
'அட! என்னய்யா இது, திரும்பவும் தஞ்சாவூருக்கே வந்துட்டோமா?' என்று பரமசாமி கேட்டபோது, நாங்கள் கங்கைகொண்ட சோழபுரம் கோயில் முன் நின்றிருந்தோம். 'கி.பி.1012 முதல் 1044 வரை ஆட்சிபுரிந்த ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திரசோழன் கட்டிய கோயில் இது...'' என்று நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, கோயிலின் முன்பிருந்த பிரமாண்ட நந்தியைப் பார்த்து, அதன் அருகில் சென்றார் பரமு.
சுண்ணாம்புச் சுதையால் ஆன அந்த நந்தி கம்பீரமாகக் கோயிலின் கருவறையை நோக்கியவாறு, கால் மடக்கிப் படுத்திருந்தது. திடீரென்று பரமு, 'சங்கமம் படத்துல விந்தியா டான்ஸ் ஆடிய இடம் இதுதானே?' என்று விசாரித்தார். உடனே நான், 'ஆமாம்! அயல்நாட்டில் இருந்து வருகிறவர்கள் இங்கிருக்கும் சிற்பங்களை வியந்து படமெடுக்கிறார்கள். நம்மவர்கள் சினிமா படம் எடுக்கிறார்கள்!' என்றேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
எனது பதிலில் இருந்த ஆதங்கத்தைப் புரிந்துகொண்ட பரமு பேச்சை மாற்றி, 'இந்தக் கோயில்ல வேறென்ன ஆச்சரியம் இருக்கு?' என்று கேட்டார். 'தாமரைப்பூ வடிவில் வட்டமாக ஒரே கல்லில் நவக்கிரகங்கள் காணப்படுவது இந்தக் கோயிலில் மட்டும்தான். இதோ பார்த்தீர்களா... கருவறையில் இருக்கின்ற பெருவுடையாரின் லிங்கத் திருமேனியின் பீடம் 60 அடி சுற்றளவு, உயரம் 16 அடி. இரண்டு புறமும் இலுப்பை மரங்களைக் கொண்டு பரண்போல் கட்டியிருக்கிறார்கள் பாருங்கள்... இதன் மேலிருந்துதான் அர்ச்சகர்கள் அபிஷேகம் செய்வார்கள். இந்த இலுப்பை மரங்களை முன்னும் பின்னும் இயக்கலாம்' என்றேன் நான்.
##~## |
பின்னர், கோயிலின் வெளிப் பிராகாரத்தைச் சுற்றி நாங்கள் நடக்கத் தொடங்கினோம். 'ஐயா! எனக்கு ஒரே ஒரு சந்தேகம். இந்த ஊருக்குக் கங்கை கொண்ட சோழபுரம்னு எதனால் பெயர் வந்தது?' என்று கேட்டார் பரமு.
'இந்த நகரை நிறுவிய ராஜேந்திரசோழன் வடநாட்டின் மீது படையெடுத்துச் சென்றபோது, கங்கையாற்றில் தன் யானைப்படையை நிறுத்திப் பாலம் கட்டி, அதன் மீது நடந்து சென்று, வடநாட்டு மன்னர்களை வென்றான். தோல்வியடைந்த மன்னர்களின் தலைகளில் கங்கை நீரைச் சுமந்துவரச் செய்து, இங்கே ஓர் ஏரியை உருவாக்கி, அதில் கங்கை நீரை விடச் செய்தான். அதனால் இந்த ஊர் கங்கைகொண்ட சோழபுரம் ஆனது. ராஜேந்திரசோழனுக்குக் கங்கைகொண்ட சோழன் என்ற பெயரும் உண்டானது. சோழகங்கம் என்றும் பொன்னேரி என்றும் அழைக்கப்படுகிறது இந்த ஏரி'' என்று சொன்ன நான், ''ராஜேந்திரசோழன் கங்கை நீரைக் கொண்டு வந்து நிரப்பிய இந்த ஏரியின் பரப்பளவு என்ன தெரியுமா? ஆயிரம் ஏக்கர்!' என்று நான் சொன்னதும், 'அடேயப்பா! சாதாரண ஏரின்னு நினைச்சா, மிகப் பெரிய ஏரியாவால்ல இருக்கு?!' என்று பரமு வியப்புக் குரல் எழுப்ப... எல்லோரும் சிரித்தோம்.