

##~## |
அங்கே, வானுயர்ந்து நிற்கும் ரிஷ்யமுக பர்வதத்தை உச்சிமோந்து செல்லும் மேகப்பொதிகள், ஒன்றுடன் ஒன்று இணைந்து, சீதாவின் சிரித்தமுகத்தை சித்திரித்துக் காட்டுவதாய் தோன்றியது ராமனுக்கு. தாமரைத் தடாகத்தை சற்றே சலனப்படுத்திவிட்டு...
அதே மிதமான வேகத்துடன், தென்னைக் கீற்றுகளையும், அதன் அடிமரத்தை பற்றிப் படர்ந்து மலர்ந்திருக்கும் பூக்களையும் தொட்டுத் தழுவி, பிறகு தமது திருமுகத்தையும் பூவாய் எண்ணி சீண்ட வரும் தென்றல்... தேவியின் சுவாசத்தை சுமந்து வருவதாக உணர்ந்தார் ராகவன். மனசு தக்கையாகிப்
போனது அவருக்கு!
அற்புதம்... அற்புதம்..! இத்தகைய வனப்பும் ஏகாந்தமும்தான், ஸ்ரீராமனின் மனதைக் கவரும் பாக்கியத்தை இந்த ஆரண்யத்துக்குப் பெற்றுத் தந்தனவோ..? இல்லை, இன்னுமொரு விஷயமும் உண்டு!
பேச்சிலும், பண்பிலும், நடத்தையிலும், பக்தியிலும் அழகனான அனுமன், ஸ்ரீராமனுக்கு அறிமுகமானது இந்த வனத்தில்தான்.
அரிதான அந்த அறிமுக படலத்தைக் காணுமுன் இந்த வனம் தொடர்பான ஒரு கதையைப் படித்து விடுவோம்.
கிஷ்கிந்தையை ஆட்சிசெய்து வந்தவன் வானர வீரன் வாலி. பெரும் பலசாலியும் பராக்கிரமசாலியுமான இவனது சகோதரன் சுக்ரீவன். இந்த பகுதியில் அசுரர் அட்டகாசம் அதிகம்.
அதிலும் மாயாவி, துந்துபி ஆகியோரின் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தன. பார்த்தான் வாலி... அவர்கள் இருவரது கதை யையும் முடிப்பது என்று தீர்மானித்தான்.

நல்லதொரு நாளில் அசுரன் துந்துபியின் வதம் நிகழ்ந்தது. பெரிதும் சண்டையிட்டு, எருமை உருவத்தினனான அந்த அசுரனை அழித்த வாலி, பிரமாண்டமான அசுர உடலை தலைக்கு மேல் தூக்கி சுழற்றி வீசியெறிந்தான். அது, வெகு தூரம் பறந்து வந்து, இங்கே இந்த அழகிய வனத்தில் மதங்க மாமுனிவரின் ஆஸ்ரமத் தின் அருகில் வந்து விழுந்தது!
தவத்தாலும் யாகங்களாலும் புனிதம் பெற்ற அந்த இடம், இறந்துபட்ட அசுரனின் உடல் விழுந்ததால் கலங்கமுற்றதாகக் கருதினார் முனிவர். அவரது கோபம் வாலியின் மீது திரும்பியது. ''இந்த வனப்பகுதியின் புனிதத்தைக் கெடுத்த வாலி, இந்த வனத்தின் எல்லையில் கால் வைத்தால் அவனுக்கு மரணம் சம்பவிக்கட்டும்!'' என்று சபித்து விட்டார். தன்னுடன் மோதும் பகைவரின் பலத்தில் சரிபாதியை கிரகித்துக் கொள்ளும் மிக அற்புதமான வரத்தைப் பெற்றிருந்த வாலி, அந்த சாபத்தால் மிகவும் கலங்கினான். கனவிலும் இந்தக் கானகத்தின் பக்கம் வராமல் பார்த்துக் கொண்டான்.
அண்ணனுக்குக் கிடைத்த சாபம் தம்பி சுக்ரீவனுக்கு வரமாகிப் போனது. அவனுக்கு மிக பாதுகாப்பான இடமாகத் திகழ்ந்தது இந்த ஆரண்யம். மட்டுமின்றி, கருணைக் கடலாம் ஸ்ரீராமனைத் தரிசிக்கும் பெரும்பேறும் அவனுக்குக் கிடைத்தது!
அதுசரி... சுக்ரீவனுக்கு ஏன் இந்த வனவாசம்?
துந்துபியை வாலி அழித்தான் அல்லவா? அதன்பிறகும், வாலிக்கும் அவன் தேசத்துக்கும் மற்றொரு அசுரனான மாயாவியின் தொல்லை கள் தொடர்ந்தன. ஒருநாள் இருவருக்கும் கடும் சண்டை மூண்டது. மலைகள் மோதுவது போன்று இருவரும் மோதிக்கொண்டார்கள். ஒரு நிலையில் வாலியின் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் தப்பி காட்டுக்குள் ஓடிய மாயாவி, அங்கே ஒரு குகைக்குள் புகுந்து கொண்டான். வாலியும் அவனை விரட்டியபடி, இருண்ட அந்த குகைக்குள் நுழைந்தான்.
அதற்கு முன்னதாக... தன்னை பின்தொடர்ந்து வந்த தம்பியை, குகை வாயிலில் இருக்கும்படி பணித்துவிட்டு தான் மட்டும் உள்ளே சென்றான் வாலி. அண்ணன் வெற்றியுடன் திரும்பு வார் என்று குகை வாயிலிலேயே காத்திருந்தான் சுக்ரீவன். நாட்கள் நகர்ந்தனவே தவிர வாலி திரும்புவதாக இல்லை. அத்துடன் குகைக்குள் இருந்து வந்த கூக்குரல்களும் சுக்ரீவனை நம்பிக்கை இழக்க வைத்தன. அசுரனின் சதியால் அண்ணன் மாண்டுவிட்டார் என்று கருதி யவன், குகையின் வாயிலை பெரியதொரு கல்லால் மூடிவிட்டு அரண்மனைக்குத் திரும்பினான். மற்றவர்களின் வற்புறுத்தலால் அரியணையில் அமர்ந்தான்.
ஆனால் விதியின் விளையாட்டு...
வாலி திரும்பி வந்தான். தம்பி தனக்கு துரோகம் இழைத்ததாகக் கருதி, சுக்ரீவனை அடித்து அரண்மனையிலிருந்தே விரட்டி விட்டான். உயிருக்கு பயந்து சுக்ரீவன், அண்ணனால் நெருங்கமுடியாத இந்த ஆரண்யத்துக்கு வந்து அடைக்கலம் புகுந்தான். வாயுமைந்தன் ஆஞ்சநேயன் முதலானோரும் சுக்ரீவனுக்குத் துணையாக இந்தக் காட்டில் வசித்தனர். இந்த நிலையில்தான் ஒருநாள், ஆயுதபாணிகளாக மனிதர்கள் இருவர் வருவதைக் கண்டான் சுக்ரீவன். 'எங்கே... தன்னைக் கொல்ல அண்ணன் வாலிதான் ஆள் அனுப்பியிருக்கிறானோ’ என அஞ்சிய வன், ஆஞ்சநேயனை அழைத்தான். வருவது யாரென்று பார்த்து வரும்படி பணித்தான்.
மாருதிதான் மதியூகம் மிகுந்தவராயிற்றே! சட்டென தனது சுய ரூபத்தை மாற்றிக்கொண்டு, ஒரு பிரமச்சாரி போன்று உருவம் ஏற்றுச் சென்றார். பாறை ஒன்றின் மறைவில் இருந்தபடி, அந்த மானிடர்களைக் கண்டார்.
வாயுமைந்தனின் பார்வை ஸ்ரீராமனின் மீது
விழுந்த அக்கணமே... அவருக்குத் தெரிந்து போனது, வருவது மனிதன் அல்ல தெய்வம் என்று. தவக்கோலமும், ராஜகளையும் ஒருங் கிணைந்த அவ்விருவரின் வருகையை வைத்தக் கண் வாங்காமல் பார்த்து அதிசயித்தார்.
காயெரி கனலும் கற்கள்
கள்ளுடை மலர்களே போல்
தூய செங்கமல பாதம் தோய்தொறும்
குழைந்து தோன்றும்
போயின திசைகள் தோறும்
மரனெடு புல்லும் எல்ல
சாய்வுறும் தாழ்வபோல் இங்கு
இவர்களோ தருமமாவார்...
- என எண்ணி உருகி நின்றாராம் அஞ்சனைப் புதல்வன்.
வெயிலில் காய்ந்து சுடுகிற கற்களும் அவர்களுடைய கால்கள் பட்டதும், அப்போதுதான் மலர்ந்த பூக்களைப் போன்று, குளிர்ந்து மென்மையாகி விடுவதாக தோன்றியதாம் அவருக்கு. சாய்ந்து நிற்கும் மரங்களும், தாழ்ந்திருக் கும் புற்களும்கூட அந்த இருவரை யும் வணங்குவதாகப்பட்டது அனுமனுக்கு! அவரையும் அறியாமல் அவரின் கரங்கள் ஒன்றிணைந்து தன்னிச்சையாக வணங்கிட, அனுமனின் வாயோ தானாக முணுமுணுத்தது...
'தருமத்துக்கு உருவம் இருந்தால் இரண்டு உருவங்கள் இருக்க வேண்டும். அந்த உருவங்களும் இவர்களாகத்தான் இருக்க வேண்டும்.’
அடுத்தடுத்து அனைத்தும் நன்மையாய் நடந்தன. இருவரையும் எதிர்கொண்டு வணங்கி வரவேற்ற அனுமன், தன்னைக் குறித்தும் தன் தலைவனாம் சுக்ரீவனின் நிலைகுறித்தும் விவரித் தார். மட்டுமின்றி, அவர்களைக் குறித்து சுக்ரீவன் கேட்டால், தான் என்ன சொல்வது என்றும் பணிவும் சாதுரியமாகவும் கேட்டார். சொல்லின் செல்வனான அவரின் திறன் குறித்து ஸ்ரீராமன் மகிழ, லட்சுமணன் தாங்கள் யாரென்பதை விவரித்தார். உடன், இருவரையும் சுக்ரீவனிடம் அழைத்துச் சென்றார் அனுமன்.
அங்கே, மிக அற்புதமாய் ஒரு சரணடைதல் நிகழ்ந்தது; சுக்ரீவனுக்கு வரமும் வாழ்வும் கிடைத்தது!
- அவதாரம் தொடரும்...