Published:Updated:

மாங்கல்ய பலம் தருவா ஸ்ரீதிரௌபதியம்மன்!

தீபாவளி தரிசனம்...

மாங்கல்ய பலம் தருவா ஸ்ரீதிரௌபதியம்மன்!

தீபாவளி தரிசனம்...

Published:Updated:
மாங்கல்ய பலம் தருவா ஸ்ரீதிரௌபதியம்மன்!
##~##
தி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ருச்சி கீழசிந்தாமணியில், காவிரிக் கரைக்கு அருகில் அழகுற அமைந்துள்ளது ஸ்ரீதிரௌபதி அம்மன் ஆலயம். இங்கு வந்து பிரார்த்தனை செய்துகொண்டால், கருணையுடனும் கனிவுடனும் நமது கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவாள் அம்மன் எனப் பூரிக்கின்றனர், பக்தர்கள்.

பஞ்சபூதங்களின் ஒட்டுமொத்த சக்தியாக ஸ்ரீதிரௌபதியம்மனைப் போற்றி வணங்கச் சொல்கிறது, கோயிலின் ஸ்தல வரலாறு. எனவே, ஸ்ரீதிரௌபதியம்மனை மனதாரப் பிரார்த்தித்தால், பஞ்சபூத சீற்றங்களின் பாதிப்புக்கு ஆளாகாமல் தப்பிக்கலாம் என்பது ஐதீகம்!

திரௌபதியம்மனைத் தரிசிக்க தினமும் பக்தர்கள் வருகின்றனர் என்றாலும் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், ராகுகால வேளையில் ஏராளமான பெண்கள் வந்து, அம்மனுக்கு அரளிப்பூமாலை சார்த்தி வழிபட்டுச் செல்கின்றனர்.  

இந்தத் தலத்தில் சந்நிதி கொண்டிருக்கும் ஸ்ரீவல்லப கணபதி ரொம்பவும் விசேஷம்! சங்கடஹர சதுர்த்தி நாளில் இவரை வணங்கி, அருகம்புல் மாலை சார்த்தி வேண்டிக்கொண்டால், நம் விக்கினங்கள் அனைத்தையும் களைவார் என்பது நம்பிக்கை.  

கைகளில் கிளியும் தாமரையும் ஏந்தியபடி அழகு ததும்பக் காட்சி தரும் ஸ்ரீதிரௌபதியம்மன் கொள்ளை அழகு! இதே திருநாமத்துடன் திருச்சி மாநகரில் ஐந்து இடங்களில் அம்மன் கோயில் கொண்டிருந்தாலும், திருவிழாக்கள் இங்கேதான் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சித்ரா பௌர்ணமியின்போது தீ மிதித் திருவிழாவும், ஆடிமாதத்தில் கூழ் வார்க்கும் விழாவும் சிறப்புற நடைபெறுகின்றன.

மாங்கல்ய பலம் தருவா ஸ்ரீதிரௌபதியம்மன்!

தீபாவளி நன்னாளில் ஸ்ரீகேதார கௌரி விரதம் அனுஷ்டிப்பதாலும், ஸ்ரீகேதாரேஸ்வரரின் கதைகளைக் கேட்பதாலும் மாங்கல்ய பலம் பெருகும் என்பார்கள் முன்னோர்கள். சகல ஐஸ்வரியங்களும் கிடைத்து, நீண்ட ஆயுளும் நிலைத்த புகழுமாக வாழ்வார்கள் என்பது ஐதீகம். தீபாவளி நாளில் (அமாவாசை), இங்கே நடைபெறும் கேதார கௌரி விரத பூஜையில் கலந்துகொண்டு ஸ்ரீதிரௌபதி அம்மனை மனதாரப் பிரார்த்தித்தால், இல்லறம் செழிக்கும்; இல்லம் சிறக்கும் என்கின்றனர், பெண்கள்.

புரட்டாசி மாதம் அஷ்டமி நாளில் துவங்கி, தீபாவளி அமாவாசை தினம் வரை முறைப்படி விரதம் மேற்கொண்டு பூஜையில் ஈடுபடலாம். தீபாவளி நன்னாளில், கும்பத்தின் மீது நாணயம், தங்கம், பவளம் எனத் தங்களால் இயன்றதை வைத்து, அதன் மேல் 21 இழைகள் கொண்ட மஞ்சள் சரடை வைத்து, சந்தனம் குங்குமம் இட்டு வணங்கவேண்டும். அதிரசம், வெல்லம் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து, பூஜிக்க வேண்டும். நிறைவாக, அந்த மஞ்சள் சரடை பெண்கள் இடது கையிலும், ஆண்கள் வலது கையிலும் கட்டிக்கொள்ளவேண்டும். இதனால் கணவனுக்கு ஆயுள் நீடிக்கும்; மாங்கல்ய பலம் பெருகும் என்பது நம்பிக்கை!

ஸ்ரீஉமையவள் அனுஷ்டித்த ஸ்ரீகேதார கௌரி விரதத்தை, தேவ கன்னியர்கள் கங்கைக் கரையில் மேற்கொண்ட பூஜையை நாமும் மேற்கொள்வோம். ஸ்ரீதிரௌபதியம்மனின் ஆலயத்தில் நடைபெறும் பூஜையில் கலந்துகொண்டு, அம்மனின் பேரருளைப் பெறுவோம்!  

     - ச.மஞ்சுளா
படங்கள்: தே.தீட்சித்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism