
ஞானப் பொக்கிஷம்! - 15


'ஞானப் பொக்கிஷம்’ என்னும் இப்பகுதியில், இதுவரை தகவல் களை முதலில் பார்த்தோம். அதன் பிறகே அந்தத் தகவல்கள் அடங்கிய நூல் எது, அது உருவான வரலாறு என்ன, அதை எழுதியவர் யார் என்பனவற்றைப் பார்த்தோம். அதற்கு மாறாக, இப்போது நூலைப் பற்றி முதலில் பார்த்துவிடலாம்.
ஏன்? என்ன காரணம்?
காரணம், இந்த நூல் மிக மிக உயர்ந்தது; இதில் உள்ள தகவல்களோ மிக மிகக் கடினமான தத்துவங்களைக் கொண்டவை.
நூலின் பெயர் - யோக வாசிஷ்டம். ஞான வாசிஷ்டம் என்ற பெயரும் உண்டு. வசிஷ்ட முனிவர், ஸ்ரீராமனுக்குச் சொன்ன தத்துவக் களஞ்சியமே இந்த நூல். வசிஷ்டர் உபதேசம் செய்ததால், இந்த நூலுக்கு 'வாசிஷ்டம்' என்ற பெயரும் உண்டு.
வால்மீகி மகரிஷி, பரத்வாஜர் என்பவருக்குச் சொல்ல ஆரம்பித்ததாக நூல் தொடங்குகிறது.
குருகுலவாசம் முடிந்த பின்பு, தந்தை யின் அனுமதி பெற்றுத் தீர்த்த யாத்திரை சென்று வந்தார் ஸ்ரீராமர். அவர் போன இடங்களில் எல்லாம் ஒரே சோக மயமாகவே இருப்பதைக் கண்டார். இதனால், அவருக்கு எல்லாவற்றிலும் பற்று விட்டுப்போய்விட்டது. எந்தச் செயலையும் செய்ய அவர் மனம் இடம் கொடுக்கவில்லை. உடம்பும் இளைத்துப் போய்விட்டது.
அந்த வேளையில்தான் விஸ்வாமித்திர முனிவர் தசரதரிடம் வந்து, தான் செய்யப் போகும் யாகத்தைக் காப்பதற்காக ஸ்ரீராமரை தன்னுடன் அனுப்பிவைக்குமாறு வேண்டினார். அப்போது ஸ்ரீராமர் அங்கு வந்தார். தந்தையையும் முனிவரையும் வணங்கி, தன் இருக்கையில் அமர்ந்தார். தன் மனதில் இருந்தவற்றை எல்லாம் சபையில் கொட்டத் தொடங்கினார்.
அதன் சாராம்சம் இதுதான்...
''நான் தீர்த்த யாத்திரை போய்விட்டு வந்த பிறகு, என் புத்தி எப்போதும் சிந்தனையிலேயே ஆழ்ந்திருக்கிறது. இந்த உலகத்தில் எல்லா ஜீவராசிகளும் இறப்பதற்காகவே பிறப்பதாகவும், பிறப்பதற்காகவே இறப்பதாகவும் தோன்றுகிறது. இந்த நிலையில்... நான் யார்? இந்த உலகம் என்பது என்ன? ராஜ்ஜியத்தாலோ போகங்களாலோ என்ன பலன்? இவற்றை யெல்லாம் சிந்தித்துப் பார்த்தால், என் மனது எதையுமே விரும்பவில்லை. எதிலுமே நாட்டம் கொள்ளவில்லை. ஒருவன் பணக்காரனாக இருந்தால், அவனை மக்கள் ஏசுகிறார்கள். வீரனாக இருந்தால், அவன் தற்புகழ்ச்சி கொண்டவனாக இருக்கிறான். பணக்காரனோ, வீரனோ, ஏழையோ... யாராக இருந்தாலும் சரி; ஆயுள் என்பது, புல்லின் நுனியில் உள்ள பனித்துளியைப் போல, எந்த விநாடியிலும் அழியும் நிலையில் இருக்கிறது.

என்ன வாழ்க்கை இது? மரங்கள், மிருகங்கள், பறவைகள் போல நாமும் வாழ்ந்து மடிவதில் என்ன லாபம்? மறுபிறவி என்பதை இல்லாமல் செய்துகொண்டால்தான், நாம் வாழ்ந்த வாழ்க்கை பலன் உள்ளதாக இருக்கும். ஆனால், அவ்வாறு செய்யவிடாமல், ஆசை ஆட்டிப் படைக்கிறது. எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும், அவனையும் ஆசை துரும்பைப்போல ஆட்டி வைக்கிறது.
அரசு, செல்வம், அழகு, திறமை... என எதுவாக இருந்தாலும், அவற்றையெல்லாம் காலம் அழித்துவிடுகிறது. மனிதன் குழந்தை யாக இருக்கும்போது செயலற்று, பேச்சற்று... சிறுநீர் முதலான அசுத்தத்திலே கிடக்கிறான். சிறிது வயதானவுடன் பெற்றோர்கள், குரு, தன்னை விடப் பலசாலி எனப் பலரிடமும் அவன் பயப்பட வேண்டியதாக இருக்கிறது. அதன் பிறகு இளமை வந்துவிட்டாலோ, கேட்கவே வேண்டாம். தெளிவாக இருக்கும் புத்திகூட மழைக்காலத்து நதிகளைப் போலக் கலங்கிப் போகிறது. பெண்களிடம் மயங்கி, மதி கெட்டுப்போகிறது. பெண்ணாசையால் மனம் காயப்படாமல், எவன் இளமை பருவத்தைத் தாண்டுகிறானோ, அவனே மகாத்மா!
அதே நேரம், இளமையாக இருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே, உடம்பில் தளர்ச்சியும் முதுமையும் வந்துவிடு கிறது. அப்போதும் ஆசை குறைவதில்லை; ஆனால், எதையும் அனுபவிக்கவும் முடியாது. இதைவிட வேறு என்ன துக்கம் வேண்டும்? அதையும் மீறி, இந்த உலகத்தில் யாருக்காவது சுகம் இருப்பதாகத் தோன்றினால்... அவனுடைய வாழ்நாளை, எலி கயிற்றைக் கத்தரிப்பதைப் போல, காலம் கத்தரித்துவிடுகிறது.
காலம் என்பதில் சிக்கி, மலைகள் தூள் தூளாகப் போகின்றன. கடல்கள் வற்றிப் போகின்றன. தேவர்களும் அழிந்து போகிறார்கள். ஏன்? தேவாதி தேவர்களுக்குக் கூட முடிவு வந்துவிடுகிறது. அப்படி இருக்கும்போது, என்னைப் போன்றவர்கள் விஷயத்தில் கேட்கவா வேண்டும்?
##~## |
ஸ்ரீராமருடைய இந்த வார்த்தைகளை நாம் சற்று அசை போட்டுப் பார்ப்போம்.
ஸ்ரீராமருக்குத் தோன்றிய இந்த எண்ணங் கள், நம்மில் பெரும்பாலோருக்குத் தோன்றாது. ஒருவேளை, ஒரு சிலருக்குத் தப்பித்தவறித் தோன்றினாலும், யாரிடம் போய் இவற்றுக்கு விளக்கம் கேட்பது? எப்படிப் பதில் கிடைக்கும்?
இங்கே நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். ஞானத்தில் தலைசிறந்தவர்கள் பலர் இருந்த சபையில்தான் ஸ்ரீராமர் இவ்வாறு தன் மனத் துயரை வெளிப்படுத்தியிருக்கிறார். அதற்கு, அப்போது அங்கே இருந்த விஸ்வாமித்திரர் பதில் சொல்லவில்லை; வசிஷ்டர்தான் பதில் சொன்னார். நம் நாட்டின் தலைசிறந்த ஞானப் பொக்கிஷமான யோக வாசிஷ்டத்தில், வசிஷ்டர் சொன்ன அந்த அற்புதமான பதில்...
(இன்னும் அள்ளுவோம்)