Published:Updated:

`2,500 சிறப்புப் பேருந்துகள்; 14 சிறப்பு ரயில்கள்!' - களைகட்டும் திருவண்ணாமலை தீபத்திருவிழா

85 இடங்களில் 24,000 கார்கள் நிறுத்துவதற்கான கார் பார்க்கிங் வசதி செய்யப்படுகிறது. இதற்கான முன்பதிவு இணையதளம் மூலம் செய்வதற்கு வசதி செய்யப்படுகிறது.

அருணாசலேஸ்வரர் திருக்கோயில்
அருணாசலேஸ்வரர் திருக்கோயில்

அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு அனைத்துத் துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இதுகுறித்து அமைச்சர் கூறுகையில், ``திருக்கார்த்திகை தீபத்திருவிழா 1.12.2019 அன்று அதிகாலை 5.00 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் கொடியேற்றமும் 6.12.2019 அன்று வெள்ளி ரதம் தேரோட்டமும் 7.12.2019 அன்று மகா ரதம் தேரோட்டமும் 10.12.2019 அன்று அதிகாலை 4.00 மணிக்குப் பரணி தீபம் தரிசனமும் மாலை 06.00 மணிக்கு மகாதீபம் தரிசனமும் நடைபெறுகின்றன.

திருவண்ணாமலை தீபம்
திருவண்ணாமலை தீபம்

தீபத்திருவிழா நடைபெறும் 10 நாள்களும் 25 முதல் 30 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தாண்டு பௌர்ணமி கிரிவலம் 11.12.2019 காலை 11.10 மணிக்குத் தொடங்கி, 12.12.2019 காலை 11.05 மணி வரை நடைபெறுகிறது. இந்த நேரத்தில் 5 லட்சம் பக்தர்கள் பௌர்ணமி கிரிவலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

2,500 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

தீபத்திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் தமிழகம் முழுவதிலுமிருந்து 2,500 சிறப்புப் பேருந்துகள் 6,500 ட்ரிப்புகள் மூலம் இயக்கப்படவுள்ளன. மேலும் 2,000 பேருந்துகள் பயணிகளை ஏற்றி இறக்கும் வகையில் 500 பேருந்துகள் பார்க்கிங்கில் தயாராக இருக்கும். தென்னக ரயில்வே மூலமாக 14 சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து கிரிவலப்பாதைக்குச் செல்ல 125 தொடர் மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. திருவண்ணாமலை நகரை இணைக்கும் 9 சாலைகளிலும் 2,420 பேருந்துகள் நிறுத்தும் வகையில் 15 தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

85 இடங்களில் 24,000 கார்கள் நிறுத்துவதற்கான கார் பார்க்கிங் வசதி செய்யப்படுகிறது. இதற்கான முன்பதிவு இணையதளம் மூலம் செய்வதற்கு வசதி செய்யப்படுகிறது. தற்காலிகப் பேருந்து நிலையங்கள் மற்றும் கார் பார்க்கிங் இடங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்களால் நடத்தப்படும் உணவகம், காவல் மையம் அடிப்படை வசதிகள், கழிப்பறைகள், மின் விளக்குகள், மேற்கூரைகள், குடிநீர் வசதி செய்யப்படுகிறது.

திருவண்ணாமலை கோயில்
திருவண்ணாமலை கோயில்

350 சிசிடிவி கேமரா பொருத்தம்!

சுகாதாரத்துறை மூலமாகத் திருக்கோயில் மற்றும் கிரிவலப் பாதையில் 13 நிலையான மருத்துவ முகாம்கள், 3 நடமாடும் மருத்துவ வாகனம், ஒரு தியேட்டர் ஆம்புலன்ஸ், 108 ஆம்புலன்ஸ் வாகனம் 15, இரு சக்கர ஆம்புலன்ஸ் வாகனம் 16, ஜம்ப் கிட் 5, இதுதவிர 34 தகவல் மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை மூலம் 8,500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளார்கள். தீயணைப்புத்துறை மூலமாக 29 தீயணைப்பு வாகனங்கள், 447 தீயணைப்பு வீரர்கள் பணிபுரிய உள்ளார்கள்.

திருவண்ணாமலை மலை ஏறும் பாதைகளாகக் கண்டறியப்பட்டுள்ள 17 இடங்களில், 70 வனத்துறை அலுவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளார்கள். மேலும், திருக்கோயிலுக்கு வெளியே 119 சிசிடிவி கேமராக்களும் உள்ளே 231 சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுக் கண்காணிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரகம், மாவட்ட காவல் துறை அலுவலகம், தீயணைப்பு அலுவலகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ஆகிய 4 அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை ஏற்பாடு செய்யப்படுகிறது.

அனுமதிச் சீட்டுக் கட்டண விவரம்!

பரணி தீபத்துக்கு 4,000 நபர்களும், மகா தீபத்துக்கு 6,000 நபர்களும் கட்டளைதாரர்கள் மற்றும் உபயதாரர்கள் அனுமதிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிறப்புக்கட்டண தரிசன டிக்கெட் ரூ.500 மற்றும் ரூ.600, கட்டணத்தில் 1,100 நபர்களுக்கு, இணையதளம் மூலம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், வரிசையில் நிற்கும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களில் 2,000 நபர்கள் பரணி தீபத்துக்கும் 2,500 நபர்கள் மகா தீபத்துக்கும் கோவிலுக்குள் அனுமதிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

அமைச்சர் தலைமையில் கூட்டம்
அமைச்சர் தலைமையில் கூட்டம்

10.12.2019 மகா தீபம் நாள் அன்று, தீபமலை ஏறுவதற்கு 2,500 பக்தர்களுக்கு மட்டும் மாவட்ட நிர்வாகம் மூலம் அனுமதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளைப்போல் இந்த ஆண்டு திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட்டுச் சிறப்பாக நடத்திடக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார் விரிவாக.