கேரள திவ்ய தேசங்கள்!
கேரள திவ்ய தேசங்கள்!

எல்லியும் காலையும் தன்னை நினைந்து எழ
நல்லஅருள்கள் நமக்கேதந்து அருள்செய்வான்
அல்லிஅம் தண்அம் துழாய்முடி அப்பன்ஊர் 
செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

-நம்மாழ்வார் (திருவாய்மொழி)

##~##
பொருள்:
நம் பெருமாள் இரவு- பகல் என்கிற வேறுபாடின்றி, எல்லாக் காலத்தும் தன்னை நினைக்கிற நாம் உய்வு பெறும்படியாக நமக்கே அருள்செய்து நம்மை வாழ வைக்கிறார். அவர் தன் திருமுடியில் அல்லி மலரும் குளிர்ந்த திருத்துழாயும் சேர்த்துத் தொடுக்கப்பட்ட மாலையைச் சூடியுள்ளார். இறைவனுக்குக் கைங்கரியம் செய்யும் அரிய பேறான செல்வத்தைப் பெற்றுள்ள வைணவ அடியார்கள் வாழும் ஊரான திருக்கடித் தானத்தில் என் தந்தையான பெருமாள் எழுந்தருளியிருக்கிறார்.

கேரள மக்களால் 'அஞ்சம்பலம்’ என்று குறிப்பிடப்படும் பஞ்ச பாண்டவர்கள் கட்டிய கோயில் வரிசையில் சகாதேவன் உருவாக்கிய கோயில், திருக்கடித்தானம் ஸ்ரீஅற்புத நாராயணர் திருக்கோயில்! கோட்டயம் மாவட்டத்தில், செங்கணாச்சேரியில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

பிரதிஷ்டைக்கு மகாவிஷ்ணு சிலை கிடைக்காததால், அக்னி வளர்த்து கடும் தவம் மேற்கொண்டான் சகாதேவன். அந்த அக்னியில் இருந்து நான்கு திருக்கரங்களுடன் மகா விஷ்ணு சிலை வெளிப்பட, அவருக்கு ஸ்ரீஅற்புத நாராயணர் என்று பெயரிட்டார்கள். இவருக்கு அமிர்த நாராயணர் என்று இன்னொரு பெயரும் உண்டு.

கேரள திவ்ய தேசங்கள்!

ஸ்ரீஅற்புத நாராயணர் (மூலவர்), 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய சக்திகளைப் பெற்றுக்கொண்டே இருப்பவர் என்கிறது புராணக் குறிப்பொன்று. பாண்டவர்களில் ஏனையோர் உருவாக்கிய ஆலயங்களில் தாயாருக்குப் பிரத்யேக பிரதிஷ்டை இல்லை. ஆனால், இங்கு மகாவிஷ்ணுவின் காலடிப் பகுதியில் அவரைத் தழுவியவாறு ஸ்ரீலட்சுமி தேவி காணப்படுகிறார். தனிச் சந்நிதியிலும் ஸ்ரீலட்சுமி, ஸ்ரீகற்பகவல்லித் தாயார் என்ற பெயரில் அருள்கிறார். நின்ற கோலத்தில், நான்கு கரங்களுடன், கிழக்கு நோக்கி பெருமாள் காட்சியளிக்க, பிற்காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீநரசிம்மர் மேற்கு நோக்கி சேவை சாதிக்கிறார். ஆலயத்தின் தென் பகுதியில் ஸ்ரீவிநாய கரும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியும் தரிசனம் தருகின்றனர். தவிர, ஸ்ரீசாஸ்தா, ஸ்ரீசுப்ர மணியர், ஸ்ரீபத்ரா ஆகிய உப தேவதை களுடன் நாகப் பிரதிஷ்டையும், கோயி லின் மேற்புறம் தசாவதார சிற்பங்களை யும் தரிசிக்கலாம்.

இங்கே சத்ரு சம்ஹார மூர்த்தியாக திகழ்கிறார் ஸ்ரீநரசிம்மர். அவரின் உக்கிரம் தணிக்க அவருக்குப் பால்பாயசம் நிவேதனம் செய்யப்படுகிறது. ஸ்ரீநரசிம்மர் தூணைப் பிளந்து வெளிப்படும் காட்சியைக் கூறும் 'நாராயணீய’த்தில் உள்ள 10 ஸ்லோகங்கள் ஸ்ரீநரசிம்மருக்குச் செய்யப்படும் ஒவ்வொரு பூஜையின் போதும் இங்கே ஜபிக்கப்படுவது விசேஷம். இந்தக் கோயிலின் மதில், ஒரே நாள் இரவில் பூதகணங்களால் உருவாக்கப்பட்டது என்கிறார்கள். ஒவ்வொரு பக்கமும் சுமார் 102 மீட்டர் நீளமும், 12 அடி உயரமும் கொண்ட இந்த மதிலின் கற்கள், சிமென்ட் கலவை இல்லாமல் பொருத்தப்பட்டு, காலம் காலமாய் சிதிலமில்லாமல் உறுதியாக நிற்பது அதிசயமே!

கேரள திவ்ய தேசங்கள்!

கிழக்கு மற்றும் மேற்குத் திசைகளில் கொடிமரத் துடன் கூடிய நுழைவாயில் கோபுரங்களும், கோயிலையட்டி, 3 ஏக்கர் பரப்பில் திகழும் பூமி தீர்த்தக் குளமும் வெகு அழகு! கிழக்குக் கோபுரம் அருகில் ஒரு சிலை; கழுமரத்தில் ஒரு மனிதர் படுத்தவாக்கில் காணப்படுகிறார். லஞ்சம், ஊழல், ஏய்த்தல் முதலிய குற்றங்கள் கழுமரத் தண்டனைக்கு உரியவை என்று சித்திரிக்கும் சிலை அது என்கிறார்கள்.

முன்னொரு காலம் சூரிய வம்ச அரசனான ருக்மாங்கதன் இந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்தான்.

தேவர்கள் சிலர், தினமும் இங்கு வந்து இந்த அரசனின் நந்தவனத்தில் உள்ள அரிய மலர்களைக் களவாடிச் சென்று, மகாவிஷ்ணுவுக்கு அணிவித்து வந்தார்களாம். மன்னனின் சேவகர்கள் மறைந்திருந்து, மலர்களைக் களவாடிய தேவர்களைக் கைது செய்து மன்னனின் முன் நிறுத்தினர். விசாரித்த மன்னன், அவர்கள் தேவர்கள் என்று தெரிந்ததும் மன்னித்து விடுவித்தான். ஆனால், மனிதர்களால் சிறைப்பிடிக்கப்பட்டதால் தேவர்கள் மீண்டும் தேவ லோகம் செல்லும் சக்தியை இழந்தனர். அவர்கள் ருக்மாங்கதனிடம் வந்து, 'வருடம் தோறும் ஏகாதசியன்று நீ விரதம் இருக்கிறாய் அல்லவா, அந்தப் பலனை எங்களுக்குக் கொடுத்தால், நாங்கள் தேவலோகம் செல்லும் சக்தியைத் திரும்பப் பெறமுடியும்'' என்றனர். ருக்மாங்கதனும் தனது ஏகாதசி விரதப் பலனை அவர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுக்க, தேவர்கள் மேலுலகம் சென்றனர். இதைக் கேள்வியுற்ற மகாவிஷ்ணு, மன்னன் ருக்மாங்கதனுக்குக் காட்சிக் கொடுத்து அருளினார். ஏகாதசி விரத மகிமையை விளக்கும் இந்த நிகழ்ச்சி நடந்த தலம் திருக்கடித்தானம் என்று இக்கோயில் புராணம் கூறுகிறது.

கேரள திவ்ய தேசங்கள்!
கேரள திவ்ய தேசங்கள்!

ஆலய அட்வைஸரி கமிட்டித் தலை வரான ராதாகிருஷ்ணமேனனைச் சந்தித்தோம். '' 'ஒரு கடிகை (24 நிமிடம்) நேரம் இந்தத் தலத்தில் இருப்பவர்களும், இந்தப் பெருமாளை வழிபடுபவர்களும் பாவ- சாபம் நீங்கி மோட்சம் அடைவர்’ என்கிறது புராணம். கோயிலின் கருவறை

வட்ட வடிவமாக அமைந்துள்ளது. புண்ணியகோடி விமானம் என்று அதற்குப் பெயர். ஸ்ரீகோயில் (கருவறை)வெளிச்சுவரில் சிவதாண்டவம், கிரதார்ஜுனீயம், விநாயகர், சாஸ்தா, யோக நரசிம்மர், ராமர் பட்டாபிஷேகம், மோகினி, மகிஷாசுரமர்த்தனி, ஸ்ரீவேணு கோபாலன், அனந்தசயனப் பெருமாள் எனப் பழங்காலச் சுவரோவியங்களைக் காணலாம்.

கார்த்திகை (10 நாட்கள்) விழாவின் 9-ஆம் நாளன்று 1008 தீபம் ஏற்றி கொண்டாடப்படும் 'சங்கேதம்’ என்ற தீபத் திருவிழா இங்கு விசேஷம். நரசிம்ம ஜயந்தியும் 10 நாட்கள் நடைபெறுகிறது. தவிர, தசாவதார தரிசனம், ஸ்ரீகிருஷ்ணரின் ஜென்மாஷ்டமியும் இங்கே விசேஷம். ஜென்மாஷ்டமி அன்று நள்ளிரவு 12 மணிக்கு அவதார பூஜை நடைபெறும். இப்பகுதியில் தமிழ் மன்னர்கள் ஆண்டதற்கு அடை யாளமாக தமிழ் வட்டெழுத்துக்கள், கல்வெட்டுக்களாகக் காணப்படுகின்றன. கோயில் நிர்வாகம், அர்ச்சகர்களின் பதவிக்காலம் (மூன்று ஆண்டுகள்) போன்ற பல விவரங்கள் இந்தக் கல்வெட்டுக்களில் இருக்கின்றன. 'நன்று உழைத்த நாடு’ என்ற தமிழ்ப் பெயர் இப்பகுதிக்கு இருந்து வந்தது கல்வெட்டு மூலம் தெரியவருகிறது'' என்றார் ராதாகிருஷ்ண மேனன்.

கேரள திவ்ய தேசங்கள்!

ஆலய மேல்சாந்தியான ஈஸ்வரன் நம்பூதிரி, ''கோயில் காலை 5 முதல் 11:30 மணி வரையிலும், மாலையில் 5 முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். தினமும் 5 வேளை பூஜை சிறப்பாக நடந்து வருகிறது. பால் பாயசம், கடும் பாயசம், பானகம், கதலிப் பழம் ஆகியவை ஸ்வாமிக்கு சமர்ப்பிக்கப் படுகின்றன. இங்கு சதுர் வேத வழிபாடு, சந்தனக்காப்பு வழிபாடு செய்ய, சர்வ காரிய ஸித்தி கிட்டும். ஸ்ரீநரசிம்மரை வழிபட, பகைவர் பயம் நீங்கும். தாயாரை வழிபட கேட்பன எல்லாவற்றையும் தருவாள். மூவரையும் வழிபட எந்தக் குறைவும் ஏற்படுவதில்லை!'' என்கிறார் நெகிழ்ச்சியோடு!

- தரிசனம் தொடரும்...
படங்கள்: ரா.ராம்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism