

தென்னாட்டில் உள்ள அநேக கோயில்களுக்கு என் நண்பன் நாராயணன் தன் குடும்பத்தோடு போய் வந்திருக்கிறான். முக்கியமாக, எங்காவது புதிதாக ஒரு கோயில் எழுப்பப்பட்டிருப்பது பற்றிக் கேள்விப் பட்டாலோ, அல்லது பத்திரிகைகளில் படித்துத் தெரிந்து கொண்டாலோ உடனே அதை தரிசனம் செய்யக் கிளம்பிவிடுவான். திரும்பி வந்ததும், அந்த அனுபவத்தை என்னிடம் பகிர்ந்துகொள்வான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அப்படித்தான், சமீபத்தில் போய் வந்த ஒரு பெருமாள் கோயிலின் அழகை வியந்து வியந்து என்னிடம் விவரித்தவன், ஒரு வேடிக்கையான விஷயத்தையும் சொன்னான்.
##~## |
நாராயணன் தன் அனுபவத்தைத் தொடர்ந்து விவரித் தான். ''என்னால் நடக்கமுடியும். நடந்தே வருகிறேன் என்று எவ்வளவு சொன்னாலும், குமார் (அவனுடைய பிள்ளை) என்னை நடக்க அனுமதிக்கவில்லை. சக்கர நாற்காலியில் என்னை அமர்த்தி, தள்ளிக்கொண்டு வந்தான். 'கையும் காலும் திடமாக உருளைக்கிழங்கு மாதிரி இருக்கும் இந்த ஆளுக்கு என்ன கேடு? சக்கர நாற்காலியில் ஜம்முனு சவாரி செய்கிறானே!’ என்று பார்க்கிறவர்கள் நினைத்துக் கொள்ளப்போகிறார்களே என்று எனக்குக் கூச்சமாக இருந் தது. கூச்சத்தைவிட, மற்றவர்கள் பொறாமைப்படுவார்களே என்றும் ஒரு குறுகுறுப்பு தோன்றிக்கொண்டிருந்தது. அதனால் சட்டென்று ஒரு காரியம் செய்தேன். கையை வளைத்தாற் போல் வைத்துக்கொண்டு, பக்கவாதத்தால் தாக்கப்பட்ட கை மாதிரி அதை ஸ்வாதீனமில்லாததுபோல ஆட்டிக்கொண்டு பயணித்தேன்.
'பாகப் பிரிவினை’ சிவாஜியின் போஸில், 'ஆலயமணி’ சிவாஜி போன்று சக்கர நாற்காலியில் வந்துகொண்டிருந்த என் மேல், பார்க்கிறவர்களுக்கு ஓர் அனுதாபம் படர்வதை உணர முடிந்தது. பிறத்தியாருடைய பொறாமையிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது!'' - சொல்லிவிட்டுச் சிரித்தான் நாராயணன்.
அவன் செய்தது வேடிக்கைதான் என்றாலும், கோயிலில் போய் அப்படிக் குறும்பு செய்தது சரியல்ல என்றாலும், என்னைக் கொஞ்சம் சிந்திக்கும்படி செய்துவிட்டான்.
யாரைப் பார்த்தும் நாம் பொறாமைப்படக்கூடாது என்பது பொதுவான நீதி. நாம் பொறாமைப்படக்கூடாது என்பது மட்டுமல்ல; பிறத்தியாருடைய பொறாமையைத் தூண்டுவது போலவும் நடந்துகொள்ளக்கூடாது.
எவரால் உலகு இடர்ப்படுவதில்லையோ, உலகால் எவர் இடர்ப்படுவதில்லையோ, களிப்பு, சினம், பயம், மனக்குழப்பம் இவற்றிலிருந்து யார் விடுபட்டவரோ, அவரே எனக்குப் பிரியமானவர் என்கிறார் ஸ்ரீகிருஷ்ண பகவான், கீதையில்.
யஸ்மான்னோத் விஜதே லோகோ,
லோகான்னோத் விஜதே சய:
ஹர்ஷா மர்ஷ பயோத்வே கைர்
முக்தோய: ஸசமே ப்ரிய: