Published:Updated:

முக்திநாத்

முக்திநாத்

முக்திநாத்
முக்திநாத்
##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மு
க்திநாத்- தினம் தினம் முகுந்தனைத் தேடிவந்து தரிசிக்கும் அடியார்களுக்கு முக்தி நல்கும் அற்புத க்ஷேத்திரம். பெரியாழ்வாரும், திருமங்கையாழ்வாரும், ஸ்ரீராமானுஜரும் பாடிப்பரவிய திருத்தலம். பாரதத்தின் எல்லைக்கு வெளியே (நேபாளத்தில்) இமயத்தில் அமைந்துள்ள திவ்விய தேசம். திருச்சாளக்கிராமம் என்று பெரியோர்களும் ஞான நூல்களும் போற்றும் திருப்பதி!

'நேபாளத்தின் தலைநகர் காட்மண்டுவில் இருந்து சுமார் 98 கி.மீ. தூரத்தில் உள்ள தாமோதரகுண்ட் எனும் இடமே திருச்சாளக்கிராமம்’ என்று சொல்பவர்களும் உண்டு. எது எப்படியோ... பரமபத நாதனின் சாந்நித்தியம் பரிபூரணமாக வியாபித்திருக்கும் புண்ணிய பூமியாய்த் திகழ்கிறது முக்திநாத்.

எங்களுக்கு முக்திநாத் செல்லும் பெரும்பேறு கிடைத்தது பூர்வஜென்மத்துப் புண்ணியம்தான்! கடந்த ஆகஸ்ட் மாதம், சென்னையில் இருந்து ரயிலில் (ரப்திசாகர் எக்ஸ்பிரஸ்) புறப்பட்டோம். சுமார் இரண்டு நாள் பயணத்தின் நிறைவில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் கோரக்பூரைச் சென்றடைந்தோம். அங்கிருந்து வாடகைக் காரில் சுமார் 2 மணி நேரம் பயணித்து, இந்திய- நேபாள எல்லையில் உள்ள சோனாலியை அடைந்தோம். இந்த ஊரில் விடுதி வசதிகள் உண்டு. நாங்கள் அன்று இரவு தங்கியிருந்தது, குஜராத்தி சமாஜத்தினரால் நடத்தப்படும் விடுதி.

மறுநாள் காலையில், பஸ் பயணம் துவங்கியது. சோனாலியில் இருந்து சுமார் 450 கி.மீ. தொலைவில் உள்ள பொக்காரா எனும் ஊருக்குச் செல்ல வேண்டும். அங்கு அன்று இரவு தங்கியிருந்துவிட்டு, மறுநாள் காலையில் விமானம் மூலமாக 'ஜொம்சொம்’ எனும் இடத்துக்குச் செல்வது எங்கள் திட்டம். ஆனால், மோசமான வானிலை காரணமாக, பொக்காராவில் விமான சர்வீஸ்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. எனவே, தரைவழிப் பயணத்தை தவிர, வேறு வழியில்லை. மறுநாள், பொக்காராவில் இருந்து புறப்பட்டு, பெனி என்ற ஊரை அடைந்தோம். அங்கிருந்து நம்மூர் மினி பஸ் போன்ற வேனில் பயணத்தைத் தொடர்ந்தோம். விமானம் மூலம் இருபதே நிமிடத்தில் பூர்த்தியாகி இருக்கவேண்டிய அந்தப் பயணம், சுமார் 10 மணி நேரம் தரை வழியாக... அதுவும் அபாயங்களும் ஆச்சரியங்களும் நிறைந்ததாக அமைந்துபோனது.

பொக்காராவில் இருந்து பெனி வரையிலும் சாலை ஓரளவு பரவாயில்லை. அதன்பிறகு திகில் பயணம்தான். பாதையின் ஒரு புறம் மலைச்சரிவு, மறுபுறமோ அதல பாதாளம். பல நூறு அடி ஆழத்தில் ஆக்ரோஷத்துடன் சீறிப் பாயும் கண்டகி நதியைப் பார்க்கும்போதே மயிர்க்கூச்செரிந்தது!

முக்திநாத்

இடையில் திரிசூலி என்றொரு ஆறும் கண்டகியுடன் சேர்ந்துகொள்ள, கேட்கவா வேண்டும். இன்னொரு விஷயம்... இந்த மலைப் பாதையில் பெரும்பாலான இடங்களில் தடுப்புச் சுவரே இல்லை; கரணம் தப்பினால் மரணம்தான். அனுபம் மிகுந்தவர்களால் மட்டுமே இந்தப் பாதையில் வாகனத்தைச் செலுத்த இயலும். ஆங்காங்கே தொங்கு பாலங்கள் வேறு. பல இடங்களில் குறுகலான மரப்பாலத்தின் மீதாகவும் ஊர்ந்து சென்றது எங்கள் வாகனம். இன்னும்... மழைச் சேறு, மலைச் சரிவுகளில் திடுமென உருண்டு விழும் பாறைகள், அபாயகரமான வளைவுகள்... என ஒவ்வொன்றும் மரண பயத்தைத் தந்தாலும், அனைத்தையும் மீறி முக்திநாத் இறைவனைத் தரிசிக்கும் பரவசம் மனத்துக்குள்! ஆர்ப்பரிக்கும் ஆறுகள், விண்முட்டி நிற்கும் தவளகிரி, அன்னபூர்ணா, மச்சபுக்கரெ முதலான மலைச் சிகரங்கள் என ஒவ்வொன்றையும் வியப்புடன் ரசிக்கும் அதேவேளையில்...

முக்திநாத்

இயற்கையின் பிரமாண்டத்தின் முன் நாமெல்லாம் வெறும் தூசு என்ற எண்ணம் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.

ஒரு வழியாக ஜொம்சொம் சென்றடைந்தோம். அங்கிருந்து முக்திநாத் கோயிலுக்குச் செல்ல, ஜீப்புகளும் தயாராக நின்றன. சுமார் 2 மணி நேரப் பயணம்...இமயமலையின் சிகரங்களின் ஊடாகவும், கண்டகி ஆற்றைத் தாண்டிக்கொண்டும், சின்னஞ்சிறு கிராமங்களின் வழியாகவும் பயணித்து முக்திநாத்தை அடைந்தோம். வண்டிக்காரர்கள் இறக்கிவிட்ட இடத்தில் இருந்து படிக்கட்டுகளில் ஏறிச் சென்றால், அரைமணி நேரத்தில்... முக்திநாதர் ஆலயம் கண் எதிரே கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. ஆலயத்தின் முன்பாக பக்தர்கள் புனித நீராட வசதியாக, தொட்டி அமைப்பிலான திருக்குளங்கள் உள்ளன. அவை தவிர, தனித் தனிக் குழாய்கள் மூலம் 108 தீர்த்தங்கள் வழிகின்றன.

ஆலயம் சிறியதுதான். ஆனாலும், அற்புத அழகோடு திகழ்கிறது. சிறிய ஒற்றைப் பிராகாரம் மட்டுமே! கருவறையில் கனக விமானத்தின் கீழ் நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறார் ஸ்ரீமுக்தி நாராயணன். பக்தர்கள் மூலஸ்தானத்தின் அருகிலேயே சென்று, நிதானமாக வழிபடலாம்.

நைமிசாரண்யம் என்னும் திவ்விய தேசத்தில் வனமாகவும், புஷ்கரணியில் நீராகவும், பத்ரிநாத்தில் மலையாகவும், ஸ்ரீரங்கத்தில் அர்ச்சா விக்கிரகமாகவும், முக்திநாத்தில் சாளக் கிராமமாகவும் திருமால் எழுந்தருளியிருப்பதாக நம்பிக்கை. நாமும், மூவுலகுக்கும் முக்தி நல்கும் ஸ்ரீமுக்தி நாதனை மனம் குளிரத் தரிசித்தோம்.

கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்
சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செருக்களத்து
மலை கொண்டு அலைநீர் அணைகட்டி மதிள் நீர் இலங்கை வாளரக்கர்
தலைவன் தலைபத்து அறுத்துகந்தான் சாளக்கிராமம் அடைநெஞ்சே

- என்று திருமங்கை ஆழ்வாரின் வழி நின்று, அவரின் பாசுரம் பாடித்தொழுது வணங்கினோம். இறைவனின் திருமுக தரிசனம் கண்ட அந்தக் கணப் பொழுதில்... அதுவரை நாங்கள் பட்ட சிரமங்கள் அனைத்தும் மறந்துபோயின. மனம் முழுக்க வியாபித்தான் அந்த மாலவன்!

முக்திநாத் செல்லும் பக்தர்கள், இங்கே கண்டகி நதியில் இருந்து ஸ்ரீவிஷ்ணுவின் அம்சமான சாளக்கிராமக் கல்லை எடுத்து வந்து, வீட்டில் வைத்து பூஜிப்பார்கள். இதனால் இல்லத்தில் இறை சாந்நித்தியமும் சகலசுபிட்சமும் நிறைந் திருக்கும். ஆலயத்துக்குச் செல்லும் வழியில் கடைகளிலும் சாளக்கிராமக் கற்களை விற்பனை செய்கிறார்கள்.

கோயில் சந்நிதியில் பூதேவி, சந்தோஷிமாதா, நர நாராயணர், புத்தர், ராமானுஜர் மற்றும் விநாயகர் விக்கிரகங் களையும் தரிசிக்கலாம். ஸ்ரீகருடாழ்வாரின் திருமேனியும் இருக்கிறது. ஸ்ரீராமானுஜரும் முக்திநாதரின் மகிமையைப் போற்றிப் பரவசம் அடைந்திருக்கிறார். இங்கு, ராமானுஜர் மடம் ஒன்றும் உள்ளது.

தரிசனம் முடித்து திரும்பும்போது மீண்டும் எப்போது வருவோம் என்றே ஏங்குகிறது மனம்.  வானிலை மோசமாக இருந்ததால், திரும்பும்போதும் தரை வழிப் பயணம்தான்! கோரக்பூர் வந்து அங்கிருந்து, ரப்திசாகர் எக்ஸ்பிரஸில் சென்னை திரும்பினோம். முக்திநாத் பயணம் மகிழ்வுடன் நிறைவடைந்தது.

உங்கள் கவனத்துக்கு...

முக்திநாத் செல்ல விரும்பும் அன்பர்கள் மழைக்காலத்தைத் தவிர்ப்பது நல்லது. மே மற்றும் செப்டம்பர் உகந்த மாதங்கள்.

சென்னையில் இருந்து முக்திநாத்துக்கு மட்டுமே சென்று வர, (விமான சர்வீஸ் ரத்தாகாமல் இருந்தால்) குறைந்தது 8 நாட்கள் தேவைப்படும். எதற்கும் கூடுதலாக 3 நாட்களை ஒதுக்குவது நல்லது. முக்திநாத் தரிசனம் சீக்கிரம் முடிந்தாலும், வழியில் உள்ள வேறு தலங்களையும் தரிசிக்க அவகாசம் கிடைக்கும்.

கோரக்பூர் வரை (மிமிமி  கிசி) ரயில் கட்டணம், விமானக் கட்டணம் உள்பட ஒரு நபருக்கு சுமார் 16,000 ரூபாய் செலவு பிடிக்கும்.

பொக்காராவில் இருந்து ஜொம்சொம் செல்ல விமானப் பயணமே சிறந்தது. பயண நேரம் 20 நிமிடங்கள் மட்டுமே! ரிஸ்க்கும் குறைவு; செலவும் குறைவு. விமான சர்வீஸ் ரத்தானதால், தரை வழிப் பயணத்துக்கு (5 பேருக்கு) கூடுதலாக 20,000 ரூபாய் செலவானது.

நம்ம ஊர் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் நேபாளத்தில் செல்லாது.

நேபாளம் செல்ல இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் தேவை இல்லை.

உங்கள் குழுவில் இந்தி பேசத் தெரிந்தவர் இருந்தால், மிகவும் நல்லது. டாக்ஸி டிரைவர்கள், கடைக்காரர்கள் என அங்கே எவருக்கும் ஆங்கிலம் ஓர் அட்சரம் கூடத் தெரியவில்லை.

ஆங்காங்கே நடக்கவேண்டியதும் இருக்கும். தரைவழிப் பயணம் சற்றுக் கடினம்தான். எனவே, முக்திநாத் பயணம் மேற் கொள்பவர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தையும் கருத்தில் கொள்வது மிக அவசியம்!