மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!
தசாவதாரம் திருத்தலங்கள்!
##~##
'உ
லகில் மலைகளும் நதிகளும் உள்ளவரையிலும் ஸ்ரீமத் ராமாயணக் கதையும் பிரசித்தியுடன் திகழும்’ என்பது வால்மீகியின் திருவாக்கு. இன்றளவும் அயோத்தி துவங்கி தென்னிலங்கை வரை... ஜகம் புகழும் ஸ்ரீராமனின் கதையுடன் கொண்ட தொடர்பால் புகழ்பெற்றுத் திகழும் திருத்தலங்களும், நதி தீரங்களும் அந்த மாமுனிவரின் திருவாக்கை மெய்ப்பித்து விளங்குகின்றன.

திருநெல்வேலி சீமையில், தாமிரபரணி நதிக்கரையிலும் அப்படியரு திருத்தலம் உண்டு. அதன் பெயர் அருகன்குளம்.

நாம் ஏற்கெனவே (16.10.12 தேதியிட்ட இதழில்) பார்த்த திருப்புட்குழி, திருப்புள்ளம் பூதங்குடி ஆகிய தலங்களைப் போன்று இந்தத் தலமும் ஜடாயு மோட்ச சம்பவத்துடன் தொடர்புடையதாகப் பேசப்படுகிறது. இந்த இடத்தில்... 'அதெப்படி ஒரு சம்பவம் பல தலங்களில் நிகழும்?’ என்றொரு கேள்வி மனதில் எழலாம்.

இதற்கான பதிலை அறிய வேண்டுமெனில், நாம் ஞான நூல்கள் விவரிக்கும்  காலக் கணக்குக்குள் புகவேண்டும்.

கிருத யுகம், திரேதா யுகம், துவாபார யுகம், கலியுகம் இந்த நான்கும் சேர்ந்தது ஒரு சதுர்யுகம் (மகாயுகம் என்றும் சொல்வர்). இப்படி 18 மகா யுகங்கள் சேர்ந்தது ஒரு மன்வந்த்ரம். 74 மன்வந்த்ரங்கள் நிறைவடைந்தால், ஓர் இந்திரனின் ஆயுள் முடியும். இப்படி 270 இந்திர ஆயுள் சேர்ந்த காலம்- பிரம்மனுக்கு ஒரு நாள். இத்தகைய நாட்கள் 365 சேர்ந்தது பிரம்மனுக்கு ஒரு வருடம். இதில் 100 வருடங்கள் பிரம்மனின் ஆயுள் காலம். இப்படி 360 வருடங்கள் சென்றால், ஆதிபிரம்மனுக்குப் பிரளய காலம். இந்தப் பிரளயம் நூறு சென்றால், ஒரு விஷ்ணு கல்பம்... என நீள்கிறது காலக் கணக்கு. இதேபோன்று பல கல்பங்கள் உண்டு. தற்போது நடைபெறுவது 8-வது சுவேதவராக கல்பம்; 22-வது வைவஸ்வத மன்வந்த்ரம்.

ஆக... கால கணக்கதிகாரத்தின்படி, ஒவ்வொரு கல்பத்திலும் சுழன்று வரும் சதுர்யுகங்களில், ஒவ்வொரு திரேதா யுகத்திலும் ஸ்ரீராம அவதாரம் நிகழ்ந்தது. ஒரு திரேதா யுகத்தில் ஒரு தலத்தில் நிகழும் சம்பவம், மற்றொரு திரேதா யுகத்தில் வேறொரு தலத்தில் நிகழ்ந்திருக்கும் என்பது ஆன்மிகப் பெரியோர்கள் மற்றும் மகான்களின் கருத்தாக உள்ளது.

நீண்ட நெடிய ஆயுள் கொண்ட காகபுசுண்ட மகரிஷி, கல்பங்கள் தொடர... ஒவ்வொரு திரேதா யுகத்திலும் நிகழ்ந்த ஸ்ரீராம அவதாரத்தைத் தரிசித்த கதை, புராணங்களிலும், யோக வாசிஷ்டத்திலும் விரிவாகவே உள்ளன.

தசாவதாரம் திருத்தலங்கள்!

அருகன்குளத்தின் புராணச் சம்பவங் கள் குறித்து தாமிரபரணி மகாத்மியமும், திருநெல்வேலி மற்றும் கயத்தாறு தல புராணங்களும் விவரிக்கின்றன. பீகார் மாநிலம், தேவ்கர் எனும் ஊரில் உள்ளது ராவண தீர்த்தக்கட்டம். இதன் கரையில் உள்ள கல்வெட்டிலும் அருகன்குளம் தீர்த்தங்கள் பற்றிய குறிப்பு உள்ளது.

பொதிகை  மலையில் தோன்றி, தென் பாண்டி நாட்டை வளப்படுத்தும் தாமிர பரணியின் கரையில் அமைந்திருந்தது தூர்வா தடாகம். தூர்வா என்றால் அறுகு. எனவே, அறுகம்புற்களும் தடாகங் களும் நிறைந்த இந்த இடத்துக்கு தூர்வா தடாகம் என்று பெயர் விளங்கியது. அதுவே தமிழில் அருகன்குளம் ஆனதாகச் சொல்வர்.

சீதையைத் தேடி பயணித்த ஸ்ரீராமனும் லட்சுமணனும் இந்தப் பகுதிக்கும் வந்தார்கள். அப்போது, இலங்கை வேந்தன் ராவணனால் இறக்கைகள் வெட்டி வீழ்த்தப்பட்டு, குற்றுயிராகக் கிடந்த ஜடாயுவைக் கண்டனர். ஸ்ரீராமன் அவருக்கு ஈமக் கிரியைகள் செய்து மோட்சம் அளித்ததும் இங்குதான் என்கின்றன இந்தத் தலத்தின் சிறப்பை விவரிக்கும் ஞானநூல்கள்.

திருநெல்வேலி ஜங்ஷன் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது அருகன்குளம். இயற்கை எழில் மிகுந்த பகுதியில் சிறு சந்நிதியாக அமைந்துள்ளது ஆலயம். கருவறையில் ஸ்ரீலட்சுமி தேவியை மடியில் அமர்த்தியபடி நாராயணர்; அருகில் ஜடாயு!

ஸ்ரீராமனுக்குப் பதிலாக ஸ்ரீலட்சுமி நாராயணர் எப்படி என்கிறீர்களா?

குற்றுயிராகக் கிடந்த ஜடாயுவை மடியில் கிடத்தி ஸ்ரீராமன் கண்ணீர் உகுத்தபோது, அவரிடம், ''ஸ்வாமி! தாங்கள், தேவி சமேதராக எனக்குத் திருக்காட்சி அளிக்க வேண்டும்'' என விண்ணப்பித்தார் பட்சி ராஜன். ஆனால், சீதா தேவிதான் உடன் இல்லையே! அதற்காக ஜடாயுவின் விண்ணப்பத்தை நிராகரித்துவிட முடியுமா? அவரது தியாகம் சாதாரணமானதா என்ன?!  

பறவை அரசனின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யத் திருவுளம் கொண்டது பரம்பொருள். மறுகணம் அங்கே ஓர் அற்புதம் நிகழ்ந்தது. ஆமாம்... ஸ்ரீலட்சுமி நாராயணராய் தரிசனம் தந்தார் இறைவன். அந்தத் திருக்காட்சியுடன் பரமபதமும் கிடைத்தது ஜடாயு வுக்கு. இதையட்டியே கருவறையில் ஸ்ரீலட்சுமி நாராயணரின் தரிசனம்.

தசாவதாரம் திருத்தலங்கள்!

புராணத்தால், மூர்த்தியால் மட்டுமல்ல... தீர்த்தத்தாலும் கீர்த்தி பெற்ற க்ஷேத்திரம் இது. மற்ற தலங்களில் எல்லாம் சந்நிதிக்கு அருகிலோ எதிரிலோ தீர்த்தம் அமைந்திருக்கும். இங்கே, ஸ்வாமி சந்நிதி கொண்டிருப்பதே தீர்த்தத்தின் மீதுதான்! ஸ்ரீலட்சுமி நாராயணர் சந்நிதியை, ஜடாயு தீர்த்த குண்டத்தில் உள்ள ஒற்றைத் தூண் தாங்கி நிற்கிறது.

ஜடாயு தீர்த்தம் மட்டுமின்றி ராம தீர்த்தம் மற்றும் சிவ தீர்த்தமும் இங்கே உண்டு. குற்றுயிராகக் கிடந்த ஜடாயுவின் தாகம் தணிக்க ஸ்ரீராமன் ஏற்படுத்தியது ஸ்ரீராமதீர்த்தம். அவருக்கு மோட்சம் அளிக்க உண்டாக்கப்பட்டது ஜடாயு தீர்த்தம்.

சரி... சிவ தீர்த்தம் எப்படி இங்கே?!

ஆன்மிக ஆன்றோர்கள், ராமாயணச் சம்பவங் களில் இரண்டை வெகுவாகச் சிறப்பிப்பார்கள். ஒன்று, சபரிக்கு முக்தி கிடைத்த சம்பவம்; மற்றொன்று, ஜடாயு மோட்சம். மிக உன்னதமான இந்தச் சம்பவம் இங்கே நிகழ்ந்தபோது சிவபெருமான் தோன்றி, 'தேவி சீதாவை மீட்டெடுத்து வெற்றியுடன் திரும்புவாய்’ என ஸ்ரீராமனுக்கு ஆசியும் அருளும் வழங்கினாராம். அவரின் திருப்பெயரில் இங்கே உருவானது சிவ தீர்த்தம். (தற்போது இந்த தீர்த்தக்கட்டம்... பெருங்காற்றினால் மரம் சாய்ந்து கிடப்பதால், செப்பனிட வேண்டிய நிலையில் உள்ளது).

ஸ்ரீராமனை ஆசீர்வதித்த சிவனார், ''நீண்ட கைகளை உடைய ஸ்ரீராமா... உன்னால் ஜடாயுவுக்கு மோட்ச கதி கிடைத்தது. அதனால் மூவுலகங்களும் சந்தோஷப்படுத்தப்பட்டன.

அற்புதமான இந்த க்ஷேத்திரத்தில் உள்ள தீர்த்தங்களில் நீராடுபவர்களுக்கு, அவர்களின் நூறு ஜன்ம பாவங்களும் அழிந்துபோகும். சகல ஐஸ்வரியங்களும் உண்டாகும். எண்ணங்கள் நிறைவேறும். தர்மம் நிறைந்த, பாவமற்ற, வெகு காலம் சுகத்தை அனுபவிக்கும் சந்ததியைப் பெறுவர்!'' என்றும் அருள் புரிந்தாராம். அதுமுதல் ரிஷிகளும் முனிவர்களும் இந்தத் தலத்தையும் தீர்த்தங்களையும் பெரிதும் சிறப்பித்தனர்.

உத்தராயன புண்ணிய கால துவக்கத்தில் தை அமாவாசை, தட்சிணாயன புண்ணியகால துவக்கத்தில் ஆடி அமாவாசை மற்றும் மஹாலயபட்ச அமாவாசை (புரட்டாசி) தினங்களில் இங்கு வந்து தீர்த்தங்களில் நீராடி, பித்ருக்கடன் செய்வது வெகு விசேஷம். இதன் மூலம் பித்ரு தோஷங்கள் நீங்கி, மறைந்த நம் முன்னோரின் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கும். அவர்களின் அருளால் நம்

சந்திதியினரும் செழிப்படைவர். தவிர, சாதாரண தினங்களிலும் இந்தத் தீர்த்தங்களில் நீராடி, ஸ்வாமியை வழிபடுவதால் திருமணப் பிராப்தியும், புத்திர பாக்கியமும் கிடைக்கும்; சித்தப்பிரமை குணமாகும், சரும நோய்கள் நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை!  

அருகன்குளம் ஸ்ரீலட்சுமி நாராயணரைத் தரிசிப்பதுடன், அருகிலேயே கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீகாட்டுராமரையும் தரிசித்து வழிபட்டு வரலாம். அழகிய வனப் பகுதியில் அமைந்திருப்பதால் இவருக்கு இப்படியரு திருப்பெயரா? இல்லை! இலங்கையில் இருந்து திரும்பும் வழியில், ஜடாயுவின் ஆன்மாவுக்கு சீதாதேவியுடன் சேர்ந்து காட்சியளித்த ராமன் ஆதலால் இவருக்கு ஸ்ரீகாட்டுராமர் என்று திருப்பெயர். சீதாதேவி, லட்சுமணனுடன் காட்சி தருகிறார். இங்கு ஸ்ரீஅனுமனையும் தரிசிக்கலாம்.

அருகிலேயே உள்ளது ஸ்ரீராமலிங்கேஸ்வரர் ஆலயம். இங்கே தனிச் சந்நிதி கொண்டிருக் கிறார் பிண்டம்போட்ட ராமர். இத்தலத்தின் புண்ணியக் கதைக்கு வலு சேர்ப்பதாகத்  திகழ்கிறது இவரது தரிசனம்!

- அவதாரம் தொடரும்...
படங்கள்: எல்.ராஜேந்திரன்