Published:Updated:

கேள்வி-பதில்

கேள்வி-பதில்

கேள்வி-பதில்

கேள்வி-பதில்

Published:Updated:
கேள்வி-பதில்
கேள்வி-பதில்
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராவணன் தூக்கிச் சென்றது உண்மையான சீதையே அல்ல. ராவணன் வந்த அன்றே தன்னைப் போன்ற மாயையை உருவாக்கி விட்டு, உண்மை சீதை மறைந்துபோனாள். பிறகு இலங்கையில் ஸ்ரீராமன் அக்னி பரீட்சை வைத்தபோது, மாயை அக்னிக்குள் புக... உண்மை சீதை வெளி வந்தாள் என்று துளசி ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளதே...

இதுகுறித்து மேலும் விளக்கமாக அறிய ஆவல்!

- எஸ்.கோபாலன், சென்னை-61

வால்மீகி ராமாயணத்தில் தென்படாத தகவல்கள், வட்டார மொழிகளில் தோன்றிய ராமாயண நூல்களில் தென்படுவது உண்டு.

சிவ தனுசை நாண் ஏற்றுவதற்கு முன்னரே ஸ்ரீராமன் - சீதா இருவரது கண்களும் சந்தித்து, அன்பைப் பரிமாறிக் கொண்டதாக சித்திரிக்கும் தகவல்களும் வட்டார மொழி ராமாயணத்தில் உண்டு.

சீதையைக் கவரும்போது ஆசிரமத்தையே பெயர்த்து எடுத்து சென்றதாகவும் தகவல் உண்டு. தமது சிந்தனையில் விளைந்த தகவல்களை உண்மை (மூல) ராமாயணத்தில் இடைச்செருகலாக சேர்த்து, தமது சிந்தனைக்கு சமுதாய அங்கீகாரம் பெற நினைக்கும் 'திரிசமங்கள்’ நிறைய உண்டு. அதில், தாங்கள் குறிப்பிடும் தகவலும் ஒன்று.

மாயை சீதைதான் இலங்கை சிறையில் வாடினாள் என்றால், பிற்பாடு சலவைத் தொழிலாளியின் கூற்றுக்கு செவிசாய்த்து, கருவுற்ற சீதையை ஸ்ரீராமன் கானகம் அனுப்பிய முடிவு பொருந்தாமல் போய்விடும்.

மாயை சீதைதான் சிறையில் இருந்தாள் என்றால், மாற்றான் வீட்டில் மனைவி இருந்தாள் என்பது பொய்.

ஸ்ரீராமனும் சீதையும் அண்ணன் - தங்கை முறை; சிற்றன்னையின் தூண்டுதலில் காட்டுக்கு விரட்டப்பட்டார்கள் என்கிற தகவல் பௌத்த ராமாயணத்தில் உண்டு.

ஸ்ரீமந் நாராயணனும் ஸ்ரீமதி லட்சுமிப்பிராட்டியும் ராமனாகவும் சீதையாகவும் தரை இறங்கியவர்கள். சாதாரண பாமரர்களுக்கு ஏற்படும் அவப்பெயர்கள் அவர்களை நெருங்காது. அவர்கள், தமது வாழ்க்கை முறை வாயிலாக சமுதாய மக்களுக்கு நல்வழி புகட்ட வந்தவர்கள்.

ஆகவே... அபவாதத்தை ஏற்றவர்களாக காண்பித்து, பிறகு அதிலிருந்து விடுபட்டு

விளங்குபவர்களாக சித்திரிப்பது... தகவல்களை மக்கள் மனதில் பதியவைத்து சிந்தனையை உயர்த்த முற்படும் செயல்.

'ராமன் வாலியை அடக்கிய விதம் பெருமைக்கு உகந்ததல்ல’ - என்று, இன்றும் பல பட்டிமன்றங்கள், குறையை புதுப்பித்துக் கொண்டிருக்கின்றன. வாலி வதத்தின் ஆழத்தை அறியாத பாமரர் மனமானது, பட்டிமன்ற தகவலை நம்பும்!

நமக்கு ஏற்பட்ட மனநெருடலை ராமனிடம் சுமத்துவது பொருந்தாது என்பதை பாமரர்கள் அறிய மாட்டார்கள். இடைச்செருகலில் விழையும்போது, அந்த இடைச்செருகல் எங்கெங்கெல்லாம் இடிக்கும் என்பதை கவனிக்க மறந்துவிடுவார்கள்.

உண்மை ராமாயணத்தை ஏற்றால், தேவையில்லாத சிந்தனையும் கேள்வியும் எழாது.

தர்மசாஸ்திரம் குறித்த புத்தகம் ஒன்றில், 'மல மாதம்’ என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பௌர்ணமி அல்லது இரண்டு ஸங்கரணம் உள்ள மாதம்; அல்லது, ஸங்கரணம் இல்லாத மாதம் ஆகும். அந்த மாதத்தில் உபநயனம், விவாஹம், நாந்தி, கிரகப்பிரவேசம் முதலான சுப காரியங்கள் செய்யக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி நந்தன வருடத்தின் ஆவணி மாதம் மல மாதம்.

ஆனால், வைதிகர்கள் சிலர், ஆவணியின் சுக்ல பட்சத்துக்கு தோஷம் இல்லை என்று கூறி, அந்த தினங்களில் விவாஹமும், கிரகப்பிரவேசமும் நடத்தியுள்ளனர். இது சரியா?

- பி.வைத்தியநாதன், சென்னை 94

தர்மசாஸ்திரம் மக்களின் தரத்தை புரிந்து கொண்டு அவர்களது முன்னேற்றத்துக்கு உகந்த வகையில் பாரபட்சம் இல்லாமல் இறுதி முடிவை வெளியிடும். மேலும் மேலும் சிறப்புற்று விளங்கும் சீரிய செயல்பாடுகளுக்கு மல மாதம் உகந்ததல்ல என்கிறது தர்மசாஸ்திரம்.

அடைமழையில் வீடுகட்ட முனைய வேண்டாம் என்பார்கள். வேனலில் கிணறு வெட்டினால் வேண்டிய தண்ணீர் எப்போதும் கிடைக்கும் என்பார்கள். மழை பொய்த்த வேளையில் விதை விதைக்காதே; மழைக்காகக் காத்திரு என்றும் சொல்வார்கள். அதுபோன்று, ’நீ எதிர்பார்க்கும் முன்னேற்றம் மல மாதத்தில் இருக்காது’ என்று சாஸ்திரம் சொல்லும்.

தர்மசாஸ்திரத்தின் வாடையே தொடாத சிந்தனைகள், நம் மனதின் விருப்பத்துக்கு ஏற்ப பல விளக்கங்களை அளிக்கும். நமது விருப்பங்கள் அத்தனையும் நன்மையில் முடியும் என்று வரையறுக்க இயலாது.

நமக்கு விருப்போ- வெறுப்போ எதுவானாலும் தர்மசாஸ்திரத்தின் அறிவுரை நமக்கு நிச்சயமாக நன்மை பயக்கும். ஆனால், நமது மக்களின் சிந்தனையானது பெரும்பாலும் தர்மசாஸ்திரத்தை விட்டு வெகுதூரம் விலகியிருப்பதால், சிலரது விளக்கவுரைகளை தர்மசாஸ்திர முடிவாக ஏற்றுக் கொண்டு விடுவார்கள்.

சாஸ்திர அறிவு குன்றியவர்களை அடையாளம் காண பாமரர்களால் இயலாது. இந்தக் குறையானது, தவறான விளக்கங்களை ஏற்று செயல்படவைக்கிறது.

புது சிந்தனைகளை தர்மசாஸ்திரத்தில் புகுத்துவது தவறு. எந்தச் சூழலிலும் எந்த நெருக்கடியிலும் மக்களுக்கு உகந்தவாறு நீக்குபோக்கோடு செயல்படும் திறன் தர்மசாஸ்திரத்துக்கு உண்டு. மக்கள் நலம்தான் தர்மசாஸ்திரத்தின் குறிக்கோள். அதை மீறிய புது விளக்கங்கள் நமது முன்னேற்றத்தைப் பாதிக்கும். சந்தர்ப்பத்தை ஒட்டி செயல்படும் சில சிந்தனைகள், தர்மசாஸ்திரத்தின் அறிவுரையைத் தரம் தாழ்த்துகிறது.

தங்களின் சிந்தனைக்கு ஒரு வார்த்தை... நம்மை திருப்திப்படுத்துவதற்காக தர்மசாஸ்திர விளக்கத்தை மாற்றி அளிப்பவரின் மனம் முதலில் கலக்கமுறும். கலக்கமுற்ற மனம் சரியான வழியில் சிந்தனை செய்யவிடாமல் தடுத்துவிடும். மனதளவில் அவர் தரம் தாழ்ந்து விடுவார்; நம்மவர்களையும் தரம் தாழ்த்திவிடுவார்.

ஆக, இருவருக்கும் நன்மை இல்லாமல் போய்விடும். அவர் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக மாறிவிடும். தன்னிச்சையாக விளக்கம் அளிக்கும்போது, அது மனசாட்சிக்குத் தெரியும். இந்த தவறு பழக்கப்பட்டு அவனுக்கே அது பாதகமாக மாறிவிடவும் வாய்ப்பு உண்டு.

நாங்கள் அந்தண வகுப்பைச் சார்ந்தவர்கள். என் தங்கையின் ஒரே மகன் கலப்பு திருமணம் செய்துகொண்டான்.

அந்தப் பெண்ணுக்கு புண்யாகவாசனம் செய்து வேறு நாமகரணம் சூட்டிவிட்டால், அவளும் அந்தணப் பெண்ணாகி விடுவாள். அதன்பிறகு, அவளும் பிதுர் காரியங்களில் பங்கேற்கலாம்; தர்ப்பை பிடுங்கும் அதிகாரம் வந்துவிடும் என்கிறார் பெரியவர் ஒருவர்.

சாஸ்திரத்தில் இதற்கு இடம் உண்டா?

- ஜெயசித்ரா கிருஷ்ணன், சென்னை-24

அவர் சொல்வது தவறு. ஒரு ஜாதியை இன்னொரு ஜாதியாக மாற்ற சாஸ்திரத்தில் இடம் இல்லை. பிறக்கும்போது தென்படும் இயல்புக்கு இனம் என்று பெயர். அதை ஜாதி என்று குறிப்பிடுவது தவறு. ஒருவரின் இயல்பை மற்றவரில் திணிக்க இயலாது.

குயிலின் குரல் இனிமையானது பிறக்கும்போதே இருக்கும் இயல்பு. அந்த குரல் இனிமையை காக இனத்துக்கு திணிக்க இயலாது. வேம்பின் கசப்பு அது தோன்றும் போதே இருக்கும். அதை இனிப்பாக்கும் முயற்சி வெற்றி தராது.

வேதம், சாஸ்திரம், புராணம், இதிகாசம், சம்பிரதாயம் போன்றவை நல்வழிப்படுத்த முயன்றும்... கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பொய், புனைபுரட்டு, பித்தலாட்டம் போன்றவை சமுதாயத்தில் வளைய வந்து கொண்டுதான் இருக்கின்றன. ராவணனையோ, ஹிரண்யகசிபுவையோ, துரியோதனனையோ அந்த நல்லுரைகளால் திருத்த இயலவில்லை. தன்னுடைய பெண் அல்லது மகன் ஆகியோரை நல்வழிப்படுத்த இயலாத இன்றையச் சூழலில், ஜாதியை மாற்றும் முயற்சி கேலிக்கூத்து. அது முடியாது என்பதால் கலப்படத்தை சீர்திருத்தவாதிகள் ஏற்றார்கள்.

ஜாதி சமுதாயத்தின் சாபக்கேடு; அது வேண்டாம் என்கிற எண்ணத்தில் தங்கள் தங்கையின் மகன் வேற்று ஜாதிப் பெண்ணை மணந்தார். அவருக்குப் பிறக்கும் குழந்தை இரண்டு ஜாதியிலும் சேராத தனி இனம். அந்த வகையில், அவர் தன் ஜாதியையும் மனைவியின் ஜாதியையும் அழித்துவிட்டார்.

இப்படி ஜாதியை ஒழிக்கும் செயலில் சமுதாய சேவகனாகத் திகழும் அவரை, மீண்டும் அந்தண ஜாதிக்கு திருப்ப முயற்சிக்கும் தங்களது செயல், ஜாதி கொள்கையை தக்கவைக்கும் முயற்சி ஆகும்.

தங்களின் மனம், பெண்ணின் ஜாதியைவிட உங்களின் ஜாதி உயர்ந்தது என எண்ணுவதால், அவளை உங்கள் ஜாதிக்கு மாற்ற விரும்புகிறீர்கள். தர்ம சாஸ்திரம் ஜாதியை வைத்து ஏற்றத்தாழ்வைச் சொல்லாது; ஒருவரின் செயலையும் இயல்பையும் வைத்துதான் சொல்லும்.

விஸ்வாமித்திரர் பிராமணராக மாற விரும்பி தவம் இயற்றியும் அது அவரால் இயலவில்லை. இந்த இதிகாச விளக்கத்தை தெரிந்த பிறகும், தங்களின் நிலைப்பாடு மாறவில்லை.

தர்மசாஸ்திரம் ஜாதியைப் பற்றிப் பேசாது. பிறக்கும் தறுவாயில் ஏற்படும் இயல்பை மட்டுமே இனத்தைப் பிரிக்கும் தகுதியாகச் சொல்லும். ஸ்வபாவத்தை (இயல்பை) வைத்து இனம் பிரிக்கப்பட்டது என்று கீதையில் கண்ணன் சொல்வான்.

'ஸ்வபாவம்’ என்பது நாம் குறிப்பிடும் ஜாதி ஆகாது. விஷத்தை உமிழும் பாம்பு, விஷம் இல்லாத பாம்பு என்று இரண்டு இனங்கள் உண்டு. இரண்டும் பாம்பு இனம்தான்.

புளித்த மாங்காய், புளிக்காத மாங்காய் - இந்த இரண்டையும் இணைக்கும்போது ஒட்டு மாங்காய் உருவெடுக்கும். ஒட்டு மாங்காய் அந்த இரண்டு இனத்திலும் சேராது. அதில் தென்படும் இனிப்பு, தனக்குக் காரணமான மாங்காயின் தரத்தை அழித்துவிட்டது. இப்போது ஒட்டு மாங்கனி தனியினம். அதை புளித்த மாங்காய் இனமாகவோ, புளிக்காத (கோமாங்காய்) இனமாகவோ மாற்ற இயலாது.

ஆக, ஜாதியை வெறுக்கும் தங்கள் சகோதரி மகனிடம் ஜாதியைத் திணிப்பது தவறு. புண்யாஹவாசனமும் பெயர் சூட்டு விழாவும் இழந்த ஜாதியை ஈட்டித் தரும் என்ற தங்களின் கனிப்பு சிறுபிள்ளைத்தனம்.

சமுதாய மறுமலர்ச்சிக்கு உதவும் தங்கள் சகோதரி மகனை திரும்பவும் ஜாதியில் ஒடுங்கவைக்கும் முயற்சி, அவரது நல்லெண் ணத்தை அழிக்கும்.

பூத உடலுக்கு உயிரூட்ட நினைக்கக்கூடாது. தூக்கி எறிந்த ஜாதியை திரும்பப் பெற நினைப்பது அழகல்ல. முற்போக்கில் அடியெடுத்து வைத்தவனை பிற்போக்குவாதியாக மாற்ற எண்ணாதீர்கள்.

தங்கள் மனதில் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்கிற எண்ணம் ஒளிந்து கொண்டிருப்பதால் அவனை அந்தணனாக்க முயற்சிக்கிறது. தர்மசாஸ்திரம் ஒரு ஜாதியை மாற்ற எண்ணாது; அது முடியாது என்பதால் பரிந்துரைக்காது.

- பதில்கள் தொடரும்...

கேள்வி-பதில்