Published:Updated:

கேரள திவ்ய தேசங்கள்! - 04

கேரள திவ்ய தேசங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கேரள திவ்ய தேசங்கள்! ( கேரள திவ்ய தேசங்கள்! )

இந்தப் பெருமாளுக்கு முக்கிய வழிபாடு, சந்தனக்காப்பு, பால் பாயச நைவேத்யம், துளசி மாலை சார்த்துதல் ஆகியவையே!

கேரள திவ்ய தேசங்கள்!
கேரள திவ்ய தேசங்கள்!
கேரள திவ்ய தேசங்கள்!
கேரள திவ்ய தேசங்கள்!

வேறுகொண்டு உம்மையான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!    
தேறு நீர்ப்பம்பை வடபாலைத் திருவண்வண்டூர்
மாறில்போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே  

-நம்மாழ்வார் (6ஆம் பத்து, முதல் திருவாய்மொழி)

கேரள திவ்ய தேசங்கள்!
கேரள திவ்ய தேசங்கள்!

பொருள்: 'கூட்டமாய் உள்ள வண்டினங்களே! உங்களைத் தனியாக அழைத்து நான் வேண்டுகிறேன். பம்பை நதியின் வடபுறம் உள்ள திருவண்வண்டூர் எனும் தலத்தில் என் பெருமாள் எழுந்தருளியுள்ளார். போரில் நிகரில்லாத அரக்கனான ராவணனின் மதில்களை இடித்துத் தூளாக்கியவர் அவர். அப்படிப்பட்ட வல்லமை படைத்தவருக்கு 'யானும் உள்ளேன்’ என்று கூறுங்களேன்..!'

மகாபாரதத்தில் வரும் பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரிக்குப் பிறந்தவர்கள் நகுலனும் சகாதேவனும்! இவர்களில், நகுலன் கட்டி வழிபட்ட கோயில்தான், திருவண்வண்டூரில் அமைந்துள்ள ஸ்ரீபாம்பணையப்பர் பெருமாள் கோயில். கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டம், செங்கண்ணூரில் இருந்து வடக்கில் சுமார் 6 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது இந்தக் கோயில்.

பாம்புப் படுக்கையில் பாம்பை அரவணைத்தபடி சில திருத்தலங்களில் காட்சி தருபவர் என்பதை நினைவுகூரும் வகையில், இத்தலத்துப் பெருமாளுக்கு 'ஸ்ரீபாம்பணையப்பர்’ என்று பெயர் வந்தது. ஆனால், இங்கே பாம்பின் மீது துயில் கொண்ட வடிவம் இல்லை. நின்ற திருக்கோலம்தான்! மேற்கு நோக்கித் திருமுகம் காட்டி அருள்பாலிக்கிறார் அவர்.

வேதாலய விமானம்; பாபநாச தீர்த்தம்; நாரதருக்குப் பிரத்யட்சம் ஆகியவை ஆலயச் சிறப்புகள். நம்மாழ்வார் 11 பாசுரங்களால் இந்தப் பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார் பகவான் தன் உருவத்தை ஆழ்வாருக்குக் காட்டாமல் காலம் கடத்த, அவர் ஆற்றாமை மேலிட்டுத் தலைவி நிலையை அடைந்து, திருவண்வண்டூர் பெருமாளிடம் பறவைகளைத் தூது அனுப்புவதாக அவர் பாடியுள்ள பாசுரங்கள் பேசுகின்றன.

கேரள திவ்ய தேசங்கள்!
கேரள திவ்ய தேசங்கள்!
##~##
ஒருமுறை ஸ்ரீபிரம்மா, தேவரிஷி நாரதருக்குச் சாபமிட, நாரதர் இத்தலத்துக்கு வந்து ஸ்ரீபாம்பணையப்பரை வழிபட்டார். அவர்முன் மகாவிஷ்ணு தோன்றி, சாப விமோசனம் அளித்தார். அப்போது, 'ஞானோபதேசம் செய்வதே தமது தொழிலாக வேண்டும்'' என்று பெருமாளிடம் நாரதர் வரம் கோரிப் பெற்றாராம். பதினெண் புராணங்களுள் ஒன்றான 'நாரத புராணம்’ படைக்கப்பட்ட தலமும் இதுவே! 'சைவமும் வைணவமும் ஒன்றுதான்; மனிதர்கள் அனைவரும் சமமாகவே மதிக்கப்பட வேண்டும்’ என்று இந்தப் புராணம் கூறுகிறது.

ஸ்ரீமகாவிஷ்ணுவே கடைத்தேற்றும் சக்தி என்பதை உணர்த்தி, அவரைப் பூஜிக்கும் முறை, பூஜா மூர்த்திகளின் ஸம்ஹிதைகள் ஆகியவை குறித்த 'சாஸ்திர கிரந்தம்’ என்னும் நூலை நாரதர் இத்தலத்தில் இயற்றியதாகப் புராணத்தில் குறிப்புகள் உள்ளன.

சிரஞ்ஜீவி என்று போற்றப்படும் மார்க்கண்டேய மகரிஷிக்கு மகாவிஷ்ணு தாயார் ஸ்ரீகமலவல்லி நாச்சியாருடன் காட்சி தந்த திருத்தலம் இது. அதனால், ஸ்வாமிக்கு ஸ்ரீகமலநாதன் என்றும் ஒரு திருநாமம் உண்டு. தாயாருக்கு இக்கோயிலில் பிரதிஷ்டை இல்லை; மகாவிஷ்ணுவுடனேயே தாயார் இருப்பதாக ஐதீகம்.

கேரள திவ்ய தேசங்கள்!
கேரள திவ்ய தேசங்கள்!

ஒருமுறை, ஆலய வளாகத்தில் மண்ணைத் தோண்டியபோது, நிறைய விக்கிரகங்கள் கிடைத்தனவாம். அவற்றைத் தனிச் சந்நிதியில் வைத்து பூஜை செய்து வருகிறார்கள். நகுலன் இங்கு சிலையாகக் காட்சி தருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம். இனி, கோயிலுக்குள் தரிசிக்கச் செல்வோம்...

அமைதியான கிராமச் சூழலில், ஆலய நுழைவாயில் நம்மை வரவேற்கிறது. உள்ளே நுழைந்ததும் இடதுபுறம் ஸ்ரீகோசாலகிருஷ்ணன் தனிச் சந்நிதியில் காட்சி தருகிறார். நின்ற திருக்கோலத்தில் இரு கரங்களுடன் அருளும் இவர், துவாபர யுகத்தில் பக்தர்களால் வழிபடப்பட்டவர் என்று சொல்லப்படுபவர். இந்தக் கிருஷ்ணர் தன் வலது கையைக் கீழ் நோக்கியும், இடது கையில் ஒரு உருண்டையை ஏந்தியும் காட்சி தருகிறார். இந்த உருண்டை வெண்ணெய் என்று கருதப்படுகிறது. அவரின் இடையில் ஆவினங்களை ஓட்டும் சிறு கோல் ஒன்று தொங்குகிறது.

கேரள திவ்ய தேசங்கள்!
கேரள திவ்ய தேசங்கள்!

கோயிலின் மையப் பகுதியில் மூலவர் சந்நிதி அமைந்துள்ளது. தகதகக்கும் கொடிமரத்தைக் கடந்து, பலி பீடத்தைத் தாண்டி உட்பிராகாரம் சென்றால், அங்கே சதுர வடிவத்தில் தென்படுவது நமஸ்கார மண்டபம். இந்த மண்டபத்தில் உள்ள அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கண்களைக் கவர்கின்றன. கூரையில் பிரம்மா மற்றும் அஷ்டதிக் பாலகர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதைத் தாண்டி வலம் வந்தால் கருவறை, இரட்டைத் தளக் கூரையுடன் காட்சியளிக்கிறது. கூரைக்குக் கீழே சுவரில் யாளிகள், ஸ்ரீபிரம்மா, ஸ்ரீசிவன், ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீநரசிம்மர் மூர்த்திகள் திசைக்கொன்றாய் காட்சி தருகின்றனர். ஸ்ரீகணபதி, ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீசிவன், ஸ்ரீசாஸ்தா ஆகியோரும் கோயிலில் உறைந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். நாகர் சிலைகளுக்கு வெளியே தனிச் சந்நிதி இருக்கிறது.

ஒருகாலத்தில் அடர்த்தியான வனப் பகுதியாக இருந்த இந்த இடத்தில் நிறைய வண்டுகள் இருந்ததாகவும், அதனாலயே திருவண்(வனம்) வண்டு ஊர் = திருவண்வண்டூர் என்று பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள். அதேபோல், 'திருவன் (மகாவிஷ்ணு) உறைந்துள்ள (உண்டு) ஊர் என்பதால் 'திருவன் உண்டு ஊர்’ என்ற ஆதிப் பெயர் இத்தலத்துக்கு இருந்ததாகவும், காலப்போக்கில் அந்தப் பெயரே 'திருவண்வண்டூர்’ என்று ஆனதாகவும் கூறப்படுகிறது.

பாண்டவர்கள் வனவாசம் தொடங்கியபோது, இந்த வனப் பிரதேசத்துக்கு முதலில் வந்தார்கள். இங்குதான் யுதிஷ்டிரர் சூரியபகவானை அஷ்டாட்ஷர மந்திரத்தைச் சொல்லி பூஜைகள் செய்து வழிபட்டு, வேண்டிய போதெல்லாம் உணவு தரும் அட்சய பாத்திரத்தைப் பெற்றார் என ஒரு புராணக் குறிப்பு தெரிவிக்கிறது. இதன் நினைவைப் போற்றும் வகையில், இந்தக் கோயிலில் இன்றளவும் தினமும் பெரிய அளவில் அன்னதானம் செய்கிறார்கள்.

கேரள திவ்ய தேசங்கள்!
கேரள திவ்ய தேசங்கள்!

இக்கோயில் பக்தர் உண்ணிகிருஷ்ண னிடம் பேசியபோது, ''ஆண்டுதோறும் மார்ச் 30 முதல் மே 19 வரை 51 நாட்கள் திருவிழா நடைபெறும். அந்த விழாவில், ஸ்ரீமத் பாகவதம் 7 கட்டமாக 49 நாட்களும், ஒருநாள் ராமாயண பாராயணமும், இறுதி நாளில் அகண்ட பாராயணமும் (ராம ராம) நடைபெறுகிறது. 50ஆவது நாளில், தருமர் உருவாக்கி ஆராதித்த திருச்சிற்றாறு ஆலயத்தில் இருந்து 'கஜ மேளா’ என்ற பெயரில் 25 யானைகளுடன் ஸ்வாமி ஊர்வலமாகப் புறப்பட்டு திருவண்வண்டூர் வந்து சேர்கிறார். அன்று, பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் (வகை வகையான உணவுகள்) வழங்கப்படுகிறது. தவிர பிப்ரவரி, மார்ச் மாதங்களில் 10 நாள் உத்ஸவம் சிறப்பாக நடைபெறும்'' என்றார் அவர்.

கேரள திவ்ய தேசங்கள்!
கேரள திவ்ய தேசங்கள்!

கோயில் மேல்சாந்தி வேணுகோபால கிருஷ்ணன் நம்பூதிரி கூறுகையில், '51 வருடங்களுக்கு முன்பு, பக்கத்து கிராமத்துப் பள்ளி ஆசிரியர் தாமோதரன் என்பவரின் கனவில் ஸ்ரீகோசாலகிருஷ்ணர் சிலை விஷ்ணு புஷ்கரணியில் இருப்பதாகத் தோன்றியது. பக்தர்கள் சுமார் 48 அடி ஆழம் தோண்டியதும் கிடைத்தவர்தான் இந்தக் கோசாலகிருஷ்ணர். ஒன்றரை அடி உயரத்தில், பசுக்களை மேய்க்கும் திருக்கோலம். சிலை கிடைத்ததை நினைவுகூரும் வகையில்தான் 51 நாள் திருவிழா இங்கு கொண்டாடப்படுகிறது. மக்கள் பெரும் திரளாக இந்தத் திருவிழாவில் பங்கேற்பார்கள். கோயிலின் தல விருட்சம் அரச மரம்'' என்றார்.

மூலவரான ஸ்ரீபாம்பணையப்பர் சந்நிதியின் மேல்சாந்தியான கிருஷ்ணன் நம்பூதிரி நம்மிடம் பேசும்போது, 'இந்தக் கோயில் நடை அதிகாலை 5 மணிக்குத் திறக்கப்பட்டு, காலை 11:30 மணிக்கு சார்த்தப்படும். மீண்டும் மாலை 5 மணிக்குத் திறந்து இரவு 8 மணிக்கு சார்த்துகிறோம். இந்தப் பெருமாளுக்கு முக்கிய வழிபாடு, சந்தனக்காப்பு, பால் பாயச நைவேத்யம், துளசி மாலை சார்த்துதல் ஆகியவையே! இந்த மகாவிஷ்ணுவை வழிபட்டால், பக்தர்களுக்குக் காரியஸித்தி கிட்டும்; நினைத்தது நடந்தேறும்; குழந்தை பாக்கியம் தாமதமாகும் தம்பதியருக்கு சந்தானப் பிராப்தி கிட்டும் என்பது பக்தர்களின் அழுத்தமான நம்பிக்கை'' என்றார் கிருஷ்ணன் நம்பூதிரி.

- தரிசனம் தொடரும்...
படங்கள்: ரா.ராம்குமார்