வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறார்கள். அதற்காகவே சிறு சிறு அறைகளையும் கட்டி வைத்துள்ளது, கோயில் நிர்வாகம். இங்குள்ள நந்தியம்பெருமானும் மிகப் பிரமாண்டமானவர். நேபாள மன்னர் ராம்ஷா என்பவர் நிறுவிய நந்தி என்கிறார்கள்!
கோயிலில் காலை 11 மணி; மாலை 6:30 மணிக்கு ஆரத்தி வேளையின்போது கருவறையின் நான்கு வாயிற்கதவுகளும் திறக்கப்பட... திசைக்கு ஒன்றாக நான்கு முகங்கள்; மேலே வெளியை நோக்கியவாறு ஒரு திருமுகம் எனக் காட்சி தரும் ஸ்ரீபசுபதிநாதர் தரிசனம் சிலிர்க்கவைக்கிறது!

