Published:Updated:

மங்கல வாழ்வு தரும் மாசி மகம்!

மாசிமகம் நீராடல்..!

மங்கல வாழ்வு தரும் மாசி மகம்!

மாசிமகம் நீராடல்..!

Published:Updated:
மங்கல வாழ்வு தரும் மாசி மகம்!
மங்கல வாழ்வு தரும் மாசி மகம்!

மாசி மாதத்தை, கும்ப மாதம் என்று சிறப்பிப்பார்கள். இந்த மாதத்தில் புனித நீராடுவது சிறந்த பலன்களைப் பெற்றுத் தரும். மகா புராணம், மாக புராண அம்மானை ஆகியன மாசி நீராடலின் மகத்துவத்தை விவரிக்கின்றன! புனித மிகு மாசியில் பல்வேறு தலங்களில் நீராட்டு விழாக்கள் நடைபெறுகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வடக்கே, கங்கையுடன் யமுனையும் சரஸ்வதியும் கூடும் சங்கமத்துறையான திரிவேணி சங்கமத்தில் (அலகாபாத்- பிரயாகை), 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோலாகலமாக நடைபெறும் விழா கும்பமேளா. லட்சக்கணக்கான பக்தர்கள் திரளும் இந்த விழாவுக்கு இணையாக, நம் தமிழகத்தில் நடைபெறும் திருவிழா கும்பகோணம்- மகாமகம்!

கோயில் நகரமாம் கும்பகோணத்துக்கு திருக்குடந்தை, திருக்குடமூக்கு என்றெல்லாம் பல்வேறு பெயர்கள் சூட்டி மகிழ்கின்றன புராணங்கள்.

##~##
ஊழிக்காலம் நெருங்கியது. பெரும் பிரளயத்தில், படைப் புத் தொழிலுக்கு மூலாதாரமான சிருஷ்டி பீஜத்துக்கு எந்தவித ஆபத்தும் நேர்ந்துவிடக்கூடாதே என்று யோசித்த பிரம்மன், பரமேஸ்வரரைப் பிரார்த்தித்தான். சிவப் பரம்பொருள் திருவருள் புரிந்தது.

அவரது கட்டளைப்படி, அமிர்தத்தால் மண்ணைக் குழைத்துச் செய்யப்பட்ட குடம் ஒன்றில் சிருஷ்டி பீஜத்தை இட்டுவைத்தார். அதன் நான்குபுறமும் வேதம், வேதாங்கம், ஆகமம், புராண- இதிகாசம் ஆகியவற்றைப் பரப்பி வைத்து, மேரு மலையில், உறி ஒன்றில் அந்தக் குடத்தை வைத்து தர்ப்பைகளால் கட்டி பத்திரப்படுத்தினார். அத்துடன் அனுதினமும் அமுதம் தெளித்து, வில்வத்தாலும் அர்ச்சித்து வழிபட்டார்.

பிரளயம் வந்தது. உலகை மூழ்கடித்த பெருவெள்ளத்தில், அந்தக் கும்பம் (குடம்) மட்டும் ஆடிஅசைந்தபடி மிதந்து வந்து, ஓரிடத்தில் நிலைகொண்டது. ஊழிக்காலம் முடிந்ததும் வேடனாக உருக்கொண்டார் சிவனார். அம்பு எய்து அந்தக் குடத்தின் மூக்கை உடைத்தார். உலகின் படைப்பு மீண்டும் ஆரம்பமானது!

மங்கல வாழ்வு தரும் மாசி மகம்!

எம்பெருமான் குடத்தின் மூக்கை உடைக்க,  குடத்தின் மூக்கிலிருந்து அமுதம் பரவியதால் திருக்குடமூக்கு என்று பெயர் வந்ததாக தலபுராணம் கூறுகிறது. கும்பம் உடைய அதன் கோணல் பகுதி சற்று தொலைவில் சென்று விழுந்தது, அங்கே ஒரு லிங்கம் தோன்றி யது. அந்த லிங்கமூர்த்திக்கு ஸ்ரீகோணேசர் என்று பெயர். இதையட்டியே இந்தத் தலத்துக்கு கும்பகோணம் என்றும் பெயராம் (இதேபோல் கும்பம் மிதந்து வந்தபோது, அதிலிருந்து விலகிய தர்ப்பை, தேங்காய், உறி போன்றன தங்கிய தலங்கள் குறித்த தகவல்களும் உண்டு).

சிருஷ்டியை ஆரம்பித்த பிறகு, இந்தத் தலத்தில் அமிர்தம் ஊறிக்கிடந்த மண்ணையே லிங்கமாக்கி, சுயம்புவாய் எழுந்தருளினார். ஆதி பராபரமாகியக் கடவுள், கும்பத்தில்  இருந்து தோன்றியதால், ஸ்ரீஆதிகும்பேஸ்வரர் எனப் பெயர் கொண்டார். அமிர்தத்தில் தோன்றியவர் ஸ்ரீஅமுதேசர் என்ற திருப்பெயரும் உண்டு. அம்பிகையின் திருப்பெயர், ஸ்ரீமங்களாம்பிகை; மங்கல வாழ்வளிக்கும் அம்பாள்! இவள் மந்திரபீடத்தில் திகழ்வதால், ஸ்ரீமந்திரபீடேஸ்வரி என்றும் போற்றுவர். கும்பகோணம் ஸ்ரீஆதிகும்பேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் நந்தி தேவரும் அமிர்தத்தால் ஆனவர் என்பது ஐதீகம்.

மங்கல வாழ்வு தரும் மாசி மகம்!

எம்பெருமான் பாணம் எய்து குடத்தின் மூக்கை உடைத்தபோது, அதிலிருந்து வழிந்து பெருகியோடிய அமிர்தம், குறிப்பிட்ட இரண்டு இடங்களில் ஒன்றுதிரண்டு தீர்த்தமாகத் தேங்கி நின்றதாம். ஒன்று பொற்றாமரைத் தீர்த்தம்; மற்றொன்று மகாமகத் தீர்த்தம்!

இந்தத் தீர்த்தக்குளம்தான் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை... குரு பகவான் சிம்ம ராசியிலும்; சூரியன் கும்ப ராசியிலும் இருக்க, மாசி மாதம் மக நட்சத்திரமும் பௌர்ணமியும் சேர்ந்து வரும் புண்ணியத் திருநாளில், மகாமகப் பெருவிழா காண்கிறது.

மங்கல வாழ்வு தரும் மாசி மகம்!
மங்கல வாழ்வு தரும் மாசி மகம்!

பிரம்மதேவனே முன்னின்று, முதல் மகாமகத் திருவிழாவை நடத்தினாராம். மகாமகக் குளத்தை பிரம்மதேவர் அலங் கரிக்க, அங்கே இடபாரூடராக எழுந்தருளினார் ஈசன். தேவிசக்தியும் விநாயகர் முதலா னோரும் தத்தமது வாகனத்தில் பின் தொடர்ந்து வந்து மகாமக தீர்த்தத்தை வலம் வந்தனர். கும்பநாதர் ஐம்பொன் மண்டபத்தில் எழுந்தருளினார். பிரம்மதேவன், முதலில் ஈஸ்வரனை மகாமகத் தீர்த்தத்தில் நீராட்டி, அர்ச்சித்து வழிபட்டார். தொடர்ந்து, திக்கு பாலகர்களும், தேவர்களும் மகாமகக் குளத் தில் நீராடி வழிபட்டார்களாம். மகாமகத்தன்று இந்தக் குளத்தில் நீராடி ஸ்ரீஆதிகும்பேஸ்வரரை வழிபடுவதால், சிவனருளுடன் தேவர்கள் அனைவரது திருவருளும் கிடைக்கும்.

கங்கை, காவிரி, யமுனை, கோதாவரி, நர்மதை, சரஸ்வதி, குமரி, பயோடினி, சரயு ஆகிய ஒன்பது நதிகளும் புனிதம் வாய்ந்தவை. ஒருமுறை ஈசனைத் தரிசித்த நவ நதிகளும்,''பரம்பொருளே, மக்கள் எங்களிடம் விட்டுப்போகும் பாவங் கள், எங்களை வருத்துகின்றன. அந்தப் பாவக் கறைகளை அகற்ற வழி கூறுங்கள்'' என வேண்டின. அவர்களிடம், ''நதிப் பெண்களே, குரு சிம்ம ராசியில் பிரவேசிக்கும்

மங்கல வாழ்வு தரும் மாசி மகம்!

மக நட்சத்திர வேளையில், தென் பாரதத்தின் குடந்தை நகரில் எழுந்தருள்வேன். அந்த வேளையில் நீங்களும் அங்கு வந்து, அங்குள்ள புனித தீர்த்தத்தில் மூழ்கி,  பாவங்களை நீக்கிக்கொள்ளலாம்'' என்று அருளினார்.

ஈசன் குறிப்பிட்ட புனித நாளில் திருக்குடந்தையை அடைந்த நவநதிப் பெண்களும் மகாமக தீர்த்தத்தில் மூழ்கி தங்களது பாவம் களையப்பெற்றனராம். அதுமட்டுமா? ஒவ்வொரு மகாமகத்திலும் நவ நதி கன்னிகைகள் இங்குவந்து நீராடுவதாக நம்பிக்கை.

ஆக, மகாமக விழாவன்று இந்தக் குளத்தில் நீராடினால், புனிதம் மிகுந்த நவநதிகளிலும் நீராடிய பலன் கிடைக்கும். மகாமக தீர்த் தத்தின் வடகரையில் உள்ள ஸ்ரீகாசிவிஸ்வநாதர் ஆலயத்தில்,  நவநதிதேவியரை தரிசிக்கலாம்.

கும்பகோணத்தில் அடுத்த மகா மகம் 2016-ல்! மகாமக திருவிழா மட்டுமின்றி, வருடம்தோறும் வரும் மாசி மகத்தன்றும் இந்தத் தீர்த்தக் குளத்தில் நீராடி, வழிபடலாம். மாசி மகத்தன்று, கும்பகோணம் மகாமகக் குளத்தில் நீராடி, பித்ருகளுக்கு சிராத்தம் செய்பவர்களுக்கு, கயாவில் கோடி சிராத்தம் செய்த பலன் கிடைக் கும்; நமது 100 தலைமுறைகளும் பாதகங்கள் தீண்டாமல் வாழும் என்கின்றன ஞான நூல்கள். இந்த வருடம் மாசிமக விழா பிப்ரவரி 9 அன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பிப்ரவரி 18-ல் மாசி மகம் தீர்த்தவாரி!

- இரா.மங்கையர்க்கரசி
படங்கள்: சு.குமரேசன்,  ந.வசந்தகுமார்

எப்போதெல்லாம் புனித நீராடலாம்?

மாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, தட்சிணாயன- உத்திராயன புண்ணிய காலங்கள், சுக்கிர வாரம், மகாவிதிபாதம், கார்த்திகை, சிவராத்திரி, மாசிமகம் மற்றும் மகாமகம் ஆகிய தினங்களில் மகாமகக் குளத்தில் நீராடி புண்ணியம் பெறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism