
##~## |
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உமையவளும் வெகு சிரத்தையுடன் அந்த விரத பூஜையைக் கடைப்பிடித்து வழிபட்டாள். இதனால் மகிழ்ந்த ஈசன் அவளுக்குக் காட்சி தந்து, தனது திருமேனியில் இடபாகமும் தந்து அர்த்தநாரீஸ்வரராக அருள்பாலித்தார்.
உமாதேவி கடைப்பிடித்த அந்த விரதம்தான் கேதாரீஸ்வர விரதம். கௌரிதேவியாகிய உமையம்மை போற்றிய விரதம் ஆதலால் கேதார கௌரிவிரதம் என்றும் அழைப்பர். இந்த விரதம் குறித்து பவிஷ்யோத்ர புராணத்தில் விளக்கப்பட்டுள்ளது. இதை 5 வகையாக அனுஷ்டிப்பார்கள்.

இந்த விரதத்தை புரட்டாசி வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சதுர்த்தசி வரை 21 நாட்கள் அனுஷ்டிப்பது உத்தமம். புரட்டாசி தேய்பிறை பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்கள் மத்திமம். தேய்பிறை அஷ்டமி துவங்கி சதுர்த்தசி வரை 7 நாட்கள் அனுஷ்டிப்பது அதம பட்சம். புரட்டாசி தேய்பிறை சதுர்த்தசியன்று ஒருநாள் மட்டும் அனுஷ்டிப்பது சாமான்ய பட்சம் ஆகும். அதேபோன்று ஐப்பசி தேய்பிறைச் சதுர்த்தசியில் தீபாவளி அன்றும் இந்த விரதபூஜையை அனுஷ்டிப்பது உண்டு.
இந்த விரதத்தை சுமங்கலிகளே கடைப்பிடிக்க வேண்டும். முற்காலத்தில், நீர்நிலைகளின் கரைகளில்- ஆலமரத்தடியில் மண்ணால் லிங்கம் அமைத்து பூஜிப்பார்கள். விரத தினத்தன்று விநாயகரை வழிபட்டு, ஆதி ரிஷிகளான பிருங்கி, கௌதம முனிவர்களையும் வணங்கி சிவபூஜையை துவங்குவர். 14 அல்லது 7 என்ற எண்ணிக்கையில் மலர்கள், வில்வ இலைகள் சமர்ப்பித்தும், 21 என்ற எண்ணிக்கையில் பட்சணங்கள் படைத்தும் வழிபடுதல் விசேஷம். பூஜையின் முக்கிய அம்சம் நோன்புச்சரடு. லிங்க மூர்த்தத்தின் முன் வைத்து பூஜிக்கப்படும் நோன்புச்சரடை மூத்த சுமங்கலிகள் மற்றவர்களுக்குக் கட்டிவிட வேண்டும்.
பிரிந்த தம்பதி ஒன்றுசேர, தாம்பத்தியம் சிறக்க, மாங்கல்ய பலம் பெருக, நினைத்தது நினைத்தபடி நிறைவேற வரம் அருளும் வல்லமை இந்த விரத பூஜைக்கு உண்டு.
- திருமலை, திருச்சி-1