Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!
##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ரங்கள் அடர்ந்திருக்கிற அந்த மலைப் பகுதி மிகச் செழிப்பாக இருந்தது. மழைக்குக் குறைவின்றி இருந்தது. மழை நீர், மலையில் இருந்து கொட்டுகிற அருவியாகவும், மலையினூடே இறங்கி வந்து தரைப்பகுதியில் ஓடும் நதியாகவும் வடிவம் கொண்டு, பசுமைக்குப் பங்கம் வராமல் அந்தப் பிரதேசத்தைக் காத்துக்கொண்டு இருந்தது.

'அட... இந்த இடம் நன்றாக இருக்கிறதே! ஆஹா, இதைவிட அந்த இடம் ரொம்பப் பிரமாதம்’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு, ஒவ்வொரு இடத்தையும் பார்த்துப் பார்த்து ரசித்து, இறுதியாக நந்தியாவட்டையும் செவ்வரளியும் துளசியும் பூத்து நறுமணம் பரப்பிய அந்த வனத்தில் தங்குவது என முடிவு செய்தார், காசியப முனிவர்.

'மிகப் பிரமாண்டமாக ஓடி வரும் பொருநை நதி, இங்கே கிளை பிரிந்து அவசரமில்லாமல் வெகு நிதானமாக, குறுகலாக ஓடுகிற அழகே அழகு!’ என மனம் லயித்தார் முனிவர். 'எனக்குள் இருக்கிற கர்வத்தையும், நான் இந்த அண்டத்தில் பிரமாண்டமானவனாக இருக்கிறேன் என்கிற மமதையையும் அழித்து, உன்னுள் என்னை ஒடுக்கிக் கொள்ளேன் பரந்தாமா!’ என்று வடக்கு திசை நோக்கி வணங்கினார்.

ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!

'இதோ... இந்த இடத்தில்தான் தங்கப் போகிறேன். தங்கி, உன்னையே எப்போதும் நினைத்து தவம் செய்யப் போகிறேன். இந்தக் காட்டிலும் மேட்டிலும், மண்ணிலும் மலையிலும், செடியிலும் கொடியிலும், பூவிலும் நறுமணத் திலும் நான் உச்சரிக்கிற உன் திருநாமங்கள் தங்கி, இந்த இடத்தை இன்னும் வளமையாக்கட்டும். நல்ல அதிர்வுகள் ஏற்பட்டு, இந்த இடத்தில் சாந்நித்தியங்கள் பெருகட்டும்’ என்று சொல்லியபடி, அங்கே நீராடினார்.

வடக்கு திசை பார்த்தபடி அமர்ந்துகொண்டார். கண்கள் மூடி, மதுரையம்பதியில் உள்ள அந்தத் தலத்து இறைவனையே நினைந்து, நாராயண நாமம் சொல்லிய படியே அவனது திருவடியைப் பற்றிக்கொண்டு, தவத்தில் மூழ்கலானார்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தலத்து இறைவனை ரொம்பவே பிடிக்கும். சிலருக்கு ஸ்ரீரங்கம் அரங்கனையும், இன்னும் சிலருக்கு திருப்பதி வேங்கடவனையும் பிடிக்கும். அல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதியின் மீது மாறா பக்தியுடன் இருப்பவர்களாக இன்னும் சிலரும் இருப்பார்கள் அல்லவா! அதுபோல் காசியப முனிவர், திருமாலிருஞ்சோலை என்று அழைக்கப்படும் அழகர்கோயிலில் குடிகொண்டிருக்கும் இறைவன் மீது மாறாத பக்தி கொண்டிருந்தார். 'கண்ணார தரிசனம் தா நாராயணா’ என்று திருமாலை நினைத்து, மனமுருகி தவமிருந்தார்.

ஆலயம் தேடுவோம்!

அவரின் தவத்துக்கான பலன் கிடைத்தது. காசியப முனிவரின் தவத்தில் மகிழ்ந்த திருமால் அவருக்குத் திருக்காட்சி தந்தருளினார். அந்த வனமே அழகாயிற்று. கனிகளில் சுவையும், காற்றில் மென்மையும், பூக்களில் அதீத நறுமணமும் கூடிற்று. அங்கே கிளை பிரிந்து ஓடுகிற நதி நீர், புண்ணிய நதியாகத் திகழ்ந்தது.

ஆலயம் தேடுவோம்!

காசியபர் ஆனந்தக் கண்ணீரில் திளைத்தார். நெடுஞ்சாண்கிடையாக விழுந்து இறைவனை நமஸ்கரித்தார். 'அழகனே... எனக்காக இங்கே திருக்காட்சி தந்ததுபோல், இந்தத் தலத்துக்கு வருபவர்களுக்குத் தாங்கள் அருள வேண்டும்!’ எனக் கேட்டுக் கொண்டார். 'அப்படியே ஆகட்டும்’ என்றார் திருமால். இப்போதும் அங்கே கோயில் கொண்டு, தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அருள் மழை பொழிந்து வருகிறார்.

சுந்தரம் என்றால் அழகு. இங்கே... இந்த தலத்தில் ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் எனும் திருநாமத்துடன் அழகு கொஞ்சக் காட்சி தருகிறார் எம்பெருமாள்.

திருநெல்வேலியில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலை வில் உள்ளது வீரவநல்லூர். சேரன்மாதேவிக்கும் அம்பாசமுத்திரத்துக்கும் இடையே உள்ள அற்புதமான ஊர்.

பின்னாளில், வீரமாறன் எனும் பாண்டிய மன்னன், இந்தப் பகுதியில் வேட்டையாட வந்தான். அப்போது மன்னனின் வேட்டை நாயை, முயல் ஒன்று மூர்க்கமாக வந்து எதிர்த்தது. முயலின் ஆக்ரோஷத்தைத் தாங்க இயலாமல் அந்த கம்பீரமான வேட்டை நாய் பயந்து, பம்மிப் பின்வாங்கியது. இதைக் கண்ட மன்னன் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தான். இதை அமைச்சர் பெருமக்களிடம் அந்தணர்களிடமும் பகிர்ந்துகொண்டு, விளக்கம் கேட்டான். அங்கே சிவாலயம் எழுப்பும்படி அவர்கள் சொல்ல... அதன்படியே அந்த வனத்தில் அழகிய சிவாலயம் ஒன்றை எழுப்பி வழிபட்டான் அந்த மன்னன். அதனால் இந்தப் பகுதி, அவன் பெயராலேயே வீரமாறநல்லூர் என்று அழைக்கப்பட்டு, பிறகு வீரவநல்லூர் என மருவியதாம்!

அவனுக்குப் பின்பு வந்த வேறொரு மன்னன், காசியப முனிவர் வழிபட்டு வரம் பெற்ற தலம் இது என்பதை அறிந்து, இங்கே பெருமாளுக்குக் கோயில் எழுப்பி, நிலங்களையும் ஆடுகளையும் மாடுகளையும் தானமாக வழங்கினான். இந்தத் தலத்து இறைவனின் திருநாமம்- ஸ்ரீசுந்தரராஜ பெருமாள். தாயாரின் திருநாமம்- ஸ்ரீசுந்தரவல்லித் தாயார்.

ஆலயம் தேடுவோம்!

ஒருகாலத்தில், வீரவநல்லூர் பெருமாள் கோயில் திருவிழா என்றால், நெல்லைச் சீமையில் உள்ள பல ஊர்களில் இருந்தும் மக்கள் மாட்டுவண்டிகளைப் பூட்டிக் கொண்டு, குடும்பம் குடும்பமாக இங்கே வந்துவிடுவார்களாம். நான்கைந்து நாட்கள் தங்கியிருந்து, அத்தனை உத்ஸவங்களையும் சிறப்பு பூஜைகளையும் கண்ணாரத் தரிசித்துச் செல்வார்களாம். காலையில் ஒரு வாகனத்தில் வீதியுலா, மாலையில் இன்னொரு வாகனத்தில் வீதியுலா என விழா நடக்கிற 10 நாட் களும் ஒவ்வொரு வாகனத்தில் வீதியுலா வருவார் பெருமாள். ஆனால், இத்தனைப் பெருமைகள் கொண்ட ஆலயத்துக்குக் கும்பாபிஷேகம் நடந்தே சுமார் 100 வருடங்களாகிவிட்டன என்பதைக் கேட்டதும் நெஞ்சே அடைத்துக் கொண்டது, துக்கத்தில்!

புரட்டாசியில் இந்தக் கோயி லில் விழா முடிந்த மறுநாள் துவங்கி அடுத்த மாதம் வரைக்கும் வெளுத்து வாங்குமாம் மழை. அதையடுத்து, அந்த வருடம் முழுவதும் தண்ணீர்ப் பஞ்சமே இல்லாமல், ஏகபோக சாகுபடிகள் நிறைந்திருக்குமாம். ஆனால் இன்றைக்கோ... திருவீதியுலா வந்த ஸ்வாமியின் வாகனங்கள் எல்லாமே முகம் சிதைந்தும் கால்கள் ஒடிந்தும் பரிதாபமாக நிற்கின்றன.

தினமும் இந்த ஆலயத்தில் ஐந்து கால பூஜைகளும் செவ்வனே நடைபெறுவதற்கு மன்னர் பெருமக்கள் தகுந்த ஏற்பாடுகள் செய்த காலமும் இருந்திருக்கிறது. ஆனால், இப்போது யாருமே வந்து வழிபட முடியாதபடி முட்களும் புதர்களும் மண்டி, சுவர்களும் விமானங்களும் விரிசல் விட்டு, செடி- கொடிகள் முளைத்து, எந்த நேரத்திலும் விழும் நிலையில் இருப்பதால், தரிசிப்பதற்கும் மக்கள் வரவில்லை; பூஜைகளும் சரிவர நடைபெறவில்லை.

ஆலயம் தேடுவோம்!

இங்கே, ஸ்ரீநவநீதகிருஷ்ணன் ரொம்பவே விசேஷம்! ஸ்ரீசுந்தரராஜ பெருமாளுக்கு வஸ்திரம் சார்த்தி திருமஞ்சனம் செய்து வழிபட்டால் திருமண பாக்கியம் கிடைக்கும் என்றும், ஸ்ரீநவநீதகிருஷ்ணருக்கு பிரார்த்தித்துக் கொண்டால் பிள்ளை வரம் கிடைக்கும் என்றும் பூரிப்புடன் சொல்கின்றனர் ஊர்மக்கள்.

கோயிலைப் பழையபடி பொலிவுறச் செய்ய வேண்டும்; விமானங்களையும் சுவர்களையும் சீரமைக்கவேண்டும்; குறிப்பாக, எம்பெருமாளின் வாகனங்களைச் செப்பனிட்டு அல்லது புதிதாக அமைத்து, நெடுங்காலத்துக்குப் பிறகு, ஊரில் உள்ள தெருக்களில் ஸ்ரீசுந்தரராஜ பெருமாளின் திருமேனி திருவீதியுலா வரவேண்டும்; விரைவில் ஸம்ப்ரோக்ஷணம் சிறப்புற நடக்கவேண்டும் என்று ஸாந்தீபனி எஜுகேஷனல் மற்றும் சாரிட்டபிள் டிரஸ்ட் பாலாலயம் செய்து, திருப்பணியைத் துவக்கி உள்ளது.

அர்ஜுனனுக்கும், அவனுக்குச் சொல்வதன் மூலமாக உலக மக்களுக்கும் உபதேசித்து அருளியவர் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். அவரின் குரு... ஸாந்தீபனி என்பவர். இவரிடம் அறுபத்து நான்கே நாட்களில், அறுபத்து நான்கு கலைகளையும் கற்றறிந்தாராம் ஸ்ரீகிருஷ்ணர்.

கோயிலுக்கு அருகில் நம் பாவங்களையெல் லாம் போக்கி அருளும் சுந்தரபுஷ்கரணி தீர்த்தக் குளம் உள்ளது. கோயிலுக்கு உள்ளே ஸ்ரீசுந்தரராஜ பெருமாளும், கருணையே வடிவான ஸ்ரீசுந்தரவல்லித் தாயாரும் கோலோச்சுகின்றனர்.

பழையபடி ஆலயம் பொலிவுறவும், இறைவன் திருவீதியுலா வரவும் நாம்தான் ஏதேனும் செய்தாக வேண்டும். ஊர்கூடினால்தான் தேரிழுக்க முடியும்; உலக மக்கள் கூடித் திருப்பணியில் ஈடுபட்டால்தான், சிதைந்து கிடக்கும் கோயில் சீர்பெற்றுக் கும்பாபிஷேகம் நடைபெறும். அந்தப் பலன்... நம்மை மட்டுமின்றி நம் சந்ததிக்கும் போய்ச் சேரும்!

படங்கள்: பி.எஸ்.முத்து