சித்தம்... சிவம்... சாகசம்! - 4


'வெள்ளியுருகிப் பொன்வழி ஓடாமே
கள்ளத் தட்டானார் - கரியிட்டு மூடினார்
கொள்ளி பறியக் குழல்வழியே சென்று
வள்ளியுண்ணாவில் அடக்கி வைத்தாரே...’
- திருமந்திரம்

பொன்னாலே ஓர் உத்ஸவ மூர்த்தி திருஉருவம். அதைத் திருப்பூவனநாதர் திருச்சந்நிதிக்குத் தன் உபயமாய் வழங்கவேண்டும் என்று நினைத்த பொன்னாச்சி, அதற்காக எவ்வளவு பொன் தேவைப்படும் என்று பொற்கொல்லர் ஒருவரை அணுகி வினவியபோது, அவர் சொன்ன பதில் அவளுக்கு அதிர்ச்சியைத் தந்தது.
காரணம், பல தோலாவுக்கு (ஓர் அளவு) தங்கம் வாங்க வேண்டும். அரசர்களுக்கு மட்டுமே சாத்தியப்படுகிற விஷயம் அது. அதைத்தான் பொற்கொல்லரும் கூறினார்.
''தாயே... உனக்கெதற்கு இந்த ஆசை? உன் சொத்தையெல்லாம் விற்றுப் பணம் திரட்டினாலும், உத்ஸவச் சிலையை அதற்குரிய லட்சணங்களோடு காண்பது கடினம். எனவே, உன் எண்ணத்தை மாற்றிக் கொள்'' என்றார்.
அந்த பதில், பொன்னாச்சியை வெகுவாக யோசிக்க வைத்துவிட்டது. அன்று திருச்சந்நிதியில் ஆடி முடித்தவள், கோயில் பட்டரின் மரியாதையை ஏற்கும் நேரத்தில், உள்ளிருக்கும் புவனநாதரைப் பார்த்து கண்ணீர் சிந்தத் தொடங்கினாள்.
##~## |
அதைக் கண்ட பட்டரும், ''அம்மா... உன் விருப்பம் மிகவும் உயரியது. ஆனால், சாத்தியம் இல்லை. அரசர்களால் செய்ய முடிந்தாலும், செய்துபார்க்க விரும்பமாட்டார்கள். காரணம் ஒன்றுதான். எதிர்பாராமல் திருமேனி களவு போனால், தங்கம் என்பதற்காக, திருமேனி என்றும் பாராமல் மிலேச்சர்கள் அதை உருக்கி விடுவார்கள். அது பெரும் பாவம் அல்லவா? ஆனால், கோயில் விமானத்தைத் தங்கத்தால் வேய்வார்கள். காரணம், அதைக் களவாடுவது அவ்வளவு சுலபமில்லை'' என்றார்.
அதைக் கேட்ட பொன்னாச்சிக்குள் மேலும் மேலும் கேள்விகளே முளைத்தெழுந்தன.
''பட்டரே... கள்வர்களுக்கு பயந்தா அந்த பொன்னம்பலன் பொன்னுருக்கொள்ளாமல் இருக்கிறான்?' என்று திருப்பிக் கேட்டாள்.
''அச்சம் அவனுக்கேதம்மா..? அச்சமே அவனைக் கண்டு அஞ்சுமே! அச்சம் எல்லாம் நமக்குத்தான்!''
''அப்படியென்றால், அவன் மேல் நம்பிக்கை நமக்கு இல்லையா? நம்மை எல்லாம் காக்கத் தெரிந்தவனுக்கு தன்னைக் காத்துக்கொள்ளத் தெரியாது என்பதுதான் அவன் வரையில் நாம் உணர்ந்து வைத்திருக்கும் உண்மையா?''
''உன் கேள்விக்கு என்னால் பதில் கூற முடிய வில்லை, பொன்னாச்சி! ஒன்று மட்டும் உறுதி; சொர்ண விக்கிரகம் என்பது சாத்தியமில்லை; அதை மறந்துவிடு! அதற்காக நீ முனைந்தால், தினந்தோறும் நீ சிவனடியார்களுக்கு அமுது படைப்பது என்பது இயலாது போகும்'' என்றார்.
பொன்னாச்சி தன் அமுதுப் படையல் தொண்டினைத் தொடர்ந்தாள். ஆனால், மனத்துக்குள் அந்தத் தங்க விக்கிரக ஆசை இருந்தபடியேதான் இருந்தது.
''இறைவா... நீ எத்தனைக் கருணையானவன்! உன் உள்ளம் பொன் போன்றது. ஆனால், உன் உரு மட்டும் ஏன் செப்பிலும் தாமிரத்திலும் இருக்க வேண்டும்? அது பொன்னில் இருப்பதுதானே சரி? இந்த மாந்தர்கள் தங்கள் அணிகலனுக்குப் பொன்னைப் பயன்படுத்தலாம்; உன் உருவுக்குப் பயன்படுத்தக் கூடாதோ?'' என்று, சதாசர்வ காலமும் சிந்தித்தபடி இருந்தாள்.
அவளது இந்த சிந்தனைத் தீவிரம், மதுரையம்பதியில் ஒரு சித்தனாய் வலம் வந்தபடி இருந்த சிவபெருமான் திருவுள்ளத்தில் சென்று எதிரொலித்தது. அடுத்த நொடியே, திருப்பூவனத்தில் ஓர் அடியார் வடிவில் தோன்றியதோடு, பொன்னாச்சியின் அமுத விருந்து நடக்கும் இடத்தையும் அடைந்தார்.
ஆனால், அந்த விருந்தில் பங்கு கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தார். இதைக் கவனித்த பொன்னாச்சியும் அவரிடம் சென்று வினவினாள். ''அடியவரே.. அமுதுச்சாலைக்கு வந்தும் அமுதுண்ணாமல் இருப்பது ஏன் என்று நான் அறியலாமா?''
''ஒரே காரணம்தான் பெண்ணே! அடியவர்களுக்கு அமுதூட்டும்போது மனத்தில் சிறு வருத்தமும் இருக்கக்கூடாது. ஆனால், உன் மனத்தில் ஒரு பெரும் பாரம் இருக்கக் காண்கிறேன். பிறகு, நான் எப்படி அமுது செய்வேன்?''
அடியார் வேடத்துப் பரமனின் கேள்வி பொன்னாச்சியை சிலிர்க்கச் செய்தது. இதுவரை ஆயிரமாயிரம் அடியார்கள் அமுது செய்திருக்கிறார்கள். ஆனால், ஒருவரும் அவள் உள்ளத்துக்குள் இருந்ததை ஊடுருவிப் பார்த்திடவில்லை. பார்த்திடுவது என்பது ஒரு வல்லமை. அது பலருக்கு இல்லை என்பதும் ஒரு காரணம்.

ஆனால், இப்போது அவளது மனத்தில் புதைந்திருந்த ஆசையை வெளிக்காட்டியது அந்த ஈசன் அல்லவா? அவரிடம் உண்மையை மறைக்க விரும்பவில்லை பொன்னாச்சி. அடுத்த நொடியே, 'உண்மைதான் ஸ்வாமி...’ என்று மனம் உடைந்து அழுதாள்.
''ஒரு பொன் மேனி காண விரும்புகிறேன். ஆனால், எல்லோரும் அது இயலாது என்கின்றனர். அப்படி இயலாத வண்ணம் என்னை ஏழையாகப் படைத்துவிட்டானே அந்த ஈசன் என்பதே என் வருத்தம்.''
''அப்படியென்றால், நீ செல்வச் செழிப்பை வேண்டுவது சுக போகமாய் வாழ அல்ல... அப்படித்தானே?''
''இந்த மண்ணுலகின் சுக போகம் நிலையானதில்லையே ஸ்வாமி? இதை நான் விரும்பினால், அந்த ஈசனை வணங்குவதிலும் பொருள் இல்லையே?''
''உன் மனம் பொன் என்பது புரிகிறது. ஆனால், உன்னிடம் பொருளாக பொன் இல்லை. அப்படித்தானே?''
''ஆம் ஸ்வாமி! எனக்கு வேண்டுமளவு பொன்னைத் தர, இந்தப் பாண்டி மண்டலத்தில் வர்த்தகர்களும் இல்லை. ஏதாவது மாயம் நிகழ்ந்தால்தான் உண்டு!''
''அப்படியே ஆகட்டும்! உன் விருப்பத்தை ஈடேற்ற, நானே அந்த மாயம் புரியத் தயாராக இருக்கிறேன்.''

''மாயம் என்று நான் ஒரு பேச்சுக்குச் சொன்னால், நீங்களும் அதையே பிடித்துக் கொண்டுவிட்டீர்களே? மாயத்தில் வருவது நிலைத்து நிற்குமா?''
'சித்த மாயம் நிலையானது. கவலைப் படாதே..!'
''சித்த மாயமா..? இது என்ன புதிய பதம்?''
''சித்தனான நான் புரியப்போகும் மாயத்தைதான் சித்தமாயம் என்றேன்.''
''நீங்கள் சித்தனா? அடியார் என்றல்லவா எண்ணினேன்.''
''சித்தனும் அடியவன்தான் பெண்ணே!''
''எல்லாமே புதிராக உள்ளது. தயவுசெய்து என் விருப்பத்தோடு விளையாடாதீர்கள்...'
''திருவிளையாட்டை தாராளமாய் ஆடலாம். நீ போய் உன் இல்லத்தில் இருக்கும் உலோக பாத்திரங்கள் அவ்வளவையும் இங்கே கொண்டு வா!''
''ஸ்வாமி...''
''தயங்காதே... பொன்னை அணைத்து நீ பொன்னணையாளாக ஆகிட வேண்டாமா?''
அவரின் கேள்விக்கு அதற்கு மேல் மறுமொழி கூற பொன்னாச்சி தயாராக இல்லை. அவரது மாயத்தை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டாள். அப்போதே அவர் முன் குவிந்தது பொன்னாச்சியின் உலோக பாத்திரங்கள். சட்டி சருவத்தில் இருந்து அண்டா, அடிப்பெருக்கிவரை அவ்வளவும் அவர் முன் வைக்கப்பட்டன.
அவரும் தன் வசமிருந்த விபூதியை எடுத்தார். நெற்றியின் பால் வைத்து தியானிப்பது போல் நடித்தார். தியானமே தியானித்த காட்சியைக் காண பொன்னாச்சிக்குக் கொடுத்து வைத்திருந்தது. பிறகு, தியான விபூதி அவ்வளவு பாண்டங்கள் மேலும் அவரால் தெளிக்கப்பட்டது.
''பெண்ணே... இவற்றை நீ இன்று இரவு முழுக்கத் தீயில் போட்டு வை. விடிந்த பின் பார்... இவை அவ்வளவும் தங்கமாகி இருக்கும்.'' என்றார்.
''தாங்கள் தெளித்த விபூதிக்கு அவ்வளவு சக்தியா?''- பொன்னாச்சி கேட்டாள்.
''அதை நாளை காலையில் நீயே பார்த்துத் தெளிந்து கொள். இதற்குப் பெயர் ரசவாதம்...''
''விவாதம் அறிவேன்; உடலை முடக்கும் முடக்குவாதமும் அறிவேன்; ரசவாதம் என்பதை இப்போதுதான் கேட்கிறேன்.''
''ஒலிப்பது நாதம், ஒளிர்வதோ வாதம்.''
''அருமையான விளக்கம். விவாதத்திலும் கருத்து ஒளிர்கிறது; உடல் வாதத்தில் இயக்கமற்ற தன்மை ஒளிர்கிறது.''
''இங்கே உலோகம் ஒளிரும். நான் வரட்டுமா?''
''ஸ்வாமி... இது பொன்னாகும் வரை இருக்கக்கூடாதா?''
''எனக்கு இருக்க விருப்பம்தான். ஆனால், மீனாட்சியைப் பிரிந்தல்லவா வந்திருக்கிறேன்...''
''அது யார் மீனாட்சி?''
''சரிதான்... அவள் ஆட்சியில் வாழ்ந்து கொண்டு இப்படி ஒரு கேள்வியா..?'' என்று கேட்டவர், அப்படியே மாயமானார்.
அதன் பிறகுதான் பொன்னாச்சிக்கு, வந்தது ஈசன் என்பதும், அவர் புரிந்தது திருவிளையாட்டு என்பதும் புரிந்தது. உச்சி முதல் பாதம் வரை புளகாங்கிதத்தில் பூரித்தாள். கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது.
மறுநாள் காலையில், அவ்வளவு உலோகப் பாத்திரங்களும் பொன்னாகி மின்னின. அதை உவப்போடு அள்ளிப் பொற்கொல்லர் வசம் தந்தாள். ஈசன் தன்னிடம் பேசும்போது, 'மீனாட்சியைப் பிரிந்தல்லவா வந்திருக்கிறேன்’ என்று பிரிய விரும்பாத விருப்பத்தை வெளிக் காட்டியதை உத்தேசித்து, அந்த ரசவாத தங்கத்தைக் கொண்டு சோமாஸ்கந்த உருவைச் செய்ய விரும்பினாள். அதன்படி, சோமனுடன் உமையும், இருவருக் கும் நடுவே கந்தமூர்த்தி நிற்கும் கோலத்தோடு, பொன்னாலே உத்ஸவ விக்கிரகமும் தயாராகியது.
அதை அப்படியே அள்ளி அணைத்து மகிழ்ந்தாள். கன்னத்தையும் உணர்ச்சிப் பெருக்கில் கிள்ள முற்பட்டாள். குழைந்து கொடுத்தார் ஈசனும். அதனால் பொன்னாச்சியின் நகக்குறி கன்னத்தில் பதிந்தது.
இன்றும் இந்தத் திருவுருவம் திருப்பூவனநாதர் ஆலயத்தில் காணக் கிடைக்கிறது. தன் விருப்பத்தை ஈடேற்றிய பொன்னாச்சி பிறகு 'பொன்னணையாள்’ என்று வரலாற்றில் பதியலானாள்.
பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராண நூலில் இந்த திருவிளையாடல் 36-வது படலமாக காணக் கிடைக்கிறது.
இந்த ரசவாத லீலையை அந்த ஈசன் மதுரையம்பதியில் ஏன் நிகழ்த்தவில்லை? திருவாரூர், காஞ்சி, ஆனைக்கா, சிதம்பரம், காளத்தி என்று பிற தலங்களிலும் ஏன் நிகழ்த்தவில்லை? திருப்பூவனத்தில் இதை ஏன் நிகழ்த்தினான் என்பதன் பின்னே சூட்சும காரணங்கள் நிறைய உள்ளன.
அதற்குத் திருப்பூவன தல பெருமையை அறிதல் முக்கியம். ஆவிபோன பின், அது வாழ்ந்த வீடாகிய தேகத்தை சுட்டுச் சாம்பலாக்கி, அதைப் பிறகு காசியில் கரைப்பது என்பது மானுடர்க்கான பித்ரு கர்ம வரையறை.

காசியில் பாயும் கங்கை நீருக்கு அலாதி குணங்கள் உண்டு. அவனியில் பாயும் நதிகளில் கங்கை மட்டுமே உருகிப் பெருகி வரும் நதி. மற்றவை மழை பொழிவால் மலைமேல் வீழ்ந்து, பின் பாய்ந்து ஓடி வருபவை.
ஆனால், கங்கையோ உறைபனி கதிரவனால் உருக்கப்பட, ஓடிவரும் நீராகும். அதனுள் அக்னிக் கங்கின் குணமுண்டு. பாவ எண்ணங்களையும் அந்தக் கங்கினால் கரைத்துவிடுகிறோம் என்பதே சூட்சுமப் பொருள்.
அப்படிப்பட்ட கங்கையானது தென்புலம் பாயாததால், தென்புலத்தவர்களுக்கு எல்லாம் கங்கை நீராடல் ஒரு பெரும் பிரயாசைக்குரிய ஒன்றாக இருந்து வந்தது. எனவே, பித்ரு கர்மங்களைச் செய்யவும் காசி வரை செல்லப் பெரும் காலம் தேவைப்பட்டது. பொருளும் தேவைப்பட்டது.
அந்தக் குறையைப் போக்க விரும்பிய ஈசன், மதுரையம்பதியில் தன் கையை வைத்த இடத்தில் ஒரு நதியைப் படைத்தான். கை வைத்ததால் வந்த அந்த நதி 'வைகை’ ஆயிற்று. கங்கை ஈசனின் கருணை மிகுந்த சிரசில் இருந்து வருவதாக ஓர் ஐதீகம் உண்டு. வைகையோ அருள்மிகுந்த கரத்தில் இருந்து வந்தது. இதற்கும், காசிக்கும் மேலான பாவம் போக்கும் குணம் உண்டு என்பதை உலகத்தவர் உணர, அவன் எண்ணம் கொண்டான்.
அதற்கேற்ப தன் மூதாதையரின் அஸ்திக் கலசத்துடன் காசிக்குப் பயணம் மேற்கொண்ட ஓர் அந்தணர், திருப்பூவனத்தில் பாயும் வைகை ஆற்றில் நீராடுகையில்... அந்த அஸ்திக் கலசத்தை ஒருவர் கையில் கொடுத்து பத்திரமாக வைத்திருக்கச் சொல்லிவிட்டு நீராடச் சென்றார்.
அதை வாங்கிக்கொண்டவருக்கு, கலசத்தில் இருப்பதைத் திருட்டுத்தனமாய் பார்க்கும் ஆசை ஏற்பட்டது. பொன்னோ பொருளோ தான் இருக்கவேண்டும் எனும் எண்ணத்துடன் அதைத் திறந்து பார்த்தார்.
உள்ளே இருந்த அஸ்திச் சாம்பலும் எலும்புத் துண்டுகளும் மணக்கின்ற மலர்களாக அவருக்குக் காட்சியளித்தன. இதையா பாதுகாக்கச் சொன்னார் என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது. அந்தணர் குளித்துவிட்டு வரவும் அவரிடமே கேட்டும்விட்டார்.
'பூக்கலசத்தை பொன் கலசம் போல பாதுகாக்கச் சொல்லிச் சென்றீரே... அப்படி என்ன சிறப்பு இந்தப் பூக்களுக்கு இருக்கிறது? இந்த உலக வனத்திலே இல்லாத பூக்களா இவை?'' என்று கேட்டார்.
அந்தணர் விக்கித்துப் போய் கலசத்தைத் திறந்து பார்க்க, அவருக்கும் பூக்களே காட்சி தந்தன. இது என்ன மாயம் என்று அவர் நெஞ்சு பரவசப்படுகையில் அசரீரி முழங்கிற்று.
'அப்பனே.. நீ உன் கர்ம காரியத்தை இந்த வைகையிலேயே செய்யலாம். இதுவும் கங்கைக்கு நிகரானதே! சொல்லப்போனால் காசிக்கு ஒரு வீசம்கூட என்றும் கொள்ளலாம்.
இதை உணர்த்தவே சாம்பலைப் பூவாக்கினேன். மண்ணில் மலர்பவை பூப்ப தால் பூக்கள் எனப்படும். மரணித்த உடம்பு நெருப்பில் பூப்பதால் அந்தச் சாம்பலும் பூவாகவே கருதப்படும். அந்தப் பூ இங்குள்ள வைகையம்பதியில் கலந்திடும்போது திருப்பூவாகிடும். இந்த வைகைப்புறமும் ஆதலால் திருப்பூவனம் என்றாகட்டும்’ என்று ஒலித்து அடங்கிற்று அசரீரி.
அந்தத் திருப்பூவனக் கரையிலேயே இறைவனும் பூவனநாதனாய் கோயில் கொண்டான். கங்கைக்கரையில் விஸ்வநாதன். இங்கே பூவனநாதன்!
எத்தனைப் பாவம் செய்திருந்தாலும், இங்கே கர்மச் செயல் செய்ய... அதைச் செய்தவருக்கும் முக்தி - செய்யப்படுபவருக்கும் முக்தி.
சாதாரண உலோகம் தங்கமாவது என்பது உலோகத்துக்கான முக்தி. சாதாரண மனிதன் தங்கமாவது என்பது பிறப்புக்கான முக்தி. அதை உணர்த்த இறைவன் தேர்வு செய்த இடமே திருப்பூவனம்!
இந்தத் திருப்பூவனத்து ரசவாத சாகசம், மானுட முக்திக்கும் வழிகாட்டுகிறது. ஈசன் செய்த இந்த சாகசத்தை, அதாவது ரசவாதத்தை சித்தர் பெருமகன் ஒருவர் தன் வாழ்நாளில் செய்து காட்டினார். அது...?
- சிலிர்ப்போம்