Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!
##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கா
விரி பாய்ந்தோடும் சோழ தேசத்தில் விளைநிலங்களுக்கும் பஞ்சமில்லை; ஆலயங்களுக்கும் குறைவில்லை! எங்கு திரும்பினாலும் பிரமாண்ட ஆலயங்களைப் பார்க்கலாம்; வியக்கலாம்! தரிசித்து வழிபடலாம்!

தேசத்தை ஆட்சி செய்த மன்னர் பெருமக்கள், ஆர்வத்துடனும் பக்தியுடனும் பல கோயில்களைக் கட்டினார்கள். அந்தக் கோயிலைச் சுற்றித் தெருக்களையும் கிராமங்களையும் நிர்மாணித்தார்கள். அந்தணர்களுக்கும் வேளாளப் பெருமக்களுக்கும் வீடுகளும் விளைநிலங்களும் தந்து, கோயிலில் இடையறாது பூஜைகள் நடப்பதற்கு ஏற்பாடு செய்தார்கள்.

சோழ தேசம் மட்டுமில்லாமல், பாண்டிய, சேர தேசங்களிலும் அங்கே ஆட்சி செய்த மன்னர்கள் கோயில்களுக்கு நிவந்தங்கள் அளித்து, திருப்பணிகளைச் செய்தார்கள்; புதிய கோயில்களைக் கட்டினார்கள்.

அந்தக் கோயில்களால் புதிது புதிதாகக் கிராமங்கள் முளைத்தன. மக்கள் மிகுந்த சந்தோஷத்துடனும் குதூகலத்துடனும் இறைவழிபாட்டில் ஈடுபட்டார்கள். கோயிலைப் பராமரிப்பதிலும், பூஜைகள் செய்வதிலும் ஆர்வம் காட்டினார்கள்.

சோழ தேசத்தில் பாய்ந்தோடுகிற காவிரி நதியின் கிளை ஆறான முடி கொண்டான் ஆற்றின் கரையையட்டி ஏராளமான கிராமங்கள் இருக்கின்றன. அந்தக் கிராமங்களில் மிகுந்த வேலைப்பாடுகள் கொண்ட பிரமாண்டமான ஆலயங்கள் அமைந்துள்ளன. முடிகொண்டான் ஆற்றுக்குத் தென்பகுதியில் திருவீழிமிழலை, திருநன்னிலம், திருவாஞ்சியம், எண்கண், குடவாசல் என முக்கியத் தலங்களும், அங்கே சிறப்புற்றுத் திகழும் ஆலயங்களும் இருக்கின்றன. நன்னிலத்துக்கு அருகில் உள்ள சைதன்யபுரம் எனும் அழகிய கிராமத்திலும் அற்புதமான கோயில் ஒன்று அமைந்துள்ளது.

ஆலயம் தேடுவோம்!

சைதன்யம் என்றால் சாந்நித்தியம் என்று அர்த்தம். இறைவனின் சாந்நித்தியம் முழுவதும் நிறைந்த சைதன்யபுரம் தலத்தில், கோயிலை அமைத்தான் மன்னன் ஒருவன். அந்தக் கோயிலை நிர்வகிக்கவும், பூஜைகள் நடந்தேறவும் வழிவகை செய்த மன்னன், கோயிலில் இடையறாது வேத கோஷங்கள் முழங்கவும் வேண்டும் என விரும்பி, கோயிலுக்கு எதிரிலேயே மிக நீண்ட அக்ரஹாரத்தைக் கட்டிக் கொடுத்து, அந்தணக் குடும்பங்களை அங்கே குடியமர்த்தினான். அவர்களுக்கு நெல்லும் நிலமும் பசுக்களும் வழங்கினான்.

சூரிய பகவானை குருவாகக் கொண்டு, சுக்ல யஜுர்வேதம் என்பதை அமைத்துக் கொடுத்தவர் யாக்ஞவல்கியர் எனும் முனிவர். இந்த வேத மந்திரங்களைச் சொல்லச் சொல்ல... மொத்த தேசமும் செழிக்கும்; கூர்மையான புத்தியும் விசாலமான மனமும் கொண்டு வாழலாம் என்பர். யாக்ஞவல்கியரின் வேத மந்திரங்களில் லயித்துப் போன பலர், அவரை குருவாக ஏற்றுக்கொண்டனர். அந்தச் சீடர்களுக்கு சுக்ல யஜுர்வேதத்தைக் கற்றுக் கொடுத்து அருளினார் யாக்ஞவல்கியர். இந்த வேதத்தைக் கற்றறிந்த எண்ணற்ற அந்தணர்கள் சைதன்யபுரத்தில் குடியேறி, தினமும் வேத கோஷங்களை முழங்கியபடி இருந்தார்கள்.

சைதன்யபுரம் எனும் அழகிய கிராமத்தில், ஊருக்கு நடுவே அற்புதமாக அமைந்துள்ளது ஸ்ரீமீனாட்சி அம்பாள் சமேத ஸ்ரீசுந்தரேஸ்வரர் கோயில். இறைச் சாந்நித்தியம் மிகுந்த இந்தக் கோயிலில்தான், சதாசர்வ காலமும் வேதங்கள் முழங்கிக் கொண்டே இருந்தன.

இந்தத் தலத்தையும் சுக்ல யஜுர்வேதத்தையும் அறிந்த மகான்களும் ஞானிகளும் இங்கு வந்து சிவனாரையும் அம்பாளையும் வழிபட்டு, இங்கேயே தங்கி தவமிருந்தார்கள். ஞானத்தை யும் யோகத்தையும் வழங்கக்கூடிய இந்தத் தலத்தை அறிந்து, இங்கு வரும் அடியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருந்தது. அவ்வளவு சக்தியும் சாந்நித்தியமும் கொண்டது... சைதன்யபுரம் சிவாலயம்!

மகான்களும் ரிஷிகளும் வணங்கிய இந்தக் கோயிலுக்கு காஞ்சி மகாபெரியவா, இரண்டு முறை விஜயம் செய்து, ஸ்வாமியையும் அம்பாளையும் தரிசித்துச் சென்றதைப் பூரிப்புடன் தெரிவிக்கின்றனர், ஊர்க்காரர்கள். மிகச் சிறந்த சாகித்யங்களையும் பாடல்களை யும் வழங்கிய பாபநாசம் சிவன், நேரம் கிடைக்கும்போதெல்லாம் இங்கு வந்து ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டிருக்கிறாராம்.

ஆலயம் தேடுவோம்!

ஆனால் என்ன... தற்போது ஸ்ரீமீனாட்சி சமேத ஸ்ரீசுந்தரேஸ்வரர் ஆலயத்தில், அபிஷேக- ஆராதனைகள் வெகுவாகக் குறைந்துவிட்டன என்பதுதான் வேதனை. சுவர் பகுதி சிதிலமுற்று, பல இடங்களில் விரிசல் விழுந்திருக்க, அந்த விரிசலில் காட்டுச் செடிகள் முளைத்து, மரங்களாக வளர்ந்து... பிராகாரங்களில் முள்ளும் புதருமாகிப் போனதை வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர் ஊர்மக்கள்.

பிறகு, சைதன்யபுர ஆத்திக சமாஜ் அமைப்பைச் சேர்ந்தவர்களும் கிராம மக்களும் ஒன்று சேர்ந்து, கோயிலுக்குத் திருப்பணி செய்யும் முயற்சியில் இறங்கினார்கள். கொஞ்சம் கொஞ்சமாகச் கோயிலைச் சீர்செய்யும் பணி நடைபெறத் தொடங்கியது.

ஆலயம் தேடுவோம்!

சைதன்யபுர ஆத்திக சமாஜ் அமைப்பினர், இன்னொரு தகவலை சிலிர்ப்புடன் தெரிவிக் கின்றனர்.

1998-ஆம் ஆண்டு, சைதன்யபுரத்தில் இருந்து சிலர் ஒரு குழுவாகச் சென்று, திருவண்ணாமலை மகான் பகவான் ஸ்ரீயோகி ராம்சுரத்குமாரைத் தரிசித்திருக்கிறார்கள். அப்போது அவர்களிடம் சுவாமிகள், 'எந்த ஊரில் இருந்து வருகிறீர்கள்?’

என்று கேட்க, அவர்கள் தங்கள் ஊரின் பெயரைச் சொல்ல... 'அடடா... மிகப்பெரிய மகான் வாழ்ந்து, திருச்சமாதியான தலமாயிற்றே இது! தமிழகத்தில் ஸ்ரீபாண்டுரங்க பஜனையை முதன்முதலில் அறிமுகப்படுத்திய ஸ்ரீகோதண்டராம சுவாமிகள் வாழ்ந்த ஊரும் இதுதான்! வாரணாசியில் இருந்து வரும் 'கல்யாண கல்பதரு’ பத்திரிகை யில், 45-ஆம் வருடத்தில், இந்த ஊர் பற்றி விரிவாகச் சொல்லப் பட்டிருக்கிறது!’ என்று சிலாகித்தபடி சொன்னாராம் விசிறி சுவாமிகள்.

அந்த மகான் யார்... அவரின் பிருந்தாவனம் எங்கே உள்ளது என்கிற எந்த விவரமும் தெரிய வில்லை. ஆனால், கோயிலிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் சூட்சுமமாக அருட்பேராற்றல் பரவியிருக்கும் என்பதை உணர முடிகிறது.

'கும்பாபிஷேகம் எப்ப நடந்துச்சுன்னே தெரியலீங்க. ஆனா, திருப்பணிகளை மெள்ள மெள்ளப் பண்ணிட்டு வந்துட்டோம். ஒருவழியா, கும்பாபிஷேகத் தேதியையும் குறிச்சாச்சு! ஆனா, நிறைவுக் கட்டத்துல சில வேலைகளைச் செய்யமுடியாம தவிக்கிறோம். இதனால, திருப்பணிகள் முழுமை அடையாத நிலையில் இருக்கிறதை நினைச்சாலே, வேதனையா இருக்கு'' என்று வருத்தம் தோய்ந்த குரலில் சொல்கிறார் ஊர்ப்பெரியவர் ஒருவர்.

சுக்ல யஜுர்வேதம் முழங்கிய ஆலயத்தில், யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, ஹோமங் கள் வளர்க்கப்பட்டு, மந்திர ஜபங்கள் முழங்க, சீரும் சிறப்புமாகக் கும்பாபிஷேகம் நடக்க வேண் டாமா? காஞ்சி மகாபெரியவா வந்து வணங்கி பூஜித்த கோயில் களையிழந்து கிடக்கலாமா? திருவண்ணாமலை மகான் யோகி ராம்சுரத்குமார் சிலாகித்துச் சொன்ன ஆலயம் சீர் பெறாமல் இருக்கலாமா?

எத்தனையோ மகான்களுக்கும் முனிவர்களுக்கும் ஞானமும் யோகமும் வழங்கி அருளிய ஸ்ரீமீனாட்சியும் ஸ்ரீசுந்தரேஸ்வரரும் வஸ்திரம், அபிஷேகம், நைவேத்தியம் என பூஜை புனஸ்காரங்களுடன் திகழ வேண்டாமா?

எல்லார் வீடுகளிலும் சைதன்யம் பெருக... சைதன்யபுரம் ஸ்ரீமீனாட்சி சமேத ஸ்ரீசுந்தரேஸ்வரர் கோயில் திருப்பணிக்கு நம்மால் இயன்றதை வழங்குவோம்; வரம் பெறுவோம்!

படங்கள்: ஜெ.ராம்குமார்