Published:Updated:

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
##~##
பி
றந்த நேரத்தைச் சுட்டிக்காட்டும் ராசிக்கு, 'லக்னம்’ என்று பெயர். சந்திரன் இருக்கும் ராசியை ஜன்ம ராசி எனலாம். நட்சத்திர பாதத்தை வைத்து சந்திரனின் ராசியை வரையறுப்போம். சந்திரன் வாயிலாக நட்சத்திரம் சுட்டிக்காட்டப்படுகிறது. பிறக்கும் வேளையுடன் இணைந்த நட்சத்திர பாதம், சந்திரன் இருக்கும் இடம்.

லக்னம் வேறு ராசி வேறு. சில நேரம், லக்னமும் ராசியும் சந்திரனை வைத்து ஒன்றாக மாறுவது உண்டு. ஜாதக பலனை, லக்னத்தை வைத்தும், ராசி பலனை நட்சத்திர பாதத்தை வைத்தும் கணக்கிடுவர். பூமியின் சுழற்சியை வைத்து லக்னத்தை உருவாக்குவோம். அதாவது, கருவறையில் இருந்து, வெளிவந்த இடத்துடன் (தேசத்துடன்) இணைந்த வேளை, லக்னமாக உருப்பெறும். அண்டவெளியில் சுழலும் ராசிச் சக்கரத்தில் இணைந்த நட்சத்திர பாதத்தை வைத்து, ஜன்ம ராசி அதாவது சந்திர ராசி உருப்பெறும்.

பிறந்த நொடிப்பொழுதை லக்னம் துல்லியமாக எடுத்துக்காட்டும். அதேவேளையில், அந்த நட்சத்திர பாதமும் இருக்கும். எனினும், ஆறு மணி நேர அகண்ட இடைவெளி யுடன் பிறந்த நேரத்தைத் தோராயமாகச் சொல்லும் சந்திர ராசி. நாளேடுகளில் தென்படும் ராசிபலன் தோராயமான நேரத்தைத் தழுவி அமைவதால் எல்லோருக்கும் பொருந்தும்படியாக அமைவதில்லை. இன்பமோ துன்பமோ மனம் வழி வெளிவர வேண்டும். லக்னம்- ஆன்மா, சந்திரன்- மனம். ஆன்மாவுடன் இணைந்த மனம் வாயிலாக பலன் உணரப்படுவதால், சந்திரசாரப்படி பலன் சொல்லும் நடைமுறை

ஏற்கத்தக்கதாக மாறியது. லக்னபலன் சொல்லும்போது, சந்திர லக்னத்தையும் இணைத்து பலனை இறுதியாகச் சொல்லும் ஜோதிடம். ராசி பலனை நாளேடுகளிலும் சின்னத்திரையிலும் பார்த்தும் கேட்டும் பரிச்சயம் இருப்பதால், அதைத் திரும்பவும் அசைபோட வேண்டிய கட்டாயம் இல்லை. ஆகையால், பிறந்தவேளையை சுட்டிக் காட்டும் லக்னம் பற்றிய தகவல்கள் ஆராயப்படுகின்றன.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

360 பிரிவுகளை உள்ளடக்கிய ராசிச் சக்கரத்தில் முதல் முப்பது பிரிவு மேஷ ராசி. ராசிச் சக்கரத்தில் முதல் மாதத்தை மேஷ மாதம் எனலாம். மேஷ ராசியை விளக்கும் அடையாளங்கள், வேண்டிய தகவலை அளிக்கின்றன. மேஷத்துக்கு அதிபதி செவ்வாய். சூரியனுக்கு அது உச்ச வீடு. இந்த இருவரது இயல்புகளும் மேஷத்தில் பிறந்தவனிடம் தென்படும். மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்று ராசிகளும் ஒன்றுக்கொன்று முக்கோணத்தில் அமைந்திருக்கும். முக்கோண ராசிகளுக்கு லக்னத்தின் பெருமை இருக்கும். 5-வது ராசி முன்ஜன்ம கர்மவினையை வரையறுக்கும் பகுதி. ஐந்தினுடைய ஐந்து அதாவது ஒன்பது, அதன் செழிப்பின் அளவு. 9-வது வீட்டை 'பாக்கியம்’, 'அதிர்ஷ்டம்’ என்று குறிப்பிடுவது உண்டு. இந்த இரு சொற்களும் கண்ணுக்குப் புலப்படாத கர்மவினையைச் சுட்டிக்காட்டும். ஆக, மூன்றில் ஒன்றை வைத்து மற்ற இரண்டின் தரத்தை நிர்ணயிக்க இயலும். அடிப்படைத் தகுதியான கர்ம வினை, அதன்

செழிப்பு, அதைப் பெற்று உணர்பவன் ஆகிய மூன்றும் ஜாதகத்தின் கரு. இவை குறைவை அல்லது நிறைவை சந்தித்தால், வாழ்நாள் முழுதும்

அதன் தாக்கம் இருக்கும். இந்த 3-ல் அடங்கிய நட்சத்திர நவாம்சகங்கள் ஒரே தசையை சந்திக்கும்.

தசை என்பது, கர்மவினையை உணர வைக்கும் வேளை. அது மூன்றிலும் ஒன்றாக வருவது, அதற்கு இருக்கும் நெருக்கத்தை உறுதி செய்கிறது.

சூரியனின் ஸத்வ குணம், செவ்வாயின் ரஜோகுணம்... இன்ப- துன்பங்களில் பதறாத மனம் ஸத்வம்; ஆராயாமல் சடுதியில் செயல்பட நினைப்பது ரஜஸ். இந்த இரண்டும் கலந்த இயல்பு இவர்களில் தென்படும். இவ்விருவரும் மேஷ ராசி முழுவதும் பரவி ஆட்கொள்பவர்கள். மற்ற கிரகங்களின் பகை, நட்பு, பார்வை, சேர்க்கை, நவாம்சம், த்ரிம்சாம்சம் - போன்ற பாகுபாட்டில் மாறுபட்ட பலனும் உணரப்படும். சிலநேரம், வாழ்க்கையில் சறுக்கி விழுந்து

சங்கடத்தை சந்திக்க வைக்கும். ஆராயாமல் இறங்கிவிட்டோமோ என்று, துயரத்தை சந்தித்த பிறகு பச்சாதாபப்படுவதும் உண்டு. உடல் வலிமை குன்றாமல் இருக்கும். இலக்கணத்துக்கு ஏற்ற உடல்பாங்கு, செயல்படுவதில் இயல்பாகவே வளைந்து கொடுக்கும். ஊனமில்லாத உடல் வளம் பெறுவர். செயலில் உத்வேகம் மேலோங்கியிருக்கும். தனிமையில் வெகுநேரம் இருக்க இயலாது. பொறுமை குன்றியிருக்கும். சிந்தனைகள் தாவித்தாவி மாறிக்

கொண்டிருக்கும். கேசபாசங்களின் நிறம் மங்கலாக மாறலாம். சுய நலத்தில் ஈடுபாடு இருக்கும்.அகங்காரமும் அடாவடித்தனமும் முகபாவத்தில் பளிச்சிடும். செயலில் ஆரம்பத்தில் காணப்படும் சுறுசுறுப்பு போகப் போகத் தேய்ந்து மறைந்துவிடும். ஆராயாமல் காரியத்தில் இறங்கி ஆத்திரத்தில் ஆதங்கப்பட வைக்கும்.

பிறர் உதவியை எதிர்பார்க்காமல் செயலில் சிறப்படையும் ஆர்வம் இருக்கும். கவனக்குறைவால் அடிபட்டு, மருத்துவமனையில் தங்கும் அவசியம் இருக்கும். முதுமையில் மனம் சார்ந்த பிணிகள்

தோன்றும். பொதுச் சேவைகளில் தன்னை முன்வைத்து, தனது பெருமையை வளர்க்கும் இயல்பு இருக்கும். தனது பதவிக்குப் பெருமையைத் தேடும். தலைவன், செயலாளன், பொருளாளன்,தொண்டன்...  இதில் எதை ஏற்றாலும் அதில் தனக்கு அதிகாரம் இருக்க வேண்டும் என்று எண்ணும். தருணம் கிடைத்தால் தகுதியை வெளிப்படுத்தி வெற்றி பெறுவர். தன்னம்பிக்கை இருப்பதால் தளராத உழைப்பு தொடரும். எதிர்ப்புகளை எதிர் கொண்டு வெற்றி பெறுவதில் ஆர்வம் இருக்கும். கைவிடப்பட்ட செயல்களில் வெற்றி பெற்று, தற்பெருமையை வளர்த்துக் கொள்ளும் முனைப்பு இருக்கும். பிறரது நல்லுரைகள், சிந்தனைகள் இவர்களது சிந்தனையை மாற்றி விடாது. செவ்வாயும், சூரியனும், குருவும்

ஆறு வழிகளில் (ஷட்பலம்) பலம் பெற்றிருந்தால் சீரான வாழ்க்கையில் அமைதி பெறுவர்; விபரீத மானால், சங்கடங்களில் சிக்கித் தவிப்பார்கள். சங்கடங்கள் முளைக்காதவாறு சிந்தனை திருப்பி விடப்பட்டால், அமைதி திரும்பும்.

முன்னெச்சரிக்கையுடன் இணைந்த செயல்பாடு, விதியின் தனி வடிவை எடுத்துக் காட்டும். அதாவது, நமது சிந்தனை விதியின் விளையாட்டை வரையறுக்கும். 'கட்டிலில் இருந்து கீழே விழுந்து மடிவான்’ - என்று விதி இருந்தால், கட்டிலைத் துறந்து தரையில் தஞ்சம் புகுந்தவனை விதி அணுகாது. விதியை நமது சிந்தனை வரவழைக்கும். மேஷ ராசியில் பிறந்தவனின் இரு இயல்பும் அவனது செயல்பாட்டில் வெளிப்படும். பொறுமையும் சுறு சுறுப்பும் இருப்பதுடன், தன்னல மும் தற்பெருமையும் கலந்தால் இருவேறு இயல்புகள் தோன்றும்.

மேஷம்- கிராம ராசி. கிராமியச் சூழல்- நடைமுறையில் ஆர்வம் இருக்கும். கிராமத்தில் வாழ்வது ஆடு. அதன் இயல்பும் பளிச்சிடும். அருகில் வந்தாலே தூர்நாற்றம் உணரும் அளவுக்கு, தூய்மையற்று இருக்கும். பல் துலக்காமல், முகம் கழுவாமல் பானம் அருந்தும் பழக்கம் பலரிடம் தென்படும்.

ஆராயாமல் பிறரைப் பின்பற்றும் போக்கு இருக்கும். ஆடு, அதைக் காப்பவன் கூப்பிட்டால் வராது. கசாப்புக் கடைக்காரன் அழைத் தால் இசைந்துவிடும். பயணிக்கும் ஆடுகளில் ஒன்று பள்ளத்தில் விழுந்தால், அதைப் பின்தொடரும் ஆடும் அதே பள்ளத்தில் விழும். பள்ளத்தைப் பார்த்து திசை திரும்பாது. இலைகள், சருகுகள் ஆகியவற்றை உண்ணும். உஷ்ணமான உடலோடு உலாவும். சிந்தனை வளம் குன்றி இருக்கும். சிந்தனை வளம் குன்றிய ராசி என்பதால் கல்வி போதிக்கும் முயற்சிகளில் மேஷ ராசியைத் தவிர்ப்பர். மேஷத்தில் மந்திரோபதேசம் செய்வதில்லை.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

ஆட்டின் பால், பல பிணிகளை அகற்றும் மருந்தாக செயல்படும். அதன் ரோமங்கள் குளிரிலிருந்து பாதுகாக்கும். தனது உடமைகளை கொடை வழங்கி உதவுவதில் ஆர்வம் இருக்கும். இயற்கையின் சட்டதிட்டத்துக்கு உட்படுவதால், நீண்ட ஆயுள் இருக்கும்.

பிறரது உணவுக்கு (சுயநலத்துக்கு) இரையாவது உண்டு. நின்றும், நடந்தும் காலம் கழிக்கும். களைப்பாறுதல் ஒப்புக்கு இருக்கும். மெதுவான போக்கு,

பரபரப்பில்லாத செயல்பாடு சில நேரம் விபரீத விளைவுகளுக்கு வழிகோலும். இணைந்து செயல்படும் பாங்கு குறைவு. இல்லாத தகுதியை இருப்பதாக சித்திரிப்பதில் வெட்கம் இருக்காது. பதவிப் பெருமையை தனது பெருமையாக பறைசாற்றுவதில் ஆர்வம் இருக்கும். புகழைத் தக்கவைக்க, ஈனமான செயலில் ஈடுபட தயங்காது. பூர்வஜன்ம வினை தலைதூக்கும்போது, சரிவைச் சந்திப்ப தும் உண்டு. இது சர ராசி என்பதால் அசையும் பொருளில்

ஆர்வம் இருக்கும். வாழ்வில் மாறுபட்ட சூழலை உருவாக்கிக் கொண்டிருப்பான். செவ்வாய்க்கு குஜன் என்ற பெயர் உண்டு. பூமியின் புதல்வன் என்று சொல்லலாம். பூமியில் விளையும் பொருள் களில் பற்று, அதில் பொருளை ஈட்டும் ஆர்வம் இருக்கும். எதிர்வாதத்தை பொறுக்க இயலாமல் நிம்மதி இழப்பதும் உண்டு.

சூரியனின் தொடர்பு செல்வாக்கு மிக்கவனாக மாற்றும். செல்வாக்கில் தன்னலத்தை வளர்த்துக் கொள்வான். குருவின் தொடர்பு சிந்தனையிலும் செயல்பாட்டிலும் உயர்வை எட்டவைக்கும். சேமிப்பை இழந்தாவது செல்வாக்கைக் காப்பான். செவ்வாயும் சூரியனும் பாப கிரகங்கள். ஆனாலும் மேஷ ராசிக்கு அவ்விருவரும் நல்லதை மட்டும் வெளியிட்டு, கெடுதலை தலைதூக்கவிட மாட்டார்கள். முற்பிறவி கர்ம வினையை வெளியிடுபவன் சூரியன். இப்பிறவி செயல்பாட்டை நடைமுறைப்படுத்துப வன் செவ்வாய். இரண்டும் லக்னத்தில் தோன்றிய வனின் செயல்பாடு. தனது செயல்பாட்டை (படைப்பை) தானே அழிக்கக் காரணமாக மாட்டார்கள். நஞ்சு என்றாலும் தான் வளர்த்த செடியை தானே அழிப்பதில் தயக்கம் இருக்கும் (விஷவிருக்ஷே£பிஸம் வர்த்ய ஸ்வயம் சேத்து மஸாம்ப்ரதம்). திருடன் தனது வீட்டிலேயே திருட முற்படமாட்டான். குரு- சுப கிரகம்; 9-க்கு உடையவன் என்கிற நோக்கில் நல்லதை அள்ளி அளித்தாலும், 12-க்கு உடையவனாகவும் தென்படுவதால், வந்த புகழும் பெருமையும் வந்த வழியே மறைந்துவிடும்.

நல்லவனை கெட்டவனாகவும் கெட்டவனை நல்லவனாகவும் மாற்றி அமைக்கும் திறன் ராசிக்கு இருப்பதால் ஜோதிடத்தில் ராசியின் பங்கு உயர்ந்தது. விலங்கின ராசி இது. ஆடு- மாடுகளைப் பராமரித்தல், விலங்கின ஆராய்ச்சியில் தேர்ச்சி, அதன் வணிகத்தில் பொருளீட்டுதல், அதன் மருத்துவத்தில் இணைதல், இயற்கை யோடு இணைந்து வாழ்தல், செல்லப் பிராணிகளை கவனித்தல் போன்றவையும் அவனில் தென் படும். ஆண்- பெண், ஒற்றைப்படை - இரட்டைப்படை போன்ற பாகுபாடும் பலத்தில் பளிச்சிடும். மனிதர்களுடன் இணைந்து வாழும் ஆடு. இணைந்து வாழ கசப்பான பல அனுபவங்களை பொறுத்துக்கொள்ளும் தன்மையும் இருக்கும். ஆட்டின் இயல்பு, கிராமச் சூழல் ஆகியவற்றின் தொடர்பும் மாறுபாட்டுக்கு அல்லது மகிழ்ச்சிக்குக் காரணமாவது உண்டு. பூர்வ ஜன்ம கர்மவினையின் தரத்துக்கு இணங்க, அவன் பிறக்கும் வேளையில் தென்படும் ராசி அமையும். ராசியை ஆராய்ந்தால் அவனது கர்மவினையின் வரைபடத்தை அறியலாம். வேறு வழியில் தெரிந்து கொள்ள முடியாததை ஜோதிடம் நிறைவு செய்வதால், எந்த காலத் திலும் அதன் சிறப்பு மங்காது.

லக்னத்தில் இருக்கும் கிரகம், பார்க்கும் கிரகம், அதன் அதிபதி, அதிபதி நின்ற ராசி நாதன், அம்சகநாதன்... இவர்களுடன் லக்னம் இணையும்போது, பலனில் மாறுபாடு இருக்கும். கிரகங்களின் இயல்பு எதுவானாலும் ராசி யுடன் இணையும்போது ஏற்படும் மாற்றம் நடைமுறைக்கு வரும். இப்படியும் சொல்லலாம். கிரகங்கள் தன்னிச்சையாக பலன் அளிக்காமல், ராசியின் தொடர்பில் பலனை இறுதி செய்யும். அந்த அளவு ராசிக்கு சிறந்த இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. கர்மவினை காலத்துடனும், காலம் ராசியுடனும், ராசி பிறந்தவனுடமும் இணைந்து இருக்கும். இப்படி கர்மவினை பிறந்தவனோடு இணைய, ராசியின் பங்கை நாடுகிறது.

ராசிக்கு அதிபதியான செவ்வாயும், கர்ம வினையை சுட்டிக் காட்டும் சூரியனும் வழிபட வேண்டியவர்கள். ராசியை வழிபடும்போது இருவரும் மகிழ்வர். 'மேம் மேஷாய நம:’ என்று வழிபடும்போது, ராசியில் அடங்கும் அத்தனை கிரகங்களும் அருள்வர்.

- வழிபடுவோம்