Published:Updated:

ஞானப் பொக்கிஷம்! - 16

ஞானப் பொக்கிஷம்! - 16

ஞானப் பொக்கிஷம்! - 16

ஞானப் பொக்கிஷம்! - 16

Published:Updated:
ஞானப் பொக்கிஷம்! - 16
ஞானப் பொக்கிஷம்! - 16
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தீ
ர்த்த யாத்திரை சென்று வந்த ஸ்ரீராமர், தான் சந்தித்த துயரங்களை எல்லாம் பட்டியல் இட்டார்; பிறப்பு, இறப்பு, சிறு வயது முதல் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள், முதுமை, காலத்தின் சக்தி... என, ஒவ்வொருவரும் சந்தித்தே ஆகவேண்டிய துயரங்கள் தொடர்பான கேள்விகளைக் கேட்டார்; அவற்றுக்கு சபையில் இருந்த விஸ்வாமித்திரர் பதில் சொல்லாமல், வசிஷ்டரை விட்டுப் பதில் சொல்லச் சொன்னார் என்பதையெல்லாம் சென்ற இதழில் பார்த்தோம். இனி...

ஸ்ரீராமர் கேட்ட கேள்விகள் மிகவும் கடினமானவைதான். ஆனாலும், அவற்றுக்கு விஸ்வாமித்திரரே பதில் சொல்லியிருக்க முடியும். ஆனால், அவர் வசிஷ்டரை பதில் சொல்லச் சொன்னதன் காரணம் என்ன?

ஸ்ரீராமர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லத் திறமை இருந்தும், அதற்கான தகுதி தனக்கு இல்லை என்பதை உணர்ந்ததால்தான், விஸ்வாமித்திரர் பதில் சொல்லவில்லை. சரி, பதில் சொல்லும் தகுதி ஏன் தனக்கு இல்லை என்று விஸ்வாமித்திரர் நினைத்தார். இதற்கும் ஒரு காரணம் உண்டு.

ஒருமுறை, விஸ்வாமித்திரர் தவம் செய்துகொண்டிருந்தபோது ரம்பையின் மீது கொண்ட கோபத்தால் தன் தவ சக்தியை இழந்தார். மேனகையிடம் ஈடுபாடு கொண்டு, அப்போதும் அவர் தன் தவ வலிமையை இழந்தது, ஸ்ரீராமருக்கே தெரியும்.

அப்படி இருக்கும்போது, விஸ்வாமித்திரர் எப்படிப் பதில் சொல்வார்? அதனால்தான் அவர் திறமையும் தகுதியும் படைத்த வசிஷ்டரை விட்டுப் பதில் சொல்ல வைத்தார்.

வசிஷ்டர் பலவிதமான கதைகளைச் சொல்லி, ஸ்ரீராமருக்குக் கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிவு ஏற்படுத்திக்கொண்டு வந்தார். அவற்றில் ஒன்று, மகாபலி சக்ரவர்த்தி கதை. வசிஷ்டர் தொடர்ந்தார்...

''ராமா! விறகைப் போடப் போட, தீ மேலும் மேலும் கொழுந்துவிட்டு எரிகிறதல்லவா? அதுபோல, ஆசைகள் அதிகரிக்க அதிகரிக்க, கவலைகளும் அதிகமாகும். விறகை நீக்கிவிட்டால் நெருப்பு இல்லாமல் போவதைப் போல, ஆசைகளை நீக்கிவிட்டால் கவலை என்னும் தீ இல்லாமல் போகும்.

ஆசைகளை நீக்க என்ன வழி? ஒரே வழி- வைராக்கியம்தான்! மனஉறுதியால் மட்டுமே ஆசைகளை நீக்க முடியும்.

வைராக்கியம் கொண்டவன் மட்டுமே மனத்தை அலைக்கழிக்கும் ஆசைகளில் இருந்து விடுபட முடியும். அப்படி விடுபட்டு, மனநிறைவு பெற்றால்தான், எந்தக் கவலையும் பாதிக்காது. அமிர்தத்துக்கு ஒப்பான நிலை அது. அப்படி இருந்தால், உலகம் முழுவதும் தோலால் மூடியதைப் போன்ற ஓர் உணர்வு, கால்களில் அணியும் காலணிகளில் கிடைக்கும். (அதாவது, உலகம் முழுவதும் கற்களும் முட்களும் பரவலாக ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. அவற்றில் இருந்து தப்புவதற்காக, உலகம் முழுவதையும் தோலால் மூடிவிட்டால், அந்தக் கற்களும் முட்களும் நம் காலில் குத்தாது அல்லவா? ஆனால், அது சாத்தியமா? அதற்குப் பதிலாக, நாம் தோல் செருப்புகளை அணிந்துகொண்டால், எங்கு வேண்டுமானாலும் நடந்து போகலாம். கற்களும் முட்களும் குத்தாது. உலகம் முழுவதுமே தோலால் மூடியதைப் போல, துன்பமில்லாமல் ஆகிவிடும்.)

வைராக்கியத்தின் மூலம் ஆசைகளை நீக்கி, மன நிறைவு பெற்று விட்டால், அந்த நிலையே 'முக்தி நிலை’ எனப்படும். அதற்கு, பௌர்ணமி நிலவின் குளிர்ச்சியான ஒளியோ, நிறைவு பெற்றுப் பொங்கிப் பெருகும் கடலோ, திருமகளின் முக ஒளியோ எதுவுமே ஈடாகாது.

ஆகையால், வைராக்கியத்தால் ஆசைகளை நீக்கி, மனநிறைவு பெற்று, முக்தி நிலை எனப்படும் அந்த நிலையை, மகாபலி சக்கரவர்த்தியைப் போல நீயும் அடைவாயாக!'' என்றார் வசிஷ்டர்.

உடனே ராமர், ''குருநாதா! அமிர்தமயமான தங்கள் வார்த்தைகளை மேலும் மேலும் கேட்கவேண்டும் போலிருக்கிறது. மகாபலியைப் பற்றிச் சொன்னீர்களே... அவரைப் பற்றி இன்னும் சொல்லுங்கள்'' என வேண்டினார்.

அதற்கு வசிஷ்டர் சொன்ன மகாபலி கதை (சுருக்கம்): அகில உலகங்களையும் வென்ற மகாபலி, ஒருநாள் தனிமையில் அமர்ந்து, 'அகில உலகங்களையும் வென்றேன்; அளவில்லாத காலம், செல்வ போகங்களை அனுபவித்தேன்; மறுபடியும் மறுபடியும் அதே அறுசுவை உணவு, பெண்களின் ஆலிங்கனம்..! சுகம் சுகம் என்று அலைகிறோமே... உண்மையிலேயே சுகம் என்பது என்ன? அனுபவித்தவற்றையே மீண்டும் மீண்டும் அனுபவிப்பதா? ஒரு காரியம் பலனைத் தந்து முடித்த பிறகு, மறுபடியும் அதிலேயே நம் மனது நாட்டம் கொண்டு அலைவது, நாணப்படவேண்டிய செயல் அல்லவா?’ என்றெல்லாம் சிந்தித்துக்கொண்டு இருந்தார். பின்பு, தந்தையிடம் சென்று தன் மனக்குறையைச் சொல்லி, அதற்கான விடை கேட்டார்.

அதற்கு அவரது தந்தை, ''சாஸ்திர விசாரணை (ஆராய்ச்சி) செய்தல், அதில் தெளிவு கண்டு வைராக்கியமாக நல்லதை மட்டுமே கடைப்பிடித்தல், தியானம், இவற்றில் எல்லாம் அனுபவசாலிகளான குருநாதருக்குப் பணிவிடை ஆகியவற்றைச் செய்ய வேண்டும்'' என்று விவரித்து, வழிகாட்டினார். மகாபலியும் அப்படியே செய்து நன்னிலை பெற்றார்.

வசிஷ்டர் இவ்வாறு பலவித தத்துவங்களைச் சொல்லி, அதற்குண்டான கதைகளையும் சொல்லி, ராமரைத் தெளிவு பெறச் செய்தார்.

அந்த உபதேசங்களே 'யோக வாசிஷ்டம்’ எனப்படுகிறது. (நாம் பார்த்தது யோக வாசிஷ்டத்தில் இருந்து ஒரு துளி மட்டுமே!) இந்த நூலைப் பல தடவை படிப்பதைவிட, ஓரளவாவது பக்குவம் பெற்றவர்களிடம் பாடம் கேட்பதே சாலச் சிறந்தது.

இங்கே உங்கள் கவனத்துக்கு ஒரு விஷயம்... ஞான நூல்களைப் படித்து இப்படிப்பட்ட தகவல்களை அறிவதால் மட்டுமே ஒருக்காலும் நாம் ஞான நிலையை அடைந்துவிட முடியாது. ஞான நூல்களை மிகவும் அதிகமாகப் படித்தவர் யாரென்று பார்ப்போமானால், அவற்றை அச்சுக் கோத்தவரும், பிழைத்திருத்தம் பார்த்தவருமாகத்தான் இருப்பார்கள். ஞான நூல்களை அதிகம் படிப்பதால், ஞானம் வந்துவிடும் என்றால், இவர்கள் அனைவருமே மகா ஞானிகளாக அல்லவா ஆகியிருக்க வேண்டும். ஆனால், நிஜத்தில் அப்படி நடப்பதில்லையே! ஆகவே, வெறுமே படிப்பது, மனனம் செய்வது என்றெல்லாம் இல்லாமல், ஞான நூல்களில் சொல்லப்பட்டுள்ள தத்துவங்களை, கருத்துக்களை ஆழ்ந்து படித்துப் புரிந்துகொண்டு அதன்படி நடப்பதே ஞான மார்க்கத்தை அடைவதற்கான வழி!

(இன்னும் அள்ளுவோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism