Published:Updated:

சித்தம்... சிவம்... சாகசம்! - 5

சித்தம்... சிவம்... சாகசம்! - 5

சித்தம்... சிவம்... சாகசம்! - 5

சித்தம்... சிவம்... சாகசம்! - 5

Published:Updated:
சித்தம்... சிவம்... சாகசம்! - 5
சித்தம்... சிவம்... சாகசம்! - 5

'பாரேது புனலேது அனலு மேது
பாங்கான காலேது வெளியு மாகும்
நாரேது பூவேது வாச மேது
நல்ல புட்பந் தானேது பூசை யேது
ஊரேது பேரேது சினமு மேது
ஓகோகோ அதிசயந்தா னென்ன சொல்வேன்
ஆறேது குளமேது கோயி லேது
ஆதிசிவத்தை யறிவதனா லறியலாமே...’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- கருவூர் சித்தர்.

சித்தம்... சிவம்... சாகசம்! - 5

சவாத சாதுர்யத்தில் பொன்னணையாளைத் தொட்டு பல சித்தர் பெருமக்கள் வித்தை காட்டியுள்ளனர். ஆனாலும், முதல் வித்தைக்காரன் அந்த ஈசனே!

சித்த சாகசங்களிலேயே எல்லோரும் பெரிதாகக் கருதிடும் சாகசம் ஒன்று இருக்க முடியுமானால், அது ரசவாத சாகசமே! செப்பைத் தங்கமாக்கும் வித்தையை அறிவதற்காகவே சித்தர் பெருமக்களைத் தேடிச் சென்று, தங்களைச் சீடர்களாகச் சேர்த்துக்கொள்ளச் சொல்லி கெஞ்சி நின்றவர்கள் பலர் உண்டு.

ஆனால், அந்த உலோக ரகசியமோ, இன்றுவரை அறியப்படாத ரகசியமாக- பெரும் புதிராகவே உள்ளது. இன்று 'மெட்டலர்ஜி’ எனப்படும் உலோகவியல் கல்வியில் உச்சம் தொட்டவர்கள்கூட மண்ணிலிருந்து கிடைக்கும் தங்கத்தைத் தவிர்த்து, ஏனைய உலோகங்களை வைத்து அதன் குணத்தை மாற்றி தங்கம் செய்வது என்பது அசாத்தியம் என்கிற கருத்தையே கொண்டுள்ளனர்.

செயற்கையாகத் தங்கம் செய்ய முனைந்து, அதில் ஓரளவு சாதித்தவர்கள்கூட... இயற்கையாகத் தோண்டி எடுப்பதைவிட செயற்கைத் தங்க முயற்சி பல மடங்கு கூடுதல் செலவைத் தருவதால், அந்த முயற்சியைத் தொடரவில்லை. மாறாக, 'சூப்பர் கண்டக்டிவிடி மெட்டீரியல்’ எனும் எடைகுறைவான, அதேநேரம் மிக பலமான ஓர் உலோகத்தைக் கண்டறிவதில்தான் மிகவும் சிரத்தை காட்டி வருகின்றனர். இந்த சூப்பர் கண்டக்டிவிடி மெட்டீரியல் கண்டறியப்பட்டுவிட்டால் விமானம், பேருந்து, ரயில் என்று சகலத்திலும் அது பயன்படுத்தப்பட்டு, எரிபொருள் செலவினம் மிகக் குறையும். அடுத்து, மின்சாரத்தைக் கடத்துவதில் ஏற்படும் விரயம் தவிர்க்கப்பட்டு, உற்பத்தி செய்யப்படும் மின்சாரமானது முழுவது மாய் பயன்படுத்தப்படும்.

##~##
எனவே, தங்கமாக்கும் விஞ்ஞான முயற்சிகள் மிக மிகப் பின் தங்கிய நிலையிலேயே உள்ளன. ஆனால், தங்கத்தின் மேல் உள்ள மதிப்போ நாளுக்கு நாள் கூடிக்கொண்டேதான் போகிறது. உலகின் பொதுப் பணமாக இதைக் கருத முடிவதும் ஒரு காரணம். இன்று எந்த நாட்டிடம் அதிகக் கையிருப்பு தங்கம் உள்ளதோ, அந்த நாடே உண்மையான பொருளாதார பலமுள்ள செல்வச் செழிப்பான நாடாகும். அந்த வகையில், நம் பாரத தேசத்தை உலகிலேயே மிக அதிக தங்கம் கொண்ட ஒரு நாடாக தாராளமாகச் சொல்லலாம். இங்கேதான் மிகக் குறைந்த வருமானம் உள்ளவர்களிடம் கூடக் குந்துமணி தங்கமாவது உள்ளது. தங்கத்தை மிகத் தெய்விகத் தன்மை பொருந்தியதாகக் கருதும் கலாசார அடிப்படை இன்னொரு காரணம்.வாழ்வின் எல்லா முக்கிய தருணங்களிலும் தங்கம் இங்கே முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஆண்- பெண் சேர்க்கைக்குக் காரணமான திருமணத்துக்கே தங்கம்தான் பிரதான காரணியாக உள்ளது. சுமாரான அழகுடன் பிறந்துவிட்ட பெண்களை எல்லாம் இல்வாழ்க்கை எனும் கடலைக் கடக்கவைக்கும் பெரும் காரணியாக தங்கமே உள்ளது. ஒருவருடைய அந்தஸ்தை இதுவே தீர்மானிக்கிறது.

எந்த விஷயத்துக்கும் ஓர் அளவு உண்டு என்பார்கள். அந்த அளவு என்பது கணக்காக, அதாவது எண்ணாக உள்ளது. மொழி என்பது எழுத்தாக உள்ளது. இந்த இரண்டும் இல்லாமல் மனித வாழ்க்கை இல்லை. இதை வைத்தே, 'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ எனும் வாக்கு தோன்றிற்று. இந்தக் கண்ணான எண்ணின் அளவீட்டில், கண்ணுக்குப் புலன் ஆகாத ஒரு தூசி எடைக்கும் கீழான எடை கொண்ட தங்கத்துக்கும் பெரும் மதிப்பு இருப்பதுதான் விந்தை!

தங்கம் என்று ஒன்று இல்லாதபட்சத்தில், அப்படி ஒரு அளவீட்டையே பயன்படுத்தும் ஒரு நிலைப்பாடு மனித இனத்துக்கு ஏற்பட்டிருக்காது. எண்ணின் தொடக்கமாய் இங்கே ஒன்றுதான் உள்ளது. அதன் கீழான அளவுகள் அரை, கால், காலேஅரைக்கால் என்பதுதான். அந்த காலேஅரைக்காலுக்குள் பல காலேஅரைக்கால்கள் இருப்பதெல்லாம்கூட தங்கத்தை எடையிடும்போதே உணரப்படுகிறது. இதனால் தான், பொற்கொல்லர் வீட்டுக்கு அருகில் உள்ள சாக்கடைகூட சிலரால் அரித்தெடுக்கப்படும் நிலைக்கு உள்ளாகிறது.

மிக நல்ல ஒரு மனிதரை மெச்ச முற்படும் போது அவரை நல்லவர், தூயவர், சிறந்தவர் என்று எவ்வளவு சொன்னாலும் ஏற்படாத ஒரு நிறைவு, 'தங்கமான மனிதர்’ என்றவுடன் வந்துவிடுகிறது. இப்படி பூமியின் பெரும் செல்வமாய், அழகின் இருப்பிடமாய், ஒளியின் நிலைக்களனாய், குன்றாத மதிப்போடு ஒவ்வொரு நாளும் உயர்ந்தபடியே இருக்கும் ஒரே வஸ்து தங்கம் மட்டுமே!

இன்று மட்டுமல்ல, உலகில் மனித நாகரிகம் தொடங்கிய நாளில் இருந்தே இதுதான் நிலை. பூமியில் மட்டுமின்றி, பூமிக்கு அப்பால் விண்ணகத்தே இருப்பதாக நம்பப்படும் மற்ற புவனங்களிலும் தங்கத்துக்குதான் முதல் மதிப்பு; முதல் இடம்! குபேர நிதியில் இதுவே பிரதானம். பொருளைப் புறந்தள்ளிய பெரும் ஞானியர்கூட கடவுளிடம் வேண்டிப் பெற்றது இதைத்தான். தனக்குப் பிட்சையிட ஏதுமில்லாத ஓர் ஏழையின் பொருட்டு மனமிரங்கி, ஆதிசங்கரர் பாடியதுதான் கனகதாரா ஸ்தோத்திரம். இந்த நிதியைப் பெறுவதற்காகவே வித்யாரண்யர் துறவறம் பூண்டார். திருமகளைத் தியானித்து இந்த நிதியையும் பெற்றார். தன்னைச் சோதிக்க நினைத்தவர்களுக்குப் பாடம் புகட்ட விரும்பிய வேதாந்ததேசிகன், ஸ்ரீஸ்துதி பாடினார்; பொன்னும் மழையாகப் பொழிந்தது.

இப்படிப்பட்ட சிறப்புக்குரிய பொன்னுக்குரிய கிரகமாகவும் கிரகாதிபதியாகவும் திகழ்பவர் குருபகவான். 'பொன்னன்’ என்பது இவருக்கான இன்னொரு பெயர். குரு என்பவர் நம்மை எல்லாம் இருளில் இருந்து வெளிச்சத்துக்கு அழைத்துச் செல்பவர். அறியாமை இருளை நீக்குபவர். எனவே, ஒளிமிகுந்த தன்மையை குணமாகக் கொண்ட குருவே தங்கத்துக்கு அதிபதி. ஜாதகத்தில் இவரது பலம் குறையும் போதும், இவரது சஞ்சாரம் தவறாகும் போதும் தங்க நகைகள் தொலைவது, திருடு போவது போன்றவை நிகழும். உடனேயே எப்பாடுபட்டாவது நாம் தங்கத்தை வாங்கி விடும்பட்சத்தில், குருவருள் குறைய நேர்ந்தாலும், அதை எப்பாடுபட்டாவது அடைந்துவிடும் சக்தி நமக்கு இருப்பதை அது உணர்த்தும்.

சித்தம்... சிவம்... சாகசம்! - 5

இந்திரலோகத்தில் தர்பாரில் இந்திரன் அமர்ந்திருக்க, அரம்பையர் கூட்டம் ஆடிக் கொண்டிருக்கிறது. உல்லாசமான சூழல். அப்போது சபைக்கு, பிரஹஸ்பதியாகிய குரு பகவான் வருகிறார். அவரை அந்த உல்லாச சூழ்நிலையில், இந்திரன் வரவேற்க மறக்கிறான். தான் வந்திருப்பதை பிரஹஸ்பதி குறிப்பால் உணர்த்தியும் அவனிடம் அலட்சியமே தொடர் கிறது. உடனே பிரஹஸ்பதி, 'இனி இந்த அமர லோகம் பக்கமே நான் வரமாட்டேன்’ என்று கூறி, கோபித்துச் செல்கிறார்.

குரு நீங்கியதால், இந்திரனின் செல்வம் குறைகிறது. நிரம்பிய பொன் பேழைகளில் உள்ள பொற்காசுகள்தான் முதலில் மாயமாகின்றன. அதன்பின், அவன் பாடாய்ப்பட்டு ஓடாய்த் தேய்ந்து இந்திர உலகை விட்டு பூவுலகு வந்து, இன்றைய மதுரையான அன்றைய கடம்ப வனத்தில் உள்ள சொக்கலிங்க சுயம்புமேனியைத் தரிசித்து, பாவ விமோசனம் அடைகிறான். அப்படியே, அருகிலுள்ள பொற்றாமரைக் குளத்துப் பொற்றாமரைகளால் லிங்க ரூபத்துக்கு அர்ச்சனையும் புரிகிறான். அப்படி அவன் அர்ச்சனை புரிந்து வழிபட்டது ஒரு சித்ரா பௌர்ணமி நன்னாளில்..! அன்றிலிருந்து இன்றுவரை, மதுரை சொக்கநாதப் பெருமானை சித்ரா பௌர்ணமிதோறும் இந்திரன் வந்து தரிசித்து வணங்கிச் செல்வதாக ஐதீகம்.

சூரியனின் கதிர் பட்டு, கூரிய தாமரை மொட்டு அவிழ்ந்து, இதழ்கள் அனைத்துப் பக்கமும் பிரியும். பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் அது. இதனாலேயே மனத்தை தாமரையோடும் ஒப்பிடுவர்.

மனமும் அறிவொளியால் மலர்கிறது. தான் மலரக் காரணமான குளம் எவ்வளவு ஆழமாக இருந்தாலும், தாமரை அதனுள் மூழ்கி விடுவதில்லை. மனமும் அறிவொளியால் மலர்ந்தால், அஞ்ஞானத்தில் மூழ்குவதில்லை. இப்படித் தாமரைக்கும் மனத்துக்கும் அநேக ஒற்றுமை உண்டு. மலர்த் தாமரைக்கே இப்படி என்றால், ஒளிமிக்க பொற்றாமரைக்கு இன்னும் எத்தனை விசேஷம் உரியது என்று எண்ணிப் பார்க்கவேண்டும். அதன் பிரகாசம், அதன் திண்மை எத்தகையது என்பதை எண்ணிப் பார்க்கவே இயலவில்லை. அது நம் கற்றலுக்கு வெளியே உள்ளது.

அப்படிப்பட்ட பொற்றாமரைகள் பூத்த குளம் உடைய சொக்கலிங்கநாதர் கோயிலும் இந்திரனால் கட்டப்பட்டு, அவனாலேயே குடமுழுக்கும் செய்யப் பட்டது. குடமுழுக்கு நாளில் அந்த ஆதிசிவன் தன் சிரசிலிருந்து அமுதமாகிய மதுரத்தையே எடுத்து ஆலயம் மீதும், அது அமைந்த ஆலவாய் நகர் மீதும் தெளித்தார். அந்த மதுரத் துளிகள் பட்டு ரட்சணை பெற்றதாலேயே அந்த நகர் 'மதுரை’ என்றானது. அதனாலேயே இம்மண்ணில் அந்த சிவனின் திரு விளையாடல்கள் நிகழ்ந்தன; அமிழ்தான தமிழ்மொழியும் இங்கு சங்கம் கண்டது. கங்கைக்கு நிகராக, இறைவன் கை வைக்க 'வைகை’யும் பாய்ந்து வந்தது.

காலங்கள் பல உருண்டுவிட்ட நிலையிலும், அந்த அமுதத்தின் குணம் காரணமாகவே இன்றும் இம்மண்ணில் இயலும், இசையும், நாடகமும் பிற இடங்களைக் காட்டிலும் தூக்கலான தரத்திலும், தன்மையிலும் இருந்து வருகிறது. பொன்னை குணத்தில் மட்டுமே கொண்டிருந்த தெய்விக குணத்தவர்கள் இருந்த வரையில் பொற்றாமரையும் பூத்த வண்ணம் இருந்தது. கலிமாயை காரணமாக அந்த எண்ணிக்கை குறைந்து முற்றாக இல்லாது போகவும், அதுவும் மறைந்தது.

ஆனாலும், இன்றும் பொன் வேண்டுவோரும் குருவருள் வேண்டுவோரும் மதுரையம்பதி வந்து அந்த சிவபிரானையும், தீயில் பூத்த அன்னை மீனாட்சியையும் துதிக்கும்போது, அவர்களுக்கான விருப்பம் நிறைவேறத் தேவை யான அருளும் உருவாகிறது.

இந்தப் பொன்னை தன் ஸித்தியினாலே அந்தப் பெருமானும் பொன்னணையாள் வரையில் உருவாக்கித் தந்து சென்றான். இவனுக்கே பொன்னம்பலன் என்று ஒரு பெயரும் உண்டு. இந்த பொன்னம்பலனின் பொன்னம்பலம் இருப்பது சிதம்பரத்தில்! பஞ்ச பூதத்தில் ஆகாய தத்துவத்துக்குரிய தலம் இது. ஆகாயமே முதல் பூதம்; பெரும் பூதம். அது இருப்பதாலேயே அதனுள் பூமி மிதக்கிறது. அதனைக் காற்றும் சுற்றி வளைக்க முடிகிறது. மழை மேகங்களும் தோன்றி மழையைப் பொழிந்திட... சூரிய- சந்திரர்களின் சுழற்சியாலே இரவு- பகலை உருவாக்க முடிகிறது.

எனவே பெரிதான- எல்லையில்லாத, இருந்தும் இல்லாத ஆகாய பூதத்தலத்தில் அதன் பொருட்செறிவோடு உலக இயக்க கதியையும்  விளக்கும் முகமாய் திருநடன கோலத்தோடு நடராஜ மூர்த்தியாக சேவை சாதிக்கிறான் அவன். இந்த நடன தோற்றத்தை அனுதினமும் ரசிப்பவர்கள் விண்ணுலகில் நால்வரே! அவர்கள் இதை ஒரு வரமாகவே பெற்றுவிட்டார்கள்.

ஒருவர்- பதஞ்சலி. மனித உருவம், பாம்புச் சிரம் இவரது தோற்றம். அடுத்து பிருங்கி முனிவர், வியாக்ரபாதர், நந்தீசர். இவர்களில் ஒருவருக்குக் கொம்பு சிறப்பு; ஒருவருக்குப் புலிக்கால்கள் சிறப்பு; ஒருவருக்குக் காதுகள் சிறப்பு.

ஆனால்... பாவம், பதஞ்சலி! இவருக்குக் காலும் இல்லை, காதும் இல்லை, கொம்பும் இல்லை. கண்கள் மட்டுமே!

இவர், 'ரஜித ஸ்ருங்க ஸ்தோத்திரம்’ என்று ஒரு துதியாலே பொன்னம்பலத்தில் உறையும் இறைவனைப் பாடுகிறார்!  

எப்படிப் பாடுகிறார் தெரியுமா? தான் பாடும் துதியில் எங்கும் கொம்பெழுத்துக்களோ, 'கால்’ எனப்படும் துணை எழுத்தோ இல்லாதபடி வார்த்தைகளை அமைத்துப் பாடுகிறார். அது ஒரு வியப்பூட்டும் ஸ்லோகம்.

ஏன் இப்படிப் பாடவேண்டும் என்பதற்கு, நமது மகாபெரியவர் வேடிக்கையாக ஒரு கருத்தைக் கூறியுள்ளார்!

- சிலிர்ப்போம்