Published:Updated:

மழலை வரம் அருளும் மகேசனின் அன்னப் பிரசாதம்!

ஐப்பசி அன்னாபிஷேகம்...

மழலை வரம் அருளும் மகேசனின் அன்னப் பிரசாதம்!
##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பிஷேகப் பிரியரான ஈஸ்வரனை ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி திருநாள் அன்று, ஒவ்வொரு நட்சத்திரத்துக்கு உரிய பொருட்களால் வழிபடுவது விசேஷம்.

சித்திரையில் மருக்கொழுந்து, வைகாசியில் சந்தனம், ஆனி மாதத்தில் காராம் பசுவின் பால், ஆவணியில் வெல்லம், புரட்டாசியில் கோதுமை மற்றும் பசு நெய் கலந்த வெல்ல அப்பம், கார்த்திகை மாதத்தில் பசு நெய் மற்றும் தாமரை தீபம், தை மாதத்தில் கருப்பஞ்சாறு, மார்கழியில் பசு நெய் மற்றும் நறுமண பன்னீர் சமர்ப்பித்து வழிபடுவார்கள். அதேபோல், ஐப்பசி மாதத்தில் அன்னத்தால் ஈஸ்வரனை வழிபடுவது சிறப்பு.

'அன்னம் பரப்பிரம்ம சொரூபம்’ என்பார்கள். அதாவது, அன்னம் வேறு, ஆண்டவன் வேறு அல்ல. இதையே 'சோத்துக்குள்ளே இருக்கார் சொக்கநாதர்’ என்றும் சொல்வது உண்டு.

சிவலிங்க பாணத்தின் நீள்வட்ட வடிவமானது, எல்லையற்ற ஒன்றைக் குறிக்கும். அதாவது, பிரபஞ்ச சக்தியை உணர்த்துவது. அரிசியின் வடிவமும் நீள்வட்டம்தான். ஆகாயத்தில் தோன்றும் காற்றின் துணையுடன் நெருப்பு எரிகிறது. நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகிறது. ஆக, அன்னமும் பஞ்ச பூதங்களின் சேர்க்கையாகிறது. பொன், பொருள் எவ்வளவு கொடுத்தாலும் திருப்தி அடையாதவனை 'போதும்’ என்று சொல்ல வைப்பதும் அன்னம் மட்டுமே!

ஆக, உன்னதமானவருக்கு உன்னதமானதைச் சமர்ப்பிக்கும் வாய்ப்பைத் தருவது ஐப்பசி அன்னாபிஷேகம். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் கோயில் கொண்டிருக்கும் அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரருக்கும், ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தேறும்.

''தனது 16 கலைகளுடன் பூரண சோபையுடன் சந்திரன் திகழும் பௌர்ணமி திருநாளில், 150 கிலோ அன்னத்தைக் கொண்டு, இங்கே ஈஸ்வரனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும். ஈஸ்வரனின் லிங்கத் திருமேனி முழுவதும் மறையும்வண்ணம் அன்னம் சாற்றி பூஜை நடக்கும். அன்னத்தால் வெள்ளை லிங்கமாக மிளிரும் ஆண்டவனுக்குக் கண்களாக கறுப்பு திராட்சை, காதில் குண்டலமாக முறுக்கு, இரண்டு புறமும் புடலங்காய் மாலை மற்றும் இனிப்பு வகைகளால் அலங்காரம் அமர்க்களப்படும். அதன் பிறகு, உலக மக்கள் வளம்பெறும் பொருட்டு கணபதி ஹோமமும், தோஷங்களும் துன்பங்களும் நீங்க ருத்ர ஹோமமும் நடக்கும்!'' எனச் சிலிர்ப்புடன் விவரிக்கிறார் இந்தக் கோயிலின் தலைமை அர்ச்சகர் சிவகுமார்.

அன்னாபிஷேக தினத்தில் ஈசனின் திருமேனியில் சாற்றப்படும் ஒவ்வொரு பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம். எனவே, அன்று சிவதரிசனம் செய்தால் கோடிலிங்க தரிசனத்துக்குச் சமம். அன்று லிங்கத்தின் மேல் சாற்றப்பட்ட அன்னம் வீரியம் மிக்க கதிர்வீச்சு கொண்டதாக இருக்கும் என்பது ஐதீகம். அன்று, பாண லிங்கத்தின் மேலுள்ள அன்னம் தவிர்த்து, ஆவுடை மற்றும் பிரம்ம பாகத்தின் மேலுள்ள அன்னம், மக்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. தயிர் கலந்து கொடுப்பதும் வழக்கத்தில் உண்டு.

பிறகு, அந்தப் பிரசாதத்தில் ஒரு பாகம், அருகிலுள்ள திருக்குளத்தில் கரைக்கப்படும். ஏன் அப்படி?

'பல்குஞ் சரந்தொட்டு எறும்பு கடையானதொரு
பல்லுயிர்க் குங் கல்லிடைப் பட்டதேரைக்கும்
அன்றுற் பவித்திடும் கருப் பையுறு சிவனுக்கும்
மல்குஞ் சராசரப் பொருளுக்கும் இமையாத
வானவர் குழாத்தினுக்கும் மற்றுமொரு மூவருக்கும் யாவருக்கும்’

- என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, இறைவனது பிரசாதம் எறும்பில் தொடங்கி நீர்வாழ் உயிரிகள், மனிதர்கள் என சகல ஜீவராசிகளுக்கும் இதன் மூலம் சென்றடைகிறது.

ஸ்ரீராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் அருளும் அம்பாள், படியளக்கும் ஸ்ரீஅன்னபூரணியாக அருள்வது விசேஷம். ஈசனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் அதே வேளையில், அம்பாள் சாகம்பரி அலங்காரத்தில் காய்கறி மாலையுடன் காட்சி தருவாள். அன்று அம்பாளுக்கு மஞ்சள் பொடி, திரவியப் பொடி, பால், பன்னீர், இளநீர், தேன் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அத்துடன், சக்தி ஹோமமும் நடைபெறும்.

ஸ்ரீஐயப்பன், விநாயகர், முருகன், பைரவர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் ஆகியோரையும் இங்கே தரிசிக்கலாம். இந்தக் கோயிலுக்கு வந்து, ஐப்பசி அன்னாபிஷேக வைபவத்தைத் தரிசிப்பதுடன், அன்னாபிஷேக பிரசாதத்தைப் பெற்றுச் சாப்பிட, பிள்ளை இல்லாதவர்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மேலும், அம்பாள் அன்னபூரணிக்கு மாங்கல்ய பூஜை செய்து வழிபடுவதால், திருமணத் தடை நீங்கும்; இங்கு அருளும் ஸ்ரீகால பைரவருக்கு காரிய ஸித்தி ஹோமம் செய்து வழிபட, மனை தொடர்பான பிரச்னைகள் நீங்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

இந்தத் திருக்கோயிலில், வருடத்துக்கு ஒருமுறை நிகழும் ஏகாதச ருத்ர ஹோமமும் சாந்நித்தியமானது. இதில் கலந்துகொண்டு ஸ்வாமியையும் அம்பாளையும் வழிபட்டு வர, வினைகள் யாவும் நீங்கும்.

- சு.ராம்குமார்