சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!
தசாவதாரம் திருத்தலங்கள்!
##~##
மு
த்துக்குளிக்கும் பாண்டிய தேசத்தில்தான் முத்து முத்தாக எத்தனைக் கோயில்கள்?! வைணவ திவ்விய தேசங்கள்- 18; பாடல்பெற்ற சிவத்தலங்கள் -15, திருச்செந்தூர் முதலான முருகன் திருத்தலங்கள்... என ஆன்மிகம் செழிக்கும் புண்ணிய பூமி இது!

இங்கு தேன்மதுரத் தமிழ் வளர்த்த தென் மதுரைக்கு அருகில் கனகம்பீரமாக அமைந்திருக்கும் அந்த மலையும் ஆன்மிகச் சிறப்புடன் திகழ்கிறது. அதன் பெயர் யானை மலை. சைவம், வைணவம், ஜைனம் என பல்வேறு சமயங்களுக்கும் இந்த மலையோடு தொடர்பு உண்டு.

சோழ சாம்ராஜ்ஜியம் வலுவிழந்திருந்த காலம் அது. வணிகத்திலும் படை வல்லமையிலும் பாண்டிய தேசம் வளர்ந்தோங்கியிருந்தது. நேருக்கு நேர் களமாடினால் பாண்டியர்களிடம் தோற்றுப்போவோம் என்பதை நன்கு அறிந்திருந்த சோழர்கள், வடக்கில் இருந்து வந்த அந்நியர் களின் உதவியுடன் மாயப்போர் தொடுத்தார்கள். மந்திர சக்தியால் மாய யானை ஒன்றை உருவாக்கி, பாண்டிய நாட்டின் மீது ஏவினார்கள்.

பாண்டியன் கலங்கினான். இறைவனிடம் மன்றாடினான். பரம்பொருள் மனம் கனிந்தது. அதன் கருணையால், பாண்டிய தேசத்தை நோக்கி பாய்ந்து வந்த யானை ஓரிடத்தில் கல்லாகிப்போனது. அதுவே இப்போது நாம் காணும் யானை மலை என்கிறார்கள். இதுபோன்று இன் னும் பல்வேறு கதைகள் உண்டு இந்த மலையைப் பற்றி.

யானை மலையுடன் சமணர்களுக்கான தொடர்பை விளக்கும் சான்றுகளும்... குகைகளாகவும், படுகைகளாகவும் தென்படுகின்றன!

எது எப்படியோ... அகிலம் காக்கும் ஆண்டவன், ஸ்ரீநரசிம்ம கோலத்தில்- யோக நிலையில், இதன் அடிவாரத் தில் கோயில் கொண்டிருப்பதால், இன்னும் மகத்துவம் கூடிப்போனது யானை மலைக்கு!

அதுசரி... இங்கு நரசிம்மர் குடிகொண்டது எப்படி?

தோட்டம் துறவு, சொத்து- சுகம், சொன்னதைச் செய்து முடிக்க பணியாட்கள்... என எல்லாமும் இருந்து, குழந்தை செல்வம் இல்லாவிட்டால், பெரும் மனக்குறை அல்லவா? கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்தாலும் பிள்ளைச் செல்வம் எளிதில் வாய்க்குமா?

ரோமச முனிவருக்கும் அந்த மனக்குறை இருந்தது. தவசீலர், ஞானத்தில் சிறந்தவர், சகமுனிவர்களாலும் தேவர்

களாலும் போற்றப்படும் உத்தமர் அவர். சரிதான்... பேரும் புகழும் இருக்கலாம்தான்... ஆனாலும் பேர் சொல்ல ஒரு பிள்ளை இல்லையே எனும் குறை அவர் மனதை அரித்தது. என்ன செய்யலாம்?! பரம்பொருளைப் பணிவோம். பிள்ளை வரம் கேட்டு வழிபடுவோம் என்று முடிவெடுத்தார் அந்த முனிவர்.

எங்கு சென்றால் மிக எளிதில் இறையருளைப் பெற முடியும் என்று யோசித்தவர், மிக உன்னதமான அந்தத் தலத்துக்கு வந்தார். அங்கே சக்கர தீர்த்தத்தில் நீராடி யாகம் துவங்கினார்; மனமுருக வழிபட்டார். அவருக்கு இறையருள் கனிந்தது.

ஒன்று கிடைக்கும் வரை மனம் அதைப் பற்றிக் கொண்டிருக்கும். கிடைத்துவிட்டால் வேறொன்றை விரும்பத் துவங்கி விடும். முனிவருக்கும் வேறோர் விருப்பம் முளைத்தது. தன் மனதுக்கினிய பரந்தாமன், பக்த பிரகலாதனுக்காக சிங்கம் உருவம் ஏற்று வந்தாரே... அதே கோலத்தில், தனக்கும் காட்சி தரவேண்டும் என விரும்பினார். முனிவரின் அந்த ஆசையும் நிறைவேறியது. அவருக்கு ஆக்ரோஷமாக காட்சி தந்தது நரசிம்மம்!

ஆண்டவனின் ஆக்ரோஷத்தை இந்தப் பூமி தாங்குமா? அல்லாடிப் போனார்கள் இந்திராதி தேவர்கள். அவர்களின் குறைதீர்க்க ஓடோடி வந்தாள் மகாலட்சுமி. அவள் முகம் கண்டதும் சினம் தணிந்தது சுவாமிக்கு. திருமகளை மார்பில் இருத்தியபடி, செல்வ சுகபோகங்களை வாரி வழங்கும் வள்ளலாய், ஸ்ரீயோக நரசிம்மராய் யானை மலையில் கோயில் கொண்டார்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

துரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது ஒத்தக்கடை. இங்கிருந்து சுமார் ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளது, யானை மலை.

அடிவாரத்தில், ராஜகோபுரத்துடன் கனகம்பீரமாகத் திகழ்கிறது ஆலயம். கும்பாபிஷேகப் பணிகள் நடந்து கொண்டிருப்பதால் கோயிலைச் சுற்றிலும் பந்தல் போட்டிருக்கிறார்கள்.

கோபுரவாயில் கடந்து உள்ளே நுழைந்தால் மலைக்க வைக்கிறது ஆலயத்தின் அமைப்பு. அர்த்தமண்டபம் முதற் கொண்டு கருவறை வரை, மலையைக் குடைந்து அமைத்திருக்கிறார்கள் இந்தக் கோயிலை. பிரமிப்பு அகலாமல் உள்ளே சென்று கருவறையை நோக்கினால்... உடலும் உள்ளமும் சிலிர்த்துப் போகிறது. சுமார் 6 அடி உயரத்தில் ஆஜானுபாகுவாய் மேற்கு நோக்கி காட்சி தருகிறார் ஸ்ரீயோக நரசிம்மர்.

அவரின் திருமேனியை, அருள் பொழியும் திருமுகத்தை, அந்த அழகிய கண்களை, வரம் வாரி வழங்கும் திருக்கரங்களை, தேடி வரும் அடியவரை தன்னோடு சேர்த்துக்கொள்ளத் துடிக்கும் எம்பெருமானின் திருவடிகளைத் தரிசித்த நம் கண்கள் வேறெதையும் தரிசிக்க விரும்பாமல் தவித்தது. அர்ச்சகர் தீபாராதனை காட்ட, தீப ஒளியில்... 'என்னைத் தேடி வந்துவிட்டாய் அல்லவா? இனி உனக்கு எந்தக் குறையும் வராது’ என்று ஸ்ரீநரசிம்மம் சிரிப்பதுபோல் தோன்றியது.

ஸ்ரீநரசிம்மக் கடவுள் அவதரித்தது பிரதோஷ வேளையில் அல்லவா? இந்த நேரத்தில் இங்கு வந்து அவரை வழிபட, குழந்தைகளின் கல்வி சிறக்கும், வியாபாரம் விருத்தியாகும், சத்ரு தொல்லைகளும் மரண பயமும் நீங்கும், அனைத்திலும் வெற்றி கிட்டும் என்கிறார்கள். தங்களது பிரார்த்தனையின் பொருட்டு வேண்டிக் கொள்ளும் பக்தர்கள் நெய் தீபமேற்றியும் பானக நைவேத்தியம் செய்தும் ஸ்ரீநரசிம்மரை வழிபட்டுச் செல்கிறார்கள்.

பிரதோஷ காலத்தில் பானக நைவேத்தியம் செய்து ஸ்ரீயோக நரசிம்மரை வழிபட, நினைத்தது நிறைவேறுமாம். வைகாசி மாதம் சுவாதி நட்சத்திர நாள் இங்கு விசேஷம். இந்தத் திருநாளில், இங்கு வந்து வழிபட, சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்கிறார்கள்.

மூலவரைப் போலவே உற்ஸவர் நரசிம்மரும் சிறந்த வரப்பிரசாதி. தாயாரின் திருநாமம் ஸ்ரீநரசிங்கவல்லித் தாயார். தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். கோயிலுக்கு வந்து மனமுருகி ஸ்ரீநரசிங்கவல்லித் தாயாரை வழிபட, திருமணத் தடை நீங்கும். கல்யாணம் தடைப்பட்டுப் போனவர்கள், இரண்டு மாலைகளை வாங்கி வந்து தாயாருக்கு அணிவித்து வழிபட்டு, அவற்றில் ஒன்றை வாங்கி தங்கள் கழுத்தில் அணிந்தபடி 12 முறை தாயாரை வலம் வந்து வழிபட, தடைகள் அகன்று விரைவில் திருமணம் நடந்தேறுமாம்.

இன்னுமொரு சிறப்பும் இந்தக் கோயிலுக்கு உண்டு... என்ன தெரியுமா?

''இங்கே பெருமாள் தன்னுடைய தேவியை நெஞ்சிலேயே சுமந்து கொண்டிருக்கிறார் இல்லையா? எனவே, பெண்கள் இங்கு வந்து ஸ்வாமியையும் தாயாரையும் வழிபட்டுச் சென்றால், கோபக்கார கணவனாக இருந்தாலும் கோபம் நீங்கி மனைவி மேல் அன்பு காட்டுவான்; அவளை தலைமேல் தூக்கி சுமப்பான்'' என்று சிலிர்ப்புடன் விவரிக்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள்.

நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ் வார், ஸ்ரீராமானுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோரையும் இங்கே தரிசிக்கலாம்.

திருவண்ணாமலையைப் போன்றே இந்தத் தலத்திலும் பௌர்ணமி கிரிவலம் சிறப்பாக நடைபெறுகிறது. மாசி மாதப் பௌர்ணமியின் போது, கஜேந்திரமோட்சம் வெகு விமரிசையாக நடைபெறுமாம். இந்தத் திருநாளில் மதுரையின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக வந்திருந்து ஸ்ரீயோக நரசிம்மரை வழிபட்டு வரம் பெற்றுச் செல்கிறார்கள்.

கோயிலில் திருப்பணிகள் வெகு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. திருப் பணிக்கு பக்தர்களும் தங்களால் இயன்ற காணிக்கையைச் சமர்ப்பித்து, ஸ்ரீயோக நரசிம்மரின் திருவருளை, ஸ்ரீநரசிங்கவல்லித் தாயாரின் கருணை கடாட்சத்தைப் பெற்றுச் சிறக்கலாம்.

- அவதாரம் தொடரும்...