Published:Updated:

கங்கா தரிசனம்... குபேர யோகம்!

தீபாவளி தரிசனம்...

கங்கா தரிசனம்... குபேர யோகம்!

தீபாவளி தரிசனம்...

Published:Updated:
கங்கா தரிசனம்... குபேர யோகம்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஞ்சபூத திருத்தலங்கள் என்று அறிந்திருப்போம். பஞ்சநாத திருத்தலங்களை அறிந்திருக்கிறீர்களா? திருச்சியில் ஸ்ரீநாகநாதர், ஸ்ரீபூலோகநாதர், ஸ்ரீவெள்கண்டநாதர், ஸ்ரீகயிலாசநாதர், ஸ்ரீகாசி விஸ்வநாதர் என ஐந்து சிவாலயங்கள் உள்ளன. இவற்றை பஞ்சநாத தலங்கள் எனப் போற்றுவார்கள். இதில் முதன்மையானது ஸ்ரீகாசி விஸ்வநாதர் திருக்கோயில்.

அகத்திய முனிவர், சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து தினமும் பூஜை செய்து வந்த தலம் இது. வழக்கத்துக்கு மாறாக, தரைத் தளத்தில் இருந்து சுமார் 15 அடிக்குக் கீழே அமைந்துள்ளது இந்தக் கோயில். பக்தர்கள் தங்கள் கர்வம் மொத்தமும் ஒழிந்து, பணிவுடன் குனிந்து பவ்யமாக உள்ளே நுழைவது போன்ற அமைப்பில் கட்டப்பட்ட திருக்கோயில் என்கின்றனர், பக்தர்கள்.    

இந்தத் தலத்து இறைவனின் திருநாமம் ஸ்ரீகாசி விஸ்வநாதர். எனவே, இங்கு வந்து வணங்கினால், காசிக்குச் சென்று தரிசித்த புண்ணியத்தை அடையலாம் என்பது ஐதீகம்!  

தலத்தின் நாயகி- ஸ்ரீவிசாலாட்சி. கருணையும் கனிவும் கொண்டு, தன்னை நாடி வருவோருக்கு நற்று¬ணையாகத் திகழ்கிறாள் அம்பிகை. வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீவிசாலாட்சியம்மைக்கு செவ்வரளி மாலை சார்த்தி வணங்கினால், விரைவில் கல்யாண மாலை தோள் சேரும் என்கின்றனர் பெண்கள்.

ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீபிரம்மா, ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர் ஆகியோர் தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கும் அற்புதத் தலம் இது!

கங்கா தரிசனம்... குபேர யோகம்!

இந்தத் தலத்தில், ஸ்ரீகங்காதேவி சூட்சும வடிவில் நிறைந்திருப்பதாக ஐதீகம். அதற்குச் சாட்சியாக... ஸ்ரீகாசிவிஸ்வநாதரின் சிவலிங்கத் திருமேனிக்குக் கீழே கங்கா நதி பாய்ந்தோடுவதாக அமைந்துள்ளதைச் சொல்லிச் சிலிர்க்கின்றனர், சிவனடியார்கள். இங்கு வந்து சிவதரிசனம் செய்தாலே, கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும் என்கிறது ஸ்தல புராணம்.

எந்தச் செயலைச் செய்தாலும் தடை, வியாபாரத்தில் சிக்கல், குடும்பத்தில் ஒற்றுமையில்லாத நிலை, கல்வியில் மந்தம் எனத் தவித்துக் கிடப்பவர்கள், தீபாவளி நாளில் இங்கே சிவனாருக்குச் செய்யப்படும் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு வழிபட்டால்... தடைகள் யாவும் விலகும்; வியாபாரம் சிறக்கும்; குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்; கல்வியில் சிறந்து விளங்குவார்கள் எனப் பெருமிதத்துடன் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.

தவிர, சிவபூஜை செய்து மனமுருகி வழிபட்ட குபேரனுக்கு சிவபெருமான் திருக்காட்சி தந்ததுடன், அவருக்கு பதினாறு வகைச் செல்வங்களையும், சகல சௌபாக்கியங்களையும் தந்தருளினார். அப்படி குபேரனுக்கு சிவனார் அருளிய நாள்... தீபாவளி (அமாவாசை) நன்னாள் என்பதால், அன்றைய தினத்தில் சிவ வழிபாடு செய்வதும், சிவ தரிசனம் செய்வதும் இல்லத்தில் சுபிட்சத்தைச் சேர்க்கும்; குபேர யோகம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருச்சி- சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீகாசிவிஸ்வநாதரை தீபாவளி நன்னாளில் வணங்குங்கள். புண்ணியமும் சகல சம்பத்துகளும் பெறுவீர்கள்!

  - பு.விவேக் ஆனந்த்
படங்கள்: தே.தீட்ஷித்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism