Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

Published:Updated:
ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வி
ழாக்கள் குதூகலமானவை. அதிலும், கோயிலில் நடைபெறும் திருவிழாக்கள், ஏழை- பணக்கார வித்தியாசமில்லாமல், சாதிப் பாகுபாடுகள் இன்றி விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சொந்த பந்தங்கள் இணைவார்கள்; அக்கம்பக்கத்தினர் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்போல் நெருங்கி ஸ்நேகமாவார்கள். தோழமை இன்னும் பலமாகும். மொத்தத்தில், வாழ்க்கையே வரமாகிப் போகும்! கடவுளின் அருளும் மனிதர்களின் ஒற்றுமைக் குணமும் மேலோங்க... அந்த தேசம் சீரும் சிறப்புமாக முன்னேறும். அதனால்தான் மன்னர்கள், கோயில்களைக் கட்டுவதற்கும் திருவிழாக்கள் குறையற நடப்பதற்கும் வழிவகைகள் செய்தார்கள்.

நாம் எந்த ஊர்க்காரர்களாக இருந்தால் என்ன... திருவிழா என்று சொன்னதும் நம் நினைவுக்கு வருவது, மதுரை மாநகரமாகத்தான் இருக்கும். மதுரை என்றதும் சட்டென்று நம் கண் முன்னே விரிந்து நிற்பது, அழகர் ஆற்றில் இறங்குகிற சித்திரைப் பெருவிழாவாகத்தான் இருக்கும்.

பாண்டிய தேசத்தின் தலைநகரமாகத் திகழ்ந்த மதுரையம்பதியும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களும் செழிக்க வேண்டும்; மதுரைவாழ் மக்களும் சுற்று வட்டார மக்களும் சிறப்புற வாழ வேண்டும் என்பதற்காகவும், சைவ- வைணவ வேறுபாடுகள் இருக்கக் கூடாது என்பதற் காகவும் மிகப் பிரமாண்டமாக விழாவை நடத்த முடிவு செய்தார், மதுரையை ஆட்சி செய்த திருமலை நாயக்கர்.

சைவத் திருக்கோயிலாம் ஸ்ரீமீனாட்சி அம்பாள் சமேத ஸ்ரீசொக்கநாதர் திருக்கோயிலையும் மலையின் கீழே குடிகொண்டிருக்கும் ஸ்ரீகள்ளழகர் ஆலயத்தையும் இணைத்து விழா நடத்துவது எனத் திட்டமிட்டார். அதன்படி, ஸ்ரீமீனாட்சி அம்மையின் திருமண வைபவத்தையும், அதில் கலந்துகொள்ள அழகர்மலையில் இருந்து ஸ்ரீகள்ளழகர், வைகையாற்றில் இறங்குவதையும் பெரிய விழாவாகக் கொண்டாட உத்தரவிட்டார்.

ஆலயம் தேடுவோம்!

அதையடுத்து கிராமம் கிராமமாக, இந்த விழா பறையறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு ஊரிலிருந்தும் குடும்பம் குடும்பமாகத் திரண்டு வந்தார்கள். அந்த மக்கள் வெள்ளத்துக்கு நடுவே, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் சீரும் சிறப்புமாக நடந்தேறியது. இதற்காக, அழகர் கோயிலில் இருந்து திருவீதியுலாவாக வரும் வழிகளில் எல்லாம் சிறிய சிறிய கொட்டகைகள் போட்டு, அழகருக்கு ஆராதனைகளும் பூஜைகளும் நடந்தேறின. இன்றைக்கும் மண்டகப்படி என்கிற பெயரில் அவை விமரிசையாக நடந்தேறி வருகின்றன.

மதுரைக்கு அருகே உள்ளது சோழவந்தான். இந்த ஊருக்கு அருகில் அமைந்துள்ள குருவித்துறையில் ஸ்ரீவல்லப பெருமாள் கோயில் கொண்டிருக்கிறார். அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின்போது, ஸ்ரீவல்லப பெருமாள் சர்வ அலங்காரத்துடன் தேனூருக்கு அருகில் உள்ள திருவேடகத்தின் வைகையாற்றின் நடுவில் உள்ள மண்டபத்தில் எழுந்தருள்வார். அப்போது, தேனூர் ஆலயத்தில் உள்ள பெருமாளும் சேர்ந்துகொள்வார். அங்கே.... கள்ளழகரும் வந்து எழுந்தருளியிருக்கிறார் என்றொரு தகவல் கோயிலில் சொல்லப்படுகிறது.

கோச்சடைமாறன் எனும் மன்னன் காலத்தில், தேனூர் பெருமாள் கோயில் கட்டப்பட்டது என்றும், அந்தக் கோயிலில் நந்தா விளக்கு எரிவதற்காகவும் பூஜைகளும் சடங்குகளும் செவ்வனே நடைபெற வேண்டும் என்பதற்காகவும், வேளாண் அரையன் என்பவன் இந்தக் கோயிலுக்கு ஐம்பது பசுக்களை தானமாக வழங்கியிருக்கிறான் என்று கல்வெட்டு தெரிவிக்கிறது. அதேபோல், அரையந்திருவரங்கி என்பவன், ஐம்பது ஆடுகளை இந்தக் கோயிலுக்கு வழங்கியிருக்கிறான் என்று கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.

ஆலயம் தேடுவோம்!

பாண்டியர்கள் மற்றும் திருமலைநாயக்கரின் ஆட்சிக்காலத்தில் தேனூர் எனும் கிராமம், பெருந்தேனூர் என்றே அழைக்கப்பட்டதாம். அழகர் கிள்ளை விடுதூது மற்றும் சோலைமலைக் குறவஞ்சி ஆகிய சிற்றிலக்கியங்களில், பெருந்தேனூர் தலத்தின் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன என்று வரலாற்று ஆய்வாளர் க.ராஜா என்பவர் தெரிவித்துள்ளார்.

மதுரை- சோழவந்தான் சாலையில், மதுரையில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது தேனூர். இந்தக் கிராமத்தில், மேட்டுப் புஞ்சைத் தெருவில் பெருமாள் கோயில், பிரமாண்ட அமைப்பில் இருந்துள்ளது. சக்தியும் சாந்நித்தியமும் கொண்டு, மதுரையம்பதியின் முக்கியமான வைணவத் தலங்களில் ஒன்றாகத் திகழ்ந்த இந்தக் கோயில், இன்றைக்கு முழுவதும் இடிந்த நிலையில், வெறும் கருவறை மட்டுமே எஞ்சியிருக்க, அதுவும் சிதைந்திருக்கிற நிலையில் உள்ளது என்பதுதான் பெருங்கொடுமை!

கடந்த மூன்று தலைமுறைக்கு முன்பு வரை, தேனூர் பெருமாள் கோயில் வழிபாடுகளும் விழாக்களுமாக இருந்ததாம். அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின் போது, ஸ்ரீவல்லபபெருமாளும் தேனூர் பெருமாளும் சர்வ அலங்காரத்தில் ஜொலித்தபடி காட்சி தருவார்களாம். ஆனால், இன்றைக்குக் கோயில் புதையுண்டு கிடக்கிறது; பெருமாளும் அங்கே இல்லை.

பிறகு?

தேனூருக்கு அருகில் நாகதீர்த்தம் எனும் கிராமம் உள்ளது. இங்கே... பெருமாளுக்கு அழகிய ஆலயம் அமைந்துள்ளது. பாதுகாப்பு கருதி, சுமார் 25 வருடங்களுக்கு முன்பு, தேனூர்ப் பெருமாளை இந்தக் கோயிலில் வைத்துப் பாதுகாத்து வருகின்றனர் மக்கள்.

ஆலயம் தேடுவோம்!

இந்தப் பெருமாளின் திருநாமம் கூட மக்களுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. இங்கேயுள்ள தாயாரின் விக்கிரகத் திருமேனி கொள்ளை அழகாக இருக்கு மாம். புரட்டாசி மற்றும் விழாக்களின்போது, உத்ஸவ மூர்த்தங்கள் தேனூரை பவனி வரும் அழகைக் காண, அந்தப் பக்கம் வாடிப் பட்டியில் இருந்தும், இந்தப் பக்கம் சமயநல்லூரில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், மாட்டுவண்டி பூட்டிக்கொண்டு வருவார்களாம்.

திருவேடகம் வைகையாற்றின் நடுவே உள்ள மண்டபத்தில், அழகருக்கு மண்டகப்படி பூஜைகள் நடந்து முடியும்போது, அந்த மாதத்தில் கோடை மழை தப்பாமல் பெய்து, ஊரையே குளிரச் செய்யுமாம். மண்டகப்படி பூஜைகள் முடிந்ததும் அழகருக்குப் பின்னே ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் தேனூர் மக்கள் மதுரைக்கு வருவதும், ஆற்றில் அழகர் இறங்குகிற திருக்காட்சியைத் தரிசித்துவிட்டுத் திரும்புவதும் என கொண்டாட்டமாகவும் கோலாகலமாகவும் திகழ்ந்த தேனூரும் ஆலயமும் இன்று மொத்தக் களையையும் இழந்துவிட்டு நிற்கிறது.

சமயநல்லூர், பரவை, தேனூர், திரு வேடகம், சோழவந்தான், குருவித்துறை என சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாயிகள், தேனூர் பெருமாளின் திருவடியில் விதை நெல்லை வைத்து வேண்டிக் கொண்டுதான் விதைப்பார்கள். அதையடுத்து நெல் மணிகள் ஆள் உயரத்துக்கு வளர்ந்து, செழித்திருக்கும். பசேலென வாழைகள் பூத்துக் குலை தள்ளி நிற்கும். அறுவடை முடிந்ததும்... முதல் மூட்டை நெல்லை யும் முதல் வாழைத்தார் மற்றும் வாழைப்பூவையும் பெருமாளுக்குக் காணிக்கையாகச் செலுத்தி, வணங்கிச் செல்வார்களாம்.

தேனூர் பெருமாள்... நாகதீர்த்தம் கிராமத்தில் இருந்து மீண்டும் அங்கே வந்து எழுந்தருள வேண்டாமா? நெய்மணக்க அக்கார அடிசலும் புளியோதரையும் அவருக்கு நைவேத் தியமாகப் படைக்க வேண்டாமா? புது வஸ்திரத்தை அணிந்து கொண்டு, சர்வ அலங்காரத்துடன் பெருமாள் காட்சி தர... அதைக் கண்ணாரத் தரிசிக்க வேண்டாமா? ஆடிப்பூர விழாவும் புரட்டாசி சனிக்கிழமை புறப்பாடும் சிறப்புற நடைபெற, நாம் ஏதாவது செய்யவேண்டும்தானே?

அழகர் ஆற்றில் இறங்குகிற வைபவத்தில் ஸ்ரீவல்லப பெருமாளுடன் தேனூர் பெருமாளும் கலந்து காட்சி தருவதை, இன்றைய தலைமுறையினர் தரிசிக்க வேண்டாமா? தேனூர் பெருமாள் கோயில் திருப்பணிக்கு, ராமருக்கு அணில் போல் நாம் செய்யும் சிறு பணியும்கூட... ஒன்று ஆறாகி, ஆறு நூறாகி, நூறு ஆயிரமாகி... எனப் பல்கிப் பெருகும். நம்மையும் நம் சந்ததியினரையும் பல்லாண்டு வாழ வைக்கும்!

'தேனூர் பெருமாள் கோயிலில், சம்ப்ரோக்ஷணம் எனப்படும் மகா கும்பாபிஷேகம் நடைபெறும்’ எனும் தேனான சேதி...  பக்தர்கள் மனசு வைத்தால் சீக்கிரமே நிச்சயம் நம் காதுகளில் விழும்.

படங்கள்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism