Published:Updated:

சித்தம்... சிவம்... சாகசம்! - 6

சித்தம்... சிவம்... சாகசம்! - 6

சித்தம்... சிவம்... சாகசம்! - 6

சித்தம்... சிவம்... சாகசம்! - 6

Published:Updated:
சித்தம்... சிவம்... சாகசம்! - 6
சித்தம்... சிவம்... சாகசம்! - 6

தெளிவறி யாதார் சிவனை யறியார்....
தெளிவறி யாதார் சிவனு மாகார்...
தெளிவறி யாதார் சிவமாக மாட்டார்...
தெளிவறி யாதவர் தீரார் பிறப்பே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- திருமந்திரம்

சித்தம்... சிவம்... சாகசம்! - 6

சிதம்பரம் திருத்தலத்தின் பொன்னம்பலத்துள் உறையும் ஸ்ரீநடராஜபெருமானை 'ரஜித ஸ்ருங்க ஸ்தோத்திரம்’ எனும் துதியால் பதஞ்சலி முனிவர் பாடுவது பற்றி அழகாகக் குறிப்பிடுவார் காஞ்சி மகா பெரியவர்.

நந்தி, பிருங்கி, வியாக்ரபாதர் மூவருக்கும் இறைவனின் அந்தத் திருநடனத்தை இசைச் சிறப்போடு தங்களால் மட்டுமே பூரணமாக ரசிக்க முடியும் என்கிற கர்வம் இருந்ததாம். பதஞ்சலிக்குக் காதுகள் இல்லாததால், கண்களால் பார்த்து ரசிக்க மட்டுமே முடியும். இறைவனின் திருநடனத்தில் மெய்ம்மறந்து கண்களைமூட நேரும்போது, காட்சி அற்றுப் போகும். எனவே, அவரால் பூரண திருநடனத்தை ஒருநாளும் காண இயலாது. எனவேதான், அந்த மூவருக்கும் அப்படி ஒரு கர்வம்!

அதற்குப் பதிலாகவே பதஞ்சலி இப்படி ஒரு துதி செய்தார்.

இது ஒரு வேடிக்கையான போட்டி. அதாவது, இறைவனைத் தரிசிப்பதில்- வியப்பதில்- பூரிப்பதில் யார் முதலில் என்கிற போட்டி!

##~##
இதை நமது மனித மனோபாவனையில் மலிவுபடுத்தி, அந்த ஞானிகளுக்குள்ளேயே போட்டி- பொறாமையா என்று கேட்டுவிடக் கூடாது. இறைவனைத் துதிக்க... அவனோடு ஒன்றிட... கலந்திட... கொம்பும் வேண்டாம்; காதும் வேண்டாம்; காலும் வேண்டாம்;. மனம் மட்டுமே போதும் என்று பதஞ்சலி உணர்த்துவதுதான் உட்பொருள்.

இப்படி, இவர்களிடையே ஒரு போட்டிக்குக் காரணமாய் நின்ற அந்தப் பொன்னம்பலத்த வனை இரணியவர்மன் எனும் மன்னவனும் தரிசிக்கிறான். அவன் மனம், என்றும் காணாத அமைதியை அடைகிறது.

அப்படியே அவனுள் பலவிதமான எண்ண அலைகளும் எழும்பு கின்றன. சிதம்பரத்து ஆலயக் கூரை பொன்னால் வேயப்பட்டுப் பொன்னம்பலமாய்த் திகழ்ந்திட, ஏன் திருமேனி மட்டும் முழுவதும் பொன்னில் இல்லை? சுத்தமான செம்பொன்னில் ஒரு நடராஜ ரூபத்தை ஏன் நாம் உருவாக்கக் கூடாது?

திருப்பூவனம் பொன்னணை யாளுக்கு உத்ஸவ மூர்த்தியைச் செய்யும் ஆசை வந்தது. இரணிய வர்மனுக்கோ நடராஜ ரூபத்தையே செய்யும் ஆசை வருகிறது.

சித்தம்... சிவம்... சாகசம்! - 6

நாடு திரும்புகிறான்; பிரதானியர்களை அழைக்கிறான்; விருப்பத்தைக் கூறுகிறான்; செம்பொன்னையும் குவிக் கிறான். ஆனால், ஒரு பொற்தச்சராலும் சுத்தமான பொன்னில் செப்பு கலவாமல் ஸ்ரீநடராஜர் தோற்றத்தை வார்க்க முடியவில்லை. இரணியவர்மனோ துளியும் செப்பு கலக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறான். தச்சர்கள் 'இது ஆகாது’ என்கிறார்கள். இரணியவர்மன் வருந்துகிறான். அவனது வருத்தம் போகர் சித்தர் காது வரை செல்கிறது.

புன்னகைக்கிறார் போகர். தன் சீடனாகிய கருவூராரை இரணியவர்மனிடம் அனுப்புகிறார். கருவூராரும் வருகிறார். இவரது பெயரை இருவிதமாகப் பிரித்துப் பார்த்துப் பொருள் கொள்ளலாம். 'இனிவரும் நாளில் ஒரு கருவிலும் ஊர்ந்திடாமல் பிறவா வரம் பெற வேண்டும்’ என்று வாழ்ந்தவர்; தன் நோக்கையே காரணப் பெயராக கொண்டவர் என்பது ஒரு பொருள்.

'அன்னையின் கருவில் இருந்த நாளிலேயே வேதிய தந்தையின் சாஸ்திர ஞானத்தை, குறிப்பாக ஆலய ஆகம விதிகளை அவர் சொல்லக் கேட்டுக் கருவிலேயே ஊறி வளர்ந்தவர்’ என்பது இன்னொரு பொருள்.

தவிர, இன்றைய கரூரில் பிறந்த காரணத் தாலும் அப்பெயர் கொண்டவர் எனக் கருவூராரைப் பற்றிச் சொல்லும்போது நமக்குப் பல பொருள் ஸித்திக்கும்.

அப்படிப்பட்டவர் ஸ்ரீநடராஜர் ரூபத்தை வடிவமைக்கிறார். கூடுதலான பொன்னோடும் கொஞ்சம் செப்போடும்..! அந்தச் செப்புதான் அவர் செய்த தப்பு. மன்னன் இரணியவர்மன் அதை அறிந்து, பெரும் கோபம் கொள்கிறான். ''நூறு சதம் பொன்னில் நான் உருக் காண விரும்பினால் செப்பைக் கலந்துவிட்டாரே..! செப்பு கூடாது என்பதே என் விருப்பம். என் கட்டளை! அதை மீறிவிட்டார். எனவே, இது ராஜ குற்றம்!’ என, அவரைத் தூக்கிச் சிறையில் பூட்டினான்.

கருவூரார் தயார் செய்த நடராஜர் பொன் விக்கிரகத்தினுள் நூற்றுக்கு நூறு பொன்னில்லை. சிறிது செப்பைச் சேர்த்தால்தான் நடராஜ திருமேனி உருக்கொள்ள முடியும் என்பதே உலோக நுட்பம். இதை மன்னன் இரணியவர்மன் ஏற்கவில்லை; அவனால் நடராஜ உருவை உருவாக்கப் பணிக்கப்பட்ட ஏனைய சிற்பிகளும் ஏற்கவில்லை. 'செப்பைக் கலந்து செய்ய இவர் எதற்கு? இந்தச் சோழ தேசத்தில் இல்லாத பொற்கொல்லர்களா?’ என்று ஏகடியமாய்ப் பேசினார்.

சித்தம்... சிவம்... சாகசம்! - 6

ஆனால், கருவூரார் செய்த நடராஜ மூர்த்தத் தில் நுட்பங்கள் அதிகம் இருந்தன. காலிலும் கையிலும்தான் செப்புக் கலப்பிருந்தது. திருமுகம் நூற்றுக்குநூறு பொன்னில் கொஞ்சியது.

'மன்னா... எந்த ஒரு சிலா ரூபத்தை காணும்போதும் அதன் முகத்தைப் பார்த்தே நாம் வியப்போம். முகத்தின் அமைப்பை வைத்தே மற்ற பாகங்களை ரசிப்பதும், அதைக் கணிப்பதும் நிகழும். இங்கே பொன்முகத்தோடு காட்சி தருகிறான் அந்த ஈசன். எனவே இதை ஒரு பூரண பொற்சிலையாக தாங்கள் கருதலாம்’ என்று கருவூரார் சொன்ன சமாதானத்தை மன்னன் ஏற்கவில்லை.

அதே வேளையில், எங்கே... கருவூராரின் சமாதானத்தை மன்னர் ஏற்றுக்கொண்டு விடுவாரோ என்னும் அச்சத்தினாலும் பொறாமையினாலும் அங்கிருந்த ஏனைய சிற்பிகள், 'அரசே... எங்களுக்கென்னவோ இந்தத் திருமேனியில் பாதிக்கும் மேலேயே செப்பு கலந்திருக்குமோ என்று சந்தேகமாக உள்ளது. இவர் இந்தத் திருஉருவைப் படைக்கும் போது எங்களை காண விடவில்லை. மிக ரகசியமாகவே இதைச் செய்தார். அதிலிருந்தே இவர் பொன்னைக் களவாடி ஒளித்து வைத் திருக்கலாம் என்று எங்களுக்குத் தோன்றுகிறது' என்று கூறவும், மன்னரின் மனது பற்றி எரியத் தொடங்கியது. ''எங்கே நான் கொடுத்த பொன்?'' என்று கருவூராரைக் கோபத்துடன் கேட்டான்.

கருவூராருக்கு அது அதிர்ச்சியைத் தந்தாலும், சித்த உள்ளம் அதை ஜீரணித்து, 'இது ஒரு சோதனை! இதனைத் துணிவோடும் நேர்மை யோடும் எதிர்கொள்ள வேண்டும்’ என்று தீர்மானித்து, தன்னை இச்செயலுக்காக பணித்த போகரை மனதில் நினைத்தார்.

சித்த யோகிகளுக்கு தூரமோ இடைவெளியோ ஒரு பொருட்டில்லை. எத்தனை தொலைவில் ஒருவர் இருந்தாலும், தான் நினைக்கும் எண்ணத்தை அவருக்குள் புகுத்த முடியும். அதற்கான அவர்களின் பதிலை அறியவும் முடியும்.

கருவூரார் மன்னனின் கேள்விக்குப் பதில் கூறாமல், போகரை எண்ணி தியானத்தில் மூழ்கிட... மன்னனும் கருவூராரைத் தூக்கிச் சென்று அந்தகாரச் சிறைக்குள் போட்டுப் பூட்டச் சொன்னான்.

உணர்வுகளில் சிக்கி, அதன் போக்கில் போகின்றவனாக மட்டுமே அவன் அப்போது இருந்தான். அரசன் என்னும் அதிகார மமதை அவனை ஒரு சித்த புருஷனிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமோ அப்படி நடக்கவிடவில்லை.

அதனால் ஒரு பாதகமும் இல்லை. அடுத்த சில நாழிகைகளில் போகர் தன் சீடர்களுடன் பழநியம்பதியில் இருந்து வான மார்க்கமாக, 'மேகமணிக் குளிகை’ என்னும் வானில் சஞ்சரிக்க உதவும் குளிகையை வாயில் போட்டுக்கொண்டு, மன்னன் இரணியவர்மனின் அரண்மனை தர்பாரை அடைந்தார். அவரோடு வந்த சீடர்கள், தங்கள் தலைமேல் கட்டுக்கட்டாக தங்கக்கட்டிகளோடு காட்சி தந்தனர். பொதுவாக தங்கம் பாளம் பாளமாக சதுரத்திலும் செவ்வகத்திலும்தான் இருக்கும். இங்கே சிதறிய பாறைத்துண்டுக் கற்கள் வடிவில் அந்தத் தங்கக் கட்டிகள் இருந்தன. இரணியவர்மன் அதைப் பார்த்து அதிசயித்துப் போனான். போகரைப் பார்த்து ''சித்தர்பிரானே... என்ன இதெல்லாம்?'' என்றும் கேட்டான்.

''அதெல்லாம் இருக்கட்டும். என் சீடன் கருவூரான் எங்கே?'' - கோபமாகக் கேட்டார் போகர்.

''சிறையில் இருக்கிறார். அவர் உம் சீடரா?''

''எனக்குச் சீடன். ஆனால், உனக்கு அவன் குரு!''

''குருவா..?''

''ஆம்... உன் ஊனக் கண்களைத் திறக்கப் போகிறவன் அவன். அப்படியென்றால், அவன் உனக்கு குருதானே?''

''சித்தர்பிரானே... தங்களின் கோபமான பதில் எனக்கு வியப்பைத் தருகிறது. நான் சிவனடியார்களை அந்தச் சிவபிரானாகவே கருதிப் போற்றுபவன். அப்படியே தங்கள் சீடரையும் கருதினேன். ஆனால், அவர் என் விருப்பம் தெரிந்திருந்தும் தவறிழைத்து விட்டார்.''

சித்தம்... சிவம்... சாகசம்! - 6

''நிறுத்து உன் பேச்சை! சிற்ப சரித்திரம், ஆலய ஆகமம், உலோக சாத்திரம் மற்றும் சூட்சுமம் எனச் சகலத்தையும் தாயின் கர்ப்பத்துக்குள் இருந்தபோதே கற்றுத் தெளிந்தவன் கருவூரான். ஒரு பொன் உருவுக்காக நீ ஏங்குவதை அறிந்து, நானே அவனை இங்கு அனுப்பி வைத்தேன். துளியும் செப்புக் கலவாமல் தூய தங்கம் கொண்டு எந்த ஒரு உருவையும் செய்ய இயலாது. கோடை காலத்தில் வெப்பம் தாளாது குழைந்து கொடுத்து, மேனியானது கோணியாகிவிடும். இது ஆபரணங்களுக்கும் பொருந்தும். ஆபரணம் குழைந்தால் அணியாமல் உருக்கிப் போட்டுவிடலாம். ஆனால், வழிபாட்டுக்குரிய திருமேனிகள் குழையக்கூடாது. சாத்திரப் பிழை ஏற்பட்டு, தோற்றப்பிழை உருவாகி, பின் அது பெரும் பிழையில் முடிந்துவிடும்.

இறை ரூபங்கள் குறித்த ஞானம் உனக்கு இல்லாததால், நீ என் சீடனைப் புரிந்து கொள்ளவில்லை. இறை மூர்த்தங்களுக்குள் தத்துவங்கள் ஒளிந்திருக்கும் என்பதை முதலில் நீ புரிந்துகொள். அருளும் கரங்கள் நேர் நோக்கில்

இருப்பதில் இருந்து மண் நோக்கி, தன்னை நோக்கி, ஒன்றைப் பற்றிக்கொண்டு, பின் முத்திரை புரிந்த நிலையில் இருப்பது... என்று ஒவ்வொரு தோற்றத்துக்குப் பின்னாலும் பெரும் பொருள் உள்ளது.

வேதியர், ஞானியர் அந்த மூர்த்தத்தைப் பார்த்த மாத்திரத்தில் பொருளை உணர்ந்து

கொண்டு, அதன் தத்துவத்தைப் புரிந்து கொள்வார்கள். பழநியம்பதியில் முருகன் கரத்தில் இருக்கும் தண்டமாகிய கோல் சொல்லும் பொருளுக்கும், மதுரை மீனாட்சியின் கரத்தில் வீற்றிருக்கும் கிளியானது உணர்த்தும் பொருளுக்கும் வேறுபாடு உண்டு.

தென்திசை நோக்கி அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தக் கோலம் சின்முத்திரை காட்டி நிற்கும். அது சொல்லில் ஏதுமில்லை, அமைதியில்தான் எல்லாம் உள்ளது என்பதோடு சும்மாயிரு என்றும் கூறுகிறது. திருமாலின் சயன கோலத்துக்குள்ளும் பெரும் பொருள் புதைந்து கிடக்கிறது.

இப்படி ரூபங்களுக்குப் பொருள் இருப்பதோடு, அவை எந்த உலோகத்தில் எப்படி ஒரு சிலா ரூபம் இருக்க வேண்டும் என்பதற்கும் கணக்கு உள்ளது. ஜாதிக் கற்களுக்கும், ஐம்பொன்னுக்கும் சத்தத்தை கிரகித்துத் தேக்கி வைத்துக்கொள்ளும் ஆற்றல் உண்டு. பொன்னுக்கு ஒளிரும் குணமே மிகுதி. பொன்வசம் உள்ள ரத்தினக் கற்கள் வேண்டுமானால் மந்திர உச்சாடனங்களின் அலைக்கதிர்களை ஏற்றுப் பிரதிபலிக்கும். தூய செம்பொன் ஒளி கண்ணொளியை காலப் போக்கில் குறைத்துக் குருடாக்கிவிடும். இப்படிப் பொன்னின் குணம் பற்றி அறியவேண்டியது எவ்வளவோ உள்ளது. இவற்றைக் கசடறக் கற்றுக் தெளிந்தவன் கருவூரான். என்ன ஒரு மமதை இருந்தால், அவனைப் பொற்கள்ளனாகக் கருதி அந்தகாரச் சிறையில் அடைத்திருப்பாய்?'

- நீண்ட விளக்கத்தோடு வந்த போகரின் கேள்வி மன்னனை ஒரு புரட்டு புரட்டிப் போட்டது.

'கருவூரரை அந்தகாரச் சிறையில் அடைத்து அரை நாள்கூட ஆகவில்லை. ஆனால், நடந்தவற்றை அப்படியே பக்கத்தில் இருந்து பார்த்ததுபோல எப்படி போகரால் கூற முடிந்தது? அடுத்து... பொன்னுக்கும் சிலா ரூபங்களுக்கும் பின்னால் இப்படி ஒரு பொருட் செறிவா? இது எதையும் இங்குள்ள பொற்கொல்லர்கள் நம்மிடம் கூறவே இல்லையே..?’ - மன்னனுக்குள் கேள்விகள் முளைத்தெழுந்து ஓடத் தொடங்கின.

'என்ன யோசனை? இதெல்லாம் எப்படி எனக்குத் தெரியும் என்றா? சித்தம் தெளிந்து நீயும் சித்தனாகு. உனக்கும் பல உண்மைகள் யாரும் கூறாமலே புரிந்துவிடும். உயிர்வாழும் ஒரு வீடான இந்த தேகத்தின் பேச்சைக் கேட்டு நடப்பவன் சராசரி மனிதன். இந்த தேகத்தை தவத்தாலும் கல்பங்களாலும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே சித்தன். நானொரு சித்தன். கருவூரானும் சித்தன். இரண்டு சித்தர்களுக்கு நடுவில் காற்று போதும், எண்ண அலைகளை எடுத்துச் செல்ல! கருவூரான் என்னை நினைத்து நடந்ததைக் கூறினான். நானும் பழநியம்பதியில் இருந்து பறந்தே வந்துவிட்டேன்.

கருவூரானை உன்னிடம் அனுப்பி வைத்த பிழையை இதோ நானே நேர் செய்யப்போகிறேன். சித்தனுக்கு மனம் பொன்னாக இருப்பதே கணக்கு. இந்த மண்ணின் பொன்னெல்லாம் தூசுக்குச் சமம். கொண்டு வா, கருவூரான் செய்த அந்தப் பொற்சிலையை! துலாபாரத் தராசில் அதை ஒரு பக்கம் வை. ஈடாக இதோ செம்பொன் கட்டிகள். எடைக்கு எடை எடுத்துக் கொள். எங்கே கருவூரான்? முதலில் அவனை விடுதலை செய்...!''

- போகரின் ஆவேசம் மன்னனைத் திகைக்க வைக்க, அந்தப் பொற்சிலையும் வந்து தராசில் ஏறி நின்றது. மறு தட்டில் போகரின் சீடர்கள் தங்கக் கட்டிகளைக் கொட்டினார்கள். மன்னனுக்கு தான் தவறான திசையில் செல்வது புரிந்தது. ஆனால், போகரின் கோபத்தை எதிர்கொண்டு அவரைச் சமாதானப்படுத்தும் விதம் தெரியவில்லை. முதல் காரியமாக கருவூராரை விடுவிக்கச் சொன்னான்.

ஆனால், அந்தகாரச் சிறைக்குள் அவரைக் காணவில்லை. அரண்மனை வீரர்கள் ஓடிவந்து 'சித்தரைக் காணவில்லை’ என்றனர். இது அடுத்த அதிர்ச்சி!

'உன் பொன்னைத் தந்துவிட்டேன். எங்கே என் கருவூரான்?' என்று போகர் மீண்டும்  இடிஇடித்தார்.

'சித்தர் பெருமானே! அவரை சிறையில் அடைத்த தவறை உணருகிறேன். உங்களைப் போல உணர்த்துவார் இல்லாததால் நிகழ்ந்து விட்டது பிழை. உண்மையில் அவர் எவ்வாறு மாயமானார் என்று எனக்குத் தெரியவில்லை. மேலும், தாங்கள் எனக்கு எடைத் தங்கமும் தரத் தேவையில்லை. இந்தப் பொன்மூர்த்தியே எனக்குப் போதும். இந்தத் திருஉருவம் பல உண்மைகளை இந்த உலகத்துக்கு இனி உணர்த்தியபடியே வழிபாடு காணட்டும். என் பிழையை அருள்கூர்ந்து மன்னியுங்கள்!'' என்று உருக்கமாய் வேண்டி நின்றான் மன்னன்.

அதன்பின் போகரும் சற்று அமைதியானார். பின், அதே அந்தகாரச் சிறைவாசலுக்குச் சென்று, ''கருவூரா, வெளியே வா! உணரவேண்டியவற்றை உணர வேண்டியவர்கள் உணர்ந்துவிட்டார்கள்'' என்றார். கருவூராரும் புன்னகைத்தபடியே வந்து போகரின் திருப்பாதங்களில் விழுந்து வணங்கினார். அப்படியே அனைவருமாகச் சென்று, அந்த நடராஜ திருமேனியை வணங் கினர். அப்போது மன்னன் இரணியவர்மன் போகரிடம், 'இந்தத் தங்கக் கற்கள் உங்களுக்கு எப்படிக் கிடைத்தன என்று தெரிந்துகொள்ளலாமா?' என்று கேட்டான்.

'தங்கச் சுரங்கம் எதிலிருந்தாவது இவற்றை எடுத்து வரவில்லை.பழநியம்பதியின் பாறைக்கற்கள்தான் இவை. ரசவாதத்தால் இவற்றைத் தங்கமாக்கினேன்' என்றார் போகர்.

''ரசவாதத்தால் எப்படிக் கற்களைத் தங்கமாக்க முடியும்?''

''அது சித்த விஞ்ஞானம் மன்னனே...''

''சித்த விஞ்ஞானமா... புதியதாய் உள்ளதே?''

''புதியதேதான்! இந்த மண்ணில் ஒவ்வொன்றுக்கும் ஒரு குணம் உண்டு. அந்த குணப்பாட்டை வேதிமாற்றத்தால்  மாற்றும் முறைக்குப் பெயரே ரசவாதம்.'

''அது எப்படிச் சாத்தியம்?'

''உயிரின் மூலத்தையே அறிந்துகொண்டுவிட்ட சித்தனுக்கு இதுவா பெரிது? என் வரையில் ரசவாதத்தைவிட பெரியது நவபாஷாணமும் அதன் மூலமாக உருவாகப் போகும் தெய்வத் திருமேனியும்தான்!'

போகர் மறைமுகமாக பழநி முருகனின் மூலத் திருமேனி அருகே தன் பேச்சில் வந்து நின்றார்.

- சிலிர்ப்போம்...