மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!
கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!
##~##
ள்ளிக்கூடத்தில் ஆசிரியராக இருப்பவராகட்டும், அலுவலகத்தில் பணிபுரிபவராகட்டும்... அவர்கள் எப்படிச் செயல்படவேண்டும் தெரியுமா?

ஆசிரியர் என்றால் மாணவர்களுக்கு ஞானத்தை வழங்கி, அவர்களைக் கைதூக்கிவிடுபவர்களாக இருக்கவேண்டும். குறிப்பாக, படிப்பில் மந்தமாக இருக்கிற மாணவர்களை அடையாளம் கண்டு, கூடுதல் கவனம் செலுத்தி, அவர்களைத் தேர்ச்சி பெறச் செய்யவேண்டும். அப்படிச் செயல்பட்டால்தான், அந்த ஆசிரியர் அடுத்தடுத்த காலகட்டங்களில் தலைமை ஆசிரியராக, பள்ளி முதல்வராக எல்லாம் உயரமுடியும்.

அதேபோல் அலுவலகத்தில் பணிபுரிபவருக்கும் அடுத்தடுத்த உயர்பதவிகளை அடையவேண்டும் என்று விருப்பம் இருக்கும். தான் செய்கிற வேலையில் இருந்து விடுபட்டு, அடுத்த உயர் பதவிக்கு அவர் செல்லவேண்டும் என்றால், அவர் அதுவரை பார்த்து வந்த வேலையைத் திறம்படச் செய்வதற்கு, அவருக்குக் கீழே பணிபுரிபவரைத் தகுதியுள்ளவராகச் செய்து, தன் இடத்துக்கு உயர்த்திவிடவேண்டும். ஆக, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல, அவருக்கும் பதவி உயர்வு கிடைக்கும்; அவருக்குக் கீழே இருந்த நபரும் முன்னுக்கு வந்துவிடுவார்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் விஷயத்திலும் அப்படித்தான் நடந்தது. மகாபாரத யுத்தத்தில் வென்றவர் யார் என்றால் சாட்ஷாத் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்தான். இத்தனைக்கும் அவர் எந்த ஆயுதத்தையும் எடுக்கவில்லை; எவர் சிரசையும் கொய்து வீரத்தை நிலை நாட்டவில்லை. ஆனாலும், ஜெயித்தது அவர்தான். தர்மத்தை நிலைநாட்டியது கண்ண பரமாத்மாதான்.

'அப்படியென்றால், பஞ்ச பாண்டவர்கள்தானே போரில் ஈடுபட்டார்கள்? அவர்கள்தானே கடும் சண்டையிட்டு, ஒவ்வொருவராக வீழ்த்திக் காட்டினார்கள்? அவர்களுக்கு அந்தப் பெருமை சேராதா?’ என்று கேட்கலாம்.

உண்மைதான். ஆனால், பஞ்ச பாண்டவர்களை உயர்த்துவதற்காக, தருமமே சிறந்தது என்று அறத்தின் வழியே வாழ்ந்தவர்களை கௌரவப்படுத்துவதற்காக ஸ்ரீகண்ணபிரான் செய்த விளையாட்டு அது! பஞ்சபாண்டவர்கள் போர் தொடுத்தார்கள்; ஆனால், அவர்கள் வெற்றியைத் தழுவுவதற்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணர்தான் உறுதுணையாக, பக்கபலமாக இருந்தார். அதனால்தான் பகவானை நாயகன் என்று போற்றிக் கொண்டாடுகிறோம்.

கண்ணபிரான் கால்நீட்டிப் படுத்துக்கொண்டிருந்தார். ஆனால், தூங்கவில்லை. அர்ஜுனனும் துரியோதனனும் வருவதை அறிந்தவர், தூங்குவதுபோல் நடித்தார். உள்ளே நுழைந்த அர்ஜுனன், அவரின் திருவடிக்கு அருகில் நின்றுகொண்டான். துரியோதனன் அவரின் திருமுடிக்கு அருகில் நின்றான்.

கண்களைத் திறந்த பகவானின் பார்வையில் முதலில் பட்டவன், திருவடி அருகில் நின்றிருந்த அர்ஜுனனே! 'என்ன வேண்டும்?’ என்று பகவான் கேட்க, ''யுத்தத்துக்கு உதவி புரியவேண்டும்'' என்றான் அர்ஜுனன்.

உடனே ஸ்ரீகிருஷ்ணர், ''என்னிடம் கோடிக்கணக்கான வீரர்கள் உள்ளனர். அந்தப் படை வேண்டுமா, அல்லது நான் ஒருவன் இருக்கிறேன். நான் வேண்டுமா? கேள் அர்ஜுனா?'' என்றார்.

அதைக் கேட்டு துரியோதனன் திடுக்கிட்டான். சற்றே கோபமானான். ஸ்ரீகிருஷ்ணனின் பார்வையில் படும்படி வந்து நின்று, ''கண்ணா, நான்தான் முதலில் நுழைந்து உன் அருகில் வந்து நின்றேன். என்னிடம் அல்லவா முதலில் கேட்க வேண்டும்? அவனிடம் முதலில் கேட்பது சரியல்ல!'' என்றான்.

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!

''அடடா..! கண் விழித்ததும் எனக்கு முன்னே அர்ஜுனன் நின்றிருந்ததைத்தான் பார்த்தேன். போகட்டும், உன்னைவிட அவன் வயதில் சிறியவன் அல்லவா! எனவே, இளையவனிடம் முதலில் கேட்பதே முறையாக இருக்கும்'' என்றான் ஸ்ரீகிருஷ்ணன்.

அதையடுத்து அர்ஜுனன், ''உன்னிடம்   கோடி பேரென்ன... பத்து கோடி பேர் கொண்ட படை வேண்டுமானாலும் இருக்கட்டும். எங்களுக்கு அந்தப் படை வேண்டாம். நீ ஒருவன் மட்டும் எங்கள் பக்கம் இருந்தால் போதும், கண்ணா. யுத்தத்தில் எங்களுக்கு வெற்றி நிச்சயம்!'' என்று உறுதிபடத் தெரிவித்தான்.

ஆமாம். பகவான் ஸ்ரீகிருஷ்ணர், நாயகன்; சகாயன்; நாதன்; ஆசிரியன்; ஆபத்பாந்தவன். அதனால்தான் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் துணையை பஞ்சபாண்டவர்கள் நாடினார்கள்; வெற்றியும் பெற்றார்கள்.

பகவான் கண்ணபிரான், நம்மை அழைத்துச் செல்கிறான். நமக்குத் தேவையில்லாதவற்றை எல்லாம் அழித்தொழித்துவிட்டுத் தேவையானவற்றை வழங்குகிறான். இதனை 'நயதி’ அதாவது 'அழைத்துச் செல்பவன்’ என்றும், 'பிராபயததி’ அதாவது 'தேவையானவற்றைத் தந்தருள்கிறான்’ என்றும் போற்றியுள்ளனர் பெரியோர்.

அதுமட்டுமா? நம்மை வழிநடத்துபவனே பகவான் ஸ்ரீகிருஷ்ணன்தான். பாண்டவ சகோதரர்களை யுத்தத்தில் வழிநடத்தியதும் அவன்தானே! 'அது எப்படி? சேனைக்கு அதிபதியாக, சேனாதிபதியாக இருந்தால்தானே அவன் யுத்தத்தை வழிநடத்தியிருக்கமுடியும்? அவன் வெறும் தேரோட்டிதானே?’ என்று சிலர் கேட்கலாம்.

சரி... தேரில் கண்ணபிரான் தேரோட்டுகிறான். பின்னே அர்ஜுனன் அமர்ந்திருக்கிறான். இப்போது வழிநடத்திச் செல்பவர் யார்? எவருக்குத் தரவேண்டும் மரியாதை?

முன்னே இருப்பவன் என்பதால், கண்ண பிரானுக்கு முக்கியத்துவம் தரவேண்டுமா? முதலாளி என்பதால் அர்ஜுனனுக்கு மரியாதை செய்யவேண்டுமா?

அர்ஜுனன் உட்பட இந்த உலகத்து மக்கள் அனைவருக்குமே மோட்சம் பெறவேண்டும் என்கிற விருப்பம் உண்டு. மோட்ச கதி அடையவேண்டும் என்பதற்கு என்னென்ன வழிகள் உள்ளன என்கிற தேடல் இல்லாத மனிதர்கள் வெகு குறைவு.

வீட்டில் இருக்கும்போது வீட்டுக்கான கடமைகளைச் செய்து, அலுவலகத்தில் இருக்கிற நேரத்தில் நமக்குக் கொடுக்கப் பட்ட வேலையைச் சிறப்புறச் செய்து வாழ்வதுதானே வெற்றிக்கான வழி! அதேபோல், மோட்ச கதியை அடைய வேண்டும் என்றால், பக்தி யோகத்தில் திளைக்கவேண்டும்; ஞானத்தின் மீது விருப்பம் கொண்டு ஆழ்ந்து தியானிக்க வேண்டும். உண்மையான பிரார்த்தனையை உடனடியாக ஈடேற்றித் தருவான் பரந்தாமன். ஆக, தேடலும் ஆவலும் கொண்டு இருக்கிற அர்ஜுனன், ஜீவாத்மா. எனவே, அந்த நோக்கத்தின்படி பார்த்தால், அர்ஜுனனுக்கு முக்கியத்துவம் தரவேண்டுமா? அல்லது அந்த யோகத்தையும் ஞானத்தையும் தந்தருளும் பரமாத்மாவுக்கு முன்னுரிமை அளித்து, முக்கியத்துவம் தரவேண்டுமா?

தருபவன் இறைவன்; பெறுபவன் அடியவன். நமக்கு எங்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ, அவை அனைத்துக்கும் வித்தாக நிறைந்திருப்பவன், பரமாத்மாவே! அதனால்தான், ஸ்ரீகண்ணனை நாயகன் என்று போற்றித் துதிக்கிறோம்; கொண்டாடுகிறோம்!

- இன்னும் கேட்போம்